You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சதாம் உசேன் படைகள் மூழ்கடித்த உலகின் மிகப்பெரிய கப்பல் மீண்டு வந்த கதை
சீவைஸ் ஜெயண்ட் (Seawise Giant) தன் 30 ஆண்டு கால வாழ்நாளில், உலகின் மிகப்பெரிய கப்பல், உலகிலேயே அதிகளவு எண்ணெய் எடுத்துச் செல்லும் திறன் கொண்ட கப்பல் மற்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கப்பல் போன்ற பல்வேறு பெருமைகளைத் தன்வசம் கொண்டிருந்தது.
ஹேப்பி ஜெயண்ட், ஜாஹ்ரே வைக்கிங், நோக் நோவிஸ், மோன்ட் எனப் பல பெயர்களும் அதற்கு இருந்தன. மேலும் இது சூப்பர் டேங்கர் என்றும் அழைக்கப்பட்டது.
லட்சக்கணக்கான லிட்டர் எண்ணெய் கொள்ளளவு கொண்ட கப்பல் என்றாலும், அதன் பிரமாண்ட அளவு காரணமாகப் பல துறைமுகங்களுக்குள் செல்ல முடியவில்லை. மேலும் சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்ற முக்கியமான வழித்தடங்கள் வழியாகவும் இந்தக் கப்பலால் பயணிக்க முடியவில்லை.
இந்தக் கப்பல் சதாம் உசேனின் படைகளால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதனால் சீவைஸ் ஜெயண்ட் கடலில் மூழ்கியது. ஆனால், கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கும் ஏதோவொரு சாதாரண கப்பலின் கதையைப் போல இதன் கதையும் முடியவில்லை.
எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
இந்த சூப்பர் டேங்கர் முதன்முதலாக 1979ஆம் ஆண்டு ஜப்பானின் ஓபாமாவில் உள்ள சுமிடோமோ ஹெவி இண்டஸ்ட்ரீஸ் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது.
பல்வேறு ஆதாரங்களின்படி, ஒரு கிரேக்க தொழிலதிபர் இந்த கப்பலைக் கட்ட உத்தரவிட்டுள்ளார். ஆனால் தயாரான பிறகு அவர் கப்பலை வாங்கவில்லை. இறுதியில், ஹாங்காங் தொழிலதிபர் டிங் சாவோ யிங் அதை 1981இல் வாங்கினார். இவர் ஓரியன்ட் ஓவர்சீஸ் கன்டெய்னர் லைன் என்ற ஷிப்பிங் கம்பெனியின் உரிமையாளர்.
ஹாங்காங்கில் உள்ள கடல்சார் அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, புதிய உரிமையாளர் கப்பலை வாங்கிய பிறகு கப்பல் இன்னும் பெரியதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே மற்றொரு பகுதியும் கப்பலில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு, அதன் எண்ணெய் சுமந்து செல்லும் திறன் 1,40,000 டன்னாக அதிகரித்தது.
இந்த சூப்பர் டேங்கர் 458.45 மீட்டர் நீளம் கொண்டது. இதுவே மிகப்பெரிய சாதனை. இதன் நீளம், மலேசியாவில் உள்ள பெட்ரோனாஸ் டவர் மற்றும் நியூயார்க்கில் உள்ள எம்பயர் எஸ்டேட் கட்டடத்தைவிட உயரமானது.
எண்ணெய் சுமந்து செல்லும் திறன்
இந்தக் கப்பலில் நான்கு பில்லியன் பீப்பாய்கள் (நானூறு மில்லியன் பீப்பாய்கள், ஒரு பீப்பாய்க்கு சுமார் 159 லிட்டர் எண்ணெய்) எண்ணெய் கொண்டு செல்ல முடியும். ஒரு சாதாரண கார், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே பத்து முறை பயணிக்க இந்த எண்ணெய் போதுமானது.
இந்தக் கப்பல் உலகின் மிகப்பெரிய கப்பலான 'ஐகான் ஆஃப் தி சீ'யை (Icon of the Sea) விட 100 மீட்டர் நீளமானது. டைட்டானிக் கப்பலைவிட 200 மீட்டர் உயரம்.
இந்தக் கப்பலின் முழு கொள்ளளவையும் நிரப்பினால் அதன் எடை 6 லட்சத்து 57 ஆயிரம் டன்னாக இருக்கும். இந்த பிரமாண்டமான கப்பலை இயக்க ஒரு நாளைக்கு 220 டன் எரிபொருள் தேவைப்படுகிறது.
