முகலாயப் பேரரசு வரலாறு: அக்பர் உண்மையில் ஜோதா பாயை திருமணம் செய்தாரா?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 58ஆவது கட்டுரை இது. முகலாயர்கள் 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டாலும்கூட, இந்தியாவின் வரலாற்று புத்தகங்களிலும் ஊடகங்களிலும் முகலாயர்கள் பற்றிய சித்தரிப்பில் பல குறைகள் உள்ளன.

சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் முகலாயப் பேரரசர் அக்பரை மையமாக வைத்து இரண்டு பெரிய இந்தி படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

முதலாவது படம் கே.ஆஸிஃப்பின் 'முகல்-இ-ஆஸம்'. இரண்டாவது அஷூதோஷ் கோவாரிகரின் 'ஜோதா அக்பர்'.

அக்பர் மற்றும் அவரது மனைவி ஜோதா பற்றிய கற்பனைக் கதை 'ஜோதா அக்பர்' படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த கதையைப் படமாக்குவதற்கு முன், படத்தின் தயாரிப்பாளர் கோவாரிகர் பல வரலாற்று ஆய்வாளர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.

அக்பருக்கு ஜோதா பாய் என்ற மனைவி இல்லை என்று அனைவரும் ஒரே குரலில் கூறினர். ஆனால் 'ஜோதா அக்பர்' கதையில் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நல்ல பாலிவுட் கதையை படமாக்குவதில் உண்மைகள் தடையாக இருக்கவில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அக்பரின் வாழ்க்கை வரலாறான, "அல்லாஹு அக்பர்: அண்டர்ஸ்டாண்டிங் தி க்ரேட் முகல் இன் டுடேஸ் இந்தியா" என்ற புத்தகத்தில் மணிமுக்த் எஸ். ஷர்மா, "ஜோதா அக்பர்" படத்தில், ஜோதா பாயை ராஜா பார்மலின் மகளாகவும் அக்பரின் ஒரே மனைவியாகவும் சித்தரித்துள்ளனர். ஆனால் உண்மையில், அமேரின் இளவரசி ஹீரா கன்வர் அதாவது ஹர்கா பாய், அக்பரின் நான்காவது மனைவி," என்று குறிப்பிட்டுள்ளார்.

"அக்பர் தனது முதல் மனைவி ருக்கையாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இதற்குக் காரணம் அவர் அக்பரின் பால்ய தோழியும் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார். அந்தஸ்திலும் அவர் அக்பருக்கு நிகரானவர். அவர் திருமணத்தால் முகலாயராக மாறவில்லை, பிறப்பால் முகலாயராக இருந்தார்," என்று ஷர்மா எழுதியுள்ளார்.

அக்பரின் உதவிக்கு கைமாறாக ஹர்காவை திருமணம் செய்து வைத்த பார்மல்

ஹர்கா பாய் அமேரின் மன்னர் பார்மல் கச்வாஹாவின் மகள். அமேர் ஒரு சிறிய ராஜ்ஜியம்.

அமேரின் அரியணை உரிமைக்காக ராஜா பார்மல் தனது சகோதரர் பூரன்மாலுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அவரது அண்டை நாடான ராத்தோர் கரானாவும் இந்த நாட்டின் மீது கண் வைத்திருந்தது. ராஜா பார்மலின் சகோதரர், முகலாய கவர்னர் மிர்சா ஷர்புதீன் ஹுசைனின் ஆதரவைப் பெற்றிருந்தார்.

அக்பரின் மற்றொரு சுயசரிதையான 'அக்பர் தி கிரேட் முகல்: தி டெஃபினிட்டிவ் பயோகிராபி' எழுதிய இரா முகோட்டி, "ராஜா பார்மல் உத்திகளை வகுப்பதில் வல்லவர். அவர் தனது சகோதரனை வெல்வதற்காக அக்பரின் உதவியை நாடி, தனது மகள் ஹர்காவை திருமணம் செய்து கொடுக்கும் யோசனையை முன்வைத்தார். இதற்கு முன்பும் பல முறை ராஜபுத்திர குடும்பங்கள் தங்கள் மகள்களை வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கம்," என்று எழுதுகிறார்.

