வந்தவாசி பஞ்சமி நில சர்ச்சை: 'அரை மணிநேரத்துல மொத்தமா அழிச்சுட்டாங்க' - பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?

வந்தவாசி பஞ்சமி நிலம்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

திருவண்ணாமலையில் தங்கள் முன்னோர்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலத்தில் பயிர் செய்ததற்காக ட்ரோன் மூலம் அவற்றை மாற்று சாதியினர் அழித்ததாக பட்டியல் சாதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உள்ளூர் பட்டியல் சாதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் களத்துக்குச் சென்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் அமைந்துள்ளது அருங்குணம் ஊராட்சி. இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

இந்தப் பகுதியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தபடியாக மாற்று சாதியினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள நிலங்களில் பெருமளவு மாற்று சாதியினர் கைகளில் உள்ளதாக பட்டியல் சாதி மக்கள் கூறுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

7 ஏக்கர் பஞ்சமி நிலம்

கடந்த 1930ஆம் ஆண்டு தனது கொள்ளுத் தாத்தா ஆறுமுகத்துக்குச் சொந்தமாக 7 ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆங்கிலேயர்கள் கொடுத்ததாகக் கூறுகிறார் திலகராஜ்.

நிலமற்ற பட்டியல் சாதி மக்களைப் பொருளாதாரரீதியாக முன்னேற்றுவதற்கு ஆங்கிலேய அரசால் ஒதுக்கப்பட்ட வேளாண் நிலங்கள் டி.சி நிலம் அல்லது பஞ்சமி நிலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நிலங்களை விற்க முடியும். அவ்வாறு விற்பனை செய்வதாக இருந்தால் பட்டியல் சாதி மக்களுக்கே விற்க வேண்டும் எனவும் சட்டங்கள் உள்ளன.

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய திலகராஜ், "கொள்ளுத் தாத்தா ஆறுமுகத்திடம் இருந்து எனது தாத்தா செல்லனின் கைகளுக்கு இந்த நிலம் வந்தது. 1988ஆம் ஆண்டில் மாற்று சாதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு இந்த நிலத்தை செல்லன் விற்றுள்ளார். பிறகு வெவ்வேறு சாதியினரின் கைகளுக்குச் சென்று கடைசியாக கருணாகரன் என்பவரின் பெயருக்கு மாறியுள்ளது" எனக் கூறுகிறார்.

தங்கள் முன்னோருக்கு இப்படியொரு நிலம் இருப்பதை அறிந்த திலகராஜின் அண்ணன் சுகுமார், கடந்த 2018ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த நிலம் தொடர்பான விவரங்களைக் கேட்டுள்ளார்.

"கடந்த 2018ஆம் ஆண்டு கொடுத்த மனுவுக்கு 2020ஆம் ஆண்டு வரை வருவாய்த்துறையிடம் இருந்து பதிலேதும் வரவில்லை. மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தகவல் உரிமை சட்ட ஆணையர் உத்தரவிட்டார்" எனக் கூறுகிறார் சுகுமார்.

தொடர்ந்து பேசிய அவர், "கிராம நிர்வாக அலுவலர் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள் பலரும் ஒரு கட்டத்தில், இங்கு பஞ்சமி நிலமே இல்லை எனக் கூறினர். ஆனால், ஆங்கிலேயர் காலத்து ஆவணங்களைக் காட்டிய பிறகு அவர்கள் எதுவும் பேசவில்லை" என்கிறார்.

மனு மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்ததற்காக சுகுமாருக்கு பத்தாயிரம் ரூபாயை வருவாய்த்துறை நிர்வாகம் இழப்பீடாக வழங்குமாறு தகவல் உரிமைச் சட்ட ஆணையர் உத்தரவிட்டார்.

