பிராமண எதிர்ப்பு இயக்கம், பாலியல் கல்வி வழக்குகளில் அம்பேத்கர் முன்வைத்த வாதங்கள் என்ன தெரியுமா?

ஒரு நபர் வேறொருவருக்காக ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அல்லது யாரோ ஒருவரின் நிலைப்பாட்டை துல்லியமாக நியாயப்படுத்தினால் அந்த நபர் ’வழக்கறிஞர்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு நபர் அல்லது ஒன்றின் பக்கத்தில் நின்று அவர்களுக்காக பொருத்தமான மொழியில் பேசுவது பொதுவாக வக்காலத்து (அட்வகேட்டிங்) என்று அழைக்கப்படுகிறது. வக்காலத்து என்பது 'குறிப்பிட்ட நபரை அல்லது பிரச்னையை பிரதிநிதித்துவப்படுத்துவது'.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார். அவர் தொழில் ரீதியான பாரிஸ்டர் மட்டுமல்லாமல், தனது ஆதரவாளர்களின் வழக்கறிஞராகவும் இருந்தார். அவர் சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளை ஆதரித்தார். எனவே, ஒரு குறிக்கோளுக்காக அவர் வாதிட்டது உலகில் தலை சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு குறிக்கோளுடன் சட்டம் பயின்றார். அவர் தனது முழு வாழ்க்கையையும் அந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்தார். அவர் சட்டத் தொழிலைத் தேர்ந்தெடுத்தது தொழில்முறை மேன்மைக்காகவோ அல்லது தனிப்பட்ட முன்னேற்றத்திற்காகவோ அல்ல. மாறாக நாட்டில் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நீதி வழங்குவதற்காகவே அவர் இதை மேற்கொண்டார்.. இந்தியாவில் உள்ள சுமார் 6 கோடி தீண்டத்தகாத மக்களுக்கு நீதி கிடைக்க வாதிடுவதற்காகவே அவர் வழக்கறிஞர் தொழிலை ஏற்றுக்கொண்டார்.

இந்த கட்டுரையில் அவர் எப்படி பாரிஸ்டர் ஆனார், தனது மக்களின் நலனுக்காக எப்படிப் போராடினார் என்பதை அறிந்து கொள்வோம். அவர் வாதிட்ட சில முக்கிய வழக்குகள் பற்றியும் பேசுவோம்.

பி ஆர் அம்பேத்கரின் கல்வி

பாபாசாகேப் என்று அன்புடன் அழைக்கப்படும் அம்பேத்கர், 1913 இல் மும்பை எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் (பம்பாய்) பட்டப்படிப்பை முடித்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற அமெரிக்கா சென்றார். இதற்காக அவர் பரோடா மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட்டிடம் இருந்து நிதியுதவி பெற்றார். இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவில் தனது படிப்பை முடித்த பிறகு டாக்டர் அம்பேத்கர் பரோடா அரசில் பணியாற்ற வேண்டும்.

அவர் 1913 இல் அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவர் பல்வேறு சிந்தனையாளர்களுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் மற்றும் அவர்களின் சித்தாந்தங்களுடன் பழகினார். இந்த உரையாடல்கள் மூலம் அவருடைய இலக்குகள் அவருக்கு தெளிவாகத் தெரிந்தன. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அமெரிக்காவில் இருந்த காலத்தில் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் படிப்பார்.

அந்த நேரத்தில் அவர் பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல், நெறிமுறைகள் மற்றும் மானுடவியல் ஆகியவற்றைப் படித்தார். 1915 இல், 'பண்டைய இந்திய வணிகம்' என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்த பிறகு, அவருக்கு முதுகலை பட்டம் (எம்.ஏ.) வழங்கப்பட்டது. 1916 இல் ' நேஷனல் டிவிடெண்ட் ஆஃப் இந்தியா’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சமர்ப்பித்தார்.

டாக்டர் பாபாசாகேப் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொண்டாரோ அவ்வளவு அதிகமாக கல்வியின் மூலம் தனது அறிவை விரிவுபடுத்த விரும்பினார். இதன் விளைவாக, அவர் மேல்படிப்பைத் தொடர மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட்டிடம் அனுமதி கோரினார். அவரது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொருளாதாரம் மற்றும் சட்டத்தில் உயர்கல்வி பெற அவர் லண்டன் சென்றார். அங்கு, பொருளாதாரம் படிக்க லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சேர்ந்தார். தனது சட்டப் படிப்புக்காக கிரேஸ் இன்னில் சேர்க்கை பெற்றார்.

1917 இல் பரோடா அரசிடம் இருந்து பெற்ற உதவித்தொகை காலாவதியானதால் டாக்டர் பாபாசாகேப் கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு அரை மனதுடன் திரும்ப வேண்டியதாயிற்று. இதற்கிடையில், அவரது குடும்பமும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு டாக்டர் பாபாசாகேப் இந்தியா திரும்ப முடிவு செய்தார்.

