கும்பகோணத்தில் விற்கப்பட்ட காண்டாமிருக கொம்பு - நாடகமாடிப் பிடித்த வனத்துறையின் சிறப்புக் குழு

காண்டாமிருகம், தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

'காண்டாமிருக கொம்புகள் விற்பனைக்கு' — சமீபத்தில் ஆலைன்லைனில் வெளியான இந்த விளம்பரம், தமிழ்நாட்டில் காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"வனத்துறை வரலாற்றில் தமிழ்நாட்டில் காண்டாமிருகக் கொம்பினை விற்க முயல்வதாக ஒருவர் கைது செய்யப்படுவது எங்களுக்குத் தெரிந்து இதுவே முதல்முறை," என்கிறார், திருச்சி மண்டல உதவி வனப் பாதுகாவலர் சாந்தவர்மன்.

இந்திய கடற்படையில் லெப்டினென்ட் கர்னல் ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர், தன்னிடம் உள்ள காண்டாமிருகக் கொம்பினை விற்பதாக இணையதளத்தில் விளம்பரம் கொடுத்திருந்தார். அவருடன் சேர்த்து 5 பேர், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் மட்டுமே காண்டாமிருகங்கள் வசிக்கும் சூழலில், கும்பகோணத்துக்கு அதன் கொம்பு வந்தது எப்படி? இந்தக் குழு பிடிபட்டது எப்படி?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கும்பகோணத்துக்கு எப்படி வந்தது?

மகாராஷ்ட்ரா கடற்படையில் லெப்டினென்ட் கர்னல் ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரிடம்தான் காண்டாமிருகக் கொம்பு இருந்துள்ளது.

கடந்த 1982ஆம் ஆண்டு தான் மகாராஷ்ட்ராவில் பணிபுரிந்தபோது, நண்பர் ஒருவரின் நிதி உதவியில் அந்தக் கொம்பினை வாங்கியதாக வனத்துறையின் விசாரணையில் கலியபெருமாள் தெரிவித்தார்.

இதற்காக மகாராஷ்ட்ராவின் அப்போதைய முதன்மை வனப்பாதுகாவலர் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படும் சான்றிதழ் ஒன்றையும் அவர் கையில் வைத்திருந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார், கும்பகோணம் வன அலுவலர் பொன்னுசாமி.

கலியபெருமாள் கொடுத்த ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, கொம்பினை விலைபேசி வாங்குவது போன்ற ஒரு நாடகத்தை வனத்துறை அரங்கேற்றியது. இதற்கான பேச்சுவார்த்தையில் வனத்துறையின் சிறப்புக் குழு ஈடுபட்டது. பேச்சுவார்த்தையில் சிலர் இடைத்தரகர்களாகவும் செயல்பட்டுள்ளனர்.

தங்களின் வேலைக்கு ஏற்ப 2 முதல் 5 லட்சம் வரையில் கமிஷன் வேண்டும் என்று பேரம் பேசியதையும் வனத்துறையின் சிறப்புக் குழுவினர் ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார் பொன்னுசாமி.

வனத்துறை நடத்திய நாடகம்

காண்டாமிருகம், தமிழ்நாடு

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, கும்பகோணத்தில் பிடிபட்ட கும்பல்

"மிக அரிதான ஒரு விலங்கின் கொம்பினை இவர்கள் உண்மையிலேயே வைத்திருக்கிறார்களா அல்லது 'சதுரங்க வேட்டை' பாணியில் ஏமாற்றும் கும்பலா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எங்களின் நடவடிக்கையில் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டோம்," என்கிறார் பொன்னுசாமி.

ஒரு கட்டத்தில் பேரம் படிந்ததும் தங்களிடம் உள்ள காண்டாமிருகத்தின் கொம்பினை நேரில் காட்டுவதற்கு முன்வந்துள்ளனர் அந்த நபர்கள். கடந்த வாரம் இந்தக் கும்பலை வனத்துறையின் சிறப்புக் குழு நேரில் சந்தித்தது. அப்போது ஒரு சூட்கேஸில் 500 கிராமுக்கும் சற்று அதிக எடையுள்ள காண்டாமிருகக் கொம்பும், அதற்கு உரிமை கோரும் ஆவணங்களும் இருந்ததாகக் கூறுகிறார் பொன்னுசாமி.