"மிகுந்த போராட்டத்துக்குப் பிறகுதான் நிலம் தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. அதில் தற்போது வரை எனது தாத்தா செல்லனின் பெயரில் நிலம் உள்ளது.ஆனால், ஆன்லைன் பட்டாவில் கருணாகரன் என்பவரின் பெயரை கூட்டுப் பட்டாவாக இணைத்துள்ளனர்" எனக் கூறுகிறார் திலகராஜ்.

வருவாய் கோட்டாட்சியர் எடுத்த நடவடிக்கை

வந்தவாசி பஞ்சமி நிலம்
படக்குறிப்பு, திலகராஜ்

இதன்பிறகு செய்யாறு வருவாய் கோட்டாட்சியரிடம் அவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். தங்கள் பெயரில் நிலம் எதுவும் இல்லாததால் தாத்தாவின் பெயரில் உள்ள ஏழு ஏக்கர் பஞ்சமி நிலத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த செய்யாறு வருவாய் கோட்டாட்சியர்கள் அனைவருமே இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் பல்லவி வர்மா ஆய்வு நடத்தி விதிமீறல் நடந்துள்ளதை உறுதி செய்தார். இதையடுத்து, பட்டாவில் இருந்த கருணாகரனின் பெயரை நீக்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தைக் கடந்த செப்டம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவான தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையில் எடுத்தது. நிலத்தை செல்லனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

"தாத்தாவின் சொத்தை நிலமற்ற எங்களின் பெயரில் மாற்றித் தருமாறு கோரிக்கை வைத்தோம். அதிகாரிகளிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை" எனக் கூறுகிறார் திலகராஜ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக திலகராஜின் அண்ணன் சுகுமார் குடும்பத்தினர் ஏழு ஏக்கர் நிலத்தில் உள்ள சுமார் 5 ஏக்கர் நிலத்தில் உளுந்து, எள் ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளனர்.

ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிப்பு

வந்தவாசி பஞ்சமி நிலம்
படக்குறிப்பு, சுகுமார்

"இதை ஏற்காத கருணாகரன் குடும்பத்தினர் பிப்ரவரி 8ஆம் தேதியில் இருந்தே எங்களுடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். 'இது எங்கள் நிலம், விவசாயம் செய்யக்கூடாது' என்று மிரட்டினர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனக் கூறுகிறார் திலகராஜ்.

பிப்ரவரி 11ஆம் தேதியன்று காலை சுமார் 11 மணியளவில் கருணாகரனின் மனைவி ஹர்ஷவர்த்தினி மற்றும் அவருடன் சிலர் வந்ததாகக் கூறிய திலகராஜ், "அவர்களுடன் வந்த ஒருவர் எங்கள் பயிர்களின் மீது ட்ரோன் மூலமாக மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். செடிகளை அழிக்குமாறு அவர்களிடம் ஹர்ஷவர்த்தினி கூறினார். அதைத் தடுக்க முயன்றும் என்னால் முடியவில்லை" என்றார்.

"அவர்கள் கால் மணிநேரத்தில் மருந்து அடித்து முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டனர். அடுத்த அரை மணிநேரத்தில் எள் செடியும் பனிப் பயிர்களும் (Red Gram) வதங்கத் தொடங்கிவிட்டன. இரவும் பகலும் கஷ்டப்பட்டு பயிர்களை வளர்த்தோம். என் கண்முன்னால் எல்லாம் போய்விட்டது," என்று கூறிக் கலங்கினார் திலகராஜ்.

இதுதொடர்பாக, தெள்ளார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். "ட்ரோன் மூலமாக பயிர்களை அழிப்பதாக வந்தவாசி டி.எஸ்.பி கங்காதரனிடம் செல்போன் மூலமாகக் கூறினோம். அவர் தெள்ளார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் போலீசார் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை" என்றார் திலகராஜின் அண்ணன் சுகுமார்.

