ரமலான் நோன்பு: உண்ணாமல் இருக்கும்போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

    • எழுதியவர், அஹ்மென் கவாஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ரமலான் பண்டிகையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில், பூமியின் வடக்குப் பகுதியில் கோடை மாதங்களில் ரமலான் வந்தது.

இந்த ஆண்டு இது கோடைக்காலம் முடிந்து வெயில் காலத்திற்கு முன் வருகிறது. மார்ச் 11 அல்லது 12 ஆம் தேதியில் இந்த நோன்பு தொடங்குகிறது.

இதன் பொருள் சில நாடுகளில், நாட்களின் நீளம் குறைவாக இருக்கும் மற்றும் நீங்கள் உலகில் எங்கு இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, விடியற்காலை முதல் அந்தி வரையிலான விரதம் 12 முதல் 17 மணிநேரம் வரை நீடிக்கும்.

இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா? நீங்கள் 30 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும்?

கடினமான முதல் இரண்டு நாட்கள்

நீங்கள் ஒரு நாளில் கடடைசியாகச் சாப்பிட்டதில் இருந்து, உங்கள் உடல் 'உண்ணாவிரத நிலைக்கு' செல்ல எட்டு மணிநேரம் வரை ஆகும்.

இது உங்கள் குடல், உணவில் இருந்து ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்.

இந்த நேரத்திற்குப் பிறகு, நமது உடல் ஆற்றலை வழங்க கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்பட்ட குளுக்கோஸை நாடுகின்றது.

பின்னர் உண்ணாவிரதத்தின்போது, குளுக்கோஸின் சேமிப்பு தீர்ந்துவிட்டால், நம் உடலில் உள்ள கொழுப்பு நம் உடலுக்கான சக்தியாக மாறும்.

நம் உடல், தன் தேவைக்காக கொழுப்பை பயன்படுத்தத் தொடங்கும் போது, அது எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இது நீரிழிவு அபாயத்தையும் குறைக்கிறது.

இருப்பினும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், பலவீனம் மற்றும் சோம்பல் ஏற்படும்.

நீங்கள் தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவற்றை அனுபவிக்கலாம். அப்போது உங்கள் பசியின் அளவு மிக அதிகமாக இருக்கும்.

நீரிழப்பால் ஏற்படும் பாதிப்பு என்ன?

உங்கள் உடல் உண்ணாவிரதத்திற்கு பழகத் தொடங்கும் போது, கொழுப்புகள் உடைந்து இரத்த சர்க்கரையாக மாற்றப்படுகிறது.

உண்ணாவிரதத்தின் போது நீங்கள் உட்கொள்ளும் குறைந்தளவு தண்ணீரை சீரான இடைவெளியில் குடிக்க வேண்டும். இல்லையேல், அது வியர்வை வழியாக வெளியேறி உடற்சோர்வுக்கு வழிவகுக்கும்.

உங்கள் உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் சில கொழுப்புகள் போன்ற ஆற்றல் தரும் உணவு வகைகள் சரியான அளவில் இருக்க வேண்டும்.

சில புரதங்கள், உப்புகள் மற்றும் நீர் உட்பட ஊட்டச்சத்துக்களின் சமநிலையான உணவைக் கொண்டிருப்பது முக்கியம்.

விரதத்திற்கு உடல் எப்படி பழக்கப்படும்?

உண்ணாவிரதத்தின் மூன்றாவது கட்டத்தில், உங்கள் உடல் உண்ணாவிரதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கும். உங்களது மனநிலையில் முன்னேற்றங்களைக் காண முடியும்.

கேம்பிரிட்ஜில் உள்ள அடன்புரூக் மருத்துவமனையில் மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரஸீன் மஹ்ரூஃப், இந்த உண்ணாவிரதத்தால் மற்ற பயன்களும் உள்ளதாகக் கூறுகிறார்.

"தினசரி வாழ்க்கையில் நாம் அடிக்கடி அதிக கலோரிகளை சாப்பிடுகிறோம், மேலும் அது உடல் தன்னை சரிசெய்தல் போன்ற பிற பணிகளை போதுமான அளவில் செய்வதிலிருந்து தடுக்கலாம்," என்கிறார் அவர்.

