You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செந்தில் பாலாஜி கைதாகி 8 மாதம் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சிறையில் இருந்தபடி இலாகா இல்லாத அமைச்சராக இருந்துவந்த செந்தில் பாலாஜி தற்போது ராஜினாமா செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் இப்போது ராஜினாமா செய்தது ஏன்?
செந்தில் பாலாஜி கைதான 8 மாதங்கள் கழித்து ராஜினாமா
போக்குவரத்துக் கழக பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறி, அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவரிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் அளிக்கப்பட்டது. இருந்த போதும் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராகவே அவர் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
அவர் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழிந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமா கடிதம் திங்கட்கிழமையே அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஆளுநர் மாளிகையின் ஒப்புதல் வழங்கப்பட்டு, இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து சர்ச்சையில் இருந்த செந்தில் பாலாஜி விவகாரம்
கைது செய்யப்பட்ட பிறகும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடித்த விவகாரம் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையாகத்தான் இருந்துவந்தது.
செந்தில் பாலாஜியின் அமைச்சரவைப் பொறுப்புகள் பிற அமைச்சர்களுக்கு பிரிந்து வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
இதற்குப் பிறகு, முதலமைச்சரின் பரிந்துரையின்றி செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஐந்து பக்கக் கடிதம் ஒன்றை முதலமைச்சருக்கு எழுதினார். அந்தக் கடிதத்தில், "எனது அறிவுரையையும் மீறி அவரை பதவியில் நீடிக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது உங்கள் பாரபட்சத்தை காட்டுகிறது. அவர் அமைச்சராக நீடிப்பது, சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற நியாயமான அச்சம் ஏற்படுகிறது. இந்த சூழலில், அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164வது பிரிவுகளின் கீழ் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. அதன்படி, வி.செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குகிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இதுதொடர்பான நடவடிக்கைக்காக மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக" இன்னொரு கடிதத்தை முதல்வருக்கு ஆளுநர் எழுதினார். இதையடுத்து அந்த விவகாரம் அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.
செந்தில் பாலாஜி இப்போது ராஜினாமா செய்திருப்பது ஏன்?
கைதான பிறகும் சுமார் 8 மாதங்கள் பதவியில் இருந்த செந்தில் பாலாஜி இப்போது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தான் கைது செய்யப்பட்டதிலிருந்து தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இந்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இது தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்துவருகிறது. அந்த வழக்கு ஜனவரி 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "சிறைக்குச் சென்று 230 நாட்களுக்கு மேலாகியும் எப்படி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்? கீழ் நிலை அரசு ஊழியர்கள் 48 மணி நேரத்திற்கு மேல் சிறையில் இருந்தால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது பொதுமக்களுக்கு என்ன செய்தியைச் சொல்கிறது?" என்று கேள்வியெழுப்பினார்.
"இதற்கு முன்பாக செந்தில் பாலாஜி உடல் நலத்தைக் காரணம் காட்டி ஜாமீன் கோரிய போது, அந்த ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரனால் நிராகரிக்கப்பட்டது. அப்போது இருந்த சூழலுக்கும் இப்போதைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; மேலும் செந்தில் பாலாஜி இப்போதும் அமைச்சராகவே நீடிக்கிறார்" என்று குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் அமலாக்கத் துறை எல்லா விசாரணைகளையும் முடித்துவிட்டதாலேயே ஜாமீன் கோரப்படுவதாகவும் அமைச்சர் பதவியில் இருப்பதையே ஜாமீனுக்கு எதிரான ஒரு முகாந்திரமாகக் கொண்டால், பெரிய பதவியில் இருப்பவர்கள் யாரும் ஜாமீன் கோர முடியாமல் போகக்கூடும் என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு, இந்த வழக்கு பிப்ரவரி 14ஆம் தேதி புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், வழக்கு விசாரணைக்கு இரு நாட்களுக்கு முன்பாக தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி.
திமுக வியூகம் என்ன?
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை விசாரிக்க அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அவர் ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக லுக் - அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 9ஆம் தேதி செந்தில் பாலாஜியின் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளை அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்தனர். அசோக் குமார் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
"அமலாக்கத் துறை தொடரும் வழக்குகளில், அவர்கள் முன்வைக்கும் வாதங்களைத்தான் நீதிபதி முக்கியமானதாகக் கருதுவார். அவர்கள் ஜாமீனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அதை நீதிபதி அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது. இத்தனை நாட்களாக, செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதைக் காரணம் காட்டிய அமலாக்கத்துறை, அவர் வெளியில் வந்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடக் கூடும் என்று குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவித்தது. இதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்திருக்கக் கூடும். அதன் மூலம் அமலாக்கத் துறை முன்வைத்த மிக முக்கியமான வாதம் அடிபட்டுவிட்டது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கச் சொல்லி பலரும் கோரியபோதும் நீக்காத தி.மு.க. அரசுக்கு இது ஒரு அரசியல் ரீதியான பின்னடைவாகப் பார்க்க முடியுமா? "செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும்போது அமைச்சராக இருப்பது அவருக்கு உதவக்கூடும் என ஆரம்பத்தில் கருதியிருந்தார்கள். ஆனால், நாள் செல்லச்செல்ல அதுவே அவர் ஜாமீனில் வர பாதகமாக அமைந்திருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். இப்போது அவருக்கு ஜாமீன் கிடைத்தால், நாடாளுமன்ற தேர்தலின்போது அவர் தீவிரமாக கட்சிப் பணியை ஆற்றக்கூடும்" என்கிறார் ப்ரியன்.
இந்தத் தருணத்தில் செந்தில் பாலாஜிக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருப்பதைச் சுட்டிக்காட்டித்தான் செந்தில் பாலாஜியின் ஜாமீனை தொடர்ந்து எதிர்த்து வருகிறது அமலாக்கத்துறை. ஆகவே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தம்பியை சரணடையச் சொன்னால், ஒருவேளை ஜாமீன் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறார் செந்தில் பாலாஜி. ஆனால், அப்படி நடக்காமலும் போகலாம்.
தில்லியில் மனீஷ் சிசோடியா அமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தவரை அவரை வெளியில் கொண்டுவந்துவிட்டால், அரசியல் பணிகளிலாவது அவரை ஈடுபடுத்தலாம் எனப் பார்க்கிறது. அவருக்கு ஜாமீன் கிடைப்பதை வைத்துத்தான் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்" என்கிறார் குபேந்திரன்.
இந்திய அரசியலில் இலாகா இல்லாத அமைச்சர்கள்:
இலாகா இல்லாத அமைச்சர்கள் என்பது இந்திய அரசியலில் புதிதல்ல. ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் சி. ராஜகோபாலாச்சாரியார், என். கோபாலசாமி ஐயங்கார், வி.கே. கிருஷ்ண மேனன் ஆகியோர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். அதற்குப் பிறகு, டிடி கிருஷ்ணமாச்சாரியும் லால் பகதூர் சாஸ்திரியும் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். 1999- 2004 இடையிலான வாஜ்பேயி அரசில் மம்தா பானர்ஜியும் முரசொலி மாறனும் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். இதில் முரசொலி மாறன் உடல் நலம் குன்றியபோது அவர் வசம் இருந்த தொழில் மற்றும் வர்த்தகத் துறை அருண் ஜேட்லியிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.
2005ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நட்வர் சிங் உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தபோது அவர் வசம் இருந்த வெளியுறவுத் துறை பறிக்கப்பட்டு, அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். 2013ல் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரான கே. சந்திரசேகர ராவ் இலாகா இல்லாத அமைச்சராக மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, உடல்நலம் சார்ந்த காரணங்களால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவரது துறைகளை நெடுஞ்செழியன் கவனித்தார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு உடல்நலம் குன்றியபோது அவரது துறைகளை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனித்தார்.
கால்நடைத் துறை அமைச்சராக இருந்த எஸ். கருப்பசாமி, உடல் நலம் குன்றியபோது அவரது இலாகா வேறொருவருக்கு அளிக்கப்பட்டு அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். அதேபோல, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் உடல் நலம் குன்றியபோது அவரது அமைச்சரவை வேறொருவருக்கு மாற்றித்தரப்பட்டு, அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார்.
செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி
கடந்த 2011 முதல் 2015 வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அந்தப் பணியிடங்களை நிரப்புவதில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழகத்தின் தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது.
மத்திய குற்றப்பிரிவின் வழக்கை ரத்து செய்யும்படியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதே நேரம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடுத்த நாள் அதிகாலையில், விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பல முறை ஜாமீன் கோரி விண்ணப்பித்த போதும், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவருக்கு இதுவரை 19 முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)