You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் காதலிக்காக ராஜேந்திர சோழன் கட்டிய 'காதல் சின்னம்' பற்றி தெரியுமா?
- எழுதியவர், மாயகிருஷ்ணன். க
- பதவி, பிபிசி தமிழுக்காக
(பிப்ரவரி 14 - காதலர் தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)
இறந்த தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலகின் காதல் சின்னமாக பார்க்கப்படுகிறது. காதல் என்றாலே தாஜ்மஹாலை பற்றி தான் எல்லோரும் பேசுகின்றோம்.
ஆனால் தமிழ்நாட்டில் தாஜ்மஹாலுக்கு முன்பாகவே கட்டப்பட்ட ஒரு காதல் சின்னம் இருக்கிறது.
சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழனின் வீரம் பற்றி தெரியும். ஆனால் அவன் தனது காதலிக்காக கட்டிய காதல் சின்னம் பற்றி தெரியுமா? அவர் தனது அனுக்கி(காதலி) பரவை நங்கையின் வேண்டுகோளை ஏற்று திருவாரூரில் கட்டிய கோவில் தான் அது.
ராஜேந்திர சோழன்- பரவை நங்கையார் காதல்
ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன், கி.பி. 1012-ஆம் ஆண்டு முதல் 1044-ஆம் ஆண்டு வரை மன்னராக இருந்தவர். கடாரத்தை வென்றவர் என்ற பெயர் இவருக்கு உண்டு. அவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த ஆடல் அழகிக்கும் இடையே இருந்த காதல் அதிகம் அறியப்படாதது.
பேரறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் பிபிசி தமிழிடம் இது குறித்து விவரிக்கத் தொடங்கினார்.
"அக்காலத்தில் சோழ நாட்டில் புகழ்மிக்க வணிகன் கோவலனும், நாட்டிய பெண்மணி, ஆடல் அழகியான மாதவிக்கும் இடையே உள்ளே காதல் பற்றி விவரிக்கின்றது சிலப்பதிகாரம். இந்தக் காதலைப் பற்றி இலக்கிய பேச்சாளர்களால் மேற்கோளிட்டு பேசாமல் இருக்க முடியாது, என்ற போதிலும் இலக்கியத்தில் கூறப்படும் இந்த காதலர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்பது யாருக்கும் தெரியாது."
"ஆனால் கி.பி 11-ஆம் நூற்றாண்டில் சோழர் வரலாற்றில் ஒரு மன்னனும் ஆடல் பணி புரியும் பெண்ணொருத்தியும் காதல் கொண்டு காதலுக்கு ஒரு இலக்கணம் வகுத்திருக்கின்றார்கள். சோழ சாம்ராஜ்யத்தை கடல் கடந்து பரவிடச் செய்த மிகப்பெரிய மாவீரன் ராஜேந்திர சோழனின் காதலி தான் பரவை நங்கையார்." என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.
தொடர்ந்து பேசிய அவர், "முதலாம் ராஜேந்திரன் கங்கையையும் கடாரத்தையும் வென்று உலகளாவிய பல வெற்றிகளை ருசித்த மாமன்னன் ஆவான். ஆனால் உலகத்தை வென்ற இவனது உள்ளத்தை வெற்றி கொண்ட அனுக்கியாகத் (காதலி) திகழ்ந்தவர் தான் திருவாரூரை சேர்ந்த ஆடல் அழகி பரவை நங்கை. இவர் ஆடல் பாடல் மட்டுமல்லாது இறை பணியிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். இவருக்கு கிடைத்த சிறப்பு ராஜேந்திர சோழனின் பட்டத்தரசிக்கு கூட கிடைக்கவில்லை என்று கூறலாம்"
"சோழ வரலாற்றில் ராஜேந்திரன் எவ்வாறு சிறப்பிடம் பெற்றானோ அதை போல் அவரது இதயத்தில் பரவை நங்கை சிறப்பான இடத்தை பெற்றாள், இதனை ராஜேந்திர சோழனின் மகன்கள் பரவை நங்கைக்கு திருமேனி எடுத்து வழிபாடு செய்தனர் என்பதிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்" என்றார்.
செங்கல் கோவிலை கற்கோயிலாக மாற்றிய காதல்
தொடர்ந்து பேசிய பேராசிரியர் ரமேஷ், "ராஜேந்திர சோழன் காலத்தில் அனுக்கியர் (அனுக்கியர் என்றால் பிரியமானவள், காதலி என்று பொருள்) பரவைநங்கை ராஜேந்திர சோழனிடம் வைத்த கோரிக்கைக்காக ஒரு செங்கல் கோவில் கற்கோயிலாக மாற்றப்பட்டது. அந்த கோவில் திருவாரூர் தியாகேசர் கோவிலாகும்."
