யூரோ 2024 சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின், பலிக்காமல் போன இங்கிலாந்தின் 58 வருடப் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபில் மெக்நல்டி
- பதவி, பெர்லினில் இருந்து
இங்கிலாந்தின் 58 ஆண்டுகாலக் கால்பந்துக் கனவு மீண்டும் பலிக்காமல் போயிருக்கிறது. யூரோ 2024 கால்பந்துக் கோப்பையை அந்த அணி ஸ்பெயினிடம் பறிகொடுத்தது.
பெர்லினின் ஒலிம்பியாஸ்டேடியன் அரங்கத்தில் நடந்த யூரோ 2024 (Euro cup) கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது இங்கிலாந்து அணி. 58 ஆண்டுகால வலி மற்றும் ஏமாற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இங்கிலாந்து கால்பந்து அணியின் போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 2020 யூரோ போட்டிகளில் இத்தாலி அணியிடம் இங்கிலாந்து கோப்பையைப் பறிகொடுத்தது.

பட மூலாதாரம், Getty Images
நிக்கோ வில்லியம்ஸின் கோல்
இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் நோக்கில் விளையாடின. ஆனால் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
ஸ்பெயினின் இளம் நட்சத்திர வீரர்கள் ஒன்றிணைந்து, இடைவேளைக்கு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அந்த அணி முன்னணி பெற உதவினர். 47-வது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றைப் பதிவு செய்தார் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ்.
தரையோடு தரையாக சென்ற அந்த பந்து கோல் ஆனது. லாமின் யமால் பந்தை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம் பாஸ் செய்து இருந்தார். அதனை வில்லியம்ஸ் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் மீண்டும் ஏமாற்றமளித்தார், ஆட்டம் தொடங்கிய 61 நிமிடங்களில் அவர் வெளியேறினார். அவருக்கு மாற்றாக ஆலி வாட்கின்ஸ் உள்ளே வந்தார்.
சரியாக ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில், கோபி மைனூவுக்கு பதிலாக உள்ளே நுழைந்த கோல் பால்மர், அடுத்த மூன்று நிமிடங்களில் ஒரு அபாரமான கோலை அடித்து இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.
எவ்வாறாயினும், அடுத்த சில நிமிடங்களில் இங்கிலாந்து அணியிடமிருந்து வெற்றியைப் பறித்தது ஸ்பெயின்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
தகர்ந்த இங்கிலாந்தின் கோப்பை கனவு
ஜெர்மன் தலைநகரில் நடந்த இந்த இறுதிப் போட்டியில், வலுவான ஸ்பெயின் அணி இங்கிலாந்தின் கோப்பைக்கான கனவைத் தகர்த்தது.
அரங்கத்தில் ஸ்பெயின் ஆதரவாளர்களை விட இங்கிலாந்து ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், இங்கிலாந்து அணியின் சீருடையில் ரசிகர்களைப் பார்க்கும்போது அரங்கமே வெள்ளைக் கடல் போலக் காட்சியளித்தது. தங்களது நீண்ட கால ஆவல் நிறைவேறி, இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் அவர்கள் குவிந்திருந்தனர்.
73-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பால்மரின் அட்டகாசமான ஷாட் கோல் இங்கிலாந்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தது, ரசிகர்களின் நம்பிக்கையும் அதிகரித்தது. முன்னதாக யூரோ 2024 போட்டிகளில் ஸ்லோவாக்கியா, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்திற்கு எதிரான போட்டிகளில், சரிவிலிருந்து மீண்டு வந்து வென்றது இங்கிலாந்து. அதேபோல இம்முறையும் நிகழும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இந்த முறை தோல்வியிலிருந்து தப்பிக்க முடியவில்லை, 86-வது நிமிடத்தில் குர்குலே பாஸ் செய்த பந்தை ஸ்பெயினின் மைக்கெல் கோலாக மாற்றினார். அடுத்த நான்கு நிமிடங்களில் ஸ்டாப்பேஜ் டைம் நிறைவடைந்ததும் இறுதி விசில் அடிக்கப்பட்டது. அதன் மூலம் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது உறுதியானது.
சவுத்கேட் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற இந்த எட்டு ஆண்டுகள் முழுவதும் அணியில் வளர்ச்சியும் நம்பிக்கையும் இருந்தபோதிலும், உண்மையான வெற்றியை அவர்கள் தவறவிடுகிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
தொடரும் 58 ஆண்டுகால போராட்டம்
இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலிக்கு எதிராகவும், இந்த முறை வலுவான ஸ்பானிஷ் அணியுடனும். அத்துடன் இரண்டு உலகக் கோப்பை அரையிறுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது (2018 மற்றும் 2022-இல் கத்தாரில்).
அடுத்த உலகக் கோப்பை வரை அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் சவுத்கேட் இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் இந்த தோல்வி இங்கிலாந்தின் பயிற்சியாளருக்கு ஒரு பெரும் ஏமாற்றம் என்று தெரிகிறது.
மூன்று கோல்களை அடித்ததன் மூலம் யூரோ 2024 'கோல்டன் பூட்' (Golden boot) விருது வாங்கிய வீரர்களில் இங்கிலாந்து கேப்டன் கேன் இடம்பெற்றிருந்தார். ஆனால் மற்ற எல்லா வகையிலும் இந்த போட்டி இங்கிலாந்து கேப்டனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இங்கிலாந்தின் ரசிகர்கள், இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் அரையிறுதிப் போட்டியின் நட்சத்திர வீரரான ஒல்லி வாட்கின்ஸ்-ஐ ஆட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று சத்தமாக கோரிக்கை வைத்தனர். பெனால்டி சமயத்தில் கேன் மிகவும் மெதுவாக செயல்பட்டபோது, யாருக்கு பதிலாக வாட்கின்ஸை உள்ளே கொண்டுவர ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பது சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது.
பயிற்சியாளர் சவுத்கேட் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். கேன் வெளியேற்றப்பட்டார். அவர் தனது கால்பந்து பயணத்தில் முதல் பெரிய கோப்பையை வெல்லும் தருணத்திற்காகத் தொடர்ந்து காத்திருக்கிறார்.
ஆனால் உள்ளே வந்த வாட்கின்ஸால் இந்த முறை மேஜிக்கை நிகழ்த்த முடியவில்லை.
சவுத்கேட் மற்றும் அவரது வீரர்கள் மீண்டும் ஒரு வலுவான அணியிடம் தான் கோப்பையை இழந்துள்ளனர். இப்போது அவர்கள் மற்றொரு வெற்றியைப் பெற 2026 உலகக்கோப்பை வரை காத்திருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்பெயினின் இளம் வீரர்கள்
இந்தத் தொடரில் இங்கிலாந்து தோல்வியடைய மற்றொரு முக்கியமான காரணம் ஸ்பெயினின் இளம் வீரர்கள்.
இந்த தொடரில் மொத்தம் 15 கோல்களை ஸ்பெயின் பதிவு செய்துள்ளது. யூரோ தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. களத்தில் துடிப்புடன் செயல்படும் இளம் வீரர்கள் அதிகம் கொண்ட அணியாக ஸ்பெயின் உள்ளது.
ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் நிமிடத்திலிருந்தே ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டார். ஸ்பெயினின் மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திரமான யமால் பந்தை பாஸ் செய்து, தொடக்க கோலுக்கான வாய்ப்பை வழங்கியபோது அதைத் தவறாமல் பயன்படுத்தினார் நிக்கோ வில்லியம்ஸ்.

பட மூலாதாரம், Getty Images
இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் தனது 17-வது பிறந்தநாளைக் கொண்டாடிய யமால், மீண்டும் ஒருமுறை தனது வயதுக்கு அப்பாற்பட்ட முதிர்ச்சியுடன் விளையாடி, ஸ்பெயின் அணி வெற்றிபெற உதவியுள்ளார். தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை லாமின் யமால் வென்றார்.
இந்த இறுதிப் போட்டியில் 22 வயதான நிக்கோ வில்லியம்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார்.
யூரோ தொடரில் முறையே 1964, 2008, 2012, 2024 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் அதிக முறை (4) யூரோ கோப்பை பட்டம் வென்ற அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் படைத்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












