You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிங்கப்பூரை விட பெரிய ராட்சத பனிப்பாறையின் நகர்வை 'அழிவின் பாதை' என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்?
- எழுதியவர், ஜோனாதன் ஆமோஸ், எர்வோன் ரிவால்ட், கேட் கேனர்
- பதவி, பிபிசி நியூஸ்
சிங்கப்பூர், பஹ்ரைன் போன்ற 29 நாடுகளைக் காட்டிலும் அதிக பரப்பளவு கொண்ட ராட்சத பனிப்பாறை அன்டார்டிகாவை விட்டு வெளியேறி கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த பாறை நகர்வது ஏன்? இப்போது எங்கே இருக்கிறது? அது நகர்ந்து செல்வதன் விளைவு என்ன?
A23a என அந்த பனிப்பாறை அறியப்படும் 1986இல் அண்டார்டிக்கில் இருந்து பிரிந்தது. அப்போதிருந்து மிகச் சிறிய அளவில் நகர்ந்துகொண்டிருந்த இந்தப் பனிப்பாறை, சமீபத்தில் ஒரு பெரும் இடப்பெயர்வைத் தொடங்கியுள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நிலையான ‘பனித்தீவு’ போல வெட்டெல் கடலின் அடிமட்டத்தில் சிக்கியிருந்தது. சுமார் 350மீட்டர் ஆழமுள்ள அதன் அடிப்பாகம் அதை அந்த இடத்தில் நங்கூரமிட வைத்திருந்தது.
ஆனால், அந்த அடிப்பகுதி 2020ஆம் ஆண்டு வரை சிறிது சிறிதாக உருகியதன் விளைவாக, அந்த பனிப்பாறை மீண்டும் கடல்நீரில் மெல்ல மிதக்கத் தொடங்கியது. பின்னர் காற்றோட்டம், காற்று ஆகியவை அந்தப் பனிப்பாறையை வெப்பமான காற்று மற்றும் நீர் இருக்கும் வடக்கு நோக்கி நகர வைத்தது. இப்போது அண்டார்டிகாவின் மிதக்கும் பனியில் பெருமளவைச் சுமந்து செல்லும் A23a தற்போது அந்தப் பாதையைப் பின்பற்றிப் பயணித்து வருகிறது.
இது அழிவின் பாதை. இன்னும் சில மாதங்களில் இந்தப் பெரும் பனிப்பாறை துண்டுதுண்டாக உடைந்து உருகப் போகிறது.
ஈஃபிள் டவர் உயரத்தைவிட அதிக சுற்றளவு
இன்று, அண்டார்டிக் முனையிலிருந்து வடகிழக்கே சுமார் 700கி.மீ தொலைவில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகிலுள்ள 60வது பேரலல் என்ற பகுதியை ஒட்டிய பாதையில் நகர்ந்து செல்கிறது.
அது சிறிது சிறிதாக சிதைவதற்கான செயல்முறை ஏற்கெனவே தொடங்கிவிட்டதை, செயற்கைக்கோள் படங்களும் அதை நெருக்கமாகக் கண்காணிக்கும் கப்பல்களில் இருந்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அதிலிருந்து தினமும் பெரியளவிலான பனித் துண்டுகள் கடலில் விழுகின்றன.
இப்போதே அப்படி உடைந்து விழுந்த கால்பந்து அளவிலான மற்றும் லாரி அளவிலான பனிக்கட்டிகள் A23a-ஐ சூழ்ந்துள்ளன.
காற்று, கடல்நீரோட்டம், சுழல் ஆகியவை வரவிருக்கும் வாரங்களில் A23a பனிப்பாறையின் போக்கைத் துல்லியமாகத் தீர்மானிக்கும். ஆனால், அதைச் சூழ்ந்திருக்கும் ராட்சத பனிப்பாறைகள், அது தற்போது இருக்கும் இடத்திலிருந்து தோராயமாக, 650கி.மீ தொலைவில் வடகிழக்கே தெற்கு ஜார்ஜியாவை கடக்கும்போதே உருகிவிடும். பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி என்ற பகுதி நிறைய பனிப்பாறைகள் இருக்கும் இடமாகத் தெரிகிறது.
A23aஇன் அளவை முழுமையாகப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கிரையோசாட்-2 (துருவப் பனிக்கட்டிகளின் அடர்த்தி மற்றும் அவற்றில் நிகழும் மாற்றங்களைக் கண்காணிப்பதற்கான ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் திட்டம்) திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்தப் பெரும் பனிப்பாறையின் சுற்றளவை மதிப்பிடுவதற்கு விண்கலத்தில் ரேடார் அல்டிமீட்டரை பயன்படுத்தினர்.
