You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்
- எழுதியவர், இடோ வோக் மற்றும் கேட் ஸ்னோடன்
- பதவி, பிபிசி நியூஸ்
'இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர்' என்று அழைக்கப்பட்ட போலியோ போராளி பால் அலெக்சாண்டர் 78 வயதில் காலமானார்.
கடந்த 1952இல் பால் அலெக்சான்டர் தனது ஆறு வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார், இதனால் அவரின் கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி முழுமையாகச் செயலிழந்தது. இந்த நோயால் அவரால் சுதந்திரமாகச் சுவாசிக்க முடியாமல் போனது.
எனவே மருத்துவர்கள் அவரை உலோக சிலிண்டருக்குள் வைத்து அதன் மூலம் உயிர்வாழ வழிவகுத்தனர். வாழ்நாள் முழுவதும் அந்த இரும்பு சிலிண்டருடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அலெக்சாண்டர் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். மேலும், வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார், அத்துடன் ஒரு சுய சரிதை நூலையும் வெளியிட்டிருக்கிறார்.
"பால் அலெக்சாண்டர், 'தி மேன் இன் அயர்ன் லங்'(The Man in Iron Lung) நேற்று காலமானார்" என்று நிதி திரட்டும் இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
'பால் ஒரு அற்புதமான மனிதர்'
"இரும்பு சிலிண்டர் உதவியோடு வாழ்ந்த பால், கல்லூரிக்குச் சென்றார், ஒரு வழக்கறிஞரானார், மேலும் ஒரு எழுத்தாளராகவும் இருந்தார். பால் ஒரு அற்புதமான முன்மாதிரி," என்கிறார் பாலின் சகோதரர், பிலிப் அலெக்சாண்டர்.
பால் அலெக்சாண்டர் பற்றிக் குறிப்பிடுகையில் "எப்போதுமே பிறரை புன்னகையுடன் வரவேற்கும் அன்பான நபர் அவர்" என்று நினைவு கூர்ந்தார், மேலும் பாலின் புன்னகை புத்துணர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
"என் சகோதரர் பால் என்னைப் பொறுத்தவரையில் ஓர் இயல்பான மனிதர். அனைத்து சகோதரர்களைப் போன்று நாங்களும் சண்டையிடுவோம், விளையாடினோம், நேசித்தோம், ஒன்றாக கச்சேரிகளுக்குச் சென்றோம். அவர் ஒரு இயல்பான சகோதரர், நான் அவரின் நிலை பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை," என்று பிலிப் பிபிசியிடம் கூறினார்.
நோயின் தாக்கத்தால், உணவு உண்பது உட்பட சுயமாக எந்த அன்றாடப் பணிகளையும் செய்ய முடியாமல் போன சூழலிலும், தனது சகோதரர் தன்னிறைவு பெற்ற மனிதராக வாழ்ந்ததாக பிலிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும் "அவரது ராஜ்ஜியத்தில் அவரே ராஜா. அவருக்கு உதவும் நபர்களுக்கும் சிரமம் கொடுக்காமல் உதவுபவர்," என பிலிப் கூறினார்.
கடந்த சில வாரங்களில் பாலின் உடல்நிலை மோசமானது. அவரின் இறுதி நாட்களை தன் சகோதரருடன் கழித்தார். அவர்கள் மகிழ்ச்சியாக ஐஸ்கிரீம்களை பகிர்ந்து கொண்டனர்.
"அவரது வாழ்வின் இறுதி தருணங்களில் அவருடன் இருப்பது என் பாக்கியம்" என்று பிலிப் குறிப்பிட்டார்.
உலோக உருளைக்குள் வாழ்ந்தவர்
பால் அலெக்சாண்டர் 1952இல் நோய்வாய்ப்பட்டபோது, அவரது சொந்த ஊரான டல்லாஸில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றினர். ஆனால் போலியோ பாதிப்பால் அவரால் சுயமாகச் சுவாசிக்க முடியவில்லை.
அதன் விளைவாக இரும்பு நுரையீரல் என்று அழைக்கப்படும் - ஒரு உலோக உருளை அவரது கழுத்து வரை உடலைச் சுற்றிப் பொருத்தப்பட்டது. அந்த உலோக உருளைக்குள்தான் அவர்தம் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.
செயற்கை இரும்பு நுரையீரலை பால் 'பழைய இரும்புக் குதிரை' என்றே குறிப்பிடுவார். அந்த பழைய இரும்புக் குதிரையால்தான் அவர் சுவாசித்தார். பெல்லோஸ் என்னும் உபகரணம் சிலிண்டரில் இருந்து காற்றை உறிஞ்சி, அவரது நுரையீரலை விரிவடையச் செய்து, காற்றை உள்வாங்கச் செய்தது. காற்று மீண்டும் உள்ளே நுழையும்போது, அதே செயல்முறை தலைகீழாக நிகழ்ந்து அவரது நுரையீரலைச் சுருங்க செய்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அலெக்சாண்டர் சுயமாக சுவாசிக்கவும் கற்றுக்கொண்டார், இதனால் அவர் குறுகிய காலத்திற்கு அந்த இரும்பு நுரையீரலை விட்டு வெளியேற முடிந்தது.
இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்ட பெரும்பாலான போலியோ போராளிகள் போல, அவரும் நீண்ட காலம் உயிர்வாழ மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தார். 1950களில் போலியோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், மேற்கத்திய நாடுகளில் போலியோவை ஒழித்த பிறகும் அவர் உயிர் வாழ்ந்தார்.
கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர்
பால் உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றார், பின்னர் தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1984இல், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராகப் பயிற்சி மேற்கொள்ள அவருக்கு அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
"நான் என் வாழ்க்கையில் ஏதேனும் செய்யப் போகிறேன் என்றால், அது கண்டிப்பாக மனம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்க முடியும் என்பதை நான் அறிவேன்’’ என்று பால் 2020இல் கார்டியன் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.
அதே ஆண்டு, அவர் தன் சுயசரிதை நூலையும் வெளியிட்டார், நண்பரின் உதவியுடன் ஒரு பிளாஸ்டிக் குச்சியைப் பயன்படுத்தி ஒரு விசைப் பலகையில் தட்டச்சு செய்து இந்த நூல் எழுதப்பட்டது. இதை எழுதி முடிக்க அவருக்கு எட்டு ஆண்டுகள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாலின் சகோதரர் பிலிப், அந்த சுயசரிதை புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவரது சகோதரர் எவ்வளவு உத்வேகம் அளித்து முன்னோடியாகத் திகழ்கிறார் என்பதை உணர்ந்ததாகக் கூறினார்.
மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் 1960களில் இரும்பு நுரையீரல் மருத்துவ முறை வழக்கற்றுப் போய்விட்டது, அதற்குப் பதிலாக வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அலெக்சாண்டர் இரும்பு சிலிண்டருக்கு பழகிவிட்டதால் அந்த உருளையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.
இரும்பு நுரையீரலில் அதிக காலம் வாழ்ந்தவர் என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அவர் அங்கீகரிக்கப்பட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)