You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கச்சத்தீவு: இந்திரா காந்தியிடம் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் கூறியது என்ன? இன்றைய ராணி விளக்கம்
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கச்சத்தீவு விவகாரம் அரசியல் அரங்கில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், கச்சத்தீவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
கச்சத்தீவு தொடர்பாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்கள் நாளிதழ் ஒன்றில் கட்டுரையாக வெளியான நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய நிலப்பரப்பான கச்சத்தீவு, 1974ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தையடுத்து இலங்கை வசம் இருக்கிறது.
கச்சத்தீவு தொடர்பான விவாதம் எழும்போதெல்லாம், இந்தத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் வசம் இருந்தது என்ற வாதங்கள் முன்வைக்கப்படும்.
கடந்த 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தான தருணத்தில் தமிழ்நாடு அரசும் இதே கருத்தைத் தெரிவித்து, கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்று கூறியது. ஆனால், இதற்கான ஆவணங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை.
கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானபோது, ராமநாதபுரம் சமஸ்தானம் என்ன செய்தது?
"மக்களின் நலன் கருதி கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்கு கொடுத்ததால் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை" என்கிறார் சமஸ்தானத்தின் ராணியான லெட்சுமி நாச்சியார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் விரிவாகப் பேசிய அவர், "கடந்த சில நாட்களாக கச்சத்தீவு விவகாரம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவதை ராமநாதபுரம் சமஸ்தானம் கவனித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோதியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது எனத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.
கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமானதாகத்தான் இருந்தது எனக் கூறும் அவர், தனது மாமனார் ராமநாத சேதுபதி கச்சத்தீவை மரைக்காயர்களுக்கு குத்தகைக்கு வழங்கியதாகவும் கூறுகிறார்.
குத்தகைக்கு எடுத்த மரைக்காயர்கள் மீன்பிடி தொழில் செய்வதற்குப் பயன்படுத்தினர். ஆனால், மரைக்காயர்களுக்கு கச்சத்தீவை குத்தகைக்குக் கொடுத்த ஆவணங்கள் தற்போது தன்னிடம் இல்லை என்றும் மரைக்காயர்கள் சிலரிடம் குத்தகை ஆவணங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாக, இந்திரா காந்தி ராமநாதபுரத்திற்கு வந்து அப்போதைய ராஜாவாக இருந்த ராமநாத சேதுபதியிடம் கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பது பர்றித் தெரிவித்ததாகவும் மக்களின் நலனுக்காக இதைச் செய்வதால் ராமநாத சேதுபதி எவ்விதமான ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை என்கிறார் லெட்சுமி நாச்சியார்.
பிறகு, தனது கணவர் குமரன் சேதுபதியின் காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்வதற்காக சில ஆவணங்களை அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மாவட்ட ஆட்சியர் மூலம் கேட்டுப் பெற்றதாகவும் கூறுகிறார் அவர்.
ஆனால், "கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதால் மீனவர்கள் பிரச்னைக்கு உள்ளாகி வருவதால் அதை இந்தியா திரும்பப் பெற விரும்பும் நிலையில் அது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்குத் தானும் தனது மகன் நாகேந்திர சேதுபதியும் உதவத் தயாராக இருப்பதாக" லெட்சுமி நாச்சியார் தெரிவித்தார்.
கச்சத்தீவை திரும்பப் பெறுவது மீனவர் பிரச்னைக்கு தீர்வாகுமா?
கச்சத்தீவு இந்தியாவுக்குக் கிடைத்தாலும் மீனவர் பிரச்னைக்கு அது ஒரு தீர்வாக இருக்காது என்கிறார் கச்சத்தீவில் அமைந்திருக்கும் புனித அந்தோணியார் ஆலயத்தைக் கட்டியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப் பிள்ளை மற்றும் தொண்டியைச் சேர்ந்த சீனிகுப்பன் ஆகியோரால் கடந்த 1910ஆம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது.
அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலமான பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோணியார் ஆலய விழா நடைபெற்று வருகிறது.
இதில் சீனிக்குப்பன் வம்சாவளியைச் சேர்ந்த ஜெரோம் பிபிசியிடம் பேசும்போது, "1910ஆம் ஆண்டு கச்சத்தீவில் எனது முதாதையர்களில் ஒருவரான சீனிக்குப்பன் ஓலைக் குடிசையில் அந்தோணியார் ஆலயம் ஒன்றைக் கட்டினார்."
இதற்குப் பிறகு, "ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணி பிள்ளை அந்த ஆலயத்தை ஓட்டு கட்டடமாகக் கட்டினார். இயற்கைப் பேரிடர்களில் இருந்து தங்களைக் காக்கவும் அதிக அளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் அந்தோணியார் கோவிலில் பிரார்த்தனை செய்வார்கள்.
கச்சத்தீவு பகுதி மீன் பிடிக்க ஏதுவான இடம் என்பதால் அங்கு நாட்டுப் படகு மீனவர்கள் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்தனர். மீனவர்களுக்கு இளைப்பாறுவதற்கான தளமாகவும் கச்சத்தீவு இருந்து வந்தது," என்கிறார்.
மேலும், கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதால் நாட்டுப்படகு மீனவர்களின் உரிமைகள் பறிபோய்விட்டது. ஆனால், கச்சத்தீவை திரும்பப் பெறுவதால் தமிழக மீனவர்களின் பிரச்னை தீருமா என்றால் நிச்சயமாகத் தீராது என்பதுதான் உண்மை என்பதே உண்மை எனவும் தெரிவித்தார் ஜெரோம்.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை -இந்திய சர்வதேச கடல் எல்லை 13 கடல் மைல் தூரத்தில் உள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் இந்திய எல்லையில் இரண்டு கடல் மைல்கள் குறைந்துவிட்டன.
ஜெரோமின் கூற்றுப்படி, கச்சத்தீவு இந்தியாவுக்குக் கிடைத்தால், கூடுதலாக இரண்டு கடல் மைல்கள் கிடைக்குமே தவிர, அது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாக இருக்காது.
ஆனால், "கச்சத்தீவு கிடைத்தால் நாட்டுப் படகு மீனவர்கள் அங்கு தங்கி மீன்பிடித் தொழில் செய்ய முடியும்."
கச்சத்தீவு இந்தியா வசமே இருந்தது என்கிறார் கச்சத்தீவு குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ள வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "கச்சத்தீவில் சோழ அரசர்கள் மற்றும் அவர்களின் படைகள் தங்கி இருந்ததற்கான வரலாறு இருக்கிறது என்கிறார் அவர்.
"மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்தபோது, கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு வழங்கப்பட்டது. மு. கருணாநிதி ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டச் சுவடி வெளியிடப்பட்டபோது, அதில் ராமநாதபுரத்தின் ஓர் அங்கமாக கச்சத்தீவு இருந்தது. இதற்கான ஆதாரம் அப்போதைய மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தது."
கடந்த 1974ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங் நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தாமல் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்துவிட்டதாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ததாகத் தாக்கல் செய்ததாகக் குறிப்பிடுகிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
இதற்கு "அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மூக்கையா தேவர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்போதைய சூழலில் சர்வதேச நீதிமன்றம் மூலம் கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறலாம்," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)