கடந்த 1998ஆம் ஆண்டு பிபிசி கப்பலைப் பார்வையிட்டபோது, அதன் கேப்டன் சுரேந்திர குமார் மோகன், இந்த சூப்பர் டேங்கர் மணிக்கு 16 கடல் மைல் வேகத்தில் பயணிக்கும் என்று கூறினார். அதாவது மணிக்கு சுமார் 30 கிலோமீட்டர் வேகம்.
இந்த பிரமாண்ட கப்பல் கடலில் பயணித்தது எப்படி?
கேப்டன் கூறிய தகவல்களின்படி, இந்தக் கப்பலை நிறுத்த வேண்டுமானால், எட்டு கிலோமீட்டருக்கு முன்பாகவே பிரேக் போட வேண்டும். கப்பல் செல்லும் திசையை உடனே மாற்றி எதிர் திசையில் திருப்புவது மிகவும் கடினமான பணி. அதற்கு சுமார் 3 கிலோமீட்டர் பரப்பளவு தேவை. இருப்பினும், பிபிசி பார்வையிட்ட இந்தக் கப்பல் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது.
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே எண்ணெய் வர்த்தகத்தில் நல்ல ஏற்றம் இருந்தபோது, இந்த சூப்பர் டேங்கர் உலகம் முழுவதும் எண்ணெயை எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல் மிதக்கும் கிடங்காகவும் செயல்பட்டது.
அதன் பயணம் 1988இல் இரானில் நங்கூரமிட்டபோது முடிந்தது. அப்போது வளைகுடா நாடுகளில் இராக்-இரான் போர் இறுதிக் கட்டத்தில் இருந்தது. சதாம் உசேனின் ராணுவம் முன்னறிவிப்பின்றி கப்பலின் மீது குண்டு வீசியது. கப்பல் தீப்பிடித்து எரிந்து, மூழ்கியது.
போருக்குப் பிறகு நார்வேஜியன் கப்பல் நிறுவனமான நார்மன் இன்டர்நேஷனல் இந்தக் கப்பலின் மீது ஆர்வம் காட்டியது. கப்பல் பழுதுபார்க்கும் பணியில் சுமார் 3,700 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. கப்பல் பழுதுபார்க்கப்பட்டு 1991இல் மீண்டும் கடலில் பயணிக்கத் தொடங்கியது.
இருப்பினும், அதன் பழைய பெயரான சீவைஸ் ஜெயண்ட் என்பதற்குப் பதிலாக ஹேப்பி ஜெயண்ட் என்று மாற்றப்பட்டது.
இறுதிக்கட்டத்தில் 'ஹேப்பி ஜெயண்ட்'
பழுதுபார்க்கப்பட்ட பிறகு, சூப்பர் டேங்கர் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பின்னர் அதை கே.எஸ் என்னும் ஒரு போக்குவரத்து நிறுவனம் வாங்கியது. 1990களில், கப்பல் துறையில் குறைவான எரிபொருள் உபயோகிக்கும் டேங்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் இந்தக் கப்பலின் மீதான நிறுவனத்தின் ஆர்வம் குறைந்தது.
அதுதவிர, கப்பல் துறையின் பரிணாமமும் மற்றொரு காரணம். இந்தக் கப்பலின் பெரிய அளவு காரணமாக சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் வழித்தடங்களில் செல்ல முடியாததும் மற்றொரு தடையாகும்.
கடந்த 2004ஆம் ஆண்டில், நார்வேஜியன் ஃபர்ஸ்ட் ஆஸ்லன் டேங்கர்ஸ் என்ற நார்வேஜியன் நிறுவனம் இந்த பிரமாண்டமான கப்பலை வாங்கி மிதக்கும் கிடங்காக மாற்றியது. அப்போது நோக் நோவிஸ் என்று இந்தக் கப்பல் பெயரிடப்பட்டு கத்தார் கடற்கரையில் நிறுத்தப்பட்டது.
அதன் பயன்பாடு 2009 முதல் முடிவுக்கு வந்தது. பின்னர் அதன் பெயர் 'மான்ட்' என மாற்றப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இறுதியில் அதன் நங்கூரம் மட்டும் மிஞ்சியது.
உலகின் மிகப்பெரிய கப்பல் என்று அழைக்கப்பட்ட சீவைஸ் ஜெயண்ட், இறுதியாக அது பயணத்தைத் தொடங்கிய இடத்தை, அதாவது ஹாங்காங் துறைமுகத்தை அடைந்துள்ளது. அதன் 36 டன் நங்கூரம் ஹாங்காங்கில் உள்ள கடல்சார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)