மத்திய அரசு வேலைக்கான எஸ்எஸ்சி தேர்வு என்றால் என்ன? எப்படி தயாராவது?

ஒருவர் படித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரியங்கா ஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"நல்ல சம்பளத்துடன் கூடிய மத்திய அரசு வேலையை யார் தான் விரும்ப மாட்டார்கள்? இது நிலைத்தன்மையையும், பல சலுகைகளையும் அளிக்கிறது. எனக்கு வருமான வரி அதிகாரியாக ஆக வேண்டும் என்பதே ஆசை."

இப்படிச் சொல்லும்போது, மாளவிகாவின் கண்களில் நம்பிக்கை பிரகாசிக்கிறது.

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி முடித்த பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் எஸ்எஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

ஹரியாணாவின் பிவானியைச் சேர்ந்த மாளவிகா டெல்லியில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார், ஆனால் தற்போது அவர் சுயமாகப் படித்து வருகிறார். எஸ்எஸ்சி-க்குத் தயாராகும் மாணவி அவர் ஒருவர் மட்டுமல்ல.

ஒவ்வொரு ஆண்டும் 10, 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பை முடித்த லட்சக்கணக்கான மாணவர்கள், எஸ்எஸ்சி நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்குத் தயாராகின்றனர்.

எஸ்எஸ்சி (SSC) என்றால் (மத்திய அரசு) பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission). இது இந்தியாவின் முக்கியமான அரசுத் தேர்வுகளை நடத்தும் ஒரு ஆணையம் ஆகும். இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மத்திய அரசின் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் கிடைக்கும் வேலைகளைப் பெறுகிறார்கள்.

இந்தத் தேர்வுகள் ஏன் மாணவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்? இன்று அதைப் பற்றிப் பார்ப்போம்.

ஆண்டுதோறும் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து வேலைச் சந்தைக்கு வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் அவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன.

காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின்படி (Periodic Labour Force Survey 2025), இந்தியாவில் கிராமப்புறங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 13.7 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர், அதே சமயம் நகரங்களில் இந்த எண்ணிக்கை 18 சதவிகிதமாக உள்ளது.

இத்தகைய பல இளைஞர்களுக்கு, எஸ்எஸ்சி மூலம் நிரப்பப்படும் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2025 ஆம் ஆண்டில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் பல்வேறு பதவிகளுக்கு எஸ்எஸ்சி-யின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (கம்பைன்ட் கிராஜுவேட் லெவல் -CGL) மூலம் 14,582 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

2024 இல் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைகள், 2023 இல் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேலைகள் அறிவிக்கப்பட்டன, ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2022 இல் இந்த வேலைகளின் எண்ணிக்கை 37,000க்கும் அதிகமாக இருந்தது.

இவை சிஜிஎல் தேர்வு மூலம் வந்த காலியிடங்கள் மட்டுமே, ஆனால் எஸ்எஸ்சி இதைத் தவிர வேறு பல தேர்வுகளையும் நடத்துகிறது.

மாணவர்களுக்கு எஸ்எஸ்சி-யில் இருந்து வெளியாகும் வேலைகளின் எண்ணிக்கை மட்டுமே அதன் மீதான கவர்ச்சிக்குக் காரணமா?

ஒருவர் நோட்டு புத்தகத்தில் எழுதுவது போன்ற ஒரு புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஜீத் ராணா சிஜிஎல் மற்றும் எம்டிஎஸ் (MTS-Multi tasking staff) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர், இப்போது அவர் இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்.

வேலை தேடும் இளைஞர்களுக்கு எஸ்எஸ்சி எப்படி ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும் என்பதற்கு அவர் மூன்று முக்கிய விஷயங்களைக் கூறுகிறார்.

  • இதில் வெவ்வேறு நிலைகளில் நுழைய முடியும்: நீங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும் அல்லது பட்டதாரியாக இருந்தாலும், வெவ்வேறு தகுதி அளவுகளுடன் நுழையலாம்.
  • நான்கு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்: ஆங்கிலம், பகுத்தறியும் திறன் (Reasoning), பொது அறிவு-பொது அறிவியல் (GK-GS) மற்றும் கணிதம். எஸ்எஸ்சி ஜிடி (ஜெனரல் டூட்டி கான்ஸ்டபிள்) தேர்வில், ஒருவருக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தில் ஒரு பாடத்தைத் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மற்ற எல்லாத் தேர்வுகளிலும் பாடத்திட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.
  • ஆள் சேர்ப்பு செயல்முறை நீண்டதல்ல: நீங்கள் எஸ்எஸ்சி படிப்புக்குத் தொடங்கினால், அதன் ஆள் சேர்ப்பு செயல்முறை நீண்டது அல்ல. உதாரணமாக, ஜிடி கான்ஸ்டபிளில் ஒரு எழுத்துத் தேர்வு, பின்னர் உடற்தகுதித் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு-மருத்துவத் தேர்வு நடைபெறும், அதன் பிறகு வேலை கிடைத்துவிடும். பட்டதாரி நிலைத் தேர்வுகளில் இரண்டு கட்டங்களில் தேர்வுகள் உள்ளன - முதல் நிலை (Pre) மற்றும் முதன்மை (Mains). அதன் பிறகு அடுத்த செயல்முறை ஒரு வருடத்துக்குள் முடிக்கப்படும்.

