சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம் - இதுவரை நடந்தது என்ன?

குழந்தைக்கு வலது கை அகற்றம் ஏன்?
படக்குறிப்பு, அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையுடன் தாயார் அஜிஸா

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையின் கை அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே இதற்குக் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியிருப்பது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த குழந்தை யார்? அந்த குழந்தைக்கு என்ன பிரச்னை இருந்தது? பெற்றோர் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன? மருத்துவமனை தரப்பில் என்ன கூறப்படுகிறது? தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த முழு விவரங்களைப் பார்க்கலாம்.

குழந்தையின் பெற்றோர் யார்? சொந்த ஊர் எது?

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோர் ராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதி. அந்த குழந்தைக்கு ஒன்றரை வயதே ஆகிறது.

குழந்தை பிறந்த போது எப்படி இருந்தது?

தஸ்தகீர் - அஜிஸா தம்பதிக்கு தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த குழந்தை பிறந்தது. 40 வாரங்களில் பிறப்பதற்குப் பதிலாக 32 வாரங்களிலேயே பிறந்துவிட்டதால், குழந்தையின் எடை மிகக் குறைவாகவே இருந்தது. இதனால், அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

மூன்று மாதங்களில் குழந்தைக்கு உடல் நலக்குறைவு

பிறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் தலை அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. சராசரியாக 37 செ.மீ. இருக்க வேண்டிய தலையின் சுற்றளவு 61 செ.மீ. அளவுக்கு அதிகரித்தது. இதனால் கடந்த ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி அந்தக் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதன் பெற்றோர் சேர்த்தனர்.

ஐந்தாவது மாதத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை

சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் அந்தக் குழந்தை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு, தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற தலையிலிருந்து வயிற்றுக்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டது. தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு பெற்றோர் வீடு திரும்பினர்.

குழந்தைக்கு வலது கை அகற்றம் ஏன்?

ஒன்றரை வயதில் குழந்தைக்கு மீண்டும் என்ன பிரச்னை?

குழந்தைக்குப் பொருத்தப்பட்ட குழாய் கடந்த வாரம் ஆசனவாய் வழியாக வெளியேறிவிட்டது. இதனையடுத்து குழந்தை ஜூன் 29-ம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டன. அன்றிரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழாய் பொருத்தப்பட்டது.

ஜூன் 2-ம் தேதி குழந்தையின் வலது கை அகற்றம்

குழந்தையின் கை கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி, கருஞ்சிவப்பு நிறத்திற்கு மாறியது. பரிசோதனையில், ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்ததால், குழந்தையின் உயிரைக் காக்க வலது கையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

பெற்றோர் முன்வைத்த குற்றச்சாட்டு என்ன?

குழந்தைக்கு வலது கை அகற்றம் ஏன்?
படக்குறிப்பு, குழந்தையின் தாய் அஜிஸா

ஜூன் 29-ம் தேதி அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு மருந்தும் திரவ உணவும் ஏற்றுவதற்காக அதன் வலது கையில் பொருத்தப்பட்ட ஊசியின் காரணமாகவே கை அழுகத் தொடங்கியதாக பெற்றோர் கூறினர். செவிலியர்கள் அலட்சியமாக ஊசியை பொருத்தியதாலேயே இந்த நிலை ஏற்பட்டது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை விளக்கம்

குழந்தை முன்கூட்டியே பிறந்ததால் ரத்தத்தின் திரவ நிலையில் Hyperviscosity என்ற நிலை ஏற்பட்டு, ரத்த ஓட்டம் மெதுவாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். "ஜூலை ஒன்றாம் தேதி குழந்தையின் கை நிறம் மாறியது ஏன் என்பதை அறிய டாப்ளர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது அறியப்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதி அகற்றப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்பதால், அடுத்த நாள் நண்பகல் அறுவை சிகிச்சை மூலம் கை அகற்றப்பட்டது." என்பது அவர்கள் தந்த விளக்கம்.

'ஊசி' குறித்த புகாருக்கு மருத்துவர்கள் பதில் என்ன?

ஜூலை ஒன்றாம் தேதி குழந்தையின் விரல் நுனி கருத்திருப்பது குறித்து மருத்துவமனையின் ரத்தவியல் மருத்துவர் பார்த்து தெரியப்படுத்தியதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஊசியை அகற்றி்ய இரு நாட்களுக்குப் பிறகே இது நடந்ததாகவும் அதற்குப் பிறகு டாப்ளர் ஸ்கேன் செய்யப்பட்டு, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கை அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைக்கு வலது கை அகற்றம் ஏன்?

மருத்துவமனை விளக்கத்தை ஏற்க பெற்றோர் மறுப்பு

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறிய விளக்கத்தை ஏற்க குழந்தையின் தந்தையான தஸ்தகீர் மறுத்துவிட்டார். "குழந்தையின் கையைப் பார்த்து மருத்துவர்கள் கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். அது தவறான தகவல். நாங்கள்தான் குழந்தையின் விரல் நுனி கறுத்துப் போய் தோல் உறிவதைக் கண்டுபிடித்து, மருத்துவர்களிடம் சொன்னோம்" என்று அவர் கூறினார்.

3 மருத்துவர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு

குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டதா என்பதை அறிய உயர்மட்ட மருத்துவர்கள் குழு ஒன்றை அமைக்க அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன் பேரில், ரத்த நாள சிகிச்சைத் துறையின் இயக்குநர், பொது மருத்துவத் துறையிலிருந்து ஒரு இயக்குநர், குழந்தைகளுக்கான குருதித் துறையின் மூத்த மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

விசாரணைக் குழு முன்பாக பெற்றோர் ஆஜர்

தமிழ்நாடு அரசு நியமித்த விசாரணைக் குழு முன்பாக குழந்தையின் பெற்றோர் தஸ்தகீர் - அஜிஸா தம்பதியர் நேற்று ஆஜராயினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தையின் தாய் அஜிஸா, விசாரணையின் போது நடந்தது என்ன என்று விளக்கம் அளித்தார். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மீது மட்டுமின்றி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

குழந்தைக்கு வலது கை அகற்றம் ஏன்?
படக்குறிப்பு, குழந்தையின் தாய் அஜிஸா

அமைச்சர் மீது குழந்தையின் தாய் விமர்சனம்

குறை மாத குழந்தை என்று பலமுறை கூறியதுடன், குழந்தை பல குறைபாடுகளுடனே இருந்ததாக தம்மிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டதாக அஜிஸா குற்றம்சாட்டினார். குழந்தையின் தலை சுற்றளவு 61 செ.மீ. என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு மாறாக, தான் அளந்து பார்த்த போது 53 செ.மீ. தான் இருந்தது என்று கூறிய அவர், யார் அளித்த தகவலின் பேரில் அமைச்சர் அவ்வாறு கூறினார்? என்று கேள்வி எழுப்பினார்.

மருத்துவர்கள் குழு விசாரணை அறிக்கை வெளியீடு

அமைச்சர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. குழந்தையின் பெற்றோர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்கள், துறைசார்ந்த செவிலியர்கள் மற்றும் குழந்தையின் சிகிச்சையில் சம்பந்தப்பட்ட இதரத் துறை மருத்துவர்களும் விசாரிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.

வலது கை அகற்றம் ஏன்? - அறிக்கையில் விளக்கம்

"இரத்தநாள அடைப்பினால் குழந்தையின் கை தசைககள் முற்றிலும் செயலிழந்து விட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வலதுகையை காப்பாற்றுவது கடினம் மற்றும் உடனடியாக அதை அகற்றாவிட்டால் உயிர் பாதிப்பு ஏற்படும் என்பதால் அன்று மாலையே குழந்தை எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, செயலிழந்த கை அகற்றப்பட்டுள்ளது." என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"குழந்தைக்கு மூளையில் நுண்கிருமித் தொற்று"

"CSF திரவம் மற்றும் Shunt Tube நுண்கிருமி ஆராய்ச்சிக்காக ஜூன் 26-ம் தேதியன்று அனுப்பப்பட்டுள்ளது. ஜூன் 28-ம் தேதியன்று CSF திரவத்தில் Pseudomonas எனும் நுண் கிருமி இருப்பது அறிய வந்துள்ளது. இதனால் இந்த குழந்தைக்கு மூளைத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது." என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.

"வலது கையை எடுக்க மூளைத்தொற்றே காரணம்"

"இரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று இரத்த நாளத்தை பாதித்ததால் இந்த குழந்தைக்கு வலது கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு (Arterial Thrombosis) ஏற்பட்டு உயிரை காப்பாற்றும் முயற்சியில் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது." என்று விசாரணைக் குழு அறிக்கை முடிவாகக் கூறுகிறது.

சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரிக்கவில்லை - பெற்றோர்

மருத்துவ அறிக்கையின் முதல் பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளபடி, இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரிக்கவில்லை என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். விசாரணை அறிக்கை வெளியான பிறகு செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் அஜிஸா, "என்னுடன் இருந்த யாரையுமே அவர்கள் விசாரிக்கவில்லை. இந்த விசாரணை அறிக்கையில் உள்ள தகவல்கள் நேர்மாறாக உள்ளன,” என்று குற்றம் சாட்டினார்.

"மூளைத் தொற்று குறித்து எங்களிடம் கூறாதது ஏன்?"

“கடந்த 26ஆம் தேதியன்று இரவு என் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்து, குழந்தையின் தலையிலிருந்து எடுத்த நீரை பரிசோதனைக்காக மறுநாள் அனுப்பியுள்ளார்கள். அதன் பரிசோதனை முடிவுகள் 28ஆம் தேதி வந்துவிட்டது என்றும் அதில் சூடோமோனாஸ் என்ற நுண்கிருமி இருப்பதும் கண்டறியப்பட்டுவிட்டதாக மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், நுண்கிருமி பற்றிய விவரம் 3ஆம் தேதி வரை எங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை," என்று அஜிஸா கூறியுள்ளார்.

குழந்தைக்கு வலது கை அகற்றம் ஏன்?

அலட்சியத்தை மூடி மறைக்க முயற்சி என்று குற்றச்சாட்டு

குழந்தையின் கை பிரச்னையை, தலையில் இருக்கும் பிரச்னையோடு சேர்த்து மூடி மறைக்கப் பார்ப்பதாக அஜிஸா குற்றம்சாட்டினார். 29ஆம் தேதியே தன் குழந்தைக்கு மருத்துவர்கள் போட்ட ஊசியால் கை சிவப்பாகிறது என்று கூறியும் யாரும் கவனிக்கவில்லை என்றும் அதுகுறித்து அன்று தான் கூறியதை அமைச்சர் காதில் வாங்கவே இல்லை என்றும் புகார் கூறினார்.

குழந்தையின் டிஸ்சார்ஜ் அறிக்கையை கேட்போம் - தாய்

“25ஆம் தேதியன்று என் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தது முதல் அங்கிருந்து வெளியேறியது வரையிலான டிஸ்சார்ஜ் சம்மரியையும் விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கை அனைத்தையும் எங்களிடம் தரவேண்டும் என்று மருத்துவமனை டீனிடம் மனு கொடுக்கப் போகிறோம்,” என்று அஜிஸா தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: