You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குணா குகை: உண்மையில் அங்கு என்ன இருக்கிறது? அதை முதலில் கண்டுபிடித்தது யார்? - நேரடி விசிட்
மலையாளத்தில் கடந்த மாதம் குணா குகையை மையமாக வைத்து 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற திரைப்படம் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதற்குப் பிறகு கடந்த வாரங்களில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குணா குகையை பார்வையிடச் சென்றுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மீறிச் சென்று புகைப்படம் எடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குணா குகையைக் கண்காணிக்கக் குழு அமைத்து, வேலிகளைச் சீரமைக்கும் பணியை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 7,000 அடி உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் இடம் என்பதால் குளுமையான சூழல், மலைகளை தொட்டுச் செல்லும் மேகக் கூட்டங்கள், பரந்து விரிந்த ஏரி, மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக், குதிரை சவாரி, படகு சவாரி, குணா குகை, குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவில் என சுற்றுலா தளங்களுக்கான பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இங்கு கோடையில் மட்டுமின்றி, வருடத்தின் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ்
கேரளாவின் கொச்சியிலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டு மஞ்சும்மல் என்ற இடத்திலிருந்து ஒரு நண்பர் குழுவினர் கொடைக்கானல் வருகின்றனர். அங்கு பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று பின்னர் குணா குகையைப் பார்வையிடச் சென்றபோது அவர்களில் ஒருவரான சுபாஷ் என்பவர் அங்கிருந்த ஆழமான குழிக்குள் தவறி விழுந்து விடுகிறார்.
இதைத் தொடர்ந்து மற்றுமொரு நண்பரான சிஜூடேவிட், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் வாசிகள் சேர்ந்து நீண்டபோராட்டத்திற்குப் பின் அவரை உயிருடன் மீட்டனர். இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டே மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானது.
இந்தப் படம் குணா குகையில் நடைபெறுவதாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடலான 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே' என்ற பாடல் இந்தப் படத்திற்குக் கூடுதல் வலுவைச் சேர்க்க தமிழ்நாட்டிலும் பெரும்வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது வரை 175 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை ஈட்டி வெற்றிப் படமாக மாறி இருக்கிறது.
குணா குகை 'டெவில்ஸ் கிச்சன்' என அழைக்கப்படக் காரணம் என்ன?
கடல் மட்டத்திலிருந்து 2,200அடி உயரத்தில் இரண்டு பாறைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கக் கூடிய கரடுமுரடான அழகிய பள்ளத்தாக்குப் பகுதி இது. இதனை 1821-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரியான பி.எஸ் வார்டு என்பவர் கண்டறிந்தார். இது ஆபத்தான பள்ளத்தாக்கை கொண்டிருப்பதால் இதற்கு 'டெவில்ஸ் கிச்சன்' (Devil's Kitchen - சாத்தானின் சமையல்கூடம்) என்ற பெயரை வைத்தார்.
இந்தக் குகையின் சில பகுதிகளிலிருந்து மட்டுமே இயற்கையின் அழகை பார்த்து ரசிக்க முடியும். மேலும், பைன் மரக் காடுகள் வழியாக இந்த குகைக்கு வர முடியும் அதனையும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தம குகையில் அதிக அளவிலான வவ்வால் கூட்டங்கள் வசிப்பதால் இது டெவில் கிச்சன் என அழைக்கப்படுவதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.
'டெவில்ஸ் கிச்சனில்' இதுவரை பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு?
கடந்த 1991-ஆம் ஆண்டு குணா படம் எடுக்கப்பட்ட பிறகு இந்தக் குகைக்கு 'குணா குகை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதனை காண்பதற்காக அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வரத் துவங்கினர்.