வேங்கைவயல் போலத் தங்கள் மீதே புகார் மாறிவிடக் கூடாது என்பதற்காக ட்ரோன் மூலமாகப் பயிர்களை அழிப்பதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் என ஐம்பதாயிரம் செலவு செய்து விவசாயம் செய்தோம். உளுந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. ஒரு வாரம் இருந்திருந்தால் 2 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைத்திருக்கும். அனைத்தையும் நாசம் செய்துவிட்டனர்," எனக் கூறும் சுகுமார், "வழக்கறிஞராக இருக்கும் தனக்கே இதுதான் நிலைமை" என்றும் வருத்தம் தெரிவித்தார்.

காவல்துறை சொல்வது என்ன?

வந்தவாசி பஞ்சமி நிலம்

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுக்கிறார், தெள்ளார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்த 35 ஆண்டுகளாக அந்த நிலத்தை வெவ்வேறு சாதியினர் பயன்படுத்தி வந்துள்ளனர். பஞ்சமி நிலத்தை மாற்று சமூகத்தினர் வைத்திருக்கக் கூடாது. இதில் விதிகள் மீறப்பட்டதால் நிலத்தை அனாதீனமாக அரசு மாற்றிவிட்டது" எனக் கூறுகிறார்.

அரசு உத்தரவுக்கு எதிராக கருணாகரன் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறும் சத்யா, "அனாதீன (புறம்போக்கு) நிலமாக மாறிவிட்டதால் யாருக்கும் அங்கு விவசாயம் செய்வதற்கு உரிமை இல்லை. இரு தரப்பும் போகக்கூடாது எனக் கூறியுள்ளோம். ஆனால் சுகுமார் அதில் விவசாயம் செய்தார்" என்கிறார்.

"வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உத்தரவைப் பெறுமாறு சுகுமார் தரப்பிடம் கூறியுள்ளோம். இது தேவையற்ற பிரச்னையாக மாறும் என்பதால் சுகுமார் கொடுத்த புகாரைப் பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளோம்" என்றார் சத்யா.

இதுதொடர்பாக, வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரனை சந்தித்துப் பேசுவதற்கு பிபிசி தமிழ் சென்றது. "வெளியூர் சென்றிருப்பதால் அவரைச் சந்திக்க இயலாது" என அங்கிருந்த காவலர்கள் தெரிவித்தனர்.

மாற்று சாதியினர் சொல்வது என்ன?

வந்தவாசி பஞ்சமி நிலம்

பயிர்களை அழித்தது தொடர்பாக, கருணாகரனின் குடும்பத்தினரிடம் விளக்கம் பெறுவதற்கு அவர்களின் வீட்டிற்கு பிபிசி தமிழ் சென்றது. ஆனால், அவர்கள் அங்கு இல்லை. கருணாகரனின் மனைவி ஹர்ஷவர்த்தினியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"அலுவலக கூட்டத்தில் இருப்பதால் தற்போது இதைப் பற்றி எதுவும் பேச முடியாது" என்று மட்டும் பதில் அளித்தார். அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கேள்விகளை அனுப்பி விளக்கம் கேட்டும் பதில் வரவில்லை.

அதேநேரம், 2022ஆம் ஆண்டில் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் நடத்திய விசாரணையின்போது கருணாகரன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், "நான் நிலத்தைக் கிரயம் செய்வதற்கு முன்பு பல்வேறு மாற்று சாதியினர் அதை அனுபவித்து அவர்களின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளனர். அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளேன். நிலத்தின் சட்டப்படியான உரிமையாளர் நான்தான். இந்தப் புகார் மனு அடிப்படை ஆதாரமற்றது; சட்டவிரோதமானது" என்று அவர் கூறியுள்ளார்.

நல்லூர் கார்ப்பரேஷன் வங்கி (தற்போது யூனியன் வங்கி) கிளையில் நிலத்தை அடமானம் வைத்துப் பணம் பெற்றுள்ளதாகவும் விசாரணையில் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

'உரிமை கோர முடியாது' - தாசில்தார்

வந்தவாசி பஞ்சமி நிலம்

பஞ்சமி நிலம் தொடர்பான சர்ச்சைக்கு வருவாய்த்துறையின் பதிலை அறிய, வந்தவாசி தாசில்தார் பொன்னுசாமியை நேரில் சந்தித்துப் பேசினோம்.

