தென் ஆப்ரிக்காவை மிரட்டிய நேபாளம் - கைக்கெட்டிய வெற்றியை கடைசிப் பந்தில் நழுவ விட்டது எப்படி?

SA vs NEP

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடப்பு டி20 உலகக் கோப்பையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஜாம்பவான்களை கத்துக்குட்டி அணிகள் மிரட்டி வருகின்றன. அந்த வரிசையில், கிங்ஸ்டனில் நடந்த ஆட்டத்தில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நேபாள அணி கடைசியில் ஒரே ஒரு ரன்னில் தோற்றுப் போனது. கடைசிப் பந்தில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் போனதால் நேபாள ரசிகர்களும், அணியினரும் கண்ணீர்விட்டு அழுதனர்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சகல துறைகளிலும் சிறந்த, நட்சத்திர வீரர்களைக் கொண்ட தென் ஆப்ரிக்க அணியை நேபாளம் திணறடித்தது எப்படி? ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைத்த இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேபாள அணி தோல்வியைத் தழுவியது எப்படி?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தெ. ஆப்ரிக்காவை திணறடித்த நேபாளம்

கிங்ஸ்டன் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதைப் புரிந்து கொண்டு நேபாளம் அணி தொடக்கத்திலேயே சுழற்பந்துவீச்சை கொண்டு வந்தது. பவர்ப்ளேயில் 4வது ஓவரிலேயே டீ காக் 10 ரன்னில் அய்ரீ பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் இந்த தொடரில் அதிகபட்சமாக ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்களை தென் ஆப்ரிக்கா சேர்த்தது.

நேபாள பந்துவீச்சாளர்கள் தவறு செய்வார்கள் என, லென்த் தவறி வீசும் பந்துக்காக தென் ஆப்ரிக்க பேட்டர்கள் காத்திருந்தனர். ஆனால் நேபாள சுழற்பந்துவீச்சாளர்கள் எந்தத் தவறையும் செய்யாமல், லைன் லென்த் மாறாமல் பந்துவீசினர்.

ஐபிஎல் அனுபவம் கொண்ட சந்தீப் லாமிசானே 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இவரது ஓவரில் தென் ஆப்ரிக்க பேட்டர்களால் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது.

தென் ஆப்பிரிக்க பேட்டிங் கவலைக்கிடம்

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்ரிக்காவின் நட்சத்திர பேட்டர்களான கேப்டன் மார்க்ரம் 15 ரன்னில் புர்டல் சுழற்பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மில்லர்(7), கிளாசன்(3) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டெப்ஸ் மட்டுமே 28 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேபாளம் தரப்பில் தீபேந்திர சிங் அய்ரீ 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குஷால் புர்டெல் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்களை வழங்கிய நேபாளம் அணி, அடுத்த 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 58 ரன்களை மட்டுமே கொடுத்தது. 20 ஓவர்களில் 14 ஓவர்களை நேபாள சுழற்பந்துவீச்சாளர்களே வீசியது குறிப்பிடத்தக்கது.

SA vs NEP

பட மூலாதாரம், Getty Images

நேபாளத்தின் நிதானம்

நேபாள அணி குறைந்த இலக்கை நோக்கி நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கியது. புர்டெலுக்கு தொடக்கத்திலேயே ரபாடா கேட்சை நழுவிட்டதால் அந்த வாய்ப்பை நேபாளம் பயன்படுத்தி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் சேர்த்தது. பின்னர் தென் ஆப்ரிக்க அணியும் சுழற்பந்துவீச்சு ஆயுதத்தை பயன்படுத்தத் தொடங்கியதும் நேபாள பேட்டர்களுக்கு தலைவலியாக மாறியது.

ஷம்சி வீசிய 8-வது ஓவரில் புர்டெல்(13), கேப்டன் ரோஹித் படேல்(0) ஆகியோர் விக்கெட்டுகள் வீழ்ந்தன. 3வது விக்கெட்டுக்கு அனில் ஷா, ஆஷிப் ஷேக் இருவரும் சேர்ந்து 50 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

3 ஓவர்களில் திரும்பிய ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷம்சி வீசிய 8-வது ஓவரில் ஆட்டமிழந்த நேபாள வீரர் புர்டெல்

3 ஓவர்களில் திரும்பிய ஆட்டம்

17-வது ஓவர் வரை ஆட்டம் நேபாளத்தின் வசம்தான் இருந்தது. 18 பந்துகளில் நேபாளத்தின் வெற்றிக்கு 18 ரன்களே தேவைப்பட்டன. நேபாளத்தின் கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தன. 18-வது ஓவரில் தான் ஆட்டம் தென் ஆப்ரிக்கா பக்கம் திரும்பியது.

ஷம்சி வீசிய 18-வது ஓவரில் நேபாளத்தின் தீபேந்திர சிங்கும், செட்டிலான பேட்டர் ஆஷிப் ஷேக்(42) ஆட்டமிழந்ததுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. நோர்க்கியா வீசிய 19-வது ஓவரில் குஷால் மல்லா ஒரு ரன்னில் கிளீன் போல்டாகினார். அதே ஓவரில் சோம்பல் கமி சிக்ஸர் விளாச நேபாளத்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டன.

குல்ஷான் ஷா, சோம்பால் இருவரும் களத்தில் இருந்தனர். பார்ட்மேன் வீசிய ஓவரை குல்ஷன் ஷா சந்தித்தார். முதல் இரு பந்துகள் டாட் பாலான நிலையில் 3வது பந்தில் குல்ஷன் பவுண்டரி விளாசினார். 4வது பந்தில் 2 ரன்கள் எடுத்த குல்ஷன் ஷா 5வது பந்தையும், கடைசிப் பந்திலும் ரன் சேர்க்கத் தவறினார்.

கடைசிப் பந்தில் ரன் எடுக்க ஓடிய நிலையில் அவர் ரன்அவுட் செய்யப்பட்டார். இதனால், நேபாள அணி கைக்கெட்டிய வெற்றியை நழுவவிட்டது. வலுவான தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் பந்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய கத்துக்குட்டிய அணியான நேபாளம் கடைசியில் நூலிழையி வெற்றியை நழுவவிட்டது அந்த அணி ரசிகர்களுக்கு பெரும் ஏமாறத்தை அளித்தது. இலக்கை வெற்றிகரமாக துரத்துவதில் அந்த அணிக்கு இருந்த அனுபவமின்மையே இந்த தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்ரிக்க வீரர் ஷம்சி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"போராடியது பெருமையாக இருக்கிறது"

ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேபாள அணியின் கேப்டன் ரோஹித்

நேபாள அணியின் கேப்டன் ரோஹித் கூறுகையில் “நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். குறிப்பாக நாங்கள் பந்துவீசியவிதம் மற்றும் பேட் செய்த விதம் சிறப்பாக இருந்தது. இந்த விக்கெட்டை நேற்று பார்த்த போது சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் தெரிந்தது. அதனால்தான் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினோம்.

வெற்றிக்கு அருகே வந்து தவறிவிட்டோம், எங்களின் போராட்டத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். இதுபோன்று மற்ற ஆட்டங்களும் எங்களுக்கு அமைந்திருந்தால், நாங்கள் உலகிற்கும், ரசிகர்களுக்கும் தெரிந்திருப்போம். ரசிகர்கள் எங்களுக்காக நீண்ட தொலைவு பயணம் செய்து வந்து ஆதரவு அளித்துள்ளது மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.

சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்ரிக்கா

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்ரிக்க அணி டி பிரிவில் 4 போட்டிகளிலும் வென்று, 8 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. வரும் 19ம் தேதி நடக்கும் முதல் சூப்பர்-8 சுற்றில் அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்ரிக்கா. 21ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் மோதும் அணி இன்னும் முடிவாகவில்லை. 23-ம் தேதி நடக்கும் சூப்பர்-8 ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தென் ஆப்ரிக்கா மோதுகிறது.

நேபாளம் அணி 3 போட்டிகளில் 2 தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதையடுத்து, ஒரு புள்ளியுடன் இருக்கிறது. அடுத்த ஒருலீக் ஆட்டத்தில் வென்றாலும் நேபாளம் சூப்பர்-8 சுற்றுக்கு செல்ல முடியாது என்பதால் டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.

SA vs NEP

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் கவலைக்கிடம்

தென் ஆப்ரிக்கா வலிமையானதாக இருந்த போதிலும் நேபாளம் போன்ற சிறிய அணியின் பந்துவீச்சுக்கு நட்சத்திர பேட்டர்கள் திணறியதைப் பார்க்கையில், சூப்பர்-8 சுற்று அந்த அணிக்கு சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர்-8 சுற்றில் முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்க அணியுடன் தென் ஆப்ரிக்க மோதுகிறது.

தென் ஆப்ரிக்கா இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டீ காக்(48 ரன்கள்), கேப்டன் மார்க்ரம்(31 ரன்கள்) ஆகியோர் இதுவரை ஒரு போட்டியில் கூட 30 ரன்களை தாண்டவில்லை.

கிளாசன் (72 ரன்கள்), டேவிட் மில்லர்(101 ரன்கள்), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(73 ரன்கள்) ஆகிய நடுவரிசை பேட்டர்களும் கடந்த 4 போட்டிகளிலும் பெரிதாக ரன்களைச் சேர்க்கவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)