1,906 பேரில் 1,827 பெயர்கள் நீக்கம்: எஸ்ஐஆர் பற்றி மாஞ்சோலை கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மாஞ்சோலை, வரைவு வாக்காளர் பட்டியல், தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், Manjolai Selvakumar

படக்குறிப்பு, மாஞ்சோலையில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகள்
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) முடிந்து, கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.

அந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டன. அதில் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த 1,827 பேரும் அடங்குவர்.

மாஞ்சோலையில் வாக்குரிமை பெற்றிருந்த 1906 வாக்காளர்களில் 1813 வாக்காளர்கள் வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்து விட்டதால், மீதமுள்ள 93 நபர்கள் மட்டுமே வாக்காளர்களாக பதிவேற்றம் செய்திட இயலும் என்று திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், அதை விடக் குறைவாக 79 பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மாஞ்சோலையில், வாடியா குழுமத்திற்குச் சொந்தமான 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்' (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வந்த தேயிலைத் தோட்டம் கடந்த ஆண்டு மூடப்பட்டு, அங்கிருக்கும் தொழிலாளர்களை நிர்வாகம் வெளியேறச் சொல்லியது.

அதன் பிறகு, "சில குடும்பங்கள் மாஞ்சோலையை விட்டு வெளியேறிவிட்டாலும், இன்னும் பல குடும்பங்கள் அங்கே வாழ்வதாகவும் தங்களது வீடுகள், உடமைகள் இன்னும் அங்கேயே உள்ளன" என்றும் மாஞ்சோலையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

தங்களுக்கு மீண்டும் மாஞ்சோலையில் வாக்களிக்கும் உரிமை வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மாஞ்சோலையில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் அனைத்தும் முறையாகவே நடத்தப்பட்டன என்றும், பலமுறை நேரடியாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட அளவிலான மக்கள் அங்கு வசிக்கவில்லை என்பதை உறுதி செய்த பிறகே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறுகிறார்.

மாஞ்சோலையில் என்ன நிலை?

மாஞ்சோலை, வரைவு வாக்காளர் பட்டியல், தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், Manjolai Selvakumar

படக்குறிப்பு, மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் (கோப்புப் படம்)

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தத் தோட்டம் அமைந்திருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்த பி.பி.டி.சி.எல், இப்பகுதியில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியது.

அந்த குத்தகை வரும் 2028-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, கடந்த 2024இல் தேயிலைத் தோட்டப்பணிகளை நிறுத்தி அங்கே உள்ள பணியாளர்களை வெளியேறுமாறு அறிவித்தது பி.பி.டி.சி.எல் நிறுவனம்.

இதில் பணியாற்றிவந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்பவர்களுக்கு அவர்களது வயதைப் பொறுத்து, ஒன்றே முக்கால் லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும் என்றும், 2024, ஜூன் 14-ஆம் தேதி கடைசி வேலை நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசின் டான்டீ நிர்வாகம் (தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம்) ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, மாஞ்சோலை தொழிலாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024, டிசம்பரில் தள்ளுபடி செய்தது.

இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கடந்த வருடம், தேயிலைத் தோட்டம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, மாஞ்சோலையில் வசித்து வந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் தொடங்கினர். அங்கு இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையம், கடைகள் மூடப்பட்டன.

இருப்பினும் 93 பேர் இன்னும் அங்கே வசிப்பதாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. அதேசமயம், பிபிசியிடம் பேசிய மாஞ்சோலையைச் சேர்ந்தவர்கள், இன்னும் பல குடும்பங்கள் அங்கு வசிப்பதாகக் கூறுகின்றனர்.

மாஞ்சோலை, வரைவு வாக்காளர் பட்டியல், தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, மாஞ்சோலையைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரி

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்ததாக கூறும் அமுதா, "மாஞ்சோலையில் எங்களுக்கு எஸ்ஐஆர் படிவம் வழங்கப்பட்டு, அதை முறையாக நாங்கள் பூர்த்தி செய்து கொடுத்தோம். பிறகு எப்படி நாங்கள் மாஞ்சோலையில் வசிக்கவில்லை என்று கூறி, எங்களது பெயர்களை நீக்கினார்கள் எனப் புரியவில்லை" எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டம் மூடப்பட்ட பிறகு, எங்களுக்கு வருமானம் நின்று போனது. நிறுவனம் வழங்கிய இழப்பீட்டுத் தொகையை வைத்து சில மாதங்களே குடும்பம் நடத்த முடிந்தது. அதன் பிறகு கூலி வேலைக்காக மலையை விட்டு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது."

