நிதிஷ் குமார் 105 நாட்களில் முதல்வர் பதவியை விட்டு விலகுவது ஏன்? - 4 கேள்விகள்

முதல்வர் நிதிஷ்-துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, முதல்வர் நிதிஷ் குமாருடன்.
    • எழுதியவர், பிரேர்ணா
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'25 முதல் 30 வரை மீண்டும் நிதிஷ்' - இந்த முழக்கத்துடன், பிகாரில் 2025 சட்டசபை தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொண்டது.

இந்தக் கூட்டணி பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

கடந்த இருபது ஆண்டுகளாக பிகார் அரசியலின் மையமாக விளங்கும் நிதிஷ் குமார், பதவியேற்று 105 நாட்களே ஆன நிலையில், தற்போது ராஜ்ய சபாவிற்குச் செல்லத் தயாராகி வருகிறார்.

அவரது இந்த முடிவு பலரை, குறிப்பாக அவரது கட்சித் தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வளவு பெரிய முடிவு திடீரென்று எப்படி, ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து அவரது கட்சித் தொண்டர்களிடையே கோபம், அதிருப்தி மற்றும் ஆழ்ந்த குழப்பம் நிலவுகிறது.

நிதிஷ் குமாரின் சமூக ஊடகப் பதிவின்படி, அவர் தானாக முன்வந்து ராஜ்ய சபா உறுப்பினராக விரும்புகிறார். ஆனால் கட்சித் தொண்டர்களுக்கு இதை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.

நிதிஷ் குமார் ராஜ்யசபாவுக்குச் செல்லும் செய்தி வெளியான பிறகு தனது ஹோலி பண்டிகை மகிழ்ச்சி மறைந்துவிட்டதாக பாகல்புரைச் சேர்ந்த ஒரு தொண்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த முடிவு நிதிஷ் குமாருடையது அல்ல. அவர் ஒரு முடிவை எடுத்திருந்தாலும், ஹோலிக்கு பிறகு, கட்சித் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே அதைச் செய்திருப்பார். நேற்று இரவு செய்தியைப் பார்த்தவுடன், காலையிலேயே பாட்னாவிற்கு விரைந்து வந்தேன். இப்படி ஒன்று நடக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை" என்றார்.

மார்ச் 4-ஆம் தேதி இரவு தொலைக்காட்சி சேனல்களில் நிதிஷ் குமார் ராஜ்யசபாவுக்குச் செல்லும் செய்தியைக் கேட்ட பிறகு, மார்ச் 5 -ஆம் தேதி காலையில் ஐக்கிய ஜனதா தள அலுவலகத்திற்கு வந்த தொண்டர் அவர் மட்டுமல்ல.

மார்ச் 5-ஆம் தேதி காலை முதல் நூற்றுக்கணக்கான ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் கட்சி அலுவலகம் மற்றும் ஏக் அனே மார்க்கில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வெளியே குவியத் தொடங்கினர்.

முதல்வர் இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட சூழ்நிலையால் கூடுதல் போலீஸ் படையை நிறுத்த வேண்டியிருந்தது, தொண்டர்கள் அங்கு நிற்கவும் தடை விதிக்கப்பட்டது.

ஆத்திரமடைந்த சில தொண்டர்கள் ஐக்கிய ஜனதா தள அலுவலகத்தை சூறையாடினர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதிஷ் குமாரின் வாகனங்கள் ராஜ்யசபா வேட்புமனுத் தாக்கலுக்காக முதல்வர் இல்லத்திலிருந்து வெளியேறியபோது, வெளியே இருந்த கட்சித் தொண்டர்கள் "அமித் ஷா மற்றும் லல்லன் சிங் ஒழிக" என்று முழக்கமிட்டனர்.

மற்றவர்கள், "எங்கள் வாக்கு, உங்கள் ஆட்சி நடக்காது, நடக்காது" என்றும் முழக்கமிட்டனர்.

நாங்கள் பேசிய பெரும்பாலான கட்சித் தொண்டர்கள், நிதிஷ் குமாரின் ராஜ்யசபா வேட்புமனு அவரது சொந்தக் கட்சிக்குள் இருக்கும் "சில நபர்களால்" செய்யப்படும் செயல் என குற்றம் சாட்டினர்.

இருப்பினும், நிதிஷ் குமார் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெறுவார் என்று சிலர் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

அப்படியானால், நிதிஷ் குமார் எடுத்துள்ள முடிவின் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் என்ன என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

அவர் உண்மையிலேயே அழுத்தத்தில் உள்ளாரா?