ஒப்பந்தத்தின்படி அவர் ஆரம்பத்தில் பரோடா அரசில் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும் அவர் மற்ற ஊழியர்களிடமிருந்து சாதியின் அடிப்படையில் பாகுபாட்டை எதிர்கொண்டார். பரோடாவில் சரியான தங்குமிடம் கூட கிடைப்பது கடினம் என்று கருதிய அவர் மும்பைக்குத் திரும்ப முடிவு செய்தார்.

பரோடாவில் பணிபுரிய வேண்டாம் என்று தனது தந்தை ஏற்கனவே அறிவுறுத்தியதாக டாக்டர் பாபாசாகேப் தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். தனது மகன் அங்கு சவால்களையும் பாகுபாடுகளையும் சந்திக்க நேரிடும் என்று அவரது தந்தை ஏற்கனவே எதிர்பார்த்திருக்கலாம்.

பேராசிரியர் பணி மற்றும் தலித்துகள் முன்னேற்றப் பணியின் தொடக்கம்

1917 ஆம் ஆண்டு, ஆண்டின் இறுதியில் பாபாசாகேப் மும்பையை அடைந்து, சைடன்ஹாம் கல்லூரியில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தார். பாபாசாகேப் நன்கு படித்தவராகவும், விரிவுரைகளுக்கு எப்போதும் தயார் செய்துகொண்டும் சென்றதால் அவர் சைடன்ஹாமில் பிரபலமான ஆசிரியரானார்.

தனது விரிவுரைகளுக்கு முன் கவனமாக குறிப்புகளை எழுதி அந்த தலைப்பில் முழுமையாக தயார் செய்வார். வகுப்புகளுக்கு முறையாக வருகை தராத மாணவர்கள் கூட அவருடைய வகுப்பிற்கு ஆஜராகிவிடுவார்கள். அம்பேத்கரின் அறிவார்ந்த உரைகளை கேட்பதற்காக அவர்கள் ஆர்வமாக திரள்வார்கள்.

1919 இல், சவுத்பரோ கமிஷன் முன் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் புகார்களை முன்வைத்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். அவருடைய திறமையும், புத்திசாலித்தனமும் அப்போது அனைவருக்கும் தெரிந்தது. 1920 ஆம் ஆண்டில், தீண்டத்தகாதவர்களின் துன்பங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் அவர் "முக்நாயக்" அமைப்பை (குரலற்றவர்களின் தலைவர்) நிறுவினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமைகளுக்காக அதிகாரப்பூர்வமாக வாதிடத் தொடங்கினார்.

இருப்பினும் சைடன்ஹாம் கல்லூரியில் அவரது பணி, அரசு வேலை என்பதால் அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் விளைவாக 1920 இல் அவர் தனது பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்து நேராக தலித் மேம்பாட்டிற்கான இயக்கத்தில் குதித்தார். அதே ஆண்டில், மஹாட்டில் நடந்த தலித் மாநாட்டில் வன்முறை வெடித்தது. சத்ரபதி ஷாஹு மகராஜ், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் வருங்காலத் தலைவராக அறிவித்தார். அது விரைவில் உண்மை என நிரூபணமானது.

சட்டப் படிப்பை முடிக்க மீண்டும் லண்டன் பயணம்

தலித்துகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் சிக்கலான தன்மை காரணமாக அவர்களின் சட்டப் பிரச்னைகளை திறம்பட நிவர்த்தி செய்ய ஒரு சுதந்திரமான சட்ட ப்ராக்டீஸ் அமைக்க வேண்டியதன் அவசியத்தை டாக்டர் அம்பேத்கர் உணர்ந்தார். அவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதற்கு சட்டக்குழுக்களில் இடம்பெறுவதும் முக்கியம் என்பதை அவர் புரிந்து கொண்டார். இதைக் கருத்தில் கொண்டு தனது சட்டக் கல்வியை முடிக்கத் தீர்மானித்து 1920 செப்டம்பரில் அவர் லண்டனுக்குப் பயணமானார்.

அங்கு செல்வதற்கு முன்பே டாக்டர் பாபாசாகேப் ஒரு தலித் தலைவராக அடையாளம் காணப்பட்டார். இந்த உண்மை அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே அவர் பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு பாதைகளில் இருந்து தன்னை ஒதுக்கிக்கொள்ள முடிவு செய்தார். லண்டன் போன்ற நகரங்களில் நாடகங்கள், ஓபரா மற்றும் தியேட்டர் போன்றவற்றைத் தவிர்த்தார். அவர் தனது பெரும்பாலான நேரத்தை நூலகங்களில் கழித்தார்.