"பரவை நங்கையாரின் விருப்பப்படி ராஜேந்திரன் தனது பதினாறாம் ஆட்சி ஆண்டான கி.பி. 1028-இல் தொடங்கி பதினெட்டாம் ஆட்சியாண்டான கி.பி. 1130இல் கற்கோயிலாக கட்டி முடித்தார். இரண்டு ஆண்டுகள் கற்கோவிலாக சிறப்பாக வடிவமைத்தார். இதனை அவனது கல்வெட்டு குறிப்பிடுகின்றது."
"கற்கோயிலாக அமைத்ததுடன் மட்டுமல்லாது அந்த கோவிலின் வெளிப்புறம் தொடங்கி கலச பகுதி வரையில் வாயில் உட்புறம் முழுவதும் பொன் வேய்ந்தான். கருவறை கதவுகளுக்கும், முன்புற தூண்களுக்கும் செம்பினால் தகடு சாத்தினான். இதற்காக 20.643 கழஞ்சு (1 கழஞ்சு = 5.4 கிராம்) பொன்னும், 42.000 பலம் செம்பொன்னும் செலவிடப்பட்டதாக கல்வெட்டு தெரிவிக்கின்றது"
"மேலும் வழிபாட்டிற்காக 28 குத்துவிளக்குகள், மேலும் ஆயிரக்கணக்கான கழஞ்சு எடை கொண்ட பொன் ஆபரணங்கள் 428 முத்துக்கள், 7 மாணிக்க கற்கள், 36 வைரக்கற்கள், எண்ணற்ற மரகத கற்கள், வெள்ளி பாத்திரங்கள் ஆகியவற்றை நன்கொடையாக அளித்தான்."
"பரவை நங்கை விடுத்த கட்டளைப்படி கட்டி முடிக்கப்பட்ட கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடந்தது. அப்போது சோழ மன்னன் ராஜேந்திரன் தன் அருகில் அவளை வீற்றிருக்கச் செய்து தேரில் பவனி வந்தான். இவர்கள் இருவரும் இறைவனை தரிசித்த இடத்தில் ஒரு குத்துவிளக்கு ஒன்றை நினைவாக ஏற்றினாள். இதனை இவனது கல்வெட்டு 'உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரும் அனுக்கியர் பரவை நங்கையாரும் நிற்குமிடத் தெரியும் குத்து விளக்கொன்றும்' என்று குறிப்பிடுகிறது" என்றார் பேராசிரியர் ரமேஷ்.
மேலும் அவர் கூறுகையில், "திருவாரூர் கோவிலில் ராஜேந்திர சோழனுடன் பரவை நங்கைக்கு கல்சிற்பம் எடுக்கப்பட்டு தினசரி பூஜை செய்வதற்கு ராஜாதிராஜன் நிலங்களை அளித்தான் என்பதை திருவாரூர் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இன்றும் அங்கு சிற்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது."
"தலையில் கிரீட மகுடமும், இடையில் ஆடையும், கழுத்தில் பல அணிகலன்களும் பெற்று ராஜேந்திரன் நின்ற நிலையில் வாணங்கியவாறு உள்ளான். அவர் அருகில் பரவை அழகிய கொண்டையுடனும், பல மடிப்புகளுடன் கூடிய ஆடை அணிய பெற்று வணங்கியவாறு உள்ளாள்."
"இவையெல்லாம் ராஜேந்திர சோழன் தனது அனுக்கி (காதலி) பரவை நங்கை மீது கொண்ட அளவு கடந்த காதலை உறுதிப்படுத்துகின்றது. இவன் மட்டுமல்லாது இவனுக்கு பின் வந்த அவனது புதல்வர்களும் இவர்களது காதலைப் போற்றியிருக்கிறார்கள்." என்றார் பேராசிரியர் ரமேஷ்.
தேவரடியார் பெண் ஒருத்தியிடம் சோழ பேரரசன் கொண்ட காதலால் திருவாரூர் கோவில் கற்கோயிலாக மாறியது என்பதை தெளிவாக கூறினார் அவர்.
காதலி பெயரில் அமைந்த ஊர்
மயிலாடுதுறை, மணல்மேடு, அரசு கலை அறிவியல் கல்லூரி வரலாற்று துறைத்தலைவர் கலைச்செல்வன் பிபிசி தமிழுடன் பேசுகையில், கோவிலை மட்டுமல்ல ஊர் பெயரையும் காதலிக்காக ராஜேந்திரன் வைத்தார் என்ற கூடுதல் தகவலுடன் விவரிக்க தொடங்கினார்.