"இது தற்போது கடத்தப்பட்ட கொம்பு இல்லை. சிலர், தங்கள் மூதாதையர்கள் வேட்டையாடிய விலங்குகளின் உறுப்புகளுக்கு உரிய அனுமதியைப் பெற்று வைத்திருப்பது வழக்கம். அதைப் பாரம்பரியமாக வைத்துக் கொள்ளலாமே தவிர, யாருக்கும் விற்கக்கூடாது. கும்பகோணத்தில் பிடிபட்ட கொம்பும் இப்படிப்பட்ட வகையைச் சேர்ந்ததுதான்," என்கிறார் திருச்சி உதவி வனப்பாதுகாவலர் சாந்தவர்மன்.

இந்திய விலங்குகளின் உறுப்புகள் பெரும்பாலும் சீனாவுக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது வழக்கம். அப்படிக் கடத்திப் பணம் சம்பாதிக்கவே இந்தக் கும்பல் முயன்றதாக பிபிசி தமிழிடம் சாந்தவர்மன் குறிப்பிட்டார்.

காண்டாமிருகம், தமிழ்நாடு

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, பிடிபட்ட காண்டாமிருகக் கொம்பு

7 ஆண்டு சிறைத்தண்டனை

"காண்டாமிருகக் கொம்பினை விற்பனை செய்ய முயன்ற கும்பலில் மூன்று பேர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள். கலியபெருமாள் திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்தவர். மற்றொரு நபர் திருவாரூரைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டனர்."

“நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972இன் படி 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்," என்கிறார் வன அலுவலர் பொன்னுசாமி.

"காட்டுயிர் வேட்டைக்காரர்கள் அதிகம் குறிவைக்கும் அச்சுறுத்தல் கொண்ட ஓர் உயிரினமாக காண்டாமிருகம் உள்ளது. இந்தியாவில், அசாமின் காசிரங்காவில் மட்டுமே இவை உள்ளன. நேபாளம், பூடான் ஆகிய பகுதிகளில் இதை வேட்டையாடுவதற்கு குழுக்கள் வருகின்றன,” என்கிறார் அவர்.

மேலும் பேசிய அவர், “காசிரங்காவுக்கு 2016ஆம் ஆண்டு நாங்கள் பயிற்சிக்காகச் சென்றபோது ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அங்கு காண்டாமிருகங்களை வேட்டையாட வரும் நபர்களில் ஆண்டுக்கு சுமார் 20 பேர் வரை ‘என்கவுண்டர்’ செய்யப்படுவதாக அங்குள்ள வன அதிகாரிகள் தெரிவித்தனர்,” என்கிறார்.

“அங்கு துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான அதிகாரம், வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது." காண்டாமிருக வேட்டைக் கும்பல்களால் அங்குள்ள வன அதிகாரிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறுகிறார் வன அலுவலர் பொன்னுசாமி.

காண்டாமிருக வேட்டை தொடர்வது ஏன்?

காண்டாமிருகம், தமிழ்நாடு
படக்குறிப்பு, கும்பகோணம் வன அலுவலர் பொன்னுசாமி

பண்டைய சீன மருத்துவத்தில் பாலுணர்வைப் பெருக்கும் மருந்து (aphrodisiac) தயாரிக்க காண்டாமிருகக் கொம்புகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகின்றனர்.

ஆனால், மருத்துவரீதியாக இது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறும் பொன்னுசாமி, "காண்டாமிருகக் கொம்பில் நமது நகத்தில் உள்ள புரதமான கெரட்டின் (keratin) தான் உள்ளது. அதில் தனிப்பட்டச் சிறப்பு என எதுவும் இல்லை. ஆனால், ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவில் இந்த மருந்தை விளம்பரம் செய்து சம்பாதிக்கின்றனர். அதுவே காண்டாமிருகங்களை வேட்டையாடவும் காரணமாக உள்ளது," என்கிறார் பொன்னுசாமி.

உலக காட்டுயிர் நிதியத்தின் (WWF) இணையதளம், பண்டைய சீன மருத்துவத்தில் காய்ச்சலைக் குறைப்பது, மூக்கில் ரத்தம் வடிவதைத் தடுப்பது, பக்கவாதத்தைத் தடுப்பது போன்றவற்றுக்கு காண்டாமிருகக் கொம்புகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது.

மிக அரிதான உயிரினமாகப் பார்க்கப்படும் காண்டாமிருகங்கள், சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதாகவும், தற்போது உலகம் முழுவதும் 14,000 காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளதாகவும் உலக காட்டுயிர் நிதியத்தின் இணையதளம் கூறுகிறது.

கடத்தல் கும்பலின் பின்னணி என்ன?

இந்த வழக்கைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் பிபிசி தமிழிடம் வன அலுவலர் பொன்னுசாமி பகிர்ந்து கொண்டார்.

"கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் இரண்டு பேர் வயதில் மிகவும் மூத்தவர்கள். ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியின் வயது 80. பணி ஓய்வு பெற்றபோது கிடைத்த சுமார் 80 லட்ச ரூபாய் பணத்தை வட்டிக்குக் கொடுத்து ஏமாந்துவிட்டார். பணம் இல்லாததால், தன்னிடம் உள்ள காண்டாமிருகக் கொம்பினை விற்றுப் பணம் சம்பாதிக்க நினைத்துள்ளார்."

"இந்த விளம்பரத்தைப் பார்த்த 76 வயதான காஜாமைதீன், திருவாரூரில் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்தார். தனது சொத்துகளை இழந்து கடனாளியாகிவிட்டதால், எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கொம்பினை விற்றுத் தருவதாகக் கூறி, கலியபெருமாளுடன் இணைந்துள்ளார். அவர் கூறிய தகவலை, அவரின் குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டனர்," என்கிறார் பொன்னுசாமி.

இந்த வழக்கில் கைதான தென்னரசு என்ற சித்த மருத்துவர், பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மண்ணுளிப் பாம்பு உள்படப் பல பொருட்களை ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் விற்பதற்காகத் தேடி அலைந்துள்ளார்.

ஆனால், எந்த இடத்திலும் தான் பேரம் பேசிய பணம் கிடைக்கவில்லை எனவும், இறுதியில் காண்டாமிருகக் கொம்பினை விற்றுக் கொடுத்தால் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையில் வந்து வலையில் சிக்கிவிட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாக வன அலுவலர் பொன்னுசாமி தெரிவித்தார்.

காண்டாமிருக வேட்டைச் சம்பவங்கள்

காண்டாமிருகம், தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அசாம் மாநிலத்தின் கசிரங்கா தேசியப் பூங்காவில் மட்டுமே இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன

அசாமில் 2,895 காண்டாமிருகங்கள் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972இன் படி பட்டியல் 1-இல் அரிதான விலங்காக இது பட்டியலிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் ஒரு காண்டாமிருகம்கூட கொல்லப்படவில்லை எனவும், அதற்கு முன்னதாக 1977ஆம் ஆண்டுதான் ஒரு காண்டாமிருகம் கூடக் கொல்லப்படாத ஆண்டாக இருந்ததாகவும் அசாம் சிறப்பு டி.ஜி.பி., ஜி.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இந்தத் தரவுகளின் மூலமே, காண்டாமிருகங்கள் எந்த அளவுக்கு வேட்டைக்காரர்களின் அச்சுறுத்தல் சூழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 191 காண்டாமிருகங்கள் வேட்டைக் குற்றங்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஜி.பி.சிங் முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022ஆம் ஆண்டு காண்டாமிருக வேட்டையில் ஈடுபட்டதாக 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் போலீஸ் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாகவும் ஜி.பி.சிங் தெரிவித்துள்ளார்.

காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு அதிக விலை கிடைப்பதாலேயே வேட்டையில் சிலர் ஈடுபடுவதாகவும் அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், காசிரங்கா தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்புள்ள பெண் காண்டாமிருகம் கொல்லப்பட்டுள்ளது. இறந்துபோன காண்டாமிருகத்தின் கொம்பு கிடைக்கவில்லை என காசிரங்கா தேசியப் பூங்காவின் இயக்குநர் சோனாலி கோஷ் தெரிவித்திருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)