லண்டனில் வசிக்கும் போது, எல்லா வழிகளிலும் பணத்தைச் சேமித்து வந்தார். பேருந்தில் ஏறாமல் நடந்து செல்வது அவர் வழக்கம். அவர் கஷ்டப்பட்டுப் படித்தார்... சில சமயம் பணம் சேமிப்பதற்காக வெறும் வயிற்றோடு இருப்பார். அம்பேத்கருக்கு லண்டனில் அசனாடேகர் என்ற அறைத்தோழர் இருந்தார். அவர் பாபாசாகேபிடம், " அட அம்பேத்கர், இரவு வெகுநேரமாகிறது. எவ்வளவு நேரம் படிப்பீர்கள்? இப்போது கொஞ்சம் ஓய்வெடுங்கள். இரவில் நன்றாகத் தூங்குங்கள்" என்று கூறுவது வழக்கம். அப்போது அம்பேத்கர், " சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் என்னிடம் பணமோ நேரமோ இல்லை. என் படிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டும். எனக்கு வேறு மாற்று வழியில்லை" என்று கூறுவார். (குறிப்பு - மராத்தியில் டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, ஆசிரியர் டாக்டர். தனஞ்சய் கீர்)

பாபா சாகேப் தனது இலக்கை நோக்கி எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்தார் என்பதை இதிலிருந்து மதிப்பிடலாம்.

1922 ஆம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்த பிறகு கிரேஸ் இன்னால்’ பார் உறுப்பினராக’ இருக்க அழைக்கப்பட்டார். இதன்மூலம் டாக்டர் அம்பேத்கர் ஒரு பாரிஸ்டர் ஆனார். பாபா சாகேப் இரண்டு பட்டங்களை ஒரே ஆண்டில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு மற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது.

கிரேஸ் இன்னில் சட்டம் படிக்கும் போது, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் (எல்எஸ்இ) பொருளாதாரத்தில் அதிஉயர் படிப்பையும் தொடர்ந்தார். 1923 ஆம் ஆண்டில், LSE அவரது முன்னேற்றத்தை அங்கீகரித்து அவருக்கு ’டாக்டர் ஆஃப் சயின்ஸ் ’பட்டம் வழங்கியது. ஒரே ஆண்டில் டாக்டர் மற்றும் பாரிஸ்டர் என்ற இரண்டு பட்டங்களையும் அவர் பெற்றார்.

இந்தியாவில் வழக்கறிஞர் பணியின் துவக்கம்

இந்தியாவில் ஒருவருடைய பார் சேர்க்கை, விழாவாக கொண்டாடப்பட்ட எத்தனை வழக்கறிஞர்களை உங்களுக்குத் தெரியும்? டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட நாளின் நூற்றாண்டு விழாவை இந்திய உச்ச நீதிமன்றம் கொண்டாடியது. 100 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கருக்கு வழக்குறிஞர் அந்தஸ்தை நீதிமன்றம் வழங்கிய அந்த நாள், சென்ற ஆண்டு விழாவாக கொண்டாடப்பட்டது.

இது பாபா சாகேப்பின் பணிக்கான அஞ்சலியாக இருந்தது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தைப் பெற அவர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.

பார் சேர்க்கை பெற அவரிடம் பணம் இல்லை. அவரது நண்பர் நவல் பத்தேனா அவருக்கு 500 ரூபாய் கொடுத்தார். பின்னர் பாபாசாகேப் மும்பையில் உள்ள மாநில பார் கவுன்சிலில் சேர விண்ணப்பித்தார். அவர் ஜூலை 4 ஆம் தேதி சேர்க்கை பெற்றார். ஜூலை 5 ஆம் தேதி முதல் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.

சட்டக் கல்வியை முடித்த பிறகு ஆங்கிலேய அரசால் மாதம் 2500 ரூபாய் சம்பளத்துடன் மாவட்ட நீதிபதியாக தனக்கு வேலை வழங்கப்பட்டது என்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தனது பஹிஷ்கிருத பாரதம் புத்தகத்திலும், தான் ஆற்றிய உரைகளிலும் குறிப்பிடுகிறார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும் என்பதால் அதை அவர் ஏற்கவில்லை.

அவர் ஒரு தலையங்கத்தில், "சுயாதீனமாக தொழில் செய்யும் வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நீதிபதி உட்பட எந்த ஒரு அரசுப் பணியையும் நான் ஏற்கவில்லை" என்று வெளிப்படையாகக் கூறினார். ஐதராபாத் நிஜாம் அவருக்கு ஐதராபாத் மாகாணத்தின் தலைமை நீதிபதி பதவியையும் வழங்கினார். ஆனால் அவர் இந்தப் பதவியையும் நிராகரித்தார்.