"ராஜேந்திர சோழனுக்கு பரவை நங்கையர் மீது இருந்த அதீத காதலை வெளிப்படுத்தும் விதமாக விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றிற்கு பரவைபுரம் என்று பெயரிட்டுள்ளார். தற்பொழுது அது பனையபுரம் என்று அழைக்கப்படுகிறது."
"இந்த ஊர் இராஜ ராஜ வள நாட்டில் பனையூர் நாட்டு பொறையூர் நாட்டு தனியூர் பரவைபுரம் என்றும் கங்கைகொண்ட சோழ வளநாட்டு பரவைபுரம் என்றும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில் இறைவன் பரவை ஈஸ்வரன் உடையார் என்று குறிக்கப்படுகின்றார்."
உறவை மதித்த தலைமுறையினர்
தொடர்ந்து பேசிய கலைச்செல்வன், "ராஜேந்திரனின் மகனான ராஜாதிராஜன், பரவை நங்கைக்கும் தன் தந்தைக்கும் தகுந்த மரியாதைகளை அவர்கள் இறந்த பின்பும் செய்தான். அவர்களின் சிலைகளைத் திருவாரூர் ஆலயத்தில் செய்வித்தான்." என்று கூறினார்.
மேலும், "ராஜாதிராஜனுக்கு அடுத்து அரியணை ஏறிய இரண்டாம் ராஜேந்திரனும் தன் தந்தையான ராஜேந்திரன், தாயைப் போன்ற பரவை ஆகிய இருவருக்கும் திருமேனிகள் செய்து பரவை ஈஸ்வரமுடையார் கோவிலில் பிரதிஷ்டை செய்தான்."
"அவர்கள் பிறந்த நாள்களில் விழாக்கள் எடுக்கப்பட்டன. அதற்கான நிவந்தங்களையும் அவன் அளித்தான். அதன்பின் வந்த வீர ராஜேந்திர சோழனும் இதே போன்று பரவையின் பெயரில் பல நிவந்தங்களை செய்தான். மகன்களை விடுங்கள், பின்னாளில் வந்த அதிராஜேந்திரனும் முதல் குலோத்துங்க சோழனும்கூட பரவைபுரம் ஈசன் ஆலயத்திற்குப் பல நிவந்தங்கள் அளித்துப் பரவைக்குப் பெருமை சேர்த்தனர்."
"உண்மையான உறவினை வெளிப்படுத்தும் காதல் அந்த காலத்திலும் மதித்து போற்றப்பட்டுள்ளதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாகும்" என்று வரலாற்றுத் துறை தலைவர் கலைச்செல்வன் கூறினார்.
அதேபோல் மதுரை-திண்டுக்கல் செல்லும் சாலையில் பரவை நங்கைநல்லூர் என்ற ஊரும் இருந்தது. இவர் பெயரால் அழைக்கப்பட்டது. இன்று அது பரவை என்று அழைக்கப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பரவை பாசன ஏரியில் பரவை நங்கைநல்லூர் என்ற பெயரை தெரிவிக்கும் பழமையான கல்வெட்டுகளும் உள்ளன.
முதலாம் ராஜேந்திரனின் அனுக்கியான பரவை நங்கையினை பற்றி சிதம்பரம், திருவாரூர், பனையபுரம் போன்ற இடங்களில் கல்வெட்டுக்கள் உள்ளன. ராஜேந்திரன் பரவைநங்கை உறவினை அவரது புதல்வர்களும் மதித்தார்கள்.
தந்தையின் காதலை மதித்த புதல்வர்
முதலாம் ராஜேந்திர சோழன் பரவைநங்கையின் இறப்புக்கு பின்னர் இருவருக்கும் படிமம் எடுக்கப்பட்டு வழிபாட்டிற்கும் நிலம் கொடையாக வழங்கப்பட்ட செய்தியினை திருவாரூரில் உள்ள முதலாம் ராஜாதி ராஜனின் 24-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு (அதாவது கி.பி 1042) விவரிக்கின்றது.
இக்கல்வெட்டில், இந்த கோவில் அரநெறியப்பரை வழிபாடு செய்யும் ஒருவருக்கு 50 கலம் நெல்லும் புடவைக்கு 15 கலம் நெல்லும் கொடை வழங்க மன்னர் உத்தரவிட்டுள்ளார் .இந்த கல்வெட்டின் வாயிலாக இவர்கள் இறப்பிற்கு பின்னரும் சோழ அரசியலில் நிலை பெற்றிருந்த நன்மதிப்பினை நாம் அறிய முடிகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)