"அப்படியிருந்தும் நாங்கள் முழுவதுமாக காலி செய்து விடவில்லை, வார இறுதி நாட்களில் மாஞ்சோலைக்கு திரும்பி வருகிறோம். இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் வேலைக்கு செல்லும் நாட்களில் வந்து கணக்கெடுத்துவிட்டு, 93 பேர் மட்டுமே வாழ்கின்றனர் என்றால் என்ன நியாயம்?" என்கிறார் அமுதா.

இதையே வலியுறுத்தும் மாஞ்சோலையைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரி, "நான் முப்பது வருடங்களுக்கும் மேலாக தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்தேன். இங்கு என் வீட்டு வாசலில் வந்து தான் எஸ்ஐஆர் படிவம் கொடுத்தார்கள். அப்படியிருக்க எனக்கு மாஞ்சோலையில் வாக்குரிமை இல்லை என்கிறார்கள்."

"எங்கள் ஆதார் அட்டை முதல் அனைத்து ஆவணங்களிலும் மாஞ்சோலை முகவரி தான் உள்ளது. பிழைப்புக்காக வாரத்தில் சில நாட்கள் வெளியூர் செல்கிறோம். அவ்வளவு தான். இது தான் எனது சொந்த ஊர், எங்களை இங்கு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்" என்றார்.

மாஞ்சோலையில் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்

மாஞ்சோலை, வரைவு வாக்காளர் பட்டியல், தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், Manjolai Selvakumar

படக்குறிப்பு, மாஞ்சோலையில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகள்

"மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் மொத்தமுள்ள 1906 வாக்காளர்களில் 1182 வாக்காளர்களிடமிருந்து (எஸ்ஐஆர்) கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. ஆனால் இது தொடர்பாக, அரசியல் கட்சிகளிடமிருந்து புகார் வந்ததால் மாஞ்சோலையில் ஆய்வு செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது" என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை கூறுகிறது.

கடந்த டிசம்பர் 2ஆம் தேதி எஸ்ஐஆர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், "மாஞ்சோலையில் அதிகாரிகள் மேற்கொண்ட கள ஆய்வில், மொத்தம் 93 வாக்காளர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கு குடியிருந்து வருவது கண்டறியப்பட்டது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இப்பகுதியில் வாக்குரிமை பெற்றிருந்த 1,906 வாக்காளர்களில் 1,813 வாக்காளர்கள் குடிபெயர்ந்து விட்டதால், அவர்கள் இங்கு வாக்களிக்க தகுதியற்றவர் ஆவர். மீதமுள்ள 93 பேர் மட்டுமே வாக்காளர்களாக பதிவேற்றம் செய்திட இயலும்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக இப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாலும், அவர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாலும், மேற்குறிப்பிட்டுள்ள 1,813 வாக்காளர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே படிவம் 6 கொடுத்து வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், டிசம்பர் 19-ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் வசிக்கும் 79 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

அதேபோல, மாஞ்சோலையில் முன்பு ஐந்து வாக்குச்சாவடிகள் இருந்தன. இவற்றில் மாஞ்சோலை மேற்கு (சாவடி எண். 98), காக்காச்சி மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்களுக்கான ஒருங்கிணைந்த வாக்குச் சாவடி (சாவடி எண். 99), நாலுமுக்கு கிழக்கு (சாவடி எண். 100), ஊத்து (சாவடி எண். 101) மற்றும் குதிரைவெட்டி (சாவடி எண். 102) ஆகியவை அடங்கும்.