அரசுத் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் எக்ஸாம்பூர் (ExamPur) இணையதளத்தின் ஆசிரியரான விவேக், "எஸ்எஸ்சி காலியிடங்களில் ஆர்வம் இருப்பதற்குக் காரணம், இதன் மூலம் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித் தகுதியின் அடிப்படையில் பல வாய்ப்புகள் உருவாகின்றன. இவை குரூப் டி முதல் குரூப் பி வரையிலான வாய்ப்புகளாகும்" என கூறுகிறார்.

எஸ்எஸ்சி-யின் முக்கியத் தேர்வுகள் மற்றும் சம்பளம்

ஒவ்வொரு ஆண்டும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் வரை லட்சக்கணக்கான தேர்வர்கள் எஸ்எஸ்சி தேர்வுகளை எழுதுகிறார்கள்.

எஸ்எஸ்சி மூலம் குரூப் பி (Group B) மற்றும் குரூப் சி (Group C) நிலை வேலைகளைப் பெறலாம். இதில் கிளர்க், உதவியாளர் ), ஆய்வாளர், பொறியாளர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைகள் உள்ளன.

எஸ்எஸ்சி இந்த நியமனங்களுக்காக ஆண்டுதோறும் வெவ்வேறு தேர்வுகளை நடத்துகிறது, அதில் பொதுவாகப் பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் பகுத்தறியும் திறன் தொடர்பான கேள்விகள் இருக்கும்.

விண்ணப்பித்த பதவியைப் பொறுத்து தேர்வுகள் வெவ்வேறு நிலைகளில் இருக்கும். தேர்வர்கள் இதைப் பற்றிய முழுத் தகவலையும் ssc.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எஸ்எஸ்சி-யின் முக்கியத் தேர்வுகள்:

எஸ்எஸ்சி சிஜிஎல் (Combined Graduate Level Examination): இது பட்டதாரி நிலை தேர்வர்களை குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கு நியமிக்க நடத்தப்படுகிறது.

இதன் மூலம் வருமான வரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer), கணக்காய்வாளர் (Auditor) மற்றும் ஆய்வாளர் (Inspector) அல்லது அது போன்ற பதவிகள் நிரப்பப்படுகின்றன. சம்பளம் சுமார் 25,000 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்.

எஸ்எஸ்சி சிஎச்எஸ்எல் (Combined Higher Secondary Level Examination): இது பல்வேறு அரசு அலுவலகங்களில் கிளர்க் மற்றும் தரவு உள்ளீடு (Data entry) தொடர்பான பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்தவர்களை நியமிக்க நடத்தப்படுகிறது. பொதுவாக இதன் மூலம் கீழ் பிரிவு எழுத்தர் (LDC-Lower Division Clerk), இளநிலைச் செயலக உதவியாளர் (JSA - Junior secretariat Assistant), அஞ்சல் உதவியாளர் மற்றும் தரவு உள்ளீட்டு ஆப்ரேட்டர் (DEO) போன்ற பதவிகள் நிரப்பப்படுகின்றன.

இந்தத் தேர்வு மூலம் நிரப்பப்படும் பதவிகளின் நிலைக்கு ஏற்பச் சம்பளம் 20,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய் வரை இருக்கலாம்.

எஸ்எஸ்சி எம்டிஎஸ் (Multi Tasking (Non-Technical) Staff Examination): இது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தேர்வர்களை நான்-கெசட்டட் குரூப் சி பதவிகளுக்கு (அதாவது, பியூன், காவலாளி, தோட்டக்காரர் போன்றவை) நியமிக்க நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் சம்பளம் அவர்களின் பதவி மற்றும் நிலைக்கு ஏற்ப 25,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரை இருக்கும்.

