காஸா போர்: 'மக்களின் பசியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்' - ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

    • எழுதியவர், ஜேம்ஸ் கிரிகோரி
    • பதவி, பிபிசி தமிழ்

காஸாவில் நிலவும் `பட்டினி’ சூழல், போரின் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் குற்றம் சாட்டியுள்ளார். காஸா எல்லைகளுக்குள் நிவாரண உதவி கிடைக்கப் பெறாமல் இருக்கும் சூழலை 'மனிதனால் உருவாக்கப்பட்ட' ஒரு பேரழிவு என்று அவர் விவரித்துள்ளார்.

மிகவும் அவசியமான உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்பெயின் நாட்டுக் கப்பல் ஒன்று சைப்ரஸில் இருந்து காஸாவுக்கு சென்றுள்ளது. ஆனால் இந்தக் கடல் வழி நிவாரணம், தரை வழியாக நிவாரண உதவிகளை வழங்குவதற்கு மாற்றாக இருக்க முடியாது என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் தெற்கு காஸாவில் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக நிவாரண உதவி வழங்குவதற்கு மிகவும் சிறந்த வழி, சாலை மார்க்கம்தான். ஆனால் இஸ்ரேலிய கட்டுப்பாடுகளால் தேவையான உதவிகளில் ஒரு பகுதியளவு நிவாரணம் மட்டுமே உள்ளே நுழைய முடிவதாக நிவாரணம் வழங்கும் உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.

சாலை வழியாகச் செல்வதில் உள்ள தடைகள்

தற்போது சாலை வழி நிவாரணம் வழங்குவதற்கு மாற்றாக கடல் மற்றும் வான் வழிகளில் கவனம் திரும்பியுள்ளது. வடக்கு காஸாவிற்கு உதவ, கடந்த மூன்று வாரங்களில் முதல்முறையாக செவ்வாயன்று ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருட்களுடன் சில டிரக்குகள், தரைவழிப் பாதையைப் பயன்படுத்தின.

காஸாவின் எல்லையையொட்டிய இஸ்ரேலிய ராணுவ சாலையை நிவாரண டிரக்குகள் பயன்படுத்தியதாக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதிக்கான ஐ.நா நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜேமி மெக்கோல்ட்ரிக், ராய்ட்டர் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

இதன்மூலம் காஸா நகரில் 25,000 பேருக்குப் போதுமான உணவு வழங்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாஸா மொக்ராபி குறிப்பிடுகையில், "உணவு விநியோகங்கள் மேலும் அதிகரிக்கப்படும், ஆனால் நிவாரண உதவிகளை சீராக வழங்கப் போதுமான பாதை வசதி வேண்டும்," என்றார்.

காஸாவில் நிலவும் உணவுப் பற்றாக்குறைக்கு தாங்கள் காரணம் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏனெனில் தெற்குப் பகுதியில் நிவாரண டிரக்குகள் வந்து போக இரண்டு பாதைகள் திறக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் செவ்வாயன்று நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய பொரெல், "காஸா பிராந்தியத்தில் நிலவும் உணவு நெருக்கடிக்கு காரணம், தரை வழிப்பாதை இல்லாததுதான்’’ எனக் குறிப்பிட்டார்.

"உயிர் வாழவே போராடும் சூழலில் இருக்கும் மக்களைத்தான் நாங்கள் எதிர்கொள்கிறோம். காஸாவுக்குள் மனிதாபிமான அடிப்படையில் நிவாரணங்கள் தேவைப்படுகின்றன, அதைச் சாத்தியமாக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிந்தவரை போராடுகிறது,’’ என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மனிதாபிமான நெருக்கடி என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது, மேலும் கடல் வழி, வான் வழி மூலம் நிவாரணம் வழங்குவதற்கான மாற்று வழிகளைப் பற்றி யோசிக்கும் நாம், ​​தரை மார்க்கமாக நிவாரணம் வழங்குவதற்கான இயற்கையான வழி இருந்தும் செயற்கையாக அவை மூடப்பட்டிருப்பதை நினைவுகூற வேண்டும்.’’

