தமிழ்நாட்டில் தொகுதிகளை வெல்லும் அளவுக்கு பாஜக வலுப்பெற்றுள்ளதா?

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

"இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பூஜ்யத்தில் இருந்து நாங்கள் தொடங்கினோம் என்றால் தமிழ்நாட்டில் மைனசில் இருந்து தொடங்க வேண்டியிருந்தது."

பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் கூட்டங்களில் அதன் நிர்வாகிகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள் இவை. பெரியாரின் சமூக நீதி, சாதி மறுப்பு, கடவுள் மறுப்புக் கொள்கைகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை குறிப்பிட்டே ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அவ்வாறு கூறுவார்கள்.

1960-களில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவிடம் அமைப்பதற்கான போராட்டம் மூலமாக தமிழ்நாட்டில் முதன் முதலாக ஆர்.எஸ்.எஸ். அறியப்பட்டது. அதன் பின்புலத்தில் இயங்கிய பா.ஜ.க-வுக்கு 1996-ஆம் ஆண்டு தான் முதல் எம்.எல்.ஏ. கிடைத்தார். 1998-ஆம் ஆண்டு அதிமுக-வுடன் கூட்டணி பா.ஜ.க.-வுக்கு முதல் திருப்பம் என்றால், 2014-ஆம் ஆண்டு இருபெரும் திராவிடக் கட்சிகளின் துணை இல்லாமலேயே ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றது அடுத்த மைல்கல்லாக அமைந்தது.

2014-ஆம் ஆண்டு மோதியை முன்னிறுத்தி திமுக, அதிமுக அல்லாத கூட்டணியை பா.ஜ.க. அமைத்தாலும், அந்தக் கூட்டணிக்கு அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சி என்ற வகையில் தேமுதிக-வே தலைமை வகித்தது. அடுத்த பத்தே ஆண்டுகளில் இருபெரும் திராவிடக் கட்சிகள் அல்லாத மூன்றாவது அணிக்கு தலைமை தாங்கும் இடத்தை பா.ஜ.க அடைந்துள்ளது.

பா.ஜ.க-வின் இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது? இது உண்மையிலேயே கள யதார்த்தத்தை பிரதிபலிக்கிறதா?

திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் பா.ஜ.க

தமிழ்நாட்டின் அரசியலில் குறிப்பிடும்படியான இடம் கிடைக்காமல் தவித்த பா.ஜ.க-வுக்கு 1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலில் ஒரு எம்.எல்.ஏ. கிடைத்தார். தனித்தே போட்டியிட்டு வென்றதன் மூலம் மாநிலத்தில் பா.ஜ.க தன் இருப்பை வெளிக்காட்டியது. தமிழ்நாட்டில் பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த பா.ஜ.க. மீது மற்ற கட்சிகளின் பார்வை பட்டது அப்போதுதான்.

பா.ஜ.க.வைப் பொருத்தவரை, 1998-ஆம் ஆண்டு தேர்தல் திருப்புமுனையாக அமைந்தது. இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்கு வங்கியுடன் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கட்சியாக கருதப்பட்ட காங்கிரஸ் (அல்லது அதன் வழிவந்த கட்சிகள்) பின்னடைவை சந்திக்க, பாஜக-வோ அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது. 1996-ஆம் ஆண்டு பெருவெற்றியைப் பெற்ற திமுக - த.மா.கா கூட்டணி அந்த தேர்தலில் பின்தங்க, அதிமுக தலைமையில் பா.ம.க, பா.ஜ.க, மதிமுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வையும், அதன் பிரதமர் வேட்பாளர் வாஜ்பேயியையும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது இந்தக் கூட்டணி.

மத்தியில் வாஜ்பேயி தலைமையில் அமைந்த கூட்டணி அரசு 13 மாதங்களில் ஆட்டம் காண, இப்போதைய பாஜக மூத்த தலைவரும், அப்போதைய ஜனதா கட்சித் தலைவருமான சுப்ரமணியன் சுவாமி நடத்திய தேநீர் விருந்தும், அதன் தொடர்ச்சியாக அதிமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டதுமே காரணமாக அமைந்தன. அந்த வகையில், வாஜ்பேயி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒட்டுமொத்த நாடும் உற்றுநோக்கியது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை மற்றொரு திராவிடக் கட்சியான திமுக நிரப்பியதும் அதற்குக் காரணமாக அமைந்தது.

