You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேர்தல் பத்திரங்கள்: எந்தக் கட்சி எவ்வளவு பணம் பெற்றது? தேர்தல் ஆணைய பட்டியலில் இருப்பது என்ன?
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தங்களிடம் வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது அந்தப் பட்டியலைத் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக 300 பக்கத்திற்கும் மேற்பட்ட இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில்,
- முதல் பட்டியலில் பத்திரத்தை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், எந்த தேதியில் அவை வாங்கப்பட்டன, பத்திரத்தின் தொகை ஆகிய விவரங்கள் உள்ளன.
- இரண்டாவது பட்டியலில் அவை எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எந்தத் தேதியில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி, அதற்கடுத்த இடங்களில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற காட்சிகள் உள்ளன. இந்தப் பட்டியலில் வேதாந்தா போன்ற நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியளித்துள்ளன.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன?
தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம்.
இந்திய அரசு 2017இல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். கேஒய்சி விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை.
இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.
தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.
மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம்.
இரண்டு பட்டியல்களாக வெளியீடு
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்களில் நன்கொடையாளர்கள் மற்றும் கட்சியின் விவரங்கள் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன.
எந்தெந்த நன்கொடையாளர்கள் எந்தெந்த கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதியளித்தார்கள் என்பதைக் குறிப்பிடாமல், அதன் அசல் வடிவில் தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டுமென எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக நிதியளிக்கும் நன்கொடையாளர்கள் மற்றும் அவற்றைப் பெறும் அரசியல் கட்சிகள் என தனித்தனியாக இரண்டு பட்டியல்கள் பராமரிக்கப்படுகிறது.
எல்லாவற்றையும் ஆய்வு செய்து, ஒரு குறிப்பிட்ட நன்கொடையாளர் எந்தக் கட்சிக்கு நிதியளித்தார் என்பதைப் பட்டியலிட அதிக நேரமும் உழைப்பும் தேவை என்பதைக் காரணம் காட்டி, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க தங்களுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்குமாறு எஸ்பிஐ கேட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் அசல் பட்டியல்களை வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு எஸ்பிஐ அளித்த விவரங்கள் இப்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளன?
தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள், அவற்றை 15 நாட்களுக்குள் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்படும்.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களில், "கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில், பாரதிய ஜனதா கட்சி, இந்திய காங்கிரஸ் கட்சி, அதிமுக, சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி போன்ற இந்தியாவின் முன்னணி கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் நிதி பெற்ற அரசியல் கட்சியாக பாஜக உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)