"இது உண்ணாவிரதத்தின் போது சரி செய்யப்படுகிறது, இது உடலின் கவனத்தை மற்ற செயல்பாடுகளுக்கு திசைதிருப்ப அனுமதிக்கிறது.

"எனவே, உண்ணாவிரதத்தின் மூலம் நோய்த்தொற்றுகளை குணப்படுத்துவதை எளிதாக்குகிறது. அதேபோல, நோய்த்தொற்றுகளைத் தடுப்பதன் மூலமும், எதிர்த்துப் போராடுவதன் மூலமும் உடலுக்கு பயனளிக்கும்," என்கிறார் அவர்.

விரதத்தின் 15 முதல் 30 நாட்கள் எப்படி இருக்கும்?

ரமலானின் கடைசிப் பாதி நாட்களில், உண்ணாவிரத செயல்முறைக்கு உங்கள் உடல் முழுமையாக ஏற்றிருக்கும்.

உங்கள் பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தோல் இப்போது நச்சுத்தன்மையின் ஒரு காலகட்டத்தை கடந்திருக்கும்.

"இந்தக் கட்டத்தில், உறுப்புகளின் செயல்பாடு அதிகபட்ச திறனுக்குத் திரும்ப வேண்டும். உங்கள் நினைவாற்றல் மற்றும் செறிவு மேம்படும்," என்கிறார் மருத்துவர் மஹ்ரூஃப்.

"உங்கள் உடல் ஆற்றலுக்காக புரதத்திற்கு மாறக்கூடாது. 'பட்டினி' முறையில் சென்று ஆற்றலுக்காக தசையைப் பயன்படுத்தும் போது இது பல நாட்கள் முதல் வாரங்கள் வரை நீடித்த தொடர்ச்சியான உண்ணாவிரதத்தில் நிகழ்கிறது," என்கிறார்.

"ரமலான் நோன்பு விடியற்காலையில் இருந்து மாலை வரை மட்டுமே நடைபெறுவதால், ஆற்றலை வழங்கும் உணவுகள் மற்றும் திரவங்களால் நம்மை நிரப்புவதற்கு போதுமான வாய்ப்பு உள்ளது. இது தசைகளைப் பாதுகாக்கிறது, ஆனால் எடையைக் குறைக்க உதவுகிறது," என்கிறார் மஹ்ரூஃப்

நோன்பு இருப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா?

உடலுக்கு நல்லது என்கிறார் மருத்துவர் மஹ்ரூஃப். ஆனால், சில நிபந்தனைகளை அவர் விதிக்கிறார்.

"உண்ணாவிரதம் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது, ஏனென்றால் நாம் எதை, எப்போது சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த இது உதவுகிறது. இருப்பினும், ஒரு மாதம் உண்ணாவிரதம் இருப்பது நன்றாக இருக்கும், தொடர்ந்து விரதம் இருப்பது நல்லதல்ல."

உண்ணாவிரதம் மூலம் உடல் எடையைக் குரைப்பது நல்லதா?

"தொடர்ச்சியான உண்ணாவிரதம் நீண்ட கால எடை இழப்புக்கு ஒரு நல்ல வழி அல்ல, ஏனெனில் இறுதியில் உங்கள் உடல் கொழுப்பை ஆற்றலாக மாற்றுவதை நிறுத்திவிடும், அதற்கு பதிலாக அது தசையாக மாறும். இது ஆரோக்கியமற்றது," மருத்துவர் மஹ்ரூஃப்.

ரமலான் மாதத்தை தவிர்த்து, அவ்வப்போது உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்கிறார் அவர். ஆனால், அதனை ஒரு முழு மாதத்திற்கும் இருக்காமல், சில நாட்கள் அவ்வபோது உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்கிறார்.

"ரம்ஜான் நோன்பு, சரியாகப் பின்பற்றினால்,, ஒவ்வொரு நாளும் உங்கள் ஆற்றல் விநியோகத்தை நிரப்ப முடியும். இது உங்கள் உடல் மதிப்புமிக்க தசை திசுக்களை எரிக்காமல் எடை இழக்க உதவும்," என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)