வளைகுடா இஸ்லாமிய நாடுகளில் இந்து கோவில்கள் ஏன் கட்டப்படுகின்றன?

    • எழுதியவர், எஹ்தேஷாம் ஷஹீத்
    • பதவி, மூத்த பத்திரிகையாளர், துபாய்

ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டு தனது பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மசூதிக்கு சென்றிருந்தார்.

அதற்கு அடுத்த நாள் துபாயில் அவர் உரையாற்றுவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது.

2007ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த பெரிய மசூதி அபுதாபியில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அந்த மசூதியை பார்த்து விட்டு வந்த மோதி ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அதிகாரிகள் இருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அதற்கு பின் அங்கு திருவிழா கூட்டம் போல் கூடி, மோதி மோதி என முழக்கமிட்டு கொண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தார் அவர்.

இதை பார்த்துக்கொண்டிருக்கும் போதே இந்திய செய்தி நிறுவனத்தை சேர்ந்த தொகுப்பாளர் ஒருவர் என்னை போனில் அழைத்தார். நேரலையில் இருந்த அவர், ‘மசூதியில் புர்கா அணிந்துள்ள பெண்கள் மோதி, மோதி என்று முழக்கமிட்டு கொண்டிருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?’ என்று என்னிடம் கேள்வி கேட்டார்.

அந்த மசூதியில் நின்று கொண்டிருந்த இந்திய வம்சாவளியினர் முழக்கங்களை எழுப்பியது உண்மைதான். அதில் சில புர்கா அணிந்திருந்த பெண்களும் இருந்தனர். ஆனால், மசூதிக்குள் நுழையும் எந்த மதத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் புர்கா அணிய வேண்டும் என்பதையும் இங்கு பார்க்க வேண்டும்.

எனவே, அங்கு மசூதி முன் நின்று மோதி மோதி என்று கோஷமிட்ட அனைத்து பெண்களும் இஸ்லாமியர்கள் என்று கூறிவிடமுடியாது.

கடந்த 10 வருடங்களில் மோதி ஒவ்வொரு முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும்போதும் அது பெரிய நிகழ்வாக நடத்தப்பட்டுள்ளது.

2015இல் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட்ட திறந்தவெளி பொதுக்கூட்டம், 2018இல் நடந்த உலக அரசாங்க உச்சிமாநாட்டில் அவரின் உரை மற்றும் சமீபத்தில் நடந்த COP28 மாநாட்டில் அவரது உரை என அனைத்துமே மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்படி, அவரது தொடர் சுற்றுப்பயணத்தை ஒட்டி உருவாகும் உணர்ச்சிப்பெருக்கு, உண்மைக்கும் கருத்துக்கும் இடையிலான கோட்டை மங்கலாக்கி விடுகிறது.

இதனால் பல நேரங்களில், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் நிபுணர்களே கருத்துக்கள் மற்றும் உண்மைகளை வேறுபடுத்தி பார்க்க தவறி விடுகிறார்கள்.

தற்போது மீண்டும் பிப்ரவரி 13,14 ஆகிய தேதிகளில் நரேந்திர மோதி ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். 2015இலிருந்து இது அவருக்கு 7வது பயணம். கடந்த 8 மாதங்களில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 3 முறை வந்திருக்கிறார் அவர்.

தற்போதைய பயணத்தில், அபுதாபியில் நடத்தப்பட்ட ‘அஹ்லான் மோதி’ என்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் உரையாற்றியுள்ளார் மோதி. இங்கு வாழும் இந்திய சமூகத்தினர் இதை பெரிய நிகழ்வாக பார்க்கின்றனர்..

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள 60,000 பேர் பதிவு செய்ததாக அதன் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவிலை பிரதமர் மோதி திறந்து வைத்துள்ளார்.

இந்த கோவில் பாப்ஸ் சுவாமிநாராயண் சன்ஸ்தாவால் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப்பணி 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கோவிலில் 5 உச்சி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாப்ஸ் சுவாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பின் தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் தலைமையில் கோவிலின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

அரபு நாடுகளில் எத்தனை இந்து கோவில்கள் உள்ளன?