ஒரே ஒரு வாக்கில் கவிழ்ந்த வாஜ்பேயி அரசு

வாஜ்பேயி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நள்ளிரவு தாண்டியும் தொடர, அதன் முடிவைத் தெரிந்து கொள்ள தமிழ்நாட்டில் வீடுகளிலும், பொதுத் தொலைக்காட்சிகளின் முன்பும் கடைசி வரை அமர்ந்திருந்தவர்கள் ஏராளம்.

சில நாட்கள் முன்பாக ஒடிஷா முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த காங்கிரசைச் சேர்ந்த கிரிதர் கமாங், தனது எம்.பி. பதவியிலும் தொடர்ந்ததால் வாக்களிக்க அவைக்கு வருகை தர, அவர் வாக்களிப்பதற்கு எதிராக சலசலப்புகள் எழுந்தன. ஆனாலும், கமாங் வாக்களிக்க ஒப்புக் கொண்ட அன்றைய பிரதமர் வாஜ்பேயி மீது மக்களுக்கு அனுதாபம் பிறந்தது. ஒரே ஒரு வாக்கில் வாஜ்பேயி அரசு கவிழ்ந்தது. ஒருவேளை, கிரிதர் கமாங் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்றால், வாக்குகள் சமநிலையை எட்டியிருக்கும் என்பதால், சபாநாயகரின் வாக்கு மூலம் அன்றைய வாஜ்பேயி அரசு நிலைத்திருக்கலாம்.

தமிழ்நாட்டில் அடுத்து வந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றது. 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நிலைமை மீண்டும் தலைகீழாக மாற, அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை கையாண்ட விதம், கோவில்களில் ஆடு-கோழி பலியிட தடைச் சட்டம், மத மாற்றத் தடைச் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்கள் ஆகியவற்றுடன் பாஜக-வுடன் கூட்டணி அமைத்ததால் இழந்த சிறுபான்மை வாக்குகளும் அதிமுக அணியை அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியடையச் செய்தது. இதனால், 'பா.ஜ.க.வுடன் இனிமேல் ஒருபோதும் கூட்டணி அமைப்பதில்லை' என்று அன்றைய முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சூளுரைத்தார்.

நோட்டாவுடன் ஒப்பிட்டு பா.ஜ.க. மீது விமர்சனம்

அதன் பின்னர் வந்த தேர்தல்களில் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் பாஜக-வால் கூட்டணி அமைக்க முடியவில்லை. இந்த காலகட்டத்தில் அறிமுகமான 'நோட்டா'-வுக்கு (தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையைக் கூட சில இடங்களில் பா.ஜ.க-வால் தாண்ட முடியாமல் போக, 'நோட்டாவைக் கூட தாண்ட முடியாத கட்சி' என்ற தமிழ்நாட்டின் அரசியல் மேடைகளில் விமர்சிக்கப்படும் அளவுக்கு தர்மசங்கடத்தையும் பா.ஜ.க சந்திக்க நேரிட்டது.

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோதியை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் ஒரு அணியை பா.ஜ.க முன்னின்று அமைத்தாலும், அதிக இடங்களில் போட்டியிட்டக் கட்சி என்ற வகையில் தேமுதிக-வே அந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக தனித்துக் களம் காண, 'மோடியா அல்லது இந்த லேடியா' என்ற கேள்வியை வாக்காளர்களிடம் முன்வைத்த ஜெயலலிதாவுக்கு பெருவெற்றி கிடைத்தது. நாடு முழுவதும் மோதி அலை வீச, தமிழ்நாட்டிலோ லேடி அலை வீசியிருந்ததை தேர்தல் முடிவு அம்பலப்படுத்தியது. அதிமுக 38 இடங்களை வெல்ல, பா.ஜ.க. கூட்டணிக்கு 2 இடங்களில் வெற்றி கிடைத்தது. திமுக-வுக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி, தமிழ்நாட்டில் ஓரிடத்தில் வெற்றி, ஒரு மத்திய அமைச்சர் என பா.ஜ.க-வுக்கு இருந்தாலும் கூட 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகும் தமிழ்நாட்டு அரசியலில் பெரிய பங்கு வகிக்கும் இடத்திற்கு அக்கட்சியால் வர முடியவில்லை. 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் இடம் பெறாத பாஜ.க-வுக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

2016-ஆம் ஆண்டில் பா.ஜ.க-வுக்கு திருப்புமுனை

இருபெரும் திராவிடக் கட்சிகளின் தயவில்லாமல் 1996-இல் முதல் எம்.எல்.ஏ., 2014-ஆம் ஆண்டு ஒரு எம்.பி. கிடைத்தாலும் கூட, 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓரிடத்தைக் கூட வெல்லாத பா.ஜ.க தமிழ்நாட்டு அரசியலில் பெரிய பாத்திரத்தை வகிக்க முடியாமலேயே இருந்தது.