பிகாரின் அடுத்த முதல்வர் யார்? அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார்?

நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் அரசியலில் நுழைகிறார் எனச் சொல்லப்படும் கருத்துக்களில் எவ்வளவு உண்மை உள்ளது?

மேலும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் எதிர்காலம் என்ன?

 நிதிஷ் குமார் தனது மாநிலங்களவை வேட்புமனுவை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கிறார்.

பட மூலாதாரம், ani

அதிர்ச்சியளிக்கும் முடிவா?

பிகாரின் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சந்தோஷ் சிங், நிதிஷ் குமாரின் இந்த முடிவை ஆச்சரியமான ஒன்றாகக் கருதவில்லை.

1973 முதல் பத்திரிகைத் துறையில் இருந்து வரும் மூத்த பத்திரிகையாளர் லவ் குமார் மிஷ்ராவும் அவ்வாறே கருதுகிறார்.

அவர்கள் இருவரின் கூற்றுப்படி, நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகி ராஜ்யசபாவிற்குச் செல்வது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான்.

சந்தோஷ் சிங்கின் கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட தேதியிலிருந்து, 'சார் விலகப் போகிறார்' என்ற செய்தி முதல்வர் இல்லத்தில் பரவத் தொடங்கியது.

நிதிஷ் குமாரின் இந்த முடிவின் பின்னணியில் இருந்த காரணங்கள் என்ன?

இதற்கான சில முக்கிய காரணங்களை சந்தோஷ் சிங் பட்டியலிடுகிறார்.

முதலாவதாக, ராஜ்யசபா காலியிடங்கள் தோராயமாக ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஏற்படுகின்றன, எனவே நிதிஷ் குமார் இந்த காலியிடத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவதாக, அவரது உடல்நிலை நலிவடைந்து வந்தது. முன்பு போல இப்போது அவரால் முடிவுகளை எடுக்க முடியவில்லை.

மூன்றாவதாக, அவருக்குப் பின் பதவியேற்கப் போகும் போட்டியில் கட்சியின் தேசியச் செயலாளரும் முன்னாள் அதிகாரியுமான மனிஷ் வர்மாவின் பெயர் வெளிவரத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நிதிஷ்குமார் மகன் நிஷாந்த் குமாரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவது குறித்த விவாதங்கள் எழுந்தன. இருப்பினும், நிஷாந்த் டெல்லிக்குச் செல்ல மறுத்துவிட்டார். இதன் விளைவாக, லல்லன் சிங், சஞ்சய் ஜா மற்றும் விஜய் செளத்ரி போன்ற தலைவர்கள், அவர் ராஜ்யசபாவிற்குள் நுழைய இதுவே சரியான நேரம் என்று நிதிஷ் குமாரை ஒப்புக்கொள்ள வைத்தனர்.

நிதிஷ் குமாருக்கு அடுத்த கட்ட ஐக்கிய ஜனதா தள தலைமை, பா.ஜ.க-வுடன் மிகவும் சுமுகமான உறவைக் கொண்டுள்ளது என்பதையும் சந்தோஷ் சிங் சுட்டிக்காட்டுகிறார்.

அவர் கூறுகையில், "சஞ்சய் ஜா பா.ஜ.க-வில் இருந்தவர். லல்லன் சிங் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். நிதிஷ் குமார் தானாக முடிவெடுக்கும் நிலையில் இல்லை. எனவே இது அவரது சுதந்திரமான முடிவு என்று கூறுவது சரியாக இருக்காது," என்கிறார்.

அடுத்த முதல்வர் அவரது ஒப்புதலுடன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நிதிஷ் குமாரிடம் கூறப்பட்டுள்ளது என லவ் குமார் மிஷ்ரா கூறுகிறார்.

மேலும், பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் முதல்வரானால், இரண்டு துணை முதல்வர்கள் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனக் கூறுகிறார் சந்தோஷ் சிங்.

 நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த்

அடுத்த முதல்வர் யார்?

அப்படியானால் நிதிஷ் குமாருக்குப் பிறகு பிகார் முதல்வர் பதவியை யார் ஏற்பார்கள்?

லவ் குமார் மிஷ்ரா மற்றும் சந்தோஷ் சிங் ஆகிய இருவரும் சாம்ராட் சௌத்ரியை ஒரு வலுவான போட்டியாளராகக் கருதுகின்றனர்.

"முதல்வர் நிதிஷ் குமார் சாம்ராட் சௌத்ரியையே விரும்புகிறார். சாதி சமன்பாடுகளைக் கருத்தில் கொண்டால், அவர் ஒரு பாதுகாப்பான தேர்வு. பிகாரில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினரில், யாதவர்கள் மற்றும் கோயரி-குர்மிகள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். கோயரி-குர்மிகள் நிதிஷ் குமாரின் முக்கிய வாக்காளர்களாக இருந்து வருகின்றனர். அவர்களை உடனடியாகப் பகைத்துக் கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே, கோயரி சாதியைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரி முதல்வராக நியமிக்கப்பட்டால், துணை முதல்வர் குர்மி மற்றும் உயர் சாதியைச் சேர்ந்தவராக இருப்பார்" என்கிறார் சந்தோஷ் சிங்.

ஆனால், அதிர்ச்சியூட்டும் முடிவுகளை எடுப்பதில் பா.ஜ.க பெயர் பெற்றது என்ற உண்மையையும் அவர் புறக்கணிக்கவில்லை.

நித்யானந்த் ராய், விஜய் சின்ஹா, திலீப் ஜெய்ஸ்வால், சஞ்சீவ் சௌராசியா, பிரமோத் சந்திரவன்ஷி, ராம்கிருபால் யாதவ், ஜனக் ராம் போன்றவர்களின் பெயர்களும் முதல்வர் பதவிக்கான போட்டியில் அடிபடுகின்றன. மேலும் நிஷாந்த் குமார் துணை முதல்வராக வருவார் என்ற பேச்சும் நிலவுகிறது.

நிதீஷ்குமார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிதீஷ்குமார் தனது ஒரே மகன் நிஷாந்துடன்

நிஷாந்த் அரசியலுக்கு வருகிறாரா?

இப்போதைக்கு நிஷாந்தின் அரசியல் வருகை சில காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லவ் மிஷ்ரா தெரிவித்தார்.

"நிஷாந்த் இப்போது அரசியலுக்கு கொண்டு வரப்பட்டால், நிதிஷ் குமார் மீதும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்படும். எனவே, அவருக்கு உடனடியாக எந்த அரசியல் பொறுப்பும் வழங்கப்படாது" என்றார்.

ஆனால் ஐக்கிய ஜனதா தள கட்சி பிழைத்திருக்க, நிஷாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று சந்தோஷ் சிங் கருதுகிறார்.

மேலும், தேர்தல் அரசியலில் ஐக்கிய ஜனதா தளம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், நிஷாந்த் முன்னுக்கு வர வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.

நிஷாந்த் குமார் நிதிஷ் குமாரின் ஒரே மகன்.

பெரும்பாலும் பொது மற்றும் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகியுள்ள அவர், ஒரு பொறியியல் பட்டதாரி.

நிஷாந்த் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை, அதேபோல் எந்தக் கட்சிப் பதவியையும் வகிக்கவில்லை.

இருப்பினும், அவர் அரசியலில் நுழைவது குறித்த ஊகங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும், அவர் நிதிஷ் குமாருடன் பல சந்தர்ப்பங்களில் தோன்றினார் மற்றும் ஊடகங்களுடனும் கலந்துரையாடினார்.

ஆனால் இதுவரை அவர் நேரடியாக எந்த அரசியல் பங்கையும் வகிக்கவில்லை.

எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஐக்கிய ஜனதா தள கட்சியின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, 2030-ஆம் ஆண்டு வரை கட்சிக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று சந்தோஷ் சிங் கூறுகிறார்.

மேலும், நிஷாந்த் தீவிர அரசியலில் நுழைந்து, ஐந்து ஆண்டுகளுக்குள் தன்னை ஒரு முதிர்ந்த தலைவராக நிலைநிறுத்திக் கொண்டால், 2030 ஆம் ஆண்டுக்குப் பிறகும் ஐக்கிய ஜனதா தளம் பிகாரில் அரசியல் சக்தியாக நீடிக்கும் என்கிறார் அவர்,

இருப்பினும், அவர் அரசியலில் நுழையவில்லை என்றால், கட்சியின் எதிர்காலம் சவாலானதாக இருக்கும் என்று சந்தோஷ் சிங் குறிப்பிட்டார்.

ராஜ்யசபாவுக்கு நிதிஷ் குமார் செல்வது, பிகார் அரசியலில் அவரது நீண்ட பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறியாகப் பலர் பார்க்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு