You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரதமர் வீட்டு முன் தமிழக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சி
டெல்லியில் உள்ள பிரதமர் வீட்டின் முன் தர்ணா நடத்த முயன்ற தமிழக விவசாயிகள், காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக டெல்லி வந்தடைந்த தமிழக விவசாயிகள், டெல்லி ரயில் நிலையத்திலி்ருந்து மெட்ரோ மூலம் லோக் கல்யான் மார்கில் உள்ள பிரதமர் வீட்டிற்கு அருகே சென்று தர்ணாவில் ஈடுபட முயன்றனர்.
அது உயர் பாதுகாப்பு வலையம் என்பதால் போலிஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்தில் தற்போது வைத்துள்ளனர். அவர்கள் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட மாலை வரை அனுமதி வழங்கப்படவில்லை.
நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன் ரத்து, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்கள் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
எலிக்கறி உண்ணுதல், சாலையில் உருளுதல், சாட்டையடி போராட்டம் என பல்வேறு விதமாக போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு பஞ்சாப், ஹரியான போன்ற பிற மாநில விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவளித்தனர்.
பின்னர் ஏப்ரல் 23ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்து அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டு விவசாயிகள் தமிழகம் திரும்பினர்.
தொடர்புடைய செய்திகள்:
அதன்பின் மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி ஜுன் 9ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் தங்களின் போராட்டத்தை தொடங்கினர்.
இருப்பினும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடாமல் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்தததை தொடர்ந்து, விவசாயிகள் சென்னை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்
இந்நிலையில்தான் இன்று மீண்டும் போராடுவதற்காக அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கூட்டம் டெல்லி வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்