போர்க்களத்தில் காதலனை துணிச்சலாகக் காப்பாற்றிய ஆப்கன் இஸ்லாமிய இளவரசியின் கதை

"மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை."

இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார்.

அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார்.

“அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார்.

ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.

தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை

ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார்.

பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார்.

ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை.

ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர்.

எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன.

எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது.

அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண்

அக்கதை இப்படித் துவங்குகிறது.

"... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...”

"ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..."

அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார்.

"இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத்.

மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார்.

"சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது.

"அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.”

"ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்."

இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார்.

அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.

ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள்

எப்டிகாரின் கதை தொடர்கிறது.

"ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…”

"ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..."

பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார்.

"அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…"

பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார்.

காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார்.

பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார்.

"அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..."

ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார்.

சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன.

ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

"உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல

"அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்...

"உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..."

சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார்.

"தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான்.

அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.

ஒரே பெண், இரண்டு முகங்கள்

"ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார்.

அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார்.

வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார்.

"அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார்.

அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார்.

ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார்.

அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும்.

இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார்.

பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."

தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம்

ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

"ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார்.

அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர்.

தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது.

ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)