கண்களே இல்லாத, தங்கநிறமான இந்த அரிய விலங்கு எங்கு தென்பட்டது தெரியுமா?

    • எழுதியவர், டிஃபனி டர்ன்புல்
    • பதவி, பிபிசி செய்திகள், சிட்னி

உலகிலேயே மிக அரிதான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு சிறிய அகழெலி (mole) ஆஸ்திரேலியாவின் மக்கள் புழக்கமில்லாத பாலைவனப் பகுதியில் காணப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

நார்தர்ன் மார்சுபியல் மோல் (northern marsupial mole) என்றும், ‘ககராடுல்’ என்றும் அழைக்கப்படும் இந்தச் சிறிய விலங்கு ஆஸ்திரேலியாவில் செல்வதற்கே கடினமான, தொலைதூரப் பகுதியில் வசிக்கிறது.

இந்த விலங்கு மனிதர்களின் கையளவே இருக்கிறது. இதற்கு கண்களே கிடையாது. இதன் உடல் முழுதும் தங்கநிற ரோமம் உள்ளது. இதற்குச் சிறிய வாலும், துடுப்பு போன்ற கைகளும் உள்ளன.

இது மறைந்து வாழும் தன்மை கொண்டதால், மிக அரிதாகவே தென்படுகிறது. இந்த விலங்கினத்தில் மொத்தம் எத்தனை இருக்கின்றன என்று அதிகாரிகளுக்கே தெரியாது.

கடினமான பாலைவனத்தில் இருப்பதாலும், மறைந்து வாழ்வதாலும், இவ்விலங்கு ஒரு தசாப்தத்தில் வெகு சில தடவைகளே மக்களுக்குத் தென்படுகிறது.

எங்கு தென்பட்டது?

தற்போது இவ்விலங்கு, ஆஸ்திரேலியாவின் பெரும் மணல் பாலைவனம் (கிரேட் சாண்டி டெஸர்ட் - Great Sandy Desert) எனும் பகுதியின் உரிமையாளர்களான கன்யிர்னின்பா, ஜுகுர்பா மர்து பழங்குடி மக்கள் கண்டிருக்கின்றனர். இவர்கள் இந்நிலத்தின் உரிமையாளர்கள். தங்கள் கலாசார அறிவைக்கொண்டு இப்பகுதியைக் கண்காணித்துக்கொள்ளும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாஇவ்ன் பெர்த் நகரிலிருந்து 1,500கி.மீ தொலைவில் இருக்கும் இந்தப் பாலைவனத்தில் இப்பழங்குடியினர் வேலை செய்துகொண்டிருந்த போது இவ்விலங்கினைக் கண்டனர்.

வன உயிரி நிபுணரான காரெத் கேட், இவ்விலங்குகளைப் பார்ப்பது மிக அரிதானதனால், இவற்றின் இருப்பே பல மக்களுக்கு மர்மமாக இருக்கிறது என்றார்.

“இந்த விலங்கைக் கண்ட ஒருவருக்கு இது என்னவென்றே தெரியவில்லை. அவர் இதனை ஒரு கினி பன்றியின் குட்டி என்று நினைத்துவிட்டார்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

பாலைவனத்தின் வினோத விலங்குகள்

நிலத்தில் வளைபறித்து வாழும் இந்த விலங்குகள் மணற்குன்றுகளுக்குள் வசிக்கின்றன. மிகக்குறைவான நேரத்தையே தரையின்மீது செலவிடுகின்றன.

“இவை மணலில் கிட்டத்தட்ட நீந்திச் செல்கின்றன. குழிகள் மற்றும் அகழிகளைத் தோண்டி இவை தங்கள் வளைகளுக்குச் சென்றடைகின்றன,” என்றார் காரெத் கேட்.

இந்த விலங்கைப் பற்றி இதுவரை மிகச் சொற்பமாகவே தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிரது. அதனால்தான் ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக இவ்விலங்கு தென்படுவது ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலைவனத்தில் அதிகளவில் உயிரினங்கள் இல்லை என்று பலரும் நினைக்கின்றனர், என்கிறார் கேட். “ஆனால் பாலைவனங்கள் பல விசித்திரமான விலங்குகளால் நிறைந்துள்ளன,” என்கிறார் அவர்.

உதாரணமாக, பில்பி (bilby) எனப்படும் பெரிட காதுகளுடைய முயல்போன்ற விலங்கு. இது தனது காதுகள் வழியே வெப்பத்தை வெளியிடுகிறது. மற்றொன்று, தார்னி டெவில் (thorny devil) எனப்படும் தோலில் முட்கள் நிறைந்த பல்லியினம். இது தனது மேனி முட்களின் உதவியோடு தண்ணீரை தனது வாய்வரை இழுத்து அருந்துகிறது.

இப்படி, பாலைவனத்தில் வாழும் விலங்குகள் தங்கள் விசித்திர குணங்களின்மூலம் கடினமான சூழ்நிலையில் வாழப் பழகிக்கொண்டன.

“பாலைவனத்தின் உயிரினங்களை வேறு ஓரிடத்தில் பார்த்தால், அவை என்னவென்று ஹெரியாதவர்களுக்கு அவை மிகவும் வினோதமாகத் தெரியும்,” என்கிறார் கேட்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)