ஆனாலும், அதே ஆண்டுதான் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. தேர்தலில் வென்று மீண்டும் முதலமைச்சரான சில மாதங்களிலேயே ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டு அரசியலில் பா.ஜ.க-வின் ஒவ்வொரு நகர்வும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்றைய மத்திய அமைச்சரான வெங்கையா நாயுடு நேரடியாக வருகை தந்தார். அதன் பிறகு மாநில அரசிலும், அதிமுக கட்சிக்குள்ளும் நடந்த ஒவ்வொரு நகர்வின் பின்னணியிலும் பாஜக இருப்பதாக தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வில் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தனக்கான வாய்ப்பாக பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன், "ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக-வை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி தனது கைப்பாவையாக பா.ஜ.க மாற்றிக் கொண்டு விட்டது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு சட்டமன்ற கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை, மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக-வால் நியமிக்கப்பட்ட அன்றைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்தினார். அந்த கால இடைவெளியில், சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாக, சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது. 18 மாத காலமாக வராத தீர்ப்பு திடீரென அன்றைய தினம் வெளியானதும் கூட சில சர்ச்சைகளுக்கு வித்திட்டது. ஒருவேளை ஆளுநர் தாமதிக்காமல் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருந்தால் சசிகலா முதல்வராகியிருப்பார். அதுதான் அவரது கடமை. அதனை அவர் வேண்டுமென்றே செய்யாமல் தாமதப்படுத்தினார்,” என்றார்.

மேலும் பேசிய அவர், "அதன் பிறகு தினகரன் சிறைக்குச் சென்றது, ஓபிஎஸ் - எடப்பாடி பழனிச்சாமி இணைந்தது, தினகரன் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டது, இறுதியாக சசிகலாவும் அந்த கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டது என்பன போன்ற அனைத்துமே பா.ஜ.க-வின் எண்ணப்படியே நடந்தன. குருமூர்த்தி சொல்லித்தான் தர்ம யுத்தத்தை தொடங்கினேன், பிரதமர் மோதி சொல்லித்தான் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தேன் என்று ஓபிஎஸ் வெளிப்படையாக கூறியிருப்பதால் இதில் ரகசியம் ஏதுமில்லை,” என்றார்.

"அந்த நான்காண்டுகளும் பா.ஜ.க-வுக்கு அனுசரணையாக நடந்து கொண்டதால்தான் அதிமுக ஆட்சி நீடிக்க முடிந்தது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க தேவைப்படும் போதெல்லாம் அதிமுக-வின் ஆதரவை பெற்றுக் கொண்டது. இதன் மூலம் தான் நினைத்த எல்லாவற்றையும் பா.ஜ.க சாதித்துக் கொண்டது," என்று கூறினார்.

பா.ஜ.க-வின் 'தனி ஆவர்த்தனம்'

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி தோல்வியடைந்ததுமே பா.ஜ.க 'தனி ஆவர்த்தனம்' செய்யத் துவங்கிவிட்டது. மாநில பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு அக்கட்சி மாநிலத்தில் ஆளுங்கட்சியான திமுக மீதான விமர்சனங்களை கூர்மைப்படுத்தியது. அடுக்கடுக்காக ஊழல் புகார்கள், முறைகேடு குற்றச்சாட்டுகள் என்று ஊடகங்களில் அண்ணாமலை எப்போதும் பேசுபடு பொருளாகவே இருந்தார்.

அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்குள்ளும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. அதன் உச்சக்கட்டமாக ஓ.பி.எஸ் வெளியேற்றப்பட, எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்திருந்தார். அதிமுக உள்கட்சிப் பிரச்னையால் திணறிக் கொண்டிருந்த வேளையில், திமுக-வுக்கு எதிரான அரசியலை பா.ஜ.க முனைப்புடன் செயல்படுத்தியது.