தற்போது அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள இந்த கோவிலே அரபு உலகின் முதல் இந்து கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இதற்கு முன்னாலும் அரபு நாடுகளில் இந்து கோவில்கள் இருந்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தை தவிர , ஓமன் மற்றும் பஹ்ரைனிலும் இந்து கோவில்கள் உள்ளன.

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவில் ஒரு நூற்றாண்டு பழமையான கோவிலாகும். இது இந்தியப் பிரிவினைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தட்டாவைச் சேர்ந்த சிந்தி சமூகத்தால் கட்டப்பட்டது.

திருவிழா மற்றும் சிறப்பு நாட்களில் சவுதி அரேபியாவில் வாழும் இந்துக்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவது உண்டு.

ஓமன் தலைநகர் மஸ்கட்டிலும் இரண்டு இந்து கோவில்கள் உள்ளன. பழைய மஸ்கட்டின் முத்ரா பகுதியில் மோதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இது 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் அமைந்துள்ள பழமையான இந்து கோவில்களில் இதுவும் ஒன்று எனவும் கூறப்படுகிறது.

இதே மஸ்கட்டில் உள்ள ரூவி பகுதியில் கிருஷ்ணர்-விஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இது 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவில் ஓமனில் குடியேறிய குஜராத் சமூக மக்களின் நட்பிற்கு அடையாளமாய் ஓமன் சுல்தானால் கட்டப்பட்டது.

துபாயில் உள்ள இந்தியாவை சேர்ந்தவர்களில் சிந்திக்கள், மராத்திகள், குஜராத்திகள், பஞ்சாபியர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் என பலரும் உள்ளனர். அவர்களுக்கென பல்வேறு வழிபாட்டுத் தலங்களும் இங்கு உள்ளது.

தீபாவளி நேரத்தில் துபாய் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் வளைகுடாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவை போலவே இரவில் வானம் வெளிச்சத்தால் நிரம்பியிருக்கும்.

மதம் மற்றும் அரசியல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் வெற்றிக் கதைகள், ஒரு சமூகம் தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் முன்னேறும் போது அதற்கு ஏற்ற நிலையை எவ்வாறு அடைய முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இந்தியாவின் முன்னாள் தூதர் சொல்வது போல், இந்தியர்கள் தங்களது கடின உழைப்பின் காரணமாக உலக நாடுகள் பலவற்றாலும் விரும்பப்படும் பணியாளர்களாக மாறிவிட்டனர்.

இருப்பினும், தீவிரமான தேசியவாதத்தை முன்னிறுத்துவதன் மூலம் இந்த அடையாளத்தை கெடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக நுபுர் ஷர்மாவின் வழக்கும் ஒரு சான்று.

அரபு மொழியில் இந்துக்கள் மட்டுமல்லாது அனைத்து இந்தியர்களையும் இந்துக்கள் என்றே அழைக்கிறார்கள்.

சுவாமி நாராயண் கோயிலைப் பொறுத்தவரை, அதன் கட்டுமானத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் செல்வாக்கும் உள்ளது. ஆனால், இதை அரசியல் வெற்றியாகவோ மத வெற்றியாகவோ பார்ப்பது தவறு.

இந்தியாவில் சமீப காலமாகவே மதத்துடன் தொடர்புடைய எந்த விஷயமும் அரசியல் விவகாரமாக மாறிவிடுகிறது. ஆனால், அரபு நாடுகளில் அப்படி இல்லை.

இங்கு மக்கள் வாழ்வில் மதங்கள் தாக்கம் செலுத்தினாலும், அரசியல் விவகாரங்களில் அவை தாக்கம் செலுத்துவதில்லை.

வளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் செல்வாக்கு

அரபு உலகம், குறிப்பாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் மாற்றமடைந்து வருகின்றன. அதே சமயம் இங்குள்ள இந்திய சமூகங்களும் மாறி வருகின்றன.

