You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜப்பானில் பொருளாதார மந்தம் - ஜெர்மனியிடம் மூன்றாம் இடத்தை இழந்து பின்தங்கியது
- எழுதியவர், மரிகோ ஓய்
- பதவி, வணிக நிருபர்
ஜப்பான் அரசின் புள்ளிவிபரங்கள், அந்த நாடு ஜெர்மனியிடம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற நிலையை இழந்துவிட்டது எனச் சுட்டிக்காட்டுகிறது.
ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக வீழ்ச்சியடைந்ததால் பொருளாதா மந்த நிலைக்கு ஜப்பான் தள்ளப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023இன் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்பார்த்ததைவிட மோசமாக 0.4% சரிந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் பொருளாதாரம் 3.3% சரிவைச் சந்தித்திருந்தது.
கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் ஜப்பானின் ஜிடிபி 1%க்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது என்ற புதிய தரவுகள் வெளியாகும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்தனர்.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியின் முதல் ஆய்வறிக்கைதான், அவை மேலும் திருத்தப்படலாம். இரண்டு காலாண்டுகள் தொடர்ச்சியாக பொருளாதாரம் சரிவது என்பது பொதுவாக ஒரு நாடு பொருளியல் பின்னடைவைச் சந்திப்பதற்கான வரையறையாகக் கருதப்படுகிறது.
ஜெர்மனியிடம் 3ஆம் இடத்தை இழந்த ஜப்பான்
அமெரிக்க டாலர்களின் அடிப்படையில், ஜெர்மனி ஜப்பானை முந்தி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று அக்டோபரில் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund- ஐஎம்எப்) கணித்தது.
இரு நாடுகளும் தங்கள் பொருளாதார வளர்ச்சி குறித்த இறுதி புள்ளிவிவரங்களை வெளியிட்ட பிறகு மட்டுமே சர்வதேச நாணய நிதியம் அதன் தரவரிசையில் மாற்றத்தை அறிவிக்கும். ஐ.எம்.எஃப் 1980இல் இருந்து உலக நாடுகளின் பொருளாதாரங்களை ஒப்பிட்டு தரவுகளை வெளியிடத் தொடங்கியது.
கடந்த ஆண்டில்(2023) ஜப்பானின் பொருளாதாரம் சுமார் 4.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும், ஜெர்மனியின் பொருளாதாரம் 4.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று பொருளாதார நிபுணர் நீல் நியூமன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதற்குக் காரணம் அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய நாணயத்தின் மதிப்பில் வீழ்ச்சி என்றும், ஜப்பானிய நாணயமான யென் மீண்டு வந்தால் மட்டுமே நாடு மீண்டும் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க முடியும் என்றும் நியூமன் கூறினார்.
இந்த மாதம் டோக்கியோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐ.எம்.எஃப் துணைத் தலைவர் கீதா கோபிநாத், "கடந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான யென் சுமார் 9% சரிந்ததுதான், பொருளாதார தரவரிசையில் ஜப்பான் வீழ்ச்சியடைய ஒரு முக்கியக் காரணம்" என்று கூறினார்.
எவ்வாறாயினும், யென் நாணய சரிவு ஜப்பானின் சில பெரிய நிறுவனங்களின் பங்கு விலைகளை உயர்த்த உதவியது. காரணம் வெளிநாட்டு சந்தைகளுக்கு இந்நிறுவனங்கள் கார் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதால், அமெரிக்க டாலர்களில் கிடைக்கும் வருவாய் கூடும்.
இந்த வாரம், டோக்கியோவின் முக்கிய பங்குக் குறியீடான நிக்கேய் 225, 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 38,000 என்ற அளவைத் தாண்டியது. 1990இல் நாட்டின் சொத்து மதிப்புகளில் ஏற்பட்ட சரிவு பொருளாதார நெருக்கடியைத் தூண்டியது.
கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் 29 அன்று, நிக்கேய் 225 பங்குக் குறியீடு அதிகபட்சமாக 38,915.87 புள்ளிகளைத் தொட்டது. அந்தச் சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
கடன் வாங்கும் செலவு உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை நாட்டின் மத்திய வங்கி வெளியிடும் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த முடிவு வெளியாக மேலும் தாமதமாகலாம் என்று சமீபத்திய ஜிடிபி தரவு உணர்த்துகிறது.
ஜப்பான் வங்கி 2016இல் எதிர்மறை வட்டி விகிதத்தை அறிமுகப்படுத்தியது, ஏனெனில் அது நாட்டின் செலவு மற்றும் முதலீட்டை அதிகரிக்க அப்போது முயன்றது.
எதிர்மறை விகிதங்கள் ஜப்பானிய நாணயமான யென் குறித்து உலக முதலீட்டாளர்களுக்கு ஓர் அதிருப்தியை உருவாக்குகிறது. இது நாணயத்தின் மதிப்பு மேலும் குறைய வழிவகுக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)