தேசிய அளவில் பா.ஜ.க-வுடன் அதிமுக இணக்கமாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலை அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்தே களம் கண்டது. மாநகராட்சிகளில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் கூட, நகராட்சி, மாவட்ட ஊராட்சி, ஒன்றிய அளவில் ஓரளவுக்கு பா.ஜ.க ஆதரவாளர்கள் தேர்வாயினர். திமுக மட்டுமின்றி, ஒரு கட்டத்தில் அதிமுக-வையும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சிக்கத் தொடங்கினார். குறிப்பாக ஜெயலலிதா குறித்த அவரது பேச்சு அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமாக அமைந்தது. திமுக, அதிமுக அல்லாத வலுவான மூன்றாவது அணியை அமைப்பதில் பா.ஜ.க முனைப்பு காட்டியது. பாமக-வை கூட்டணியில் இணைத்துக் கொண்ட பா.ஜ.க, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை தனக்குள்ளேயே கரைத்துக்கொண்டது.

நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தனது முழு பலத்தையும் திரட்டி போட்டியிடுகிறது. ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தற்போது மத்திய அமைச்சராகவும், எம்.பி-யாகவும் உள்ள எல்.முருகன், தற்போதைய எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் கட்சியில் இணைந்த ராதிகா சரத்குமார் என்று தமிழ்நாடு முழுவதுமே தான் போட்டியிடும் தொகுதிகளில் மக்களுக்கு நன்கு பரிச்சயமான முகங்களையே பா.ஜ.க நிறுத்தியுள்ளது.

கூட்டணியில் சேர்ந்த பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோரும் கூட தாமரை சின்னத்தில்தான் போட்டியிடுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுகின்றனர்.

மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ள பா.ஜ.க

இந்தி பேசும் உத்தரபிரதேசம், பிகார், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், மேற்கே மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் 2014. 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க உச்சபட்ச வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே உச்சபட்ச அதாவது, 90%-க்கும் அதிகமான தொகுதிகளை வென்றெடுப்பது மீண்டும் சாத்தியமா என்ற கேள்வி நிலவும் சூழலில், பா.ஜ.க-வோ தனது இலக்கை 370 தொகுதிகள் என்று விரிவுபடுத்தியுள்ளது. அதனை உறுதி செய்ய இந்தி பேசும் மாநிலங்களுடன், பாஜக கடந்த முறை சோபிக்காத தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் சில தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று அக்கட்சி முனைப்பு காட்டுகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, பிரதமர் மோதி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து வந்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர்களும் வந்து பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு அடிமட்டத்தில் உழைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க இம்முறை கண்டிப்பாக சிறப்பான வெற்றியை ஈட்டும் என்று அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கூட்டணிக்கு பா.ஜ.க தலைமை ஏற்று இருக்கிறது என்பதை காட்டிலும் மோதி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒரே கூட்டணியில் இணைத்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பா.ஜ.க தலைமை ஏற்று இருக்கிறது. மோதி பிரதமராக நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது," என்றார்.

அண்ணாமலையின் அணுகுமுறை எப்படி?

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அணுகுமுறை பற்றி கேட்ட போது, "அண்ணாமலை அவர் போட்டியிடும் கோவை தொகுதி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதுமே கூட்டணியின் வெற்றிக்காக உழைக்கிறார். ஒரு நாள் முழுவதும் கட்சி நிர்வாகிகளையும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் தொடர்ச்சியாக சந்திக்கிறார். தேர்தல் வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்குகிறார். கூட்டணி கட்சிகளை கையாள்வதை பொருத்தவரை அண்ணாமலை மிகச் சிறப்பாக செயல்படுகிறார்,” என்றார்.

"கோவையில் பாமக-வினர் மனக்கசப்பால் சிறு சலசலப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் மட்டுமே பேசப்படுகிறது. உண்மையில் களத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர்கள் பலரும் அங்கே பிரசாரம் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. அண்ணாமலை பா.ஜ.க நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என அனைவரையும் அரவணைத்து செல்கிறார். மிகவும் பக்குவப்பட்ட தலைவராக இருக்கிறார்," என்று கரு.நாகராஜன் தெரிவித்தார்.

'தமிழ்நாட்டில் பா.ஜ.க-வே பிரதான எதிர்க்கட்சி'

அத்துடன், "தமிழ்நாட்டில் சித்தாந்த ரீதியாக மட்டுமின்றி களத்திலும் திமுக-வுக்கு நாங்களே எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். மாநிலத்தில் ஆளும் திமுக-வின் ஊழல்களையும் முறைகேடுகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் பாரதிய ஜனதா கட்சி தான் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. திமுக-வின் முறைகேடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது பா.ஜ.க தான். ஆகவே இன்று தமிழ்நாட்டில் பா.ஜ.க தான் திமுக-வுக்கு பிரதான எதிர்க்கட்சியாக களத்தில் நிற்கிறது. மக்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள்தானே பிரதான கட்சி. ஆகவே, மோதி பிரதமராக வேண்டும் என்று தமிழ்நாட்டின் பெருவாரியான மக்கள் நினைப்பதால் பாஜகதான் அந்த இடத்தில் இருக்கிறது,” என்றார்.

"திமுக, அதிமுக-வுக்கு நிகராக பா.ஜ.க-வும் தமிழ்நாடு முழுவதும் பெருநகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் உள் கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்ட போதே தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டிகளை அமைத்து விட்டோம். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு கிராமப்புற, நகர்ப்புற, பெருநகர அளவில் ஏற்கனவே நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அமைப்பு ரீதியாக கட்சி வலுவாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் மோதி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ள கூட்டணி கட்சிகளும் எங்கள் நிலையை இன்னும் வலுப்படுத்தி உள்ளன. ஆகவே இந்த தேர்தலில் திமுக-வுக்கு பா.ஜ.க தான் சவால் விடும் கட்சியாக களத்தில் இருக்கிறது. மக்கள் ஆதரவுடன் பா.ஜ.க கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறும்," என்றும் கரு.நாகராஜன் கூறினார்.

'மலை எங்கே மடு எங்கே' - ஜெயக்குமார் விமர்சனம்

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் மன்றத்தில் நாங்களே செயல்படுகிறோம் என்ற பா.ஜ.க-வினரின் பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் வினவினோம். அவர் பேசுகையில், "பா.ஜ.க-வினரின் பேச்சு வெறும் பேச்சு, வெட்டிப் பேச்சு. திட்டமிட்டு கோயபல்ஸ் பொய் பிரசாரத்தை அவர்கள் பரப்பி விடுகிறார்கள். மலை எங்கே மடு எங்கே? அதிமுக இமயமலை. மற்ற கட்சிகளுடன் எங்களை ஒப்பிட முடியாது. நான் ஏற்கனவே கூறியது போல பா.ஜ.க-வினரின் பேச்சுகள் வெறும் பேச்சு வெட்டிப் பேச்சுதான்," என்று விமர்சித்தார்.

கூட்டணி அமைப்பதில் அதிமுகவை பா.ஜ.க முந்திவிட்டதா என்ற கேள்விக்கு, "அதிமுக தனித்தன்மை கொண்ட கட்சி, கூட்டணி இல்லாமல் நாங்கள் வெற்றி பெற்ற வரலாறு உண்டு. திமுக எப்போதும் கூட்டணியுடன்தான் இருக்கும். ஆரம்ப காலம் முதல் யார் மீதாவது சவாரி செய்வார்கள். அல்லது யாராவது அவர்கள் மீது சவாரி செய்வார்கள். கூட்டணி இல்லாமல் தங்களால் வெல்ல முடியாது என்று திமுக-வுக்கே தெரியும். ஆனால், அதிமுக-வைப் பொருத்தவரை, கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெற்றிருக்கிறோம். எங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம், கூடுதல் சீட்களில் வெற்றி போன்றவற்றை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்,” என்றார்.