இங்குள்ள இந்தியர்கள் அரபு நாடுகளுக்கு நல்ல வருமானம் மற்றும் வாழ்க்கையை தேடி வருகின்றனர். சில நேரங்களில் மேற்கு நாடுகளுக்கு சென்று, அங்கேயே குடியுரிமை பெற்றவர்கள் கூட, நல்ல வருமானத்திற்காக அரபு நாடுகளுக்கு வருகிறார்கள்.

இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணம் சம்பாதித்து, அதை இந்தியாவிற்கு அனுப்புவதால் பல குடும்பங்களின் வாழ்க்கை மாறிவிட்டது. குறிப்பாக கேரளா, ஆந்திரா, உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புறங்களில் உள்ள பலரது சமூக நிலையும் உயர்ந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஈட்டிய வருமானத்தை கொண்டு பலரும் பல்வேறு தொழில்களை இந்தியாவில் தொடங்கியுள்ளனர். லட்சக்கணக்கான தொழில்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் இந்த பிராந்தியங்களில் காணப்படும் இந்தியர்களின் தரமும் உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளில் அவர்கள் வெறும் ரியல் எஸ்டேட் திட்டங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமல்ல. மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களாகவும் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

வளைகுடா நாடுகள் எண்ணெய் வளத்தை தாண்டி, உயர்தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சியின் மூலம், காஸ்மோபாலிடன் நகரங்களாக மாறி வருகின்றன.

இந்த மாற்றம் கண்டிப்பாக இந்தியாவின் திறமையான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மத பிரச்னைகளை தாண்டி, வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியர்களுக்கு இடையில் நீண்டகாலமாகவே ஒரு பிணைப்பு உள்ளது. இது எதிர்காலத்தில் இன்னமும் வலுவடைய மட்டுமே செய்யும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சவுதி அரேபியாவிலிருந்து வேறுபட்டது

இதில் மற்றுமொரு விஷயம் என்னவென்றால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சௌதி அரேபியாவிலிருந்து வேறுபட்டது. இரண்டு முக்கிய மசூதிகளை கொண்ட சௌதி அரேபியாவை போன்றதல்ல ஐக்கிய அரபு எமிரேட்ஸ். சௌதி அரேபியா சமீப காலமாக நவீனமயமாகி வந்தாலும் கூட, அதன் தனி வழியை அது பின்பற்ற வேண்டியுள்ளது.

இதற்கு அப்படியே மாறாக, ஐக்கிய அரபு அமீரகம் சிறிய நாடாக இருந்தாலும் கூட விமான போக்குவரத்தின் மையமாக மாறும் முயற்சியில் முன்னணியில் உள்ளது, மறு-ஏற்றுமதி வணிக மாதிரிகளை உருவாக்குதல், உலகம் முழுவதிலும் உள்ள திறமையானவர்களை வரவேற்பது என ஒரு பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.

பிறரின் நம்பிக்கைகள், தேவைகள் மற்றும் உணர்வுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இவை அனைத்தும் சாத்தியமாகும்.

இதற்கு உதாரணம் அபுதாபியில் உள்ள ஆபிரகாமிக் குடும்ப இல்லம். இங்கு ஒரு மசூதி, தேவாலயம் மற்றும் ஒரு பிரார்த்தனை கூடம் ஆகிய மூன்றுமே உள்ளது.

இந்த ஆபிரகாமிக் குடும்பம் என்பதன் அர்த்தம், ‘ நம்பிக்கையில் வேற்றுமை, ஆனாலும் மனிதநேயத்தில் ஒற்றுமை, ஒற்றுமையில் அமைதி’ என்பதாகும்.

அபுதாபி கோவில் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் துபாயை சேர்ந்த நபர் ஒருவர், “எப்படி ஒரு கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்காக அந்த பதிவை நீக்கும் வரை அவர் பலரால் கேலி செய்யப்பட்டார்.

அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விருந்தோம்பல் உணர்வைக் காட்டுகிறது.

அதனால்தான் இந்த கோவிலை அரசியல் வெற்றியாக பார்க்காமல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக பார்க்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)