பெரும்பாலான வழக்குகள் அவர்களை சார்ந்தது என்பதால் வழக்கறிஞர் தொழிலில் சலுகை பெற்ற சாதியினர் ஆதிக்கம் செலுத்தினர். டாக்டர் அம்பேத்கர் இதை எதிர்பார்த்திருப்பார். ஆனாலும் அவர் இந்த சவாலை ஏற்க முடிவு செய்தார்.

ஒரு வழக்கறிஞராக அம்பேத்கர் பணிபுரிந்த ஆரம்ப நாட்களைப் பற்றி தனஞ்சய் கீர் எழுதுகிறார். "அப்போது உங்கள் புத்திசாலித்தனத்தை விட தோலின் நிறம் சில நேரங்களில் பிரகாசமாக இருக்க வேண்டி இருந்தது. தீண்டாமையின் களங்கம் இருந்தது. சமூகத்தில் குறைந்த அந்தஸ்து, தொழிலில் புதுமை, ஒத்துழைப்பு இல்லாத சுற்றுச்சூழல் தடைகளாக மாறியது. ஆனாலும் அவர் பொறுமை இழக்கவில்லை. இந்த கசப்பான உண்மைகளை உணர்ந்துகொண்ட டாக்டர் அம்பேத்கர், துணை நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலும் பணிபுரிய முடிவு செய்தார்.”

டாக்டர் அம்பேத்கரிடம் வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஏழைகள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள். அவர்களின் சமூக, பொருளாதார அல்லது மத பின்னணியைப் பொருட்படுத்தாமல் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய அம்பேத்கர் முயன்றார்.

பாலியல் தொழிலாளர்களுக்கு நீதியை உறுதி செய்யும் நோக்கில் அவர் தனது சட்ட சேவைகளை வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரைப் பற்றியும் அவருக்கு எந்தவிதமான முன்கூட்டிய தப்பெண்ணம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

டாக்டர் அம்பேத்கர் தனது வாடிக்கையாளர்களை எப்படி நடத்தினார்?

"வழக்கறிஞர்" என்ற வார்த்தை ஒரு கடுமையான முகம் கொண்ட மனிதனின் உருவத்தை கண்முன் கொண்டுவரலாம். ஒழுக்கமான மற்றும் ஆழ்ந்த அறிஞராக இருந்த போதிலும் பாபாசாகேப் தனது ஆதரவாளர்களுடன் மிகுந்த அன்புடன் பழகுவார். அவர்களுடன் உணவையும் பகிர்ந்து கொண்டார். இது அவரது வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் கருத்துகள் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையைக் காட்டுகிறது. இத்தகைய சம்பவங்கள் அம்பேத்கரின் தாராளவாத உணர்வை பிரதிபலிக்கின்றன.

தனஞ்சய் கீர், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றில், "ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த பாபாசாகேப்பின் அலுவலகத்திற்கு நீதி கேட்டு ஏழைகளிலும் ஏழ்மையானவர்கள் வருவார்கள். அவர்களின் துன்பத்தையும் எளிமையையும் கண்டு அவருடைய மனம் வருந்தும். கட்டணம் ஏதும் வாங்காமல் ஏழைகளுக்காக அவர் உழைத்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அந்த நேரத்தில் அம்பேத்கரின் வீடு ஏழைகளின் நம்பிக்கைக்கான பாதையாகவும், அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சிக் களஞ்சியமாகவும், தொழிலாளர்களுக்கு தங்குமிடமாகவும் இருந்தது. ஒரு நாள் அவரது மனைவி (ரமாயி) வெளியூர் சென்றிருந்த போது சட்ட ஆலோசனை பெற அவருடைய வீட்டிற்கு இரண்டு பேர் சென்றனர். நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன் அவர்களுடன் சேர்ந்து இரவு உணவு அருந்தினார்.”

"அம்பேத்கர் நன்றாக சமைக்கக் கூடியவர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியதும் அந்த வாடிக்கையாளர்களுக்கு அவரே உணவை தயாரித்துக் கொடுத்தார். இரவில் இதை அவர்கள் உணர்ந்த போது அவர்களது கண்கள் நன்றியுணர்வால் நிறைந்தன.”

வாதி உரைக்கு முன்பே பிரதிவாதி உரையை வழங்கி வென்ற அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் தனது வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான அசௌகரியம் அல்லது அசௌகரியமான சூழ்நிலையைத் தவிர்க்க எப்படி கவனமாக இருந்தார் என்பதற்கு பின்வரும் வழக்கு ஒரு சான்றாகும்.