இந்த ஐந்து வாக்குச் சாவடிகள், மாஞ்சோலை (106), நாலுமுக்கு (107) மற்றும் ஊத்து (108) என மூன்றாகக் குறைக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"மக்கள் கூலி வேலைக்கு சென்ற சமயத்தில் வந்து ஆய்வு செய்துவிட்டு, நாங்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டோம் எனக்கூறுவது என்ன நியாயம்?" என்கிறார் மாஞ்சோலையின் ஊத்து எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவரும், அப்பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதியுமான ஸ்டாலின்.

"கவுன்சிலரான எனக்கே இங்கே வாக்குரிமை இல்லை எனக் கூறிவிட்டார்கள். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளை சந்தித்துப் பேசினோம். முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு கடிதமும் அனுப்பி விட்டோம். எந்த பதிலும் இல்லை" என்கிறார் அவர்.

"சொந்த ஊரை விட்டு, சென்னை போன்ற நகரங்களுக்கு வேலைக்காக செல்கிறார்கள் என்றால், அதன் அர்த்தம் நிரந்தரமாக குடிபெயர்வதா? நாங்கள் மாஞ்சோலையை சொந்த ஊராக நினைத்து தான் வேறிடங்களில் பணிபுரிந்து வருகிறோம். அதுவும் கூலி வேலை தான். மாஞ்சோலை என்ற ஊரே இருக்கக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் இதைச் செய்கிறது" எனக் கூறினார் ஸ்டாலின்.

மாஞ்சோலை மக்களின் கோரிக்கை

"மாஞ்சோலை மக்கள் அங்கேயே தங்க வேண்டும் எனக் கேட்கவில்லை. வேறு இடம் இல்லாததால், இருக்கும் இடத்தை கைவிட பயப்படுகிறார்கள். இல்லையென்றால், வேலை வாய்ப்புகள், அடிப்படை வசதிகள் இல்லாத மலையில் வசிக்க அவர்கள் ஏன் ஆசைப்படப் போகிறார்கள்" என்கிறார் மாஞ்சோலையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார்.

தொடர்ந்து பேசிய அவர், "இங்கிருக்கும் மக்கள் தங்களுக்கு ஒரே இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்கள். மாஞ்சோலையை விட்டால் இப்போதைக்கு இவர்களுக்கு வேறு முகவரி இல்லை. சிலருக்கு மட்டுமே வீடுகள் கிடைத்துள்ளன."

"இவர்களில் பெரும்பாலோர் கூலி வேலை செய்வதால், நகரங்களில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசிக்க முடியவில்லை. சிறிய அறைகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கி வேலை பார்க்கின்றனர். விடுமுறை நாட்களில் மாஞ்சோலைக்கு திரும்புகின்றனர். அப்படியிருக்க இங்கும் வாக்குரிமை இல்லையென்றால், இவர்கள் எந்த முகவரியிலிருந்து படிவம் 6-ஐ கொடுப்பார்கள்." என கேள்வி எழுப்புகிறார்.

மாஞ்சோலை, வரைவு வாக்காளர் பட்டியல், தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், Manjolai Selvakumar

படக்குறிப்பு, மாஞ்சோலை தொழிலாளர்கள் (கோப்புப் படம்)

மாவட்ட ஆட்சியர் கூறுவது என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார், "மாஞ்சோலை மற்ற பகுதிகளை போல அல்ல. தேயிலைத் தோட்டம் மூடப்பட்ட பிறகு, அங்கு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏதும் இல்லை. எனவே பலர் வேலைக்காக வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். இதை நானே கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்தேன்." என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாஞ்சோலையைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்டவர்களுக்கு திருநெல்வேலியின் ரெட்டியார்பட்டியிலும், 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தெற்கு பாப்பான்குளம் பகுதியிலும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சிலருக்கு வீடுகளை ஒதுக்க உள்ளோம். சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டனர். எனவே, அவர்கள் எங்கு வசிக்கிறார்களோ அங்கே படிவம் 6 கொடுத்தால், இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்." என்கிறார்.

"மற்றபடி மாஞ்சோலையில் தொடர்ந்து வசிக்கும் 79 பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிலரது பெயர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் மாஞ்சோலை முகவரியில் படிவம் 6 கொடுக்கலாம்." என்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு