சூரிய கிரகணத்தை பின்தொடர தயாராகும் நாசா விமானங்கள் - 50,000 அடி உயரத்தில் என்ன செய்யும்?

    • எழுதியவர், ஜொனாதன் ஓ'கலெகன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் நிலத்தில் இருந்து பார்ப்பார்கள். ஆனால் ஒரு சில அதிர்ஷ்டசாலி நாசா விமானக் குழுவினர் அதை மிக நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இன்று வட அமெரிக்கா முழுவதும் முழு சூரிய கிரகணம் நிகழும். சுமார் 3.1 கோடி மக்களால் அதை கண்டுகளிக்க முடியும். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவின் பெரும்பகுதியிலும் இதை பார்க்க முடியும். மேலும் இந்த நிகழ்வை கண்டுகளிப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் அங்கு பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இவை அனைத்தும் மோசமான வானிலை காரணமாக நிறைவேறாமல் போகலாம். கடந்த 1999-ஆம் ஆகஸ்ட் மாதம் பிரிட்டனில் நிகழ்ந்த கிரகணத்தை பார்க்க முடியாமல் மேக கூட்டங்கள் மறைத்துவிட்டன என்பது நினைவுகூரத்தக்கது. எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சராசரியாக 375 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் முழு சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான சிறந்த வழி என்ன?

வானத்தில் மேகங்களுக்கு மேலே பறப்பது.

நான்கு நாசா விமானிகள் இதைத்தான் செய்ய இருக்கின்றனர்.

சந்திரனின் நிழலை பின்தொடரும் அமெரிக்க விமானங்கள் - நாசா திட்டம் என்ன?

நாசாவின் இரண்டு பிரத்யேக WB-57 விமானங்களில் மெக்சிகோ கடற்கரையில் இருந்து அக்குழுவினர் பறக்க உள்ளனர். தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வரை கிரகணத்தின் முழுமையான பாதையை அவர்கள் பின்தொடர்வார்கள். சந்திரன் சூரியனைக் கடக்கும்போது ஏழு நிமிடங்கள் அவர்கள் அதன் நிழலில் இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் தரையில் இருந்தால் அவர்கள் நான்கு நிமிடங்கள் மட்டுமே அதன் நிழலில் இருந்திருக்கமுடியும். சுமார் 50,000 அடி (15 கிமீ) உயரத்தில் பல உபகரணங்களுடன் அவர்கள் கிரகணத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வார்கள்.

“இது மிகுந்த உற்சாகம் தருகிறது" என்று இரண்டு விமானங்களில் ஒன்றின் சென்சார் உபகரண ஆபரேட்டரான நாசா விமானி டோனி கேசி கூறுகிறார். "நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இந்தப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கிரகணத்தின் நிழல் உங்களுக்கு முன்னே செல்லும் அந்தத் தருணத்தின் அனுபவத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்," என்றார் அவர்.

விமானத்தில் கேசி இயக்கும் ஒரு கேமரா மற்றும் தொலைநோக்கி அமைப்பு, சூரியனை அகச்சிவப்பு மற்றும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியில் புகைப்படம் எடுக்கும். சூரியன் சந்திரனை சுற்றிச்செல்லும்போது அதன் வளிமண்டலத்தையும் அதன் ஒளிமண்டலத்தையும் ஆராய இது உதவும். சூரியனுக்கு அருகில் உள்ள தூசி வளையம் மற்றும் சிறுகோள்களையும் இது ஆய்வு செய்யும்.

"இரண்டு விமானங்களின் மூக்கிலும் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அது அங்கு ஒரு தொலைநோக்கியை வைக்க உங்களை அனுமதிக்கிறது" என்று கொலராடோவில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் சூரிய இயற்பியலாளர் ரிச் காஸ்பி கூறுகிறார். அவர் கேசி இயக்கும் கருவிகள் மூலம் ஆய்வுகளை நடத்துகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முழு சூரிய கிரகணம் நடந்தபோதும் இதேபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.

“இந்த விலையுயர்ந்த அறிவியல் கேமரா மற்றும் கருவியை நான் பயன்படுத்துவதற்கு முன்பு முழு கிரகண நிலை வந்துவிட்டதா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்,” என்கிறார் டோனி கேசி.

740 கி.மீ வேகத்தில் பறக்கும் விமானங்கள்

கிரகணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு விமானங்களும் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அருகிலிருந்து புறப்பட்டு மெக்சிகோவை நோக்கிச் செல்லும். ஒவ்வொரு விமானமும் கிரகணத்தின் போது ‘சுமார் ஐந்து அல்லது ஆறு மைல்கள் இடைவெளியில்’ இருக்கும். மேலும் மணிக்கு 740 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும்,” என்று கேசி கூறுகிறார்.

இது கிரகண நிழலின் வேகத்தினும் குறைவானது. அது மணிக்கு சுமார் 2,500கி.மீ. வேகத்தில் செல்லும். ஆனால் விமானங்கள் நிழலுடன் சேர்ந்து பயணிக்கும்போது, தரையில் இருப்பதைக்காட்டிலும் அதிக நேரம் ‘முழு இருட்டில்’ இருக்க முடியும்.

"கிரகண நிழலின் வேகத்துடன் எங்களால் நிச்சயமாக போட்டிபோட முடியாது," என்கிறார் கேசி. "எனவே நாங்கள் சரியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே இருக்க விரும்புகிறோம். அது முற்றிலும் மறைக்கப்பட்டவுடன் நாங்கள் அதே பாதையை பின்பற்றி மீண்டும் அமெரிக்க வான்வெளிக்குள் செல்வோம்,” என்றார் அவர்.

ஆராய்ச்சி செய்கையில் கிரகணத்தைப் பார்க்க நேரம் கிடைக்குமா?

விமானங்கள் வானத்தில் நகரும்போது கிரகணம் அவற்றின் வலதுபுறத்தில் இருக்கும். கேசி கேமராவை இயக்கி, சூரியனின் வெவ்வேறு பகுதிகளில் அதை ஜூம் செய்து தரையில் இருக்கும் குழுவுடன் பேசுவார். காட்சிப் புலம் சூரியனின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கும். எனவே அவர் கிரகணத்தின் போது மொத்தக் காட்சியையும் பதிவுசெய்ய சூரியனின் ஒவ்வொரு பக்கத்திற்கும் இடையே கேமராவை நகர்த்துவார். சூரிய தீச்சுடர் போன்ற முக்கியமான அம்சங்களை அவர் பதிவு செய்வார்.

உபகரணங்களை இயக்குவது மிக முக்கியமானது என்றாலும், கிரகணத்தை தனது சொந்தக் கண்களால் பார்க்க தனக்கு நேரம் கிடைக்கும் என்று கேசி நம்புகிறார். “இந்த மிக விலையுயர்ந்த அறிவியல் கேமரா மற்றும் கருவியை நான் பயன்படுத்துவதற்கு முன்பு முழு கிரகண நிலை வந்துவிட்டதா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். "அவசரமாக கிரகணத்தைப் பார்க்க நேரம் இருக்குமே தவிர, கருவிகள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்த நான் திரையையே பார்க்க வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.

இவ்வளவு உயரத்தில் இருப்பதால், வளிமண்டலம் மிக மெல்லியதாக இருக்கும். அதனால் தரையில் இருந்து பார்ப்பதைவிட கிரகணத்தை மிக நன்றாகப் பார்க்கமுடியும். "நீங்கள் மேகங்களுக்கு மேலே இருப்பதால் இது மிகவும் தெளிவாகத் தெரியும்," என்கிறார் கேசி.

தரையில் இருந்து ஆய்வுசெய்வதைவிட மிக அதிக அளவு அறிவியல் ரீதியிலான பலன் இதன்மூலம் கிடைக்கும்.

4,000கி.மீ. பயணிக்கும் திறன் இருப்பதால் கிரகணங்களை ஆய்வு செய்ய WB-57 விமானங்கள் மிகவும் பொருத்தமானவை. அவை காற்றில் அதிக நேரம் -- அதாவது சுமார் 6.5 மணி நேரம் - செலவிட முடியும். ஆனால் அவை கிரகணங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. ராக்கெட் ஏவுதல்களை கவனிப்பது போன்ற பிற ஆராய்ச்சி அல்லது புகைப்படம் எடுக்கும் பணிகளுக்கும் நாசா இந்த விமானங்களை பயன்படுத்துகிறது.

மிகவும் சுவாரசியமான வேலை

கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேசி இந்த விமானத்தில் பறந்து நிலவுக்கு நாசா அனுப்பிய ஆர்ட்டெமிஸ்-1 விண்கலத்தின் ஏவுதலை புகைப்படம் எடுத்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்பேஸ்-X இன் மாபெரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் முதல் ஏவுதலின் படத்தையும் அவர் எடுத்துள்ளார்.

அனைவரும் மிகவும் சுவாரசியமான வேலை என்று கருதும் பணியை கேசி செய்கிறார். ஆனால் அவர் அதுபற்றி அலட்டிக்கொள்வதில்லை. "நான் வடமேற்கு அலபாமாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவன்," என்று அவர் கூறுகிறார்.

"எப்படியோ நான் இந்த நிலைக்கு வந்துவிட்டேன். நான் இந்த தனித்துவமான விமானத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் பறந்து ராக்கெட் ஏவுதல்களை பார்த்தேன். இப்போது கிரகணத்தை பார்க்க இருக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை கூடிய அளவு சிறப்பாக நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன்," என்கிறார் கேசி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)