தலித் சமூகத்தின் நிலைமையை பிரிட்டிஷ் அரசுக்கு தெரிவிக்க 1928 இல் சைமன் கமிஷன் முன் சாட்சியமளிக்க டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு முக்கியமான வழக்கில் அவர் தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க தானே மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன் ஆஜராக வேண்டியிருந்தது. அதே நேரத்தில் சைமன் கமிஷன் முன்பும் அவர் சாட்சியம் அளிக்க வேண்டி இருந்தது. அந்த வழக்கில் அம்பேத்கர் ஆஜராகாமல் இருந்திருந்தால் அவரது வாடிக்கையாளர்களில் சிலர் விளைவுகளை சந்தித்திருக்கக் கூடும். அந்த வாடிக்கையாளர் மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கலாம். வழக்கறிஞர் இல்லாத நிலையில் வாடிக்கையாளர் கஷ்டப்பட நேர்ந்திருந்தால் அம்பேத்கர் வாழ்நாள் முழுக்க வருத்தப்பட்டிருப்பார்.

சைமன் கமிஷன் முன் சாட்சியம் அளிக்க அவர் ஆஜராகாமல் இருந்தால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அவல நிலையை எடுத்துரைக்கும் வாய்ப்பை அவர் இழந்திருப்பார். அத்தகைய சூழ்நிலையில் வாதியின் வாதங்களுக்கு முன்பாக பிரதிவாதியின் உரை அளிக்கப்படுவதை அனுமதிக்குமாறு அவர் நீதிபதிகளை கேட்டுக் கொண்டார்.

பிரதிவாதியின் பேச்சுக்கு முன் வாதியின் உரை இருக்க வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் அம்பேத்கரின் பணியின் முன்னுரிமையை மனதில் கொண்டு நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. தனது வாடிக்கையாளருக்கான வாதங்களை முடித்த பிறகு அம்பேத்கர் சைமன் கமிஷன் முன் சாட்சியமளிக்கச் சென்றார்.

தனஞ்சய் கீர் எழுதிய பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றில், "அவர் முன்வைத்த வாதங்களின் சரியான தன்மை மற்றும் அவரது வழக்கறிஞர் திறமையின் மீதான நம்பிக்கை ஆகியவை காரணமாக அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்,” என்று எழுதியுள்ளார்.

சைமன் கமிஷன் முன்னிலையில் அம்பேத்கர், தலித்துகளின் தற்போதைய நிலைமையை விவரித்து தீர்வுகளை முன்வைக்க வேண்டியிருந்தது. இந்தக் கூட்டத்திற்கு ஒரு நிர்ணயிக்கப்பட்ட நேரம் இருந்தது. ஒட்டுமொத்த தலித் சமூகத்தின் தரப்பையும் அவர் முன்வைக்க வேண்டியிருந்தது, மறுபுறம் அவர் தனது வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக வாதிட வேண்டியிருந்தது. இந்த இரண்டு விஷயங்களும் அவருக்கு மிகவும் முக்கியமானவை. தனது சட்ட அறிவு மற்றும் சட்டப் படிப்பில் தனது நிபுணத்துவத்தின் மீதான நம்பிக்கை காரணமாக அவரால் இதைச் செய்ய முடிந்தது.

பாரிஸ்டர் டாக்டர் அம்பேத்கர் வாதிட்ட முக்கிய வழக்குகள்

பாரிஸ்டர் டாக்டர் அம்பேத்கர் வாதிட்ட முக்கிய வழக்குகளாக, "ஆர்டி கார்வேயின் ’சமாஜ் ஸ்வாஸ்திய’ இதழ் தொடர்பான வழக்கு, 'எனிமீஸ் ஆஃப் தி நேஷன்' என்ற பிரபலமான வழக்கு" ஆகிய இரண்டும் பார்க்கப்படுகின்றன.

ஆர்டி கார்வேயின் ’சமாஜ் ஸ்வாஸ்திய’ இதழ் தொடர்பான வழக்கு

டாக்டர் ஆர். டி. கார்வே அவரது காலத்தின் முக்கிய சமூக சீர்திருத்தவாதி. பெண்களின் உடல்நலம் மற்றும் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க அவர் பணியாற்றினார். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பாலியல் கல்வி பற்றி பேசுவது மிகவும் சவாலாக இருந்தது. இந்த தலைப்புகளை பகிரங்கமாக எழுப்பியதற்காக அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

டாக்டர் கார்வே பழமைவாத சமூகத்தின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பழமைவாதிகள் அவர் தனது ’சமாஜ் ஸ்வாஸ்திய'( ஆரோக்கியமான சமுகம்- சமூக ஆரோக்கியம்) பத்திரிகை மூலம் ஆபாசத்தைப் பரப்புவதாக கூறினர். டாக்டர் கார்வே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் கார்வேயின் வழக்கை ஏற்று அவருக்காக வாதாடினார்.

