You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நமது மூளைக்குள் புழுக்கள் எப்படி நுழைகின்றன? தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
- எழுதியவர், விக்டோரியா லின்ட்ரியா
- பதவி, பிபிசி செய்திகள்
அமெரிக்காவில் அடிக்கடி ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்ட 52 வயது நபர் ஒருவரின் மூளையில் நாடாப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
அந்நபரின் வழக்கமான ஒற்றைத் தலைவலி மோசமாகி, வழக்கமான மாத்திரைகள் வேலை செய்யாமல் போனதையடுத்து அவர் மருத்துவ உதவியை நாடினார்.
ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது மூளையில் நாடாப்புழு லார்வாக்களின் (இளம் நாடாப்புழுக்கள்) நீர்க்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது சிஸ்டிசெர்கோசிஸ் எனும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
‘சரியாக கை கழுவாததாலேயே’ இந்த நிலைமை ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சரியாகச் சமைக்கப்படாத பன்றி இறைச்சியை உண்டதால், அந்நபர் நாடாப்புழுக்களால் பாதிக்கப்படதாக மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
சிஸ்டிசெர்கோசிஸ் என்பது ‘பன்றி நாடாப்புழு’ (pork tapeworm) என்றும் அழைக்கப்படும் டேனியா சோலியம் (டி.சோலியம்) என்ற ஒட்டுண்ணியின் லார்வாக்களால் ஏற்படும் ஒரு வகை தொற்று ஆகும். இது மூளையில் நீர்க்கட்டிகள் (cysticerci) உருவாக வழிவகுக்கும்.
பன்றி இறைச்சி உண்டதால் ஏற்பட்டதா?
ஒருவரது உடல் நாடாப்புழுக்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது உடல் தாமாகவே நாடாப்புழு முட்டைகளால் தாக்கப்படும். இது ‘தன்னியக்க தொற்று’ (autoinfection) எனப்படும். இது உடல் கழிவுகள் மூலம் வெளியேறி வீட்டில் உள்ள மற்றவர்களையும் பாதிக்கலாம்.
சரியாகச் சமைக்கப்படாத பன்றி இறைச்சியை உண்பதால் ஒருவருக்கு நேரடியாக சிஸ்டிசெர்கோசிஸ் வராது.
இந்தக் குறிப்பிட்ட நபருக்கு வந்த தொற்றைப் பற்றி ‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸ்’ சஞ்சிகையில் எழுதியிருக்கும் மருத்துவர்கள், ‘சரியாகக் கை கழுவாததால்’ அவருக்கு ஆட்டோ இன்ஃபெக்ஷன் மூலம் சிஸ்டிசெர்கோசிஸ் பரவியிருக்கலாம் என்று ‘ஊகிப்பதாகக்’ கூறியிருக்கின்றனர்.
‘அரைவேக்காடாகச் சமைக்கப்பட்ட பன்றிக்கறியை’ உண்பதில் விருப்பமுடைய’ அந்நபரது ‘உணவுப் பழக்கத்தால்’ அவருக்கு நாடாப்புழு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் ஊகிக்கின்றனர்.
ஒட்டுண்ணி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்ட பின்னர் அந்நபர் முழுவதும் குணமடைந்தார்.
நாடாப்புழுக்கள் எப்படிப் பரவுகின்றன?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (US Centres for Disease Control and Prevention - CDC) தகவலின்படி, நாடாப்புழு லார்வாக்கள் ‘தசை மற்றும் மூளை போன்ற திசுக்களில் நுழைந்து நீர்க்கட்டிகளை உருவாக்குகின்றன. மூளையில் நீர்க்கட்டிகள் கண்டறியப்படும்போது, அது ‘நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்’ (neurocysticercosis) என்று அழைக்கப்படுகிறது’.
‘நாடாப்புழுக்களால் பாதிக்கப்பட்ட ஒருவரது மலத்தில் அதன் முட்டைகள் இருக்கும். அம்முட்டைகள் மற்றொருவரது உடலில் புகுந்தால் சிஸ்டிசர்கோசிஸ் ஏற்படும்,’ CDC கூறுகிறது.
நாடாப்புழு முட்டைகள் ‘மனித மலம் கலந்து அசுத்தமான ‘உணவு, நீர் அல்லது மேற்பரப்புகளின் மூலம்’ பரவுகின்றன.
‘அசுத்தமான உணவை சாப்பிடும்போது அல்லது அசுத்தமான விரல்களை நாம் வாயில் வைக்கும்போது நாடாப்புழு முட்டைகளை விழுங்கக் கூடும்,’ என்கிறது CDC.
மேலும், ‘நாடாப்புழு பாதிப்பு உள்ள ஒருவர் தன்னைத் தானேவோ, அல்லது தனது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களையோ பாதிக்கலாம்’, என்று CDC கூறுகிறது.
எந்தெந்த நாடுகளில் இது பரவலாக உள்ளது?