"பட்டினி என்பது இங்கே ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது, யுக்ரேனில் இது நடந்தபோது நாங்கள் கண்டித்தோம், தற்போது காஸாவிலும் நடக்கிறது. மீண்டும் அதேபோன்று கண்டிக்கிறோம்,’’ என்றார்.

பஞ்சத்தின் பிடியில் காஸா

காஸாவில் குறைந்தபட்சம் 576,000 மக்கள், அதாவது மக்கள்தொகையில் கால் பகுதியினர் பஞ்சத்தின் கோரப்பிடிக்கு மிக அருகில் இருப்பதாக ஐ.நா எச்சரித்ததின் விளைவாகவே பொரெல் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் அங்குள்ள மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக குறைந்தது 27 பேர் இறந்துள்ளனர். அவர்களில் பலர் குழந்தைகள் என்று காஸாவில் ஹமாஸ் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது 'ஓபன் ஆர்ம்ஸ்' எனும் ஸ்பானிய கப்பல் உதவிகள் வழங்க வந்து கொண்டிருக்கிறது. இது செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு முன்னதாக 200 டன் உணவுப் பொருட்களுடன் லார்னகாவில் இருந்து புறப்பட்டது.

நிவாரணங்களை ஏற்றி வரும் இந்தக் கப்பல் கடலில் பயணிக்கும்போது, உலக மத்திய சமையலறையில் (World Central Kitchen) பணிபுரியும் பாலத்தீனியர்கள் காஸாவின் கடற்கரையில் யாரும் அறிந்திடாத ஒரு பகுதியில் அணைக்கரையை அமைப்பார்கள், அது நிவாரணப் பொருட்களை தரையிறக்கப் பயன்படுத்தப்படும்.

ஜெனரல் ஃபிராங்க் எஸ் பெஸ்ஸன் எனும் அமெரிக்க ராணுவக் கப்பலும் மத்திய கிழக்கு நோக்கிப் பயணிக்கிறது. அது தற்காலிக கப்பல் கட்டுவதற்கான உபகரணங்களை ஏற்றிக் கொண்டு வருவதாகவும், தங்கள் திட்டத்திற்கும் அந்தக் கப்பலுக்கும் தொடர்பில்லை என்றும் உலக மத்திய சமையலறை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

நிவாரணம் வழங்க கடல் வழித்தடத்தைப் பயன்படுத்துவதை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. ஹமாஸுக்கு எதிராக அதன் படைகள் தொடர்ந்து போரிடும் அதேநேரம் காஸாவிற்கு நிவாரணம் வழங்கவும் உதவுவோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

'இராணுவ நடவடிக்கை தொடரும்' - இஸ்ரேல்

"எகிப்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவிற்குள் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும்" என்று நெதன்யாகு செவ்வாயன்று உறுதிபடத் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் நடந்த இஸ்ரேல் சார்பு, அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு அமைப்பின் மாநாட்டில் வீடியோ வாயிலாக நிகழ்த்திய உரையில், "பொதுமக்கள் போர் அபாயப் பகுதிகளில் இருந்து வெளியேறும் அதேவேளையில் நாங்கள் ரஃபாவில் எங்கள் பணியை முடிப்போம்," என்று கூறினார்.

இதற்கிடையில், டெல் அவிவ் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள நாட்டின் மூன்று முக்கிய சரக்கு துறைமுகங்களில் ஒன்றான அஷ்டோத் துறைமுகத்தை, காஸாவிற்கு கடல்வழி நிவாரண விநியோகங்களுக்கு திறக்குமாறு பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் கேமரூன் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலை தாக்கி, சுமார் 1,200 பேரைக் கொன்று 253 பணயக் கைதிகளைக் கைப்பற்றியபோது காஸாவில் போர் தொடங்கியது.

காஸாவில் 31,180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்களை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை பல வாரங்களாக நடந்தும், போர்நிறுத்தம் அல்லது பணயக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)