இந்த வழக்கு 1934ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஒரு சமூக சீர்திருத்தவாதி அவரது பணிக்காக தனித்து விடப்பட்டால் நான் அவர் பக்கம் உறுதியாக நிற்பேன் என்பதைக் காட்டவே டாக்டர் அம்பேத்கர் இந்த வழக்கை ஏற்றார்..

சமாஜ் ஸ்வாஸ்திய இதழ், சமூக நலக் கண்ணோட்டத்தில் பாலியல் கல்வி பற்றிய கட்டுரைகளை வெளியிட்டது. இருப்பினும் இந்த கட்டுரைகள் ஆபாசமானவை என்று கார்வே மீது குற்றம் சாட்டப்பட்டது.

அளிக்கப்பட்ட தகவல்கள் ஆபாசமானதாகவும், திரிபுபடுத்தப்பட்டதாகவும் உள்ளதா என்பது குறித்து நீதிமன்றம் ஆலோசித்தது.

“பாலியல் பிரச்னைகள் பற்றி யாராவது எழுதினாலும், அதை ஆபாசமாகக் கருதக்கூடாது” என்று டாக்டர் அம்பேத்கர், கூறினார்.

மேலும், "மக்கள் மனதில் எழும் கேள்விகள் சிதைந்ததாக இருக்குமானால், அறிவால் மட்டுமே அந்தச் சிதைவை அகற்ற முடியும். இல்லையெனில், அது எப்படி நடக்கும்? எனவே, டாக்டர் கார்வே கேள்விகளுக்கு பதிலளிக்கத்தான் வேண்டும். "

அவற்றை நாம் திரிபுபடுத்திப் புரிந்து கொண்டால், அறிவுதான் சிதைவை நீக்கும். இல்லை என்றால் அது எப்படி தீர்க்கப்படும்? எனவே, கேள்வி எழுப்புபவர்கள் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

இந்த வழக்கில் பாபா சாகேப் தோல்வியடைந்தார். இருப்பினும், அவரது முற்போக்கான கருத்துகளும், சம காலத்து சமூக சீர்திருத்தவாதிக்கு அவர் அளித்த ஆதரவும் இறுதியில் இந்த வழக்கிலும் வெற்றிக்கு வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.

அனைவருக்கும் சம நீதி என்ற கொள்கை அவரது நம்பிக்கைகளில் பொதிந்திருந்தது, இந்த அர்ப்பணிப்புதான் அவரது உறுதியைத் தூண்டியது.

'எனிமீஸ் ஆஃப் தி நேஷன்' என்ற பிரபலமான வழக்கு

புகழ் பெற்ற 'எனிமீஸ் ஆஃப் தி நேஷன்' வழக்கில் டாக்டர் அம்பேத்கரின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்கு முன், 1926-ன் இந்த வழக்கு என்ன என்பதை முதலில் புரிந்துகொள்வோம்.

தினகர் ராவ் ஜவால்கர் மற்றும் கேசவ் ராவ் ஜெதே ஆகியோர் அந்த நேரத்தில் பிராமண எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய செயல்பாட்டாளர்கள். பிராமணர்கள் அல்லது பிராமணீயத்தின் ஆதரவாளர்கள் சமூக சீர்திருத்தங்களுக்கு எதிராக இருந்தனர். இந்த எதிர்ப்பின் மத்தியில் அவர்கள் மகாத்மா பூலே மற்றும் அவரது சமூக சீர்திருத்தங்களையும் குறிவைத்தார்கள். ஜோதிபா பூலேவை இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பழமைவாதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மகாத்மா பூலே "கிறிஸ்துவின் ஊழியர்" என்றும் விமர்சிக்கப்பட்டார். இந்த கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தினகர் ராவ் ஜவால்கர் "தேஷ்சே துஷ்மன்" (நாட்டின் எதிரிகள்) என்ற புத்தகத்தை எழுதி, கேசவ்ராவ் ஜெடே அதை வெளியிட்டார். இந்த புத்தகத்தில், முக்கிய தேசிய தலைவர்கள் - லோகமான்ய திலகர் மற்றும் விஷ்ணுசாஸ்திரி சிப்லுங்கர் ஆகியோரும் தேச விரோதிகளாக அறிவிக்கப்பட்டனர். திலகரை விவரிக்க பல அடைச்சொற்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். இது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்தது. இந்த வழக்கு புனே நீதிமன்றத்திற்கு சென்றது, அங்கு கீழ் நீதிமன்றம் ஜெதே மற்றும் ஜவால்கரை கண்டித்தது.

ஜவால்கருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ஜெதேவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜவால்கரும், ஜெதேவும் அம்பேத்கரை சந்திக்கச் சென்றபோது, “எனிமீஸ் ஆஃப் தி நேஷன்” புத்தகத்தைப் படித்ததாகக் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு புனே செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதற்கு நீதிபதி லாரன்ஸ் தலைமை தாங்கினார். முந்தைய அவதூறு வழக்கைக் குறிப்பிட்டு அம்பேத்கர் இந்த வழக்கை வாதிட்டார்.

