You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தான் சுமந்த 6 சிசுக்களை குளிர்பதன கிடங்கில் மறைத்து வைத்த பெண்ணுக்கு சிறை
ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் தான் சுமந்த ஆறு சிசுக்களின் எச்சங்களை மறைத்து வைத்த ஒரு கனடா நாட்டுப் பெண்ணுக்கு எட்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் இறந்த உடலை மறைத்த குற்றத்தை, ஆண்ட்ரியா ஜீஸ்ப்ரெக்ட் ஆறு முறை செய்தது, கடந்த பிப்ரவரி மாதம் நிரூபிக்கப்பட்டது.
பிறக்கும் நிலையில் உள்ள ஆறு சிசுக்களின் உடல்களின் எச்சங்கள் ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்தது அக்டோபர் 2014-இல் கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தால், வின்னிபெக் நகரைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளின் தாயான அந்தப் பெண் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.
கடந்த ஆண்டு, "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி," என்று கூறியிருந்த கனாட உச்ச நீதிமன்றம், வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் நியாயமற்ற தாமதங்களால் வழக்கைத் தள்ளுபடி செய்வதில் முடியலாம் என்று கூறியிருந்தது.
இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பால் பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜீஸ்ப்ரெக்ட்டுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம் போன்ற மாகாண நீதிமன்றங்களில் 'நியாயமான' விசாரணை காலமாக 18 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜீஸ்ப்ரெக்ட்டின் வழக்கு விசாரணை முடிய 33 மாதங்கள் ஆனது.
அவர் மீதான தண்டனை விதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை, அவரது வழக்கறிஞர் கிரேக் ப்ராட்ஸ்கை, தாமதத்தின் அடிப்படையில் அவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தக் கடை நேர உத்தி குறித்து எரிச்சலடைந்த நீதிபதி முர்ரே தாம்சன், வெள்ளியன்று அம்மனுவைத் தள்ளுபடி செய்தார்.
அவ்வழக்கை விசாரித்த அதிகாரிகளால் சிசுக்களின் இறப்புக்கான காரணத்தை உறுதியாகத் தீர்மானிக்க முடியாததுடன், இறந்த குழந்தைகளில் ஏதாவது குழந்தை உயிருடன் பிறந்ததா என்பது குறித்தும் அறிய முடியவில்லை.
"சிசுக்களின் மரணம் அவை உயிருடன் பிறப்பதற்கு முன்னரே நிகழ்ந்ததா என்று தீர்மானிப்பதைத் தன் கைகளாலேயே ஜீஸ்ப்ரெக்ட் சாத்தியமற்றதாகிவிட்டார்," என்று தாம்சன் நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
தான் கருவுற்றிருப்பதையும், குழந்தைகள் பிறந்ததையும் தன் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் அப்பெண் மறைத்ததையும், "ஏற்றுக்கொள்ள முடியாத" வகையில் அவர் அனுதாபமற்றவராக இருந்தார் என்றும் நீதிபதி கூறினார்.
மருத்துவ அறிக்கைகளின்படி அவர் தனது ஆறு பேறு கலங்களின்போதும் மருத்துவரைப் பார்க்கவில்லை. அந்த சிசுக்கள் இறந்து பிறப்பதற்கான வாய்ப்பு 500 ட்ரில்லியனில் ஒரு பங்கு என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதிகபட்ச தண்டனையை விட ஒரு ஆண்டு குறைவாக, 11 ஆண்டு காலம் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு கோரியது. அவர் விசாரணையின்போது சிறையில் கழித்த காலமான 168 நாட்களையே தண்டனையாக வழங்க வேண்டும் என்று குற்றவாளியின் தரப்பில் கோரப்பட்டது.
தற்போது நீதிமன்றம் அவருக்கு எட்டரை ஆண்டுகள் தண்டனை விதித்துள்ள நிலையில், ஏற்கனவே சிறையிலிருந்த காலம் போக ஏழு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்களாக அப்பெண்ணின் சிறை தண்டனை குறையும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்