முன்னதாக, மார்வாரை சேர்ந்த ராவ் மால்தேவ் தனது மகள்களில் ஒருவரை குஜராத்தைச் சேர்ந்த சுல்தான் மஹ்மூத்துக்கும் மற்றொரு மகளை இஸ்லாம் ஷா சூருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அக்பர், ராஜா பார்மலின் செய்தியை ஏற்றுக்கொண்டார். ராஜா பார்மலின் சிறை பிடிக்கப்பட்ட உறவினர்களை விடுவிக்குமாறு தனது கவர்னர் மிர்சா ஷர்புதீன் ஹுசைனுக்கு அறிவுறுத்தினார்.

அக்பர் ஹர்காவை மதம் மாற்றவில்லை

அக்பர் அஜ்மீரிலிருந்து திரும்பும் போது 20 வயது ஹர்கா பாயை, சாம்பர் என்ற இடத்தில் திருமணம் செய்து கொண்டார். அக்பர் அங்கிருந்து ஆக்ரா வரையிலான 200 கிமீ தூரத்தை மூன்றே நாட்களில் கடந்தார்.

ஹர்காவின் சகோதரர் பகவந்த் தாஸ் மற்றும் அவரது சகோதரரின் மகன் மான் சிங் ஆகியோரும் ஹர்கா பாயுடன் ஆக்ராவிற்கு வந்தனர். இந்தத் திருமணத்தின் மூலம் ஹர்கா பாயின் தந்தை தனது நாட்டை திரும்பப் பெற்றார், அவரது எதிரிகளும் பின்வாங்கினர்.

இரா முகோட்டி தனது இரண்டாவது புத்தகமான 'Daughters of the son'-இல், "ஹர்கா, வேலைப்பாடுகள் கொண்ட கணுக்கால் வரையிலான காக்ரா மற்றும் சோளி அணிந்து ஆக்ராவில் இறங்கினார். அவரது தலை மற்றும் தோள்கள், ஒரு பளபளப்பான துப்பாட்டாவால் மூடப்பட்டிருந்தது. ஆனால் அவரது கைகளில் துணி ஏதும் இல்லை," என்று எழுதியுள்ளார்.

அக்பர் ஹர்கா பாய்க்கு 'மரியம்-உஸ்-ஜமானி' என்ற புதிய பெயரை வைத்தார்.

1562ஆம் ஆண்டில், அக்பரின் அந்தப்புரத்தில் நுழைந்த ஹர்கா பாய், தனது பழக்கவழக்கங்கள் மற்றும் மத நம்பிக்கைகள் அனைத்தையும் தன்னுடன் கொண்டு வர அனுமதிக்கப்பட்டார்.

அக்பரின் முஸ்லிம் அல்லாத, மதம் மாறாத முதல் மனைவி இவர்.

அப்துல் காதிர் பதாயுனி தனது 'முந்தகாப்-உத்-தவாரிக்' என்ற புத்தகத்தில் ,"ஹர்காவின் சகோதரரும் பார்மலின் வாரிசுமான பகவந்த் தாஸ் மற்றும் அவரது சகோதரர் மகனான 11 வயது மான் சிங் ஆகியோரும் அக்பரின் அரசவையில் சேர்ந்தனர். ஹர்காவின் மகன் சலீம் மிர்சா, ஹர்காவின் சகோதரரும் மன்னருமான பகவந்த் தாஸின் மகளை மணந்தார். அக்பர் தனது மருமகள் வீட்டில் அனைத்து இந்து சடங்குகளிலும் பங்கேற்றார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

"இளவரசியின் வீட்டிலிருந்து அரண்மனை வரை தங்கக் காசுகளை வழியெங்கும் இரைக்குமாறு பேரரசர் கட்டளையிட்டார். இந்தக் காசுகளைச் சேகரித்து மக்களின் கைகள் வலித்தன," என்றும் அவர் எழுதியுள்ளார்.

ஹர்கா பாய் காரணமாக மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்திய அக்பர்

ஹர்கா பாயின் காரணமாக அக்பர் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினார். கூடவே தனது அரசவையினர் மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் தடை செய்தார்.

அக்பரின் இந்த முடிவால் வருத்தமடைந்த வரலாற்றாசிரியர் பதாயுனி, "அக்பருக்கு இந்துக்களுடன் தொடர்பு இருந்ததால் தான் மாட்டிறைச்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிடுவதைத் தடை செய்தார். தாடி வைத்திருப்பவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளத் தயங்கினார்," என்று எழுதினார்.