"எங்களுக்கென்று தனிப்பட்ட பலம் உள்ளது. எங்களுடன் சேரும் போது கூட்டணிக் கட்சிகள் பலம் பெறுகின்றன. அவர்கள் வராவிட்டால் நாங்கள் அதைப் பற்றி பொருட்படுத்துவதில்லை. அதனால் நாங்கள் என்றுமே வீழ்ந்ததில்லை. எங்களுக்கென்று தனித்தன்மை வாய்ந்த அடையாளம் இருப்பதால் நாங்கள் கூட்டணியை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், பா.ஜ.க-வைப் பொருத்தவரை, 10 பேரை சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல அது நடைமுறைக்கு ஒத்துவராது. ஆகவே, அதிமுகடன் பாஜகவை எந்த வகையிலும் ஒப்பிடவே முடியாது," என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வை பா.ஜ.க ஆட்டுவித்ததா?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை பா.ஜ.க ஆட்டுவித்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "அதிமுக யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிந்தது இல்லை. எங்களைப் பொருத்தவரை, மாநில நலன்களுக்காக தோழமையுடன் இருந்தோம். ஆனால் தமிழ்நாட்டின் நலன் பாதிக்கப்படும் வகையில் மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் போது, திமுக-வைப் போல நாங்கள் மௌனமாக இருந்துவிடவில்லை,” என்றார்.

"குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் காவிரி நதிநீர்ப் பிரச்னையை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தோம். மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தோம். தமிழ்நாட்டின் உரிமையை எங்கும் விட்டுக் கொடுக்காமல் தனித்தன்மையுடன் இருந்துள்ளோம். அதிமுக-வை பலவீனப்படுத்துவதற்காக திட்டமிட்டு செய்யப்படுகின்ற கோயபல்ஸ் பரப்புரைதான் இது. ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையாகிவிடாது. இதுபோன்ற பிரசாரங்களை எல்லாம் தாண்டி அதிமுக வெற்றி பெறும்," என்று தெரிவித்தார்.

'தேர்தலுக்குப் பிறகு அதிமுக-வில் மீண்டும் குழப்பம் வரும்'

அதிமுக - பா.ஜ.க உறவு குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன், "பா.ஜ.க-வுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சு மட்டுமே காரணம் அல்ல. உண்மையான காரணம் 2026-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைமையில் ஆட்சி என்ற அண்ணாமலையின் முழக்கம் தான் அதற்கு காரணம். அந்த முழக்கம், 'தான் முதலமைச்சராக வேண்டும்' என்ற எண்ணத்திற்கு எதிரானது என்பதால் தான் எடப்பாடி பழனிசாமியால் அதனை ஏற்க முடியவில்லை அதனால் தான் அவர் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டார்

"இன்று பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள தினகரன் 2026-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறார். அதிமுக-வை வசமாக்கி அதன் மூலம் அம்மா ஆட்சி அல்லது அமமுக ஆட்சி என்று கூட தினகரன் பேசவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஆட்சியில் பா.ஜக-வும் பங்கேற்கும் என்று தானே அர்த்தம், இதன் பின்னணியில் ஏதோ ஒன்று மறைந்திருக்கிறது.

"அதாவது நடப்பு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஒருவேளை மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்னைகள் உருவாகலாம். அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்திக் குழுக்கள் உருவாகி, போர்க்கொடி தூக்கலாம். அதிமுக மீண்டும் ஓபிஎஸ்-தினகரன் வசமாகலாம். அனுசரனையான அவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு அதிமுகவின் உள்கட்டமைப்பை பயன்படுத்திக்கொண்டு 2026-இல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற போர்வையில் பா.ஜ.க ஆட்சியில் பங்கெடுக்க விரும்புகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், மோதி பிரதமராக வேண்டி தங்கத் தேர் இழுத்த ஓபிஎஸ தடையாக இருக்கவா போகிறார்?" என்றார்.

நடப்பு நாடாளுமன்ற தேர்தலைப் பொருத்தவரை, தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஓரிடத்தில் கூட வெல்ல முடியாது என்பது அவரது கணிப்பு. தமிழ்நாட்டில் பா.ஜ.க வலுப்பெற்றிருக்கிறது என்ற அக்கட்சியினரின் கூற்றை ஏற்றுக் கொண்ட பத்திரிகையாளர் கார்த்திகேயன், அது அந்த கட்சி வெற்றி பெறும் அளவுக்கான வாக்குகளை பெற்றுத் தராது என்றார்.

"தமிழ்நாட்டில் அக்கட்சி ஓரிரு இடங்களில் இரண்டாவது இடத்திற்கு வரலாம். 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூட அது நடக்கவே செய்தது. இந்த முறை பா.ஜ.க சில இடங்களில் இரண்டாவது இடம் பிடிக்க அக்கட்சியின் பலம் மட்டுமின்றி, அதிமுக சார்பில் பலவீனமான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதும் காரணமாக இருக்கும்," என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)