ஊட்டி மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து; 9 பேர் பலி - விபத்து நடந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து விழுந்தது எப்படி? என்ன நடந்தது?
    • எழுதியவர், பி.சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் 59 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த இருவர் கோவை அரச மருத்துவமனையிலும், லேசான காயமடைந்த 42 பேர் குன்னூர் அரசு மருத்துமவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியிலிருந்து 57 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் என மொத்தம் 59 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 9வது கொண்டை ஊசி வளைவில் பேருந்தை திருப்ப முயன்றபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி நிற்காமல், 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்து சனிக்கிழமை மாலை சுமார் 5.15 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து

குன்னூர் விபத்து
படக்குறிப்பு, தென்காசி மாவட்டம் கடையம் பகுதியிலிருந்து 57 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் என மொத்தம் 59 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

பேருந்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குன்னூர் அரசு மருத்துவமனையில் ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு சிறுவர் என எட்டு பேர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்த பாண்டித்தாய் என்பவரை ஞாயிற்றுக்கிழமை காலை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். அவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பாக 1077, 0423 2450034 என்ற இலவச எண்ணில் உறவினர்கள் தொடர்புகொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 70 வயது முதியவர் பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது அவர், “தென்காசி குற்றாலம் அருகே உள்ள கடையத்தில் இருந்து சுற்றுலா வந்தோம். பேருந்து தீடிரென பள்ளத்தில் உருண்டதுதான் எங்களுக்குத் தெரிந்தது. அனைவரும் சத்தம்போட்டு, கூச்சலிட்டோம். அக்கம் பக்கத்தினர்தான் வந்து காப்பாற்றினர்,” என்றார்.

“கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து விபத்துக்குள்ளானது. என்ன நடந்தது என்றே பேருந்துக்குள் இருந்த யாருக்கும் தெரியவில்லை,” என்றார் அவர்.

குன்னூர் விபத்து
படக்குறிப்பு, விபத்துக்குள்ளான பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்த பாண்டித்தாய் என்பவரை ஞாயிற்றுக்கிழமை காலை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

'டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டோம்'

குன்னூர் விபத்து
படக்குறிப்பு, சம்பவ இடத்தைப் பார்க்கும்போது உயிர் பிழைத்தது கடவுள் புண்ணியம்தான் என உயிர் பிழைத்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களின் உறவினர்களின் ஒருவரான வைஷாலி, விபத்து குறித்து டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டதாகத் தெரிவித்தனர்.

"அவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது என்பதே எங்களுக்கு இரவு 8.30 மணியளவில் டிவிைய பார்த்துத்தான் தெரியும்," என்றார்.

இதுகுறித்து விரிவாக பேசிய வைஷாலி, "அவர்கள் வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு எர்ணாகுளம் புறப்பட்டனர். சனிக்கிழமை அவர்கள் ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு கோயம்புத்தூர் சென்று, மருதமலையில் தங்குவதாகத்தான் திட்டம்.

எனக்கு மதியம் 2 மணியளவில் போன் செய்தனர். ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்புவதாகக் கூறினார். பின், மாலை 5 மணியளவில் அவர்களுக்கு அழைத்தபோது, போன் ஸ்விட்ச் ஆஃப் ஆக இருந்தது.

மழை காரணமாக அப்படி இருக்கும் என நானும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது டிவியை பார்த்தால், விபத்து என்கிறார்கள்," என்றார்.

உயிரைக் காப்பாற்றிய ஒற்றை மரம்

குன்னூர் விபத்து
படக்குறிப்பு, விபத்து நடந்த பகுதியில் 50 அடி பள்ளத்தில் ஒற்றை மரம் இல்லாவிட்டால் மற்றவர்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது என உயிர் பிழைத்தவர்களின் உறவினர்கள் கூறினர்.

தென்காசி மாவட்டம் கீழக்கடையத்தைச் சேர்ந்த ராமசாமி விபத்துக்குள்ளான தனத உறவினர்களைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை காலை குன்னூர் விரைந்துள்ளார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "தொலைபேசி மூலமாகத்தான் விபத்து நடந்துவிட்டதாக எனக்கு தகவல் வந்தது. எனது சொந்த அண்ணி, சித்தப்பா பையன் இளங்கோ, சித்தப்பா மகள் பேபி, அவரது மகன் நித்தின் மற்றும் அருகில் வசிக்கும் நான்கு பேர் என அனைவரும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

சம்பவ இடத்தைப் பார்க்கும்போது உயிர் பிழைத்தது கடவுள் புண்ணியம்தான். அந்த ஒற்றை மரம் இல்லையென்றால் மற்றவர்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது. குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு வந்திருக்கிறோம். இங்கு என்ன செய்கிறார்கள் எனத் தெரியவில்லை," என்றார்.

விபத்தில் உயிரிழந்தர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோதியும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இரண்டு லட்சம் ரூபாயும், மாநில அரசு சார்பில் இரண்டு லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படும்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
படக்குறிப்பு, காயமடைந்த 32 பேருக்கும் மன நல ஆலோசனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குன்னூர் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குன்னூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 60 பேர் கிளம்பி கொச்சின் குருவாயூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்ற பின்னர், குன்னூர் சுற்றி பார்த்து விட்டு திரும்பி போகும் போது விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினர். கோவையில் இரண்டு பேரும், உதகையில் இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று சம்பவம் நடைப்பெற்ற உடன் மாவட்ட நிர்வாகம் திறமையாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது. 108 ஆம்புலன்ஸ், தனியார் ஆம்புலன்ஸ், மற்றும் தொண்டு நிறுனத்தினர் சிறப்பாக செயல்பட்டனர். சிகிச்சையில் இருக்கும் 32 பேர் நலமாக உள்ளனர்.

மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின் அவரவர் சொந்த கிராமத்திற்க்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். அவரவர் சொந்த கிராமத்திற்கு அனுப்பும் பணியை இன்று மாலைக்குள் மாவட்ட நிர்வாகம் மேற்க்கொள்ளும்.

காயமடைந்த 32 பேருக்கும் மன நல ஆலோசனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அமரர் ஊர்தி வாகனங்கள் மூலம் தென்காசிக்கு கொண்டு செல்லப்பட்டது

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)