You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: பண்டிகை
திறமையான புதிய இயக்குனர்கள் எப்போதுமே ஒரு புதிய களத்தில் கதையை வைத்து ஆச்சரியப்படுத்துவார்கள். அப்படி ஒரு ஆச்சரியம்தான் பண்டிகை.
சிறுவயதில் தாய் தந்தையை இழந்த வேலு (கிருஷ்ணா), நேர்மையாக உழைத்து முன்னேற வேண்டுமென நினைக்கிறான். ஆனால், பணத் தேவைக்காக சட்டவிரோதமாக தாதா (மதுசூதன ராவ்) என்பவன் நடத்தும் குத்துச்சண்டையில் சண்டை போடும் வீரனாக களமிறங்குகிறான். அவனுக்கு அந்த உலகத்தை அறிமுகப்படுத்திய முனியின் (சரவணன்) பணப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தாதாவின் பணத்தைக் கொள்ளையடிக்க களமிறங்குகி்றது வேலு - முனி கூட்டணி. அந்த முயற்சி விபரீதமாக முடிகிறது.
வழக்கமாக சண்டை போட்டியையோ, விளையாட்டையோ, பந்தையத்தையோ பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுவரும் கதைகளில், படத்தின் இறுதிக்கட்டம் என்பது அந்த சண்டையிலேயோ, பந்தையத்திலேயோ நாயகன் எப்படி வெற்றிபெறுகிறான் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், பண்டிக்கை இதில் மாறுபட்டிருக்கிறது.
சட்ட விரோதமாக, இரு வீரர்களின் மீதும் பணத்தைக் கட்டி போட்டிகளை நடத்தி பணம் சம்பாதிக்கும் வில்லன், வெளியில் ஹோட்டலில் வேலை பார்த்துவிட்டு சிறு பணத்திற்காக சூதாட்ட சண்டையில் ஈடுபடும் நாயகன், சூதாட்டம் என்றைக்காவது பலனளிக்கும் என்ற நம்பிக்கையில் வீட்டையே அடமானம் வைத்து விளையாடும் நாயகனின் நண்பன், பல பணப் பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்காக நடக்கும் கொள்ளை முயற்சி என முதல் படத்திலேயே கவனத்தை ஈர்க்கிறார் ஃபெரோஸ்.
குறிப்பாக சூதாட்ட சண்டை நடைபெறும் இடம், அங்கு நடக்கும் சண்டைகள், திட்டமிட்டு ஒரு கொள்ளை முயற்சியை நடத்துவது, அந்த முயற்சியில் வெற்றி கிடைத்தாலும், வில்லன் துப்பறிந்து நாயகனை நெருங்குவது என படத்தின் ஒவ்வொரு அம்சமும் 'அட' என்று சொல்ல வைக்கிறது.
கழுகு, யாமிருக்க பயமே படங்களில் நடித்த கிருஷ்ணாவுக்கு, இது ஒரு குறிப்பிடத்தக்க படம். ஹோட்டல் பணியாளர், குத்துச் சண்டை வீரன், கொள்ளைக்காரன் என பல காட்சிகளில் ஆச்சரியப்படுத்துகிறார் அரவிந்த். முனியாக வரும் சரவணனுக்கு, பருத்தி வீரனுக்குப் பிறகு நல்ல 'பிரேக்'.
அரவிந்தின் ஒளிப்பதிவும் எம்.எச். விக்ரமின் பின்னணி இசையும் இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க பிற அம்சங்கள்.
இந்தப் படத்தின் பொருந்தாத ஒரே அம்சம், காதல் காட்சிகள். நாயகியாக வரும் ஆனந்தியின் நடிப்பில் குறைசொல்ல ஏதுமில்லையென்றாலும், அவர் வரும் காட்சிகள் படத்தின் கதைப்போக்கோடு ஒட்டாமல் தனியாகத் தெரிகின்றன. குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகு, ஒன்றிரண்டு காட்சிகளில்தான் வருகிறார். நாயகி இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கக்கூடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்