அவதூறான எழுத்துகள் தொடர்பான மற்றொரு அவதூறு வழக்கை அம்பேத்கர் மேற்கோள் காட்டினார், அங்கு நீதிபதி ஃப்ளெமிங் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார். புகார் அளிக்கும் நபர் தூரத்து உறவினர் என்பதால் அவர் புகார் அளிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது. அம்பேத்கர் இந்தத் தீர்ப்பை விரிவாக ஆராய்ந்து அதையே தனது வாதங்களின் அடிப்படையாகப் பயன்படுத்தினார். அவரது வாதம் தர்க்க ரீதியாக சரியானதாக இருந்தது, மேலும் சட்டத்தின் பயன்பாடு துல்லியமாக இருந்தது, இதன் விளைவாக சம்பந்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மஹாத் சத்தியாகிரகம்

பல நூற்றாண்டுகளாக பொதுக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டோருக்கு உரிமை இல்லை. விலங்குகள் சென்று தண்ணீர் குடிக்கும் இடங்கள் இருந்தபோதும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த அநீதிக்கு எதிராகப் போராட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ’சாவ்தர் தாலே சத்தியாகிர’ இயக்கத்தைத் தொடங்கினார்.

மஹாத் சத்தியாகிரகத்தில் உயர்சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. உயர்சாதி இந்துக்களின் குண்டர்கள் தீண்டத்தகாத சமூக மக்களை தாக்கினர். தீண்டத்தகாதவர்கள் மஹாத் குளத்தின் தண்ணீரைத் தொடுவதைத் தடுக்க அவர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தனர். டாக்டர் அம்பேத்கர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடர்ந்தார்கள். தீண்டாமை இயக்கத்தை அனைத்து பக்கங்களிலும் இருந்து ஒடுக்கவே இந்த நடவடிக்கை.

இந்த நேரத்தில் அம்பேத்கர் பல்வேறு நிலைகளில் போராட வேண்டியிருந்தது. தீண்டத்தகாதவர்களுக்காக மஹாத் ஏரி திறக்கப்பட்ட போது அதன் மீதான அனைத்து உரிமைகளும் உயர் இந்துக்களுக்கே என்று வாதிடப்பட்டது. மஹாத் குளம் பொது இல்லை மற்றும் தீண்டத்தகாதவர்கள் அதன் அருகில் கூட வசிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் சில முஸ்லிம்கள் இங்கிருந்து தண்ணீர் எடுப்பதாகவும் கூறப்பட்டது.

டாக்டர் அம்பேத்கரும் அவரது சகாக்களும் மஹாத் குளம், மஹாத் நகராட்சியின் சொத்து என்று நீதிமன்றத்தில் வாதிட்டனர். உயர்சாதி இந்துக்களை தவிர வேறு யாருக்கும் அங்கு தண்ணீர் குடிக்க அனுமதி இல்லை. காதிக் முஸ்லிம்கள் அதாவது கசாப்புக் கடைக்காரர்கள் கூட ஏரியின் தண்ணீரைக் குடிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அம்பேத்கர் வாதிட்டார். எனவே, மஹாத் குளம் அனைவருக்கும் திறக்கப்படவில்லை என்பது உறுதியானது. பாபாசாகேப் வேண்டுமென்றே இறைச்சி வியாபாரம் செய்யும் காதிக் சமூகத்தை குறிப்பிட்டார்.

காதிக் சமூகத்தினருக்கும் இங்கிருந்து தண்ணீர் குடிக்க உரிமை உண்டு என்று உயர்சாதி இந்துக்கள் கூறியிருந்தால், அவர்களின் வாதம் புனிதம் குறித்த அவர்களின் நிலைப்பாட்டிற்கு முரணாக இருந்திருக்கும். எனவே அத்தகைய கூற்று சாத்தியமில்லை. இந்த விஷயத்தில் பாபா சாகேப் அவர்களை சுற்றி வளைத்தார். அப்பகுதியைச் சேர்ந்த பலர் இதற்கு சாட்சியமளித்தனர்.

’சாவ்தார் தலே’ குறைந்தது 250 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலும் உயர் சாதி இந்துக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மட்டுமே தண்ணீருக்கு உரிமை கோருகிறார்கள் என்பது புரிந்தது. இது மஹாத் நகராட்சிக்கு சொந்தமானது மற்றும் எந்த குறிப்பிட்ட சமூகத்திற்கும் சொந்தமானது அல்ல. எனவே, அதை அனைவருக்கும் திறப்பது சரியானது.

அனைவருக்கும் திறந்துவிடுமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளித்தது. அதன்படி தீண்டாமைக்கு எதிராக டாக்டர் பாபாசாகேப் தலைமையிலான இயக்கம் மாண்புமிகு உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது என்பது தெளிவாகிறது.

இந்த விஷயம் மஹாத்தின் சாவ்தார் தலேவுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. இனம் அல்லது சமூக அந்தஸ்து பாகுபாடு இல்லாமல் அனைத்து பொது நீர் ஆதாரங்களையும் அணுக அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது. ஆனால் அத்தகைய அணுகலை மறுப்பது சட்டவிரோதமானது. எனவே, இந்த வழக்கின் முக்கியத்துவம் சமூக மற்றும் சட்ட முனைகளில் எதிரொலிக்கிறது, அனைவருக்கும் சமத்துவம் மற்றும் நீதியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

டாக்டர் அம்பேத்கரின் கூற்றுப்படி ஒரு நல்ல வழக்கறிஞரை உருவாக்குவது எது?

1923 மற்றும் 1952 க்கு இடைப்பட்ட காலத்தில், டாக்டர் அம்பேத்கர் பல வழக்குகளை வாதிட்டார். ஆனால் அது குறித்து மிகக் குறைவான வழக்கு ஆவணங்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. விஜய் கெய்க்வாட் அவரது வழக்குகளையும் அதன் தீர்ப்புகளையும் திரட்டியுள்ளார். இவற்றில் 'டாக்டர் அம்பேத்கர் வாதாடிய வழக்குகள்' என்ற நூல் இவரால் தொகுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு வழக்கறிஞராக எப்படி இருந்தார் என்பதை புரிந்து கொள்ள இந்த முக்கியமான குறிப்பு புத்தகத்தை ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு நல்ல வழக்கறிஞரிடம் இருந்து டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது பற்றிய விவரங்களை விஜய் கெய்க்வாட் அதில் அளித்துள்ளார்.

1936 இல் டாக்டர் அம்பேத்கர் எழுதிய கடிதத்தின்படி, அவர் ஒரு நல்ல வழக்கறிஞரிடம் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார்.

  • சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை புரிந்துகொள்வது
  • அடிப்படை பொது அறிவு
  • ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஒரு விஷயத்தை முன்வைக்கும் கலை
  • தகவல் தொடர்புகளில் உண்மைத் துல்லியம்
  • மொழியில் தெளிவாக வெளிப்படுத்தும் திறன்
  • எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு காண்பது.

சட்டத் தொழிலில் தர்க்க ரீதியான பகுத்தறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் கூற்றுப்படி, ஒரு நல்ல வழக்கறிஞராக மாறுவதற்கு இந்த பகுத்தறிவுப் பண்பு அவசியம் என்று விஜய் கெய்க்வாட் தனது புத்தகத்தின் முன்னுரையில் எடுத்துரைத்துள்ளார்.

தனது சட்டத்தொழிலின் ஒரு பகுதியாக டாக்டர் அம்பேத்கர் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தார். இதன் போது மக்களின் துயரங்களையும் வலிகளையும் அருகில் இருந்து கண்டார். அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழுவின் தலைவராக அவர் பதவியேற்ற போது, அவரது சட்ட நிபுணத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக இருந்த அனுபவத்தால் முழு நாடும் பயனடைந்தது.

1936 இல் டாக்டர் அம்பேத்கர் மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் விரிவுரைத் தொடரை நிகழ்த்தினார். இன்றும் இந்த விரிவுரைகள் நம் நாட்டின் சட்டங்களை புரிந்துகொள்வதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

1936 இல், டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷ் அரசியலமைப்பு பற்றி விரிவுரை செய்தார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் இந்த நாட்டின் அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. தலித்துகளின் முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் டாக்டர் அம்பேத்கர் மேற்கொண்ட அயராத முயற்சியின் விளைவு இது.

அரசு உருவாக்கம், பல்வேறு சட்ட இயற்றல்கள் என்று எதுவாக இருந்தாலும், அந்த காலத்தில் அவர் ஆற்றிய உரைகள் இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அவரது வாதங்கள் நீதிமன்ற அறைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. அவை உலகம் முழுவதும் எதிரொலித்தன. அது நாட்டிற்குள் நீதியின் தாழ்வாரங்களை எட்டியது மட்டுமல்லாமல், சமூகத்தில் குரல் இல்லாதவர்களின் காதுகளிலும் எதிரொலித்தது.

மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் ஆகிய கொள்கைகள் குறித்து எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது. அவரது வாதங்கள் இந்த கொள்கைகளை உள்ளடக்கியது. நம் மனதில் எதிரொலிக்கும் ஒரு கருத்தை அது தானாகவே உருவாக்குகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)