100 தோப்புக்கரணம் போடச் சொன்னதால் ஆறாம் வகுப்பு மாணவி மரணமா? மாநிலத்தை உலுக்கும் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தீபாலி ஜகதாப்
- பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
மகாராஷ்டிராவில் வசாய் நகரில் ஒரு 13 வயதுச் சிறுமியின் மரணம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. பள்ளிக்குத் தாமதமாக வந்ததற்காக 100 தோப்புக்கரணங்கள் தண்டனையாக வழங்கப்பட்ட பின்னரே உடல்நிலை மோசமடைந்து தனது மகள் உயிரிழந்ததாகச் சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளியின் ஆசிரியை, தாமதமாக வந்த மாணவர்களுக்குச் தோப்புக்கரணம் போடும்படி தண்டனை அளித்திருந்தார்.
அவ்வாறு தண்டிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரான இந்த 13 வயதுப் பள்ளி மாணவியின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.
கடந்த சனிக்கிழமை (நவம்பர் 15) இரவு, மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி உயிரிழந்தார்.
என்ன நடந்தது?
உயிரிழந்த மாணவி, வசாய் கிழக்கில் உள்ள சாதிவலி குவரா பாடா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்தப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவியர் கல்வி கற்கின்றனர்.
நவம்பர் 8-ஆம் தேதி காலையில், சில மாணவர்கள் பள்ளிக்குத் தாமதமாக வந்தனர். இந்த மாணவியும் அதில் ஒருவராக இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
மாணவர்கள் தாமதமாக வந்ததால், ஆசிரியை அவர்களுக்கு 100 தோப்புக்கரணங்கள் போடும்படி தண்டனை அளித்தார். இதில் சில மாணவர்கள் தங்கள் பள்ளி புத்தகப் பையையும் தோளில் சுமந்தபடி தோப்புக்கரணம் போட்டனர்.
அதன் பிறகு, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவியின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக வசாயில் உள்ள ஆஸ்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
பின்னர், அவர் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
காவல்துறை கூறியது என்ன?
வசாயில் உள்ள வாலிவ் காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் திலீப் குகே இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அளித்துள்ளார்.
பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், "நவம்பர் 8 ஆம் தேதி, இந்தப் பள்ளியின் சில மாணவர்கள் தாமதமாகப் பள்ளிக்கு வந்தனர். அதில் இந்த மாணவியும் இருந்தார். மொத்தம் சுமார் 50 மாணவர்கள் இருந்தனர். தாமதமாக வந்த மாணவர்களை 100 தோப்புக்கரணம் போடச் சொன்னதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
" மாணவி தனது வீட்டிற்குச் சென்றபோது அவரது கால்கள் வலிக்க ஆரம்பித்தன. அவர் அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், நவம்பர் 10 ஆம் தேதி ஜே.ஜே. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தோப்புக்கரணம் போடச் சொன்னதால்தான் மகள் இறந்ததாகப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது குறித்துப் பள்ளியில் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்," என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
தற்போது, வாலிவ் காவல்துறை இந்த வழக்கில் தற்செயலான மரணம் குறித்த அறிக்கையை (ADR - Accidental Death Report) பதிவு செய்துள்ளது. உடல் கூராய்வு அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் காவல் துறையினர் தெளிவுபடுத்தினர்.
மருத்துவ அறிக்கையில் அந்த மாணவியின் ரத்த சிவப்பணுக்கள் (Hemoglobin) நான்கு ஆக, அதாவது மிகக் குறைவாக இருந்தது என்ற தகவலையும் காவல் துறையினர் அளித்துள்ளனர்.
விசாரணை நடத்த குழு அமைப்பு
இந்தச் சம்பவம் குறித்து பால்கரின் கல்வி அதிகாரி (ஆரம்பப் பள்ளி) சோனாலி மாதேகரிடம் பிபிசி மராத்தி பேசியது.
விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளதாக அவர் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"மாணவர்களுக்கு இதுபோன்று தண்டனை வழங்குவது தவறு. இது கல்வி உரிமைச் சட்டத்தை (Right to Education Act) மீறுவதாகும். குழந்தைகளுக்கு இத்தகைய தண்டனையை அளிக்க முடியாது. தோப்புக்கரணம் போடச் சொன்னதால் தான் மரணம் நிகழ்ந்தது என்று பெற்றோர் கூறுகின்றனர். மரணத்திற்கான காரணத்தை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் நாங்கள் பள்ளியில் விசாரணையைத் தொடங்கிவிட்டோம்," என்று அவர் கூறினார்.
கல்வி உரிமைச் சட்டத்தை மீறியதற்காகப் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தண்டனை வழங்கிய ஆசிரியை மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அதிகாரி தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்ன?
கல்வித் துறையின் முதற்கட்ட விசாரணை அறிக்கைப்படி, நவம்பர் 8 ஆம் தேதி பள்ளிக்குத் தாமதமாக வந்த சில மாணவர்களை, பள்ளியின் ஆசிரியை தோப்புக்கரணம் போடச் சொல்லித் தண்டித்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியை, புதன் அன்று (நவம்பர் 12) பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு, நவம்பர் 15 ஆம் தேதி மாணவி உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று கல்வித் துறை கூறுகிறது.
இதுதொடர்பாகப் பள்ளியைத் தொடர்புகொள்ள பிபிசி மராத்தி முயற்சி செய்தது, ஆனால் இதுவரை அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர்களின் கருத்து கிடைத்தவுடன் அதை நாங்கள் இங்கு பதிவிடுவோம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