"அக்பர் மற்றொரு பழக்கத்தை ஏற்படுத்தினார் - அது வருடத்தில் சில மாதங்கள் இறைச்சி சாப்பிடக்கூடாது என்பது," என்று அவர் மேலும் எழுதுகிறார்.

அக்பர்நாமாவில் அக்பரின் புதிய பழக்கத்தைப் பாராட்டிய அபுல் ஃபசல், "மகாகனம் பொருந்திய மன்னருக்கு இறைச்சி பிடிப்பதில்லை. அதைப் பற்றி அவர் வெளிப்படையாகப் பேசுகிறார். காஸ்கஞ்ச் அருகே உள்ள சோரோனில் இருந்து அவருக்காக பிரத்யேகமாகக் கொண்டுவரப்படும் கங்கை நீரை மட்டுமே குடிக்கிறார். இதற்கு முன்பும் அவரிடம் விரதம் இருக்கும் பழக்கம் இருந்தது. பின்னாளில் படிப்படியாக அதன் எண்ணிக்கையை உயர்த்தினார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்து மத நூல்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை மொழிபெயர்க்க அக்பர் முயன்றார். மகாபாரதத்தை மொழிபெயர்க்கும் பொறுப்பை வேண்டுமென்றே குறுகிய மனப்பான்மை கொண்ட பதாயுனியிடம் ஒப்படைத்தார்.

"அக்பர்நாமாவுக்காக பிஷான் தாஸ் வரைந்த சிறு ஓவியம், ஹமீதா பானு பேகம் தனது மருமகள் ஹர்கா பாய்க்கு அருகில் நாற்காலியில் அமர்ந்திருப்பதை சித்தரிக்கிறது. அந்த ஓவியத்தில் ஹர்கா பாய், சிறு குழந்தை சலீமை தன் கையில் வைத்திருப்பதைக் காண முடிகிறது. தனது மாமியாரை ஒப்பிடும்போது ஹர்கா பாயின் நிறம் குறைவாக இருந்தது. திரை இல்லாமல் முகலாய ராணியை வெளிப்படையாகக் காட்டும் ஒரே ஓவியம் இதுவாக இருக்கலாம்," என்று இரா முகோட்டி எழுதுகிறார்.

வலிமையான உடல் கொண்ட அக்பர்

தனது தந்தையின் முகத்தை விவரிக்கும் ஜஹாங்கீர், அவரது கண்களும் இமைகளும் கருப்பாக இருந்தன என்கிறார். அவர் நடுத்தர உயரம் கொண்டவராகவும் கோதுமை நிறமாகவும் இருந்தார். அவரது உடல் வலிமையானது. அவரது கைகள் நீளமாகவும் மார்பு அகலமாகவும் இருந்தது.

அவரது மூக்கின் இடது பக்கத்தில், பட்டாணியின் பாதியளவுக்கு ஒரு பெரிய மச்சம் இருந்தது. இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அவரது குரல் மிகவும் கனமாக இருந்தது. அது கேட்பதற்கு நன்றாக இருந்தது.

ஜஹாங்கீர் தனது சுயசரிதையான 'துசக்-இ-ஜஹாங்கிரி'யில், "அக்பருக்கு அகன்ற நெற்றி இருந்தது. கண் இமைகள் நீளமாக இருந்தன. மூக்கின் துவாரங்களும் அகலமாக இருந்தன. தாடியை மழித்திருந்தார். ஆனால் சிறிய மீசையுடன் இருந்தார். அவரது தலைமுடி நீளமாக இருக்கும். இடது காலால் சிறிது நொண்டியபடி நடப்பார். அவருக்கு ஒட்டகங்கள், அரேபிய குதிரைகள், புறாக்கள் மற்றும் வேட்டை நாய்கள் மிகவும் பிடிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

"துப்பாக்கியை குறிவைப்பதில் அவருக்கு நிகர் இல்லை. ஹுமாயூன் அவருக்கு யானையைப் பரிசளித்தபோது, ​​யானை மீது சவாரி செய்வதில் அவருக்கு விருப்பம் ஏற்பட்டது. பேரரசர் ஆன பிறகு, அவருக்கு 14 வயதாக இருக்கும் போது, ​​ஒரு 'கம்பீரமான' யானை மீது சவாரி செய்தார்," என்று ஜஹாங்கீர் எழுதுகிறார்.

