You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யார் இந்த அய்யாக்கண்ணு?
- எழுதியவர், முரளீதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, செய்தியாளர்
கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள், இந்தியத் தலைநகர் தில்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கவனத்தைக் கவர்ந்தது. சர்வதேச ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாயின. இந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்தியவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு.
திருச்சி மாவட்டம் முசிறியில் 1946 மார்ச் மாதம் ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் 9 பேரில் ஒருவராகப் பிறந்தார் அய்யாக்கண்ணு.
முசிறியில் உள்ள துவக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி, திருச்சியில் உள்ள நேஷனல் ஹைஸ்கூலில் மேல் நிலைக் கல்வி, ஜமால் முகமது கல்லூரியில் பியூசி, பிஷப் ஹீபர் கல்லூரியில் பட்டம், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு என கல்வியை முடித்த அவர், கல்லூரி நாட்களிலேயே அமைப்பு ரீதியாக மாணவர்களைத் திரட்டுவதில் ஆர்வம் காட்டியதாகச் சொல்கிறார்.
தேர்தலில் போட்டியிட்ட அய்யாக்கண்ணு
சட்டப்படிப்பை முடித்தவருக்கு, 1970வாக்கில் குடும்பச் சொத்து பிரித்துத்தரப்பட விவசாயத்தையும் வழக்கறிஞர் தொழிலையும் சேர்த்துப் பார்க்க ஆரம்பித்தார் அய்யாக்கண்ணு.
"இயல்பிலேயே எனக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. 70-களில் தீவிரமாக நான் அரசியலில் ஈடுபட்டிருக்கிறேன்" என்கிறார் அய்யாக்கண்ணு. 77ல் நடந்த தேர்தலில் முசிறி தொகுதியில் ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அய்யாக்கண்ணு, வெற்றிபெறவில்லையென்றாலும் 15,000 வாக்குகளைப் பெற்றார்.
அதற்குப் பிறகும் ஜனதா தளம் கட்சியில் இணைந்து பணியாற்றினார்.
"மண்டல் கமிஷன் பரிந்துரை விவகாரம் வெடித்தபோது, வி.பி. சிங்கை திருச்சிக்கு அழைத்துவந்து பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறேன்" என்று நினைவுகூர்கிறார் அய்யாக்கண்ணு.
77வாக்கில் திருமணம் செய்துகொண்ட அய்யாக்கண்ணுவுக்கு தற்போது இரண்டு மனைவிகள். இவரது எதிர்ப்பாளர்கள் இது குறித்து விமர்சனங்களை முன்வைத்தபோதும், அதனைப் புறந்தள்ளுகிறார் அய்யாக்கண்ணு.
"முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால், அவரது தங்கையையே திருமணம் செய்துகொண்டேன். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?" என்கிறார் அவர். தற்போது அவருக்கு இரண்டு மகன்கள்.
90களில் காவிரி வடகரை வாய்க்கால் விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு விவசாயிகள் சங்கத்தை நடத்திவந்தார் அய்யாக்கண்ணு.
எச். ராஜாவின் வீட்டு வாசலில் அய்யாக்கண்ணு கிடந்தாரா?
மத்திய அரசை எதிர்த்து, அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்த ஆரம்பித்ததும், பா.ஜ.கவின் தேசியச் செயலரான எச். ராஜா அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "I know Aiyakkannu very well. என் வீட்டிலேயே கிடந்தவர் சார் அவரு" என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
"2000-ஆவது ஆண்டு வாக்கில் நான் பாரதீய ஜனதாக் கட்சியின் விவசாயிகள் அமைப்பான பாரதீய கிஸான் சங்கில் சேர்ந்து மாவட்டத் தலைவரானேன். அதற்குப் பிறகு மாநில அளவில் செய்தித் தொடர்பாளர், மாநில பொதுச் செயலாளர் என்று உயர்ந்தேன். அந்த காலகட்டத்தில் எச். ராஜாவோடு எனக்கு பழக்கம் இருந்தது. அதற்காக அவரது வீட்டு வாசலில் கிடந்தேன் என்பதெல்லாம் பொய்" என்கிறார் அய்யாக்கண்ணு.
"கார் வைத்திருக்கிறேன், ஆடி காரெல்லாம் என்னிடம் இல்லை. எனக்கு 20 ஏக்கர் நிலம் இருக்கிறது என்பதை நான் எப்போதும் மறுத்ததில்லை" என்கிறார் அவர்.
தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்
மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது, விவசாயிகள் பிரச்சனைக்காக பல போராட்டங்களை பாரதீய கிஸான் சங்கம் நடத்தியது. "2014ல் மோதி பதவியேற்ற பிறகு, மத்திய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்தக்கூடாது என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு அந்த அமைப்பை விட்டு விலக முடிவுசெய்தேன்" என்கிறார் அய்யாக்கண்ணு.
அதற்குப் பிறகு, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் துவங்கி, விவசாயிகளுக்காகப் போராட ஆரம்பித்தார் அய்யாக்கண்ணு.
விவசாயிகளின் பிரச்சனை தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்தினாலும் தான் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர் என்றும் குறிப்பிடுகிறார் அய்யாக்கண்ணு.
இதுவரை 200 கிரிமினல் வழக்குகளிலும் 400க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளிலும் வாதாடியிருப்பதாகக் கூறுகிறார் அவர்.
விவசாயிகள் பிரச்சனைக்காக தில்லிவரை சென்று போராடினாலும், அய்யாக்கண்ணு நடத்தும் போராட்டங்களில் அவரோடு உடன்படும் 40-50 பேர் பங்கேற்பதே வழக்கமாக இருக்கிறது.
பிற சங்கங்களும் இவருடன் இணைந்து செயல்படுவதில்லை.
"நான் தீவிரமாக போராட்டத்தில் இறங்குவேன். திடீரென சாலையில், வெயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வோம். நிர்வாணமாக போராட்டம் நடத்துவோம். இத்தகைய கடினமான வழிமுறைகள் ஏற்பவர்கள் மட்டும் வருகிறார்கள்" என்கிறார் அய்யாக்கண்ணு.
ஆனால், நிலவுடமையாளர்களின் பிரச்சனைகளை மட்டுமே இவரது அமைப்பு முன்வைத்து போராடுகிறது, தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பேசுவதில்லை என்ற விமர்சனங்களும் அவர் மீது இருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்