You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தார்: மோதி பயணத்திற்கு முன் 8 இந்திய முன்னாள் கடற்படையினரும் விடுதலை - பாகிஸ்தான் கூறுவது என்ன?
கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை அந்நாடு விடுவித்துள்ளது.
அவர்களுக்கு, ஒரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வழக்கைப் பற்றி அதிகப்படியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த திங்கள் கிழமை (ஜனவரி 12) அவர்கள் விடுதலையாகியிருக்கும் நிலையில், தனது ஐக்கிய அரபு அமீரகச் சுற்றுப்பயணத்தை முடித்த பின், பிரதமர் மோதி பிப்ரவரி 15-ஆம் தேதி கத்தாருக்குச் செல்வார் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அறிவித்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், எட்டு இந்திய முன்னாள் கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கினைப் பற்றிய தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. பின்னர் அவரது மரண தண்டனை மூன்று முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது.
கத்தார் அமீரின் உத்தரவின் பேரில் முன்னாள் கடற்படையினர் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக திங்கள்கிழமை காலை இந்திய வெளியுறவு அமைச்சகம் திடீரென அறிவித்தது.
இது இந்தியாவின் ராஜ தந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.
விடுதலையாகி டெல்லியை அடைந்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் ஊடகங்களிடம் பேசுகையில், “நாங்கள் பத்திரமாக இந்தியாவை அடைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோதியின் தனிப்பட்ட தலையீடு இல்லாமல் இது சாத்தியமில்லை என்பதால், அதற்கு நன்றி ,” என்று கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கத்தார் நீதிமன்றம் இந்த எட்டு முன்னாள் ஊழியர்களுக்கும் மரண தண்டனை விதித்தது. இந்தியாவின் இந்த எட்டு முன்னாள் கடற்படை வீரர்கள் - கேப்டன் நவ்தேஜ் கில், கேப்டன் சவுரப் வசிஷ்டா, கமாண்டர் பூர்ணேந்து திவாரி, அமித் நாக்பால், எஸ். கே. குப்தா, பி.கே. வர்மா, சுகுணகர் பகாலா, மற்றும் மாலுமி ராகேஷ் ஆவர்.
மோதி பயணத்திற்கு முன் 8 பேரும் விடுதலை
முன்னாள் கடற்படையினர் விடுவிக்கப்பட்ட பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “கத்தாரின் தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரியும் எட்டு இந்திய குடிமக்களின் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது. கத்தார் அமீரின் முடிவை நாங்கள் பாராட்டுகிறோம்,” என்று தெரிவித்திருந்தது.
திங்கள்கிழமை மாலை ஊடகங்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, ஐக்கிய அரபு அமீரகச் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, பிரதமர் மோதி கத்தாருக்கும் பிப்ரவரி 15-ம் தேதி செல்வார் என்று கூறினார்.
பிரதமர் மோதியின் கத்தார் பயணம் இந்திய குடிமக்களின் விடுதலையுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுவதைக் குறித்து கருத்து தெரிவித்த குவாத்ரா, இப்பயணம் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டதகக் கூறினார்.
முன்னதாக பிரதமர் மோதி, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கத்தாருக்கு சென்றிருந்தார்.
எதிர்வரும் பயணத்தில் மோதி கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை சந்திக்கிறார்.
குவாத்ரா கூறுகையில், “கத்தாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் காலப்போக்கில் ஆழமடைந்து வருகின்றன. அரசியல், வணிகம், வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி வழங்கல் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளன. கலாசாரம் மற்றும் பாதுகாப்பு துறையிலும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது,” என்றார்.
பாகிஸ்தான் கூறுவது என்ன?
கத்தாரில் எட்டு இந்தியர்கள் பாதுகாப்பாக விடுதலை ஆனது குறித்து பாகிஸ்தானிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல் பாசித், “பிரதமர் மோதி இதை அவரது மட்டத்தில் செய்தார். துபாயில் நடைபெற்ற COP-28 நிகழ்ச்சியில் கத்தார் அமீரைச் சந்தித்த பிரதமர் மோதி, இந்தியர்களை பாதுகாப்பாக விடுவிப்பது குறித்து தனிப்பட்ட உரையாடலில் பேசினார்,” என்றார்.