விதவிதமான உணவுகள்

அக்பருக்கு அற்புதமான நினைவாற்றல் இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே அவர் உணவு உண்பார். அதற்கும் குறிப்பிட்ட நேரம் எதுவும் கிடையாது.

"அக்பரின் அரச சமையல்காரர்கள், அவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்தனர். உணவில் கண்டிப்பாக வறுத்த கோழி, இரண்டு வெங்காயம் மற்றும் மெல்லிய நெருப்பில் நீண்டநேரம் சமைக்கப்பட்ட இறைச்சி, 'ஸ்டஃப்டு' நான், தயிர், எலுமிச்சை மற்றும் 30 வகையான ஊறுகாய், சட்னிகள் இருக்கும்," என்று உணவு வரலாற்றாசிரியர் சல்மா ஹுசைன் எழுதுகிறார்.

"ஒரு சிறப்பு உணவு 'முர்க் ஜமிந்தோஸ்' பறிமாறப்பட்டது. அதில் கோழி, பிசந்த கோதுமை மாவில் சுற்றப்பட்டு நிலத்தடியில் வைத்து சமைக்கப்பட்டது. இஞ்சி, லவங்கப்பட்டை, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ இதில் பயன்படுத்தப்பட்டது," என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அக்பரின் உணவில் சிவப்பு மிளகாய், உருளைக்கிழங்கு, தக்காளி இருக்காது. ஏனென்றால் அப்போது வரை அவை வட இந்தியாவை அடைந்திருக்கவில்லை. இது தவிர கலோஞ்சி, கடுகு, எள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவை அரச சமையலறையில் பயன்படுத்தப்படவில்லை.

"அக்பர் முலாம்பழங்களை மிகவும் விரும்பினார். மேலும் ஆண்டு முழுவதும் அவருக்காக உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் முலாம்பழங்கள் கொண்டு வரப்பட்டன," என்று அபுல் ஃபசல் எழுதுகிறார்.

அக்பர் ஒவ்வொரு நாளும் தனக்காக தயாரிக்கப்பட்ட உணவில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

அக்பருக்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரம் ஜோடி ஆடைகள் தைக்கப்படும். இதில், 120 ஜோடி ஆடைகள் பத்து பத்து எண்ணிக்கையில் கட்டப்பட்டு எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருந்தன.

அக்பர் பெரும்பாலும் தங்கச் சரங்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பட்டு ஆடைகளை அணிந்திருந்தார். அக்பருக்கு முத்து அணிவதிலும் விருப்பம் இருந்தது.

அக்பரின் தரிசனம்

அக்பர் இரவில் மிகவும் குறைவாகவே தூங்கினார். ஒவ்வொரு பிறந்தநாளிலும் தங்கம், ஆடைகள், நெய் மற்றும் இனிப்புகள் என பன்னிரண்டு வகையான பொருட்களால் அவர் எடை தூக்கப்படுவார். பின்னர் இவை அனைத்தும் ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

எஸ்.எம். பர்க் தனது 'அக்பர் தி கிரேட்டஸ்ட் முகல்' என்ற புத்தகத்தில், "ஒவ்வொரு நாள் காலையிலும் அக்பரின் முதல் பொது தரிசனம் இருக்கும். அரண்மனையின் ஜன்னலில் இருந்து அவர் மக்களுக்கு தரிசனம் அளிப்பார். அவரைப் பார்ப்பதற்காக மக்கள் அரண்மனைக்கு வெளியே திரண்டிருப்பார்கள்," என்று எழுதுகிறார்.

"பேரரசரைக் காணும் வரை முகம் கழுவவோ சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்பது ஃபதாபூர் சிக்ரியில் மக்களின் ஒரு பாரம்பரியம். இந்த சடங்கானது, பேரரசர் உயிருடன் இருக்கிறார் என்ற எண்ணத்தை மக்களுக்கு அளித்தது மட்டுமின்றி அவரை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தது. அக்பரின் அரசவை நடைபெறும் போதெல்லாம், மேளம் அடித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு நாளும் விடியும் முன் அக்பர் இசையின் ஒலியுடன் எழுவார். தூங்குவதற்கு முன் அக்பர் தனது நேரத்தை தத்துவவாதிகள், சூஃபிகள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் கழித்தார். ஆயிரக்கணக்கான யானைகள் தன்னிடம் இருந்தபோதும்கூட ​​தன் யானைகள், குதிரைகள், மான்கள், புறாக்கள் ஒவ்வொன்றின் பெயரும் அவருக்கு நினைவில் இருக்கும்.