"டி.சி (பஞ்சமி) நிலத்தில் விதிமீறல்கள் நடந்ததால் அதை நத்தம் அனாதீனம் (புறம்போக்கு) என மாற்றிவிட்டோம். இந்த நிலத்துக்கு செல்லனின் வாரிசுகள் உரிமை கோர முடியாது. அதே கிராமத்தில் உள்ள நிலமற்ற பட்டியல் சாதி மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்" எனக் கூறினார்.

ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட நிலங்களைக் காலப்போக்கில் வறுமையின் காரணமாக பட்டியல் சாதி அல்லாத மக்களுக்கு சிலர் விற்றுள்ளதாகக் கூறும் பொன்னுசாமி, "விற்றவர்களின் வாரிசுகளுக்கு நிலத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை" எனக் கூறுகிறார்.

"இந்த நில பிரச்னையில், இரு தரப்பும் உரிமை கொண்டாட முடியாது. அங்கு சுகுமார் தரப்பினர் விவசாயம் செய்தது தவறு. அதை கருணாகரனின் மனைவி அழித்ததும் தவறு. இரு தரப்பிலும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்கிறார் பொன்னுசாமி. விரைவில் இரு தரப்பையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் பொன்னுசாமி தெரிவித்தார்.

பஞ்சமி நிலங்களை மீட்பதில் சிக்கலா?

வந்தவாசி பஞ்சமி நிலம்
படக்குறிப்பு, யாசர் அராபத்

ஆனால், இங்கே இது ஒரு நிலம் தொடர்பான பிரச்னையாக மட்டும் தெரியவில்லை.

அருங்குணம் கிராமத்தில் மட்டும் சுமார் 100 ஏக்கருக்கு மேல் பஞ்சமி நிலம் உள்ளதாகவும் இதை மீட்பதில் பல்வேறு சவால்கள் உள்ளதாகவும் கூறுகிறார் திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் யாசர் அராபத்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வந்தவாசியில் சுமார் எட்டாயிரம் ஏக்கருக்கு மேல் பஞ்சமி நிலம் உள்ளது. அருங்குணம் கிராமத்தில் மட்டும் 100 ஏக்கர் வரை இருக்கிறது. நிலத்தைப் போராடி மீட்டாலும் பயன்படுத்த முடிவதில்லை" எனக் கூறுகிறார்.

பஞ்சமி நிலங்களை மீட்பதில் வருவாய்த்துறையும் காவல்துறையும் போதிய அக்கறை காட்டுவதில்லை எனக் கூறும் யாசர் அராபத், "பஞ்சமி நிலம், அதன் உண்மையான பயனாளிகளுக்குச் சேர வேண்டும். அதற்கு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

களைக்கொல்லி தெளிப்பு - கண்டறிவது எப்படி?

வந்தவாசி பஞ்சமி நிலம்
படக்குறிப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் சுவாமிநாதன்

"ட்ரோன் மூலமாக களைக்கொல்லி தெளிக்கும்போது சில மணிநேரத்தில் செடிகள் பட்டுப் போவதற்கு வாய்ப்புள்ளதா?" என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் சுவாமிநாதனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"நல்ல பயிர்களில் களைகளை அகற்றுவதற்கு களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவது வழக்கம். எந்தப் பயிராக இருந்தாலும் களைக் கொல்லியின் மூலம் முழுதாக அழிக்க முடியும். சில வகையான களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் சில மணிநேரத்தில் செடி வாடத் தொடங்கிவிடும்" எனக் கூறுகிறார்.

அதோடு, "இதைத் தவறாகப் பயன்படுத்தியதைக் கண்டறிய பட்டுப்போன செடியை ஆய்வுக்கு உட்படுத்தலாம். அப்போது எந்த வகையான ரசாயனத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வரும்" என்றும் சுவாமிநாதன் விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)