இந்தக் குகையில் முன்பிருந்தே மக்கள் தவறி விழுந்து உயிரிழப்பது நடந்துவந்திருக்கிறது என்றாலும், குணா படம் வெளியான பிற சுற்றுலாப் பயணிகளில் சிலர் ஆபத்தை அறியாமல் கீழே இறங்கிச் செல்ல முயன்று பள்ளத்தாக்குகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நஅதிகரிக்கத் துவங்கின. எனவே இதனை 'ஆபத்தான குகை'யாக அறிவித்து கடந்த 2006-ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரிகள் குகையைச் சுற்றிலும் 8 அடி உயர வேலி அமைத்துத் இந்த பகுதிக்கு செல்வதற்குத் தடை விதித்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த குணா குகைக்கு எதிர்புறத்தில் இருக்கும் மலைக்கு சுற்றிப் பார்க்க மதுரையிலிருந்து நண்பர்களுடன் வந்த ராம்குமார் என்பவர் தவறி 1,500 அடி பள்ளத்தில் சிக்கினார். ஒன்பது நாட்களுக்கு பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அதற்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்ததாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
குணா குகையில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், 16 பேர் வரை குகைக்குள் சிக்கி இறந்திருப்பார்கள் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், இங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் எதுவுமில்லை.
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் நட்பின் ஆழத்தை உணர்த்தியது மட்டுமின்றி, மக்கள் மத்தியில் குணா குகையையும் மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளது.
இதனால், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரத் துவங்கியுள்ளது.
சமீப காலமாக தமிழ்நாட்டை விட கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே அதிகம் இங்கு வந்து செல்வதாக உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து களநிலவரத்தை அறிந்துகொள்வதற்காக பிபிசி குழு நேரடியாக அங்கு சென்றது.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல கட்டண அனுமதியைப் பெற்று உள்ளே சென்றவுடன் பொதுவாக அதிக சுற்றுலாப்பயணிகள் கூடும் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகளில குறைந்த அளவிலான நபர்களையே காண முடிந்தது.
ஆனால், இந்த இரண்டையும் தாண்டி செல்லக்கூடிய குணா குகையில் தற்போது அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிவதை நேரில் காணமுடிந்தது.
'குணா குகை பிரம்மாண்டமாக இருக்கு'
திடீரென்று இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் குவிவதற்கான காரணம் என்ன? என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று சிலரிடம் பேசினோம்.
வத்தலகுண்டு பகுதியிலிருந்து நண்பர்களுடன் முதல் முறையாக இங்கு வந்திருந்த சின்னத்துரை தனது அனுபவம் குறித்து பேசுகையில், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மஞ்சுமல் பாய்ஸ் படம் பார்த்ததாகவும். அது மிகவும் நன்றாக இருந்ததாகவும். அதனால் இந்த இடத்தை நேரில் வந்து பார்த்தால் சிறப்பாக இருக்குமென நண்பர்களிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
"ஏற்கனவே, இந்த இடத்தை எனது நண்பர்கள் பார்த்துள்ள போதிலும், நான் கேட்டுக்கொண்டதன் பேரில் உடனடியாக திட்டமிட்டு எல்லா இடத்தையும் சுற்றி பார்த்தோம். படத்தில் பார்த்த இடங்களை நேரில் பார்ப்பது பிரம்மாண்டமானதாகவும், புது அனுபவமாகவும் இருந்தது,” என்று கூறினார்.
'பட சூட்டிங்கின் போது நேரில் பார்த்தோம்'
குணா குகைக்கு வந்திருந்த கேரளாவைச் சேர்ந்த சீனு சேவியர், "நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருந்தோம். அப்போது மஞ்சும்மல் பாய்ஸ் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது, நடிகர்கள் சோபின், பாசிம் உள்ளிட்டோரை நேரில் பார்த்தோம். இந்த ஆண்டு சுற்றுலா செல்ல வேண்டும் என முடிவு செய்த போது கண்டிப்பாக இங்கே வர வேண்டும் என முடிவு செய்து வந்திருக்கிறோம். படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது," என்றார்.
கொடைக்கானல் வரும் பலரும் முன்பு குணா குகைக்கு செல்வதை விரும்பமாட்டார்கள். அங்கே வெறும் பாறை மட்டுமே உள்ளதால் சென்று நேரத்தை வீணடிக்க வேண்டுமா என யோசித்து வேறு இடங்களுக்கு சென்று விடுவார்கள்.
ஆனால், தற்போது இந்த இடத்தை காண்பதற்காகவே சுற்றுலா வந்தோம் என்று பலரும் உற்சாகமாக கூறுகின்றனர்.
'கொடைக்கானல் வந்தாலும் குணா குகை போகமாட்டோம்'
குணா குகையில் தனது முதல் அனுபவம் குறித்து பேசிய மதுரையிலிருந்து நண்பர்களுடன் வந்திருக்கும் ராஜா, இதுவரை மூன்று முறை கொடைக்கானல் சுற்றுலா வந்த போதிலும் கூட குணா குகை பக்கம் வந்ததே இல்லை என்கிறார்.
ஆனால், "இந்த முறை படத்தை பார்த்துவிட்டு அங்கு கண்டிப்பாக போக வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தலா 1,500 ரூபாய் திரட்டி கொடைக்கானல் வந்து முதல் முறையாக இந்த இடத்தை பார்த்தோம்," என்று கூறினார் ராஜா.
'வியாபாரிகளுக்கு வருவாய் இரட்டிப்பாய் அதிகரிப்பு'
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மகிமையால் தற்போது தங்களது வியாபாரம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர் குணா குகைக்கு அருகில் கடை வைத்துள்ள வியாபாரிகள்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய வியாபாரி நாகராஜன், “கொடைக்கானலை பொறுத்தவரை மார்ச் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்காது, சும்மாதான் இருப்போம். ஆனால், இந்த மலையாளப்படம் வெளியாகியதிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது,” என்கிறார்.
மேலும், “முன்பு குணா குகைக்கு வெளியே நின்று பார்த்தவாறே செல்லும் சுற்றுலாப் பயணிகள், தற்போது உள்ளே சென்று ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். எங்களுக்கும் 2,000 ரூபாய் வியாபாரம் நடந்த இடத்தில், இப்போது 4,000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசனும் நல்லபடியாக அமையுமென நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று கூறுகிறார் நாகராஜன்.
‘இரண்டே வாரத்தில் 50,000 பார்வையாளர்கள்'
சமீப காலமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாகியிருப்பது உண்மையா என்பதை அறிந்து கொள்வதற்காக வனத்துறை அதிகாரியிடம் பேசினோம்.
“முன்பெல்லாம் இங்கு 1,000 பேர் வருகிறார்கள் என்றால் அதில் 700 சுற்றுலா பயணிகள் மோயர் பாயிண்ட்டுக்கே செல்வார்கள். மீதமுள்ள 300 பேர் மட்டுமே குணா குகைக்கு வருவார்கள். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் குணா குகைக்கு 50,000-த்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர்,” என பதிலளித்தார் ஒரு வனத்துறை அதிகாரி.
தொடர்ந்து பேசிய அவர், “கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பைன் மரக் காடுகள், தற்கொலை பள்ளத்தாக்கு, லேக் வியூ, மோயர்பாயிண்ட், பில்லர் ராக், படகுசவாரி, போன்ற பகுதிகளுக்கு அதிகம் விரும்பிச் செல்வது வழக்கம். குணா குகைக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே இருக்கும். ஆனால் இந்த முறை நிலையே வேறு," என்று கூறினார்.
வேலியை தாண்டிய மூன்று இளைஞர்கள் கைது
சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் வருவது போலவே குணா குகையை காண்பதற்காக வேலியை தாண்டி சென்று புகைப்படம் எடுத்துத் திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (24), பார்த் (24), ரஞ்சித் குமார் (24) ஆகிய மூன்று இளைஞர்கள் தமிழ்நாடு வனசட்டம் 1882, வன உயிரின பாதுகாப்பு சட்டம் வனத்துறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பை பலப்படுத்த வனத்துறையின் திட்டம் என்ன?
இனிவரும் காலங்களில் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய அந்த வனத்துறை அதிகாரி, வருகின்ற கோடை விடுமுறை நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குணா குகை நோக்கி வருவதற்கானவாய்ப்புகள் உள்ளது என்று கூறினார்.
"எனவே, குணா குகையில் சிதிலமடைந்த வேலியை சீரமைக்கும் பணிகளை வனத்துறை செய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவினர் குணா குகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்," எனக் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)