அக்பரின் அரசவை நெறிமுறை

அக்பரின் திறந்த அரசவை நடைபெறும்போது ​​அங்கிருக்கும் அனைவரும் அவர் முன் தலை தாழ்த்தி வணங்கி, முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்தில் நிற்பார்கள்.

"அரியணைக்கு அருகே வயதுக்கு ஏற்ப இளவரசர்களின் இடம் இருந்தது. ஆனால் அக்பர் அடிக்கடி இளைய இளவரசர்களை தன்னுடன் நிற்க வைத்ததால் இந்த விதி அடிக்கடி உடைக்கப்பட்டது. அரசவையின் போது ​​அக்பர் தனது அருகிலேயே தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகளைக் குவித்து வைத்திருப்பார். அதை அவர் அவ்வப்போது தனது கைகளால் எடுத்து அன்பளிப்பாகக் கொடுப்பார்," என்று எஸ்.எம். பர்க் எழுதுகிறார்.

ஹல்தி காட்டி போருக்குப் பிறகு அக்பருக்கு முன்னால் ராம்பிரசாத் யானையை நிறுத்தியபோது அவர் ​கைநிறைய தங்கக் காசுகளை தனக்குப் பரிசாக அளித்ததாக ஒரு சம்பவத்தை பதாயுனி விவரிக்கிறார்.

"அக்பர் தனது கைகலால் தங்க காசுகளை எடுத்து, என் கையில் 96 தங்க காசுகளை வைத்தார்," என்று பதாயுனி குறிப்பிடுகிறார்.

அக்பருக்கு புறாக்களை பறக்கவிடுவது மிகவும் பிடிக்கும். அவரிடம் 20,000க்கும் மேற்பட்ட புறாக்கள் இருந்தன. அக்பரின் பறவைகள் மீதான அன்பைக் கண்டு, இரான் மற்றும் துரான் ஆட்சியாளர்கள் அவருக்கு புறாக்களை பரிசாக அனுப்பினர். வேட்டையாடுவதும் போலோ விளையாடுவதும் அக்பரின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தது.

"ஜீலம் நதியை நோக்கி விலங்குகளை ஓட்டி வருவதற்காக பல ஆயிரம் பேர் பணிபுரிந்தனர். இந்த செயல் சுமார் ஒரு மாத காலம் நீடிக்கும். இந்த விலங்குகள் சுமார் 10 மைல் வட்டத்தில் வரும்போது, ​அக்பர் அவற்றை வேட்டையாட வெளியே செல்வது வழக்கம். இந்த வேட்டை சுமார் ஐந்து நாட்கள் நீடிக்கும். அக்பர் வேட்டையாடுவதற்கு அம்புகள், வாள்கள், ஈட்டிகள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினார்," என்று அபுல் ஃபஸ்ல் 'ஆயினே-இ-கப்ரி'யில் எழுதுகிறார்.

அக்பரின் கடுங்கோபம்

அக்பர் மிகவும் நட்பு பாவத்துடன் இருந்தாலும், அவருக்கு கோபம் வரும்போது ​​அவரைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. அவரது மூக்கு துவாரம் பெரிதாகி கண்களிலிருந்து நெருப்புப்பொறி பறக்கும். அவர் சிலநேரங்களில் இந்தியில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவார். அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர் அபுல் ஃபசல் வேண்டுமென்றே இவற்றை பதிவில் இருந்து நீக்கவில்லை.

அரசவையில் எந்த விதமான மரியாதைக் குறைவும் கடுமையாக தண்டிக்கப்பட்டது. அக்பருக்கு மரியாதை செலுத்தும் போது குதிரையிலிருந்து இறங்காததற்காக தனது தந்தை ஹுமாயூனின் நெருங்கிய நண்பரான ஷா அப்துல் மாலியை அவர் தண்டித்தார்.

மற்றோர் அரசவை அதிகாரியான லஷ்கர் கான், பகலில் மது அருந்திவிட்டு அரசவைக்கு வந்ததால் கடுமையாக தண்டிக்கப்பட்டார்.

