முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்: இலங்கை பாஸ்போர்ட் கிடைத்ததும் எங்கே செல்கின்றனர்?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு இலங்கை அரசின் கடவுச் சீட்டை பெறுவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. அவர்கள் எங்கே செல்லவிருக்கிறார்கள்?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் பேரறிவாளனும் நவம்பர் மாதத்தில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். ஸ்ரீஹரன் என்ற முருகன் (நளினியின் கணவர்), சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் சாந்தன் இலங்கை பாஸ்போர்ட் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் இலங்கையின் பாஸ்போர்ட் இருந்தது. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்து கொண்டவர்கள். ராபர்ட் பயஸின் மைத்துனர்தான் ஜெயக்குமார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், இலங்கை குடிமக்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

முகாமில் இருந்து விடுவித்து தாங்கள் விரும்பும் நாட்டிற்குத் தங்களை அனுப்பி வைக்க வேண்டுமென தொடர்ந்து இவர்கள் கோரி வந்தனர். ஆனால், இவர்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் இல்லாத காரணத்தால், தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமிலேயே வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தனுக்கு உடல்நலம் குன்றியது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கான பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன. இருந்தபோதும், அவர் மருத்துவமனையிலேயே காலமானார். அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து மீதமுள்ள மூவருக்கும் பயண ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் தனக்கும் தன் கணவருக்கும் விசாவுக்காக விண்ணப்பித்து இருந்ததாகவும் நேர்காணலுக்காக ஜனவரி 30ஆம் தேதி அழைக்கப்பட்ட நிலையில், தான் மட்டும் நேர்காணலில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார். முருகன் சிறப்பு முகாமில் இருந்ததால் நேர்காணலில் கலந்துகொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள மோசமான சூழிலின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் இறந்துவிட்ட நிலையில், தனது கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனவும் நளினி கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மூவரின் நேர்காணலுக்காக புதன்கிழமையன்று சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலையில் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நண்பகல் 12 மணியளவில் அவர்கள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களைக் காண்பதற்கு, நளினி, ஜெயக்குமாரின் குடும்பத்தினர், அவர்களது வழக்கறிஞர்கள் ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 2 மணியளவில் விண்ணப்பிப்பதற்கான பணிகள் முடிந்து அவர்கள் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்கள் எங்கே செல்லவிருக்கின்றனர்?

நளினிக்கு இந்திய குடியுரிமை இருப்பதால் விடுதலைக்குப் பிறகு அவர் இங்கேயே வசித்து வருகிறார். நளினி - முருகன் தம்பதியின் மகள் பிரிட்டனில் இருப்பதால், முருகனுக்கு பாஸ்போர்ட் கிடைத்தால் இருவரும் பிரிட்டன் செல்ல விரும்புகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை நளினி சமர்ப்பித்திருக்கிறார்.

ஜெயக்குமாரை பொறுத்தவரை அவருடைய மனைவி இந்தியாவை சேர்ந்தவர். அவர் தனது மகன் பார்த்திபன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சென்னையில்தான் வசித்து வருகிறார். ஆனால், பாஸ்போர்ட் கிடைக்கும் பட்சத்தில் ஜெர்மனியில் உள்ள தனது சகோதரருடன் சென்று வசிக்க ஜெயக்குமார் விரும்புவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ராபர்ட் பயஸை பொறுத்தவரை, அவருடைய உறவினர்கள் நெதர்லாந்தில் வசிக்கின்றனர். ஆகவே அவர் நெதர்லாந்து செல்ல விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேர் தண்டிக்கப்பட்டனர். இதில் 13 பேர் இலங்கைத் தமிழர்கள். உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டபோது ஏழு பேரைத் தவிர மற்ற 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 19 பேரில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அகதிகளுக்கான சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர்.

அவர்களில் பாஸ்போர்ட் வைத்திருந்த, முறையான விசாக்களில் இந்தியா வந்த 3 பேர் உடனடியாக இலங்கைக்குச் சென்றனர். மீதமிருந்தவர்கள் சில நாட்களில் இலங்கையிலும் அதன் பிறகு வெளிநாடுகளிலும் குடியேறினர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)