அப்போது அதன் சுற்றளவு சராசரியாக 280மீட்டர் தடிமன் இருப்பதைக் கண்டறிந்தனர். ஒப்பீட்டளவில் பார்த்தால், இது பிரான்சில் உள்ள ஈஃபில் டவரின் (330மீட்டர்) உயரத்தைவிட இதன் சுற்றளவு அதிகம்.
பிரமிக்க வைக்கும் ராட்சத அளவு
இந்த பிரமாண்ட பனிப்பாறையின் 30மீ உயரமான குன்றின் செங்குத்தான பகுதிக்கு அருகே பயணம் செய்தாலும்கூட அதன் மொத்த அளவைப் புரிந்துகொள்வது மிகக் கடினம். அப்படிச் செய்வது பக்கிங்ஹாம் அரண்மனையின் முகப்பில் நின்று லண்டனின் மொத்த பரப்பளவை அளவிடுவதைப் போல் இருக்கும்.
அதன் அளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தாலும், லக்சம்பர்க், பஹ்ரைன், சிங்கப்பூர் உட்பட இவற்றைப் போன்ற சுமார் 29 நாடுகளின் அளவைவிட அது மிகப் பெரியது.
ஆற்றல் மிக்க அலைகள் பெரும் மலையாகத் திகழும் இந்த பனிப்பாறையின் சுவர்களில் மோதுகின்றன. அதன் மகத்தான் குகைகள் மற்றும் வளைவுகளைச் செதுக்குகின்றன.
அந்தப் பனிப்பாறையில் நீரில் மூழ்கியிருக்கும் பகுதியான பரந்த சம தளத்தை, பாறையை அரிப்பதன் மூலம் மேற்புறத்திற்கு அழுத்துகின்றன. இதன் விளைவாக பனிப்பாறையின் அந்தப் பகுதிகள் இடிந்து கடலில் விழுகின்றன.
இந்தச் செயல்முறையில், கடலில் மிதந்து செல்லும் பனிப்பாறையின் சமதளம் மேற்பரப்புக்கு அலைகளால் வலிய மேற்பரப்புக்கு வரவைக்கப்படுகின்றன. இந்தச் செயல்பாட்டில் பாறையின் மேற்பரப்பு விளிம்புகள் உடைந்து விழுகின்றன. இது மட்டுமின்றி வெப்பமான காற்றும் அதன் பங்குக்கு பனிப்பாறையைப் பாதிக்கின்றது.
உருகும் பனியால் விழும் விரிசல்கள் ஏற்படுத்தும் அபாயம்
காற்றிலுள்ள வெப்பத்தின் காரணமாக பனி உருகுதலால் உருவாகும் நீர், பாறையின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்டு, விரிசல்களில் வடிந்து அந்தப் பிளவுகளை இன்னும் ஆழமாகக் கீழே வரை கொண்டு செல்கிறது. இதனாலும் பாறையில் உடைப்பு ஏற்படுகிறது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தப் பேரழிவுக்கான பாதையில் A23aஇல் எஞ்சியிருப்பது வேறு எதுவுமே இல்லை என்ற நிலை வரலாம். A23a பனிப்பாறை, அனைத்து பெரிய பாறைகளையும் போலவே, அது உருகும்போது அந்தப் பனியில் சிக்கியிருக்கும் கனிம தூசுகளைச் சிதறடிக்கும்.
கடல்பரப்பில், இந்தத் தூசு கடல் உணவுச் சங்கிலிக்கான அடித்தளத்தை உருவாக்கும் உயிரினங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக உள்ளது. பிளாங்டன் முதல் பெரிய திமிங்கிலங்கள் வரை, அனைத்தும் இந்தப் பெரும் பனிப்பாறையின் அழிவிலிருந்து பயனடையும்.
இந்தப் பெரும் பனிப்பாறை குறித்து மக்கள் கேட்கும்போதெல்லாம், இதற்குக் காரணம் காலநிலை மாற்றமாகத்தான் இருக்க வேண்டும், இது வெப்பமயமாதலின் விளைவு என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மை மிகவும் சிக்கலானது.
A23a அண்டார்டிகாவின் ஒரு பகுதியிலிருந்து வந்தது. அங்கு நிலைமை இன்னும் குளிராக உள்ளது. அந்த தோற்றப்புள்ளியான, ஃபில்ஷ்னர் பனிப்படலம், பனிப்பாறைகளால் உருவாக்கப்பட்ட மிதக்கும் பனிக்கட்டி ஆகும். அவை அந்த கண்டத்த்திலிருந்த வெட்டல் கடலுக்குள் பாய்ந்தன. அங்கு நீருக்குள் நுழையும்போது பனிப்பாறைகளின் மிதக்கும் பரப்பு மேலே உயர்ந்து ஒன்றாக இணைகின்றன.
இந்தப் பனிப்படலத்தின் முன் விளிம்பில் பெரிய அளவிலான பனிக்கட்டிகள் உதிர்வது ஓர் இயற்கையான செயல்முறை. விஞ்ஞானிகள் இதை “கன்று ஈன்ற” எனக் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு பசு தனது குட்டிகளைப் பெற்றெடுப்பதைப் போல, பனிப்பாறை பனிக்கட்டிகளை உதிர்க்கிறது.
பனிப்பொழிவு மற்றும் பனிப்பாறையைப் பின்னால் இருந்து உருவாக்கும் பனிக்கட்டிகளின் வெளியேற்றம் சமநிலையில் இருந்தால் பனிப்படலம் சமநிலையில் இருக்கும். பனிப்படலத்தின் முன்புறம் வெதுவெதுப்பான நீரால் தாக்கப்பட்டால், அது சமநிலையை இழக்கக்கூடும். ஆனால், இது ஃபில்ஷ்னரில் நடப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
கடந்த காலத்தைப் பற்றிய புரிதல்
எப்படியிருப்பினும், கண்டத்தின் பிற பகுதிகளில் வெப்பமான நிலைமைகள் முழு பனிப்படலத்தின் சரிவைத் தூண்டுவதையும், பெருங்கடல்களின் மட்டத்தை உயர்த்துவதையும் நாம் கண்டுள்ளோம் என்பது வியக்கத்தக்க வகையில் உண்மை.
மேலும், இத்தகைய பனி ராட்சதர்கள் எங்கு, எவ்வளவு அதிகமாக கன்று ஈன்றார்கள் (பனிப்பாறைகளை வெளியேற்றின) என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து, சமநிலை மாறுகிறதா என்பதற்கான ஏதேனுமொரு மாற்றத்தைக் கண்டறிய முயல்கின்றனர்.
அவர்கள் ஆழமான வரலாற்று சூழலையும் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். செயற்கைக்கோள்கள் சுமார் 50 ஆண்டுக்கால அவதானிப்புகளை மட்டுமே அளித்துள்ளன. இதுவொரு ஒரு சிறிய பதிவு மட்டுமே.
நீண்ட முன்னோக்கைப் பெற, ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் பனிப்பாறை ஆலியில் உள்ள கடல் தளத்தில் துளையிட்டனர். அவர்களால் அந்த மண் பகுதியின் கால அளவைக் கணக்கிட்டு, அதில் இருந்த டெட்ரிடஸ் எனப்படும் பனிப்பாறைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் கடலில் கொட்டப்பட்ட கற்களை ஆய்வு செய்ய முடிந்தது.
இந்த ஆய்வு கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய புரிதலை உருவாக்கியது. எடுத்துக்காட்டாக, அந்தப் பகுதி சுமார் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகளின் பெரும் பாய்ச்சலைக் கண்டதாக ஆய்வு முடிவுகள் பரிந்துரைத்தன.
மேற்கு அண்டார்டிகாவின் பல பனிப் படலங்களை உடைத்த, முன்பு நிகழ்ந்த அங்கீகரிக்கப்படாத வெப்பமயமாதல் கட்டத்தின் ஆதாரமாக இது இருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பூமியில் பனிப்பாறைகளின் கடந்த காலச் செயல்பாடுகளை நேரடியாக நிகழ் காலத்தில் தொட்டுணரக்கூடிய பகுதிகள் உள்ளன. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில், 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிலப்பகுதி நீருக்கு அடியில், தென் துருவத்திற்கு மிக நெருக்கமாக இருந்த போது, அவை கடல்தரையில் இழுத்துச் செல்லப்பட்டபோது, பனிக்கட்டிகள் விட்டுச்சென்ற தடயங்களின் மீது இன்று நம்மால் நடக்க முடியும்.
அதோடு, வெட்டெல் கடலின் அடிப்பகுதியில், A23a இதேபோன்ற விஷயங்கள் இருக்கும். இவையும் ஆயிரக்கணக்கில், ஒருவேளை லட்சக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருக்க வாய்ப்புள்ளது.
இறுதியாக “A23a என்றொரு பனிப்பாறை இருந்தது” எனச் சொல்வதற்கான அடையாளமாக அது இருக்கக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)