மேலும் பேசிய அப்துல் பாசித், "இந்த எட்டு இந்தியர்களும் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கத்தாரில் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது,” என்றார்.
“இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ராஜ தந்திர சாதனையாக நான் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.
“இந்தியா தனது குடிமக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது என்பது அதன் செய்தி தெளிவாக உள்ளது. கத்தாரும் இந்தியாவின் பேச்சைக் கேட்டது. கடந்த 10-15 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் இந்தியாவின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. நம் எதிரி நாட்டிலிருந்தும் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்ல விரும்புகிறேன். இந்தியா எமக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்த விவகாரத்தில் மோடி சாகேப் பெரும் பங்கு வகித்துள்ளார்,” என்றார் அவர்.
மேலும் பேசியஅப்துல் பாசித், “இந்தியாவுக்கு எல்லா இடங்களிலும் இத்தகைய தொடர்புகள் உள்ளன. இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவை நாம் அனைவரும் அறிவோம். பாகிஸ்தானுக்கு எதிராக இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் வலுவானது. இந்தியாவின் நெட்வொர்க் வெகுதூரம் பரவியுள்ளது,” என்றார்.
8 பேர் விடுதலை - பின்னணி என்ன?
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை அறிக்கையின்படி, எட்டு கடற்படையினரை விடுவிக்க இந்திய அதிகாரிகள் குழு ஒன்று கடந்த பல நாட்களாக கத்தாரில் இருந்தது.
விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சில அதிகாரிகள் முக்கிய பங்கு வகித்ததாக அந்த அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தோவல் பலமுறை கத்தாருக்குச் சென்றார்.
துபாயில் நடந்த COP-28 உச்சி மாநாட்டின் போது கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியையும் பிரதமர் மோதி சந்தித்தார். அப்போது கத்தாரில் இருக்கும் இந்தியச் சமூகம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்திருந்தது.
எட்டு முன்னாள் கடற்படை வீரர்களில் ஏழு பேர் இந்தியா திரும்பியுள்ளனர். கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் குடும்பம் கத்தாரில் வசிக்கிறது. திவாரி தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக தோஹாவில் தங்கியுள்ளார், விரைவில் இந்தியா திரும்புவார்.
திவாரிக்கு 2019-ஆம் ஆண்டில் பிரவாசி பாரதிய சம்மான் வழங்கப்பட்டது. தஹாரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, கத்தார் நாட்டு கடற்படை வீரர்களுக்கு திவாரி பயிற்சி அளித்து வந்தார்.
முன்னாள் கடற்படை வீரர் இந்தியா திரும்பியதும் ஊடகங்களிடம் கூறுகையில், “நாங்கள் இந்தியா திரும்ப 18 மாதங்கள் காத்திருந்தோம். பிரதமருக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவரது தனிப்பட்ட தலையீடு மற்றும் கத்தாருடன் சமன்பாடு இல்லாமல் இவை அனைத்தும் சாத்தியமில்லை,” என்றனர்.
கத்தாருடன் இந்தியாவின் உறவு
இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நட்புறவு உள்ளது. கத்தாரில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்). இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது.
இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited - PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையே 20 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகம் இருப்பதாகவும், கத்தார் இந்தியாவில் முக்கியமான முதலீட்டாளராக உள்ளதாகவும் குவாத்ரா கூறினார்.
கத்தாரில் வசிக்கும் 8.4 லட்சம் இந்தியர்கள் இரு நாடுகளையும் இணைக்கும் முக்கிய இணைப்பாக உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், பிரதமர் மோதியின் கத்தார் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வழிவகுக்கும், என்றார்.
முன்னாள் கடற்படை வீரர்களை விடுவித்ததற்காக கத்தாருக்கு இந்தியா நன்றி தெரிவித்தபோது, பிரதமர் மோதி தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தை கவனித்து வருவதாகவும், அவர்களின் விடுதலைக்கு முழு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் குவாத்ரா கூறினார்.
முன்னாள் கடற்படையினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கத்தார் மற்றும் இந்தியா ஆகிய இரண்டும் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த மக்களின் விடுதலைக்கான நிபந்தனைகள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஊடகங்ள் தெரிவித்திருந்தன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)