"அக்பர் ஒருமுறை ஆதம் கானை தன் கைகளால் குத்தி, அரண்மனையின் பால்கனியில் இருந்து கீழே தள்ளி சாகடித்தார். அட்கா கானை கொன்றதற்காக ஆதம் கானுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது," என்று அபுல் ஃபசல் எழுதுகிறார்.

"ஒருமுறை அவர் தகவல் தெரிவிக்காமல் சிம்மாசன அறைக்குள் நுழைந்தபோது, ​​​​அங்கு எந்த வேலைக்காரர்களையும் காணவில்லை. தீபந்தம் ஏற்றும் ஒருவர் மட்டும் அங்கே இருந்தார். அவரும் தூங்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைக் கண்டு மிகவும் கோபமடைந்த அக்பர், அவரை மினாரிலிருந்து கீழே தள்ளி மரண தண்டனை அளிக்க உத்தரவிட்டார்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அக்பர் ஒரு சிறப்பு நபரை தன்னிடம் அழைக்க வேண்டியிருக்கும்போது, ​​​​அவர்களுக்காக ஒரு 'கில்லத்'(உடை) அனுப்புவார். அது சில நேரங்களில் நீண்ட கவுன்களாக இருக்கும், சில நேரங்களில் தலைப்பாகைகள், சால்வைகள் அனுப்புவார். ஒருவருக்கு 'கில்லத்' கிடைத்தவுடனே, அந்தநேரம் எந்த இடத்தில் இருந்தாலும் மன்னருக்கு முன் எப்படி தலை வணங்க வேண்டுமோ அப்படி அவர் வணங்க வேண்டும் என்பது அரச கட்டளை," என்று இரா முகோதி எழுதுகிறார்.

"அக்பர் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு தனக்கு நெருக்கமான ஒருவர் மற்றும் குடும்ப உறுப்பினர் இறந்தால் வெளிப்படையாக அழுதார்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

அக்பர் காலத்தில் இருந்த துளசிதாஸ், சூர்தாஸ், தான்சென்

அக்பர் காலத்தில் இந்தியின் தலைசிறந்த கவிஞரான துளசிதாஸ் இருந்தார். அரச சபையுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும், எல்லா வகையான இலக்கிய செயல்பாடுகளும் மதிக்கப்படும் சூழல் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது.

அக்பரின் காலத்தில் மற்றோர் இந்தி கவிஞரான சூர்தாஸும் இருந்தார். அபுல் ஃபசல் தனது படைப்பில் அவரைக் குறிப்பிட்டுள்ளார். அக்பர் இசையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது அரசவையில் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர் தான்சேன்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அவரைப் போன்ற ஓர் இசைக்கலைஞர் இந்தியாவில் பிறக்கவில்லை என்று அபுல் ஃபசல் எழுதுகிறார். தான்சேன் அரசவையில் முதன்முறையாக தனது இசையை வழங்கியபோது, ​​அக்பர் அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார். மால்வாவின் அரசர் பாஸ் பகதூர் ராஜ்ஜியத்தை இழந்தபோது, தான்சேன் அக்பரின் அரசவைக்கு வந்தார்.

அபுல் ஃபசலின் அரசவை இசைக் கலைஞர்களின் பட்டியலில் பாஸ் பகதூர் பெயரும் உள்ளது. அக்பரின் அரசவைக்கு வந்த பிரெஞ்சு பயணி, ஃபாதர் பை டு ஜாரிக், 'காலம் செல்லச் செல்ல, அக்பர் நாத்திகராக மாறுவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார்' என்று எழுதினார்.

ஆட்சிக்காலத்தின்போது அக்பரின் அதிகாரப்பூர்வ பெயர் ஜலாலுதீன் முகமது அக்பர். ஆனால் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் அவர் முகமது என்பதைத் தனது பெயரிலிருந்து நீக்கிவிட்டு, ஜலாலுதீன் அக்பராக மட்டுமே இருந்தார்.

அவரைத் தொடர்ந்து அவரது வாரிசும் மகனுமான ஜஹாங்கீரும் முகமதுவை தனது பெயருக்கு முன்னால் வைத்துக் கொள்ளவில்லை. அவர் தனது பெயரை நூருதீன் ஜஹாங்கீர் என்று வைத்துக்கொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: