You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம்; தற்கொலை முயற்சியால் பரபரப்பு
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 12 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், இன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளிந் தற்கொலையைத் தடுக்க வேண்டும், ஓய்வூதிம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை, ஜந்தர் மந்தரில் தாங்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு முன்னதாக, சாலையில் விவசாயி ஒருவரை படுக்க வைத்து, மாலையிட்டு, மலர்களைப் போட்டு அலங்கரித்து, வாயில் துணியை மூடி, சடலம் போல சித்தரித்தனர். அருகில் மண்டை ஓடுகளை வைத்து சுற்றிலும் அமர்ந்து கொண்டு, சங்கு ஊதியவாறு ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நடிகர்கள் கோரிக்கை
இதனிடையே, நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், ரமணா, இயக்குநர் பாண்டியராஜ் உள்ளிட்டோர் இன்று நிதியமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மனுக்கொடுத்தனர்.
தற்கொலை செய்வதாக மிரட்டல்
இதற்கிடையே, இன்று பகல் 12 மணிக்குப் பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு விவசாய இளைஞர்கள், திடீரென ஜந்தர் மந்தர் பகுதியில் இருக்கும் உயரமான மரத்தின் மீது ஏறி நின்று கொண்டு, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்கள்.
அய்யாக்கண்ணு, விஷால், பாண்டியராஜ் உள்ளிட்டோரும், இளைஞர்களும் காவல் துறையினரும் அவர்களை கீழே வருமாறு நீண்ட நேரம் மன்றாடினார்கள். ஆனால், தாங்கள் உயிர் தியாகம் செய்தால்தான் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும் என்றார்கள்.
சற்று நேரத்தில், தீயணைப்புத் துறை வாகனமும் வந்தது.
இருந்தபோதிலும், அனைவரும் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், சில இளைஞர்கள் மரத்தின் மீது ஏறினார்கள். அப்போது, அந்த இரு இளைஞர்களும் மேலும் அதிக உயரத்துக்குச் சென்றார்கள்.
சுமார் அரை மணி நேரம் அனைவரும் கோரிக்கை வைத்த நிலையில், அவர்கள் கீழே இறங்கி வந்தனர்.
இவ்வளவு நாட்களாகப் போராடியும் அரசாங்கம் கண்டு கொள்ளாததால்தான் தற்கொலை செய்ய தி்ட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்