வேகவைக்கப்படாத பன்றி இறைச்சியை உண்பது சிஸ்டிசெர்கோசிஸை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பன்றி இறைச்சி கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் இது பரவலாக இல்லை என்றும் கூறுகின்றனர்.
தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இந்த நிலை மிக அதிகமாக உள்ளது, மேலும் இது கிராமப்புறங்களில் மிகவும் பொதுவானது. அங்கு பன்றிகள் சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுகின்றன, மேலும் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மோசமாக உள்ளன, என்ய் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சரியாகக் கை கழுவாததாலோ அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதன் மூலமாகவோ இத்தகைய தொற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
ஆனால் நாடாப்புழுவின் பாதிப்புக்கு சிகிச்சை செய்வது எளிதானதே. நாடாப்புழுக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அவற்றை அலட்சியம் செய்வது மிகவும் ஆபத்தானது என்கிறார் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் இரைப்பை நோய் மருத்துவர் டாக்டர் நரேஷ் பன்சல்.
அவரது கருத்துப்படி, உலகம் முழுவதிலும் உள்ள மக்களை நாடாப்புழுக்கள் பாதித்தாலும், இது சுகாதாரத்துடன் தொடர்புடையது என்பதால், இந்த தொற்று இந்தியாவில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
நாடாப்புழு என்றால் என்ன?
நாடாப்புழு என்பது ஒரு வகை ஒட்டுண்ணியாகும். இவை தட்டையாகவும், பார்ப்பதற்கு ரிப்பனைப் போலவும் இருக்கும். ஊட்டச்சத்துக்காக மற்றவர்களை சார்ந்து இருக்கும் உயிரினமான இது, உணவை கிரகிப்பதற்காக நமது உடலுக்குள்ளேயே இருக்கிறது.
உலகில் 5,000க்கும் அதிகமான வகை நாடாப்புழுக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மில்லி மீட்டர் முதல் 15 மீட்டர் நீளம் வரை பல்வேறு அளவுகளில் இவை காணப்படுகின்றன.
நாடாப்புழுக்கள் உடலின் உட்புற பாகங்களுக்குள் சென்று ஒட்டிக் கொள்கின்றன. தனது உடலின் புறத்தோல் மூலம் உணவை எடுத்துக்கொள்கின்றன. இவை நமது உடலில் உள்ள செரிக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்கின்றன. ஏனெனில் நாடாபுழுக்களுக்கு செரிமாண உறுப்புகளோ செரிமானப் பாதையோ கிடையாது.
பொதுவாக நாடாப்புழுக்களால் பெரிய அளவிலான பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் உடலின் மிக முக்கியமான உறுப்புகளுக்கு அவை சென்றுவிட்டால் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
நாடாப்புழு தொற்றின் அறிகுறிகள்
பொதுவாக, நாடாப்புழு உடலில் இருப்பதை கண்டறிய துல்லியமான அறிகுறிகள் என்று எதையும் கூறிவிடமுடியாது. ஆனால் குடலில் உணவு செரிமானம் ஆன பிறகு உருவாகும் கழிவுகள் மலமாக வெளியேறும்போது அதில் நாடாப்புழுக்களும் ஓரளவு வெளியேறும். அதிலிருந்து அவற்றின் இருப்பை அறியலாம்.
இதைத்தவிர, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, பலவீனம், வாந்தி, அடிக்கடி பசி எடுப்பது போன்றவற்றால் நாடாப்புழுக்களின் இருப்பை அறிந்துக் கொள்ளலாம்.
உடலில் உள்ள நாடாப்புழுக்கள், அவற்றின் முட்டைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தால், தலைவலி, தோல் வெளுத்துப்போவது, இருமல், மூச்சுத்திணறல், பார்வைக்கோளாறு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
நாடாப்புழுக்கள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?
நாடாப்புழுக்கள் உடலில் இருப்பது தெரிந்தால், மருந்துகளின் உதவியால் அதனை சரிசெய்யலாம். ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், நாடாப்புழு நம்மை தொற்றாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.
- எந்தவிதமான இறைச்சியாக இருந்தாலும் அதை நன்றாக வேகவைத்து உண்ணவேண்டும்.
- பழங்களை உண்பதற்கு முன்பு நன்றாகக் கழுவவேண்டும்.
- சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை நன்றாக கழுவவும். கழிவறைக்கு சென்று வந்த பிறகு கைகளையும், நகங்களையும் நன்றாக கழுவவும். நகங்களில் பாக்டீரியாக்கள் தங்கியிருக்கலாம்.
- சுத்தமான நீரையே குடிக்கவும்.
- கால்நடைகளுடன் நேரடி தொடர்பை தவிர்க்கவும் அல்லது சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
நாடாப்புழுக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது என்றாலும், அதை அலட்சியம் செய்யக்கூடாது. இது உடலின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம், உடல் உறுப்புகளை முடக்கிவிடலாம் என்று சொல்கிறார் டாக்டர் பன்சல்.
(இக்கட்டுரையில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)