எஸ்எஸ்சி ஜிடி கான்ஸ்டபிள் (General Duty Constable): மத்திய ஆயுதக் காவல் படைகளான பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், ஐடிபிபி, எஸ்எஸ்பி மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸில் கான்ஸ்டபிள் நியமனங்களுக்காக இது நடத்தப்படுகிறது. சம்பளமாக 20,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இது தவிர, ஜேஇ (Junior Engineer), சிபிஓ (CPO), சுருக்கெழுத்தர் (Stenographer), இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் (Junior Hindi Translator) போன்ற நியமனங்களும் எஸ்எஸ்சி மூலம் நடைபெறுகின்றன.

யார் விண்ணப்பிக்கலாம்?

ஒருவர் தேர்வு எழுதும் ஒரு புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

எஸ்எஸ்சி-சிஜிஎல்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் (Bachelor's Degree).

எஸ்எஸ்சி சிஎச்எஸ்எல்: அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு (12th) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எஸ்எஸ்சி-எம்டிஎஸ்: விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எஸ்எஸ்சி-ஜேஇ (இளநிலை பொறியாளர்): பொறியியல் டிப்ளோமா அல்லது பட்டம், அந்தப் பதவிக்கு எது பொருந்துமோ அதை முடித்திருக்க வேண்டும்.

எஸ்எஸ்சி சிபிஓ: அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்தில் இருந்தும் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொதுவாக இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பதவிகளைப் பொறுத்து வயது வரம்பு 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் ஓபிசி தேர்வர்களுக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் எஸ்சி/எஸ்டி தேர்வர்களுக்கு 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்படுகிறது.

மேலும், விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். ஆனால் நேபாளம், பூடானை சேர்ந்தவர்கள், ஜனவரி 1, 1962 க்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த திபெத்திய அகதிகள் மற்றும் பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து குடியேறிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான முகவரி ஒன்றேதான், அதாவது ssc.gov.in. இதில் எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்குத் தேவையான தகவல், புகைப்படம், கையொப்பத்தைப் பதிவேற்றிய பிறகு கட்டணம் செலுத்த வேண்டும். பொதுப் பிரிவினருக்கு இந்த கட்டணம் 100 ரூபாய் ஆகும்.

தேர்வுக்கு எப்படித் தயாராகலாம்?

தேர்வர் ஒருவர் வினாத்தாளைப் பார்ப்பது போன்ற புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

இந்தத் தேர்வுகள் வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்ப இருப்பதால், ஒரு மாணவர் எப்போதிலிருந்து அதற்குத் தயாராக வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பு.

இதற்கு ஜீத் ராணா, விண்ணப்பதாரரின் குடும்பப் பின்னணி இதில் ஒரு பெரிய பங்காற்றுவதாக கூறுகிறார்.

அவர் கூற்றுப்படி, "ஒரு விண்ணப்பதாரரின் வீட்டிலுள்ள சூழல் சாதகமாக இல்லாவிட்டால், 10 ஆம் வகுப்புக்குப் பிறகு தயாராகத் தொடங்குவது நல்லது. இல்லையெனில், 12 ஆம் வகுப்புக்குப் பிறகு தயாராகத் தொடங்குவது ஒரு நல்ல வழி. இதற்குக் காரணம், அவ்வாறு செய்வதால் பட்டப்படிப்புடன் சேர்ந்து தயாராக முடியும். ஒருவருக்கு மனிதநேய படிப்புகள் இருந்தால், ஜிஎஸ் (GS) தாள் தயாரிப்பு எளிதாகிறது."

எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு பொதுவாக ஆறு மாதத் தயாரிப்பு போதுமானது என்று அவர் கூறுகிறார். ஆனால் இது தேர்வரின் படிக்கும் மற்றும் தயாராகும் முறையைப் பொறுத்தது.

ஒரு தேர்வர் முதல் முயற்சியில் எஸ்எஸ்சி-யில் தேர்ச்சி பெற முடியாவிட்டால், எங்கு தவறு நடந்தது என்று பார்த்து, அந்தக் குறைபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். மாதிரித் தேர்வுகளுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது.

தேர்வுக்கு முன் மாதிரித் தேர்வு எழுதினால், தயாரிப்பு எப்படி இருக்கிறது மற்றும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். வெற்றி பெறாத நிலையில், தேர்வர்கள் பிற மாநிலங்களின் அரசுத் தேர்வுகளை எழுதலாம், ஏனெனில் அவற்றின் பாடத்திட்டத்திலும் எஸ்எஸ்சி பாடத்திட்டத்திலும் சிறிது ஒற்றுமை உள்ளது.

ஒருவேளை ஒரு தேர்வர் இறுதி முயற்சி வரை வெற்றி பெற முடியாவிட்டால், அவர்களுக்குத் தனியார் துறை முதல் தனியார் பயிற்சி மையங்கள் அல்லது ஆசிரியராக மாறுவது வரை பல வாய்ப்புகள் உள்ளன என்று விவேக் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு