ஆமதாபாத் விமான விபத்தின் சொல்லப்படாத சோகங்கள் - மருத்துவ விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு நேர்ந்தது என்ன?

    • எழுதியவர், ராக்ஸி காகாடேகர் சாஹரா
    • பதவி, பிபிசி குஜராத்தி

ஆமதாபாத்தின் மெகானிநகரில் உள்ள காவல்துறை ஐஜி குவார்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள விடுதி வளாகத்தில் நடைபெற்ற பெருந்துயரான ஏர் இந்தியா விமான விபத்தின் பின்விளைவுகளை பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் உணர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள்.

இந்த பேரிடர், உணவுக் கூடம், அதுல்யம் 3 மற்றும் 4 ஆகிய விடுதிகள் உட்பட பல கட்டடங்களை அழித்தது. இதில் நான்கு மருத்துவர்கள் உயிரிழந்ததுடன், அங்கிருந்த மேலும் பலர் காயமடைந்தனர். சிலர் இந்த சம்பவத்தால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் சுமார் 2.7 கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகளை இழந்ததாகவோ அல்லது திருடப்பட்டதாகவோ அதிர்ச்சியுடன் போராடி வருகின்றனர்.

அந்த விடுதி வளாகத்தில் தங்கியிருக்கும் மருத்துவர்களை பிபிசி குஜராத்தி அணுகியது. பல மருத்துவர்கள் பல்வேறு காரணங்களால் பேச மறுத்துவிட்டனர். ஆனால் பெயரை வெளியிட விரும்பாமல் குறைந்தது 10 மருத்துவர்கள் பிபிசி குஜராத்தியிடம் பேசினர்.

இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்கான போராட்டங்களுக்கு மத்தியில், மருத்துவ மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் மனநல மற்றும் போக்குவரத்து ஆதரவையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது அவர்கள் தங்களது நொறுங்கிய வாழ்க்கையை மீண்டும் தொடங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சேதங்களை மதிப்பிட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மாணவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக காவல்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உளவியல் அதிர்ச்சியும், அத்துடன் வந்த நிதி இழப்பும்

மருத்துவ மாணவர்களுக்கான ஒரு விடுதி வளாகத்தில் நடந்த விமான விபத்து பேரழிவு மற்றும் அதிர்ச்சிக்கு வழிவகுத்ததுடன், சில பதில் தெரியாத கேள்விகளையும் எழுப்பியது.

மாநில அரசின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் நான்கு மருத்துவ மாணவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஜூன் 12ஆம் தேதி விமானம் பிற்பகலில் அதுல்யம் விடுதி கட்டடங்களின் மீது மோதியபோது அவர்கள் அனைவரும் மதிய உணவிற்காக மெஸ்ஸில் குவிந்திருந்தனர்.

அவர்களில் இருவர் ராஜஸ்தானையும், ஒருவர் மத்தியப் பிரதேசத்தையும், ஒருவர் குஜராத்தின் பாவ்நகரயும் சேர்ந்தவர்கள்.

பி.ஜே. மருத்துவக் கல்லூரி (BJMC), குஜராத் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (GCRI), யு.என். மேத்தா இதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் (UNMICRC) மற்றும் ஆமதாபாத் சிவில் மருத்துவமனையின் மற்ற சிறப்பு மருத்துவர்களின் குடியிருப்பு வளாகத்தில் இந்த விபத்து நடந்தது.

இந்த விபத்து அதுல்யம் 1, 2, 3 மற்றும் 4 எனப் பெயரிடப்பட்ட விடுதி கட்டடங்களை கடுமையாக சேதப்படுத்தியது. மருத்துவர்களுக்கான முக்கிய உணவிடமும் இங்கு அமைந்திருந்தது.

"நாங்கள் அனைவரும் சேதத்தை சந்திதிருக்கிறோம். இதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்," எனப் பெயர் குறிப்பிட விரும்பாத பயிற்சி மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு நபரும், உடைகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி, லேப்டாப், ஐபோன், புத்தகங்கள் உட்பட ரூ.1 முதல் ரூ.1.5 லட்சம் ரூபாய் வரையான உடைமைகளை இழந்திருப்பதாக அவர் மதிப்பீடு செய்கிறார்.

பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் தலைவர் மீனாக்‌ஷி பரிக் அளித்த புகாரின்படி, இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்களின் சொத்துகளுக்கு ரூ.2.70 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கார்கள், மின்னணு வளங்கள் மற்றும் பிற சேதங்கள் இதில் அடங்கும். இழந்த அல்லது சேதமடைந்த பொருட்களின் பட்டியலை மருத்துவர்கள் எழுத்துப் பூர்வமாக விசாரணை அதிகாரிகளிடம் அளித்துள்ளனர்.

இருப்பினும், மக்களின் உயிர் மற்றும் ஆரோக்கியத்திற்கே தற்போது முன்னுரிமை என்று பல மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே நேரம், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை கவனிக்காமல் விட்டுவிட முடியாது, அது எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக சரிசெய்யப்பட வேண்டும்.

அதுல்யத்தின் நான்கு கட்டடங்களில் மொத்தம் 23 ஃபிளாட்டுகளில் மருத்துவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வசித்தனர். இவற்றில் பெரும்பாலானவற்றில் வீட்டு உபயோகப் பொருட்களும் வாகனங்களும் இருந்தன.

புருஷோத்தம் செளஹான் என்பவரால் நடத்தப்பட்ட சலவையகம் போன்ற சேவை கடைகளும் விபத்தில் சேதமடைந்தன. "எல்லாமே எரிந்துவிட்டது," என்றார் மற்றொரு மாணவர். அவரது நண்பர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தின் போது அவர் தனது காரை இழந்துவிட்டார்.

"இழப்புகளுக்கு எப்படி இழப்பீடு வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை அரசிடமிருந்தோ ஏர் இந்தியா அதிகாரிகளிடமிருந்தோ இதுவரை எந்த விவாதமும் இல்லை," என அவர் தெரிவித்தார்.

காலியாக இருக்கும் ஃபிளாட்களில் திருட்டு நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குழப்பத்தை அதிகரிக்கின்றன.

தங்கம், ரொக்கம் உட்பட மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக வீடு திரும்பிய மருத்துவர்கள் குற்றம்சாட்டினர்.

"பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் எப்படி சேதப்பட்டிருக்கமுடியும்?" என கேள்வி எழுப்புகிறார் ஒரு மருத்துவர்.

ஆனால், மெகானிநகர் காவல்துறையினர் ரூ.2.70 கோடி ரூபாய் இழப்பு தொடர்பாக புகார்களைப் பெற்றுள்ளனர். அது திருட்டா இல்லையா என்பது குறித்து அவர்கள் இன்னமும் புலனாய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.

"இந்த வீடுகளில் திருட்டு நடந்ததாக நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் காவல்துறையினர் அந்த திசையில் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்," என ஆய்வாளர் டி.பி. பாசியா தெரிவித்தார்.

விசாரணைக்காக விபத்து நடந்த பகுதியை உடனடியாக தனிமைப்படுத்தியது குழப்பத்தை அதிகரித்ததா?

விமான விபத்துக்குப் பிறகு இந்த மருத்துவ மாணவர்கள் சேதமடைந்த கட்டடங்களை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த திடீர் வெளியேற்ற உத்தரவு அவர்களது குழப்பத்தை மேலும் அதிகரித்து சிரமங்களை ஏற்படுத்தியது.

விடுதி உடனடியாக காலிசெய்யப்பட வேண்டும் என விமான விபத்து புலனாய்வு அமைப்பிடமிருந்து (AAIB) அவசர உத்தரவு வந்ததாக மருத்துவர் பரிக் பிபிசியிடம் தெரிவித்தார். இதனால், விபத்து நடந்த அடுத்த நாளே விடுதியில் குடியிருந்த அனைவரையும் காலி செய்ய உத்தரவிட்டோம் என்கிறார் அவர்.

யு.என்.எம்.ஐ.சி.ஆர்.சி-யில் இதய மயக்கவியல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர் அனில் பன்வார், அதுல்யத்தில் இருந்து தனது வீட்டை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டிய ஆதரவற்ற நிலையை விவரிக்கும் ஒரு வைரல் வீடியோ செய்திகளில் இடம்பெற்றது.

அந்த வீடியோவில், அவர் தனது மகளும் வீட்டு உதவியாளரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், இடம் மாறுவதற்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதும், அவர் மற்றொரு வீடியோவை பதிவிட்டார். இந்த இரண்டாவது வீடியோவில், தனக்கு தங்குவதற்கு இடம் வழங்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் இடமாற்றத்தால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஊடகங்களிடம் பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.

அதிக எடையுள்ள சாமான்களை படிகட்டுகளில் எந்த உதவியுமின்றி தாங்களே தூக்கிச்செல்ல வேண்டியிருந்ததாக பல மாணவர்கள் தெரிவித்தனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மருத்துவர், "இது மனிதாபிமானமற்றது" எனக் கூறினார்.

சிலருக்கு உதவி கிடைத்தாலும், மற்றவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை என பிபிசி குஜராத்தி கண்டறிந்தது.

"ஒரு நேரத்தில் இரண்டுபேர் மட்டுமே கட்டடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்," என வேறொரு மாநிலத்திலிருந்து வந்து ஆமதாபாத்தில் படிக்கும் மருத்துவ மாணவர் ஒருவர் கூறினார்.

"எனது உடைமைகளில் பெரும்பாலானவற்றை அங்கே விட்டு வரவேண்டியிருந்தது" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் இது அனைவருக்கும் நிகழவில்லை.

யு.என்.எம்.ஐ.சி.ஆர்.சியில் மற்றொரு உதவிப் பேராசிரியர் அதுல்யத்தில் தனது வீட்டை காலி செய்வதற்கு அதிகாரிகள் உதவி செய்தனர்.

"முதலில் நாங்கள் குழப்பத்தில் இருந்தோம்., ஆனால் விரைவிலேயே ஒரு வாகனமும், சாமான்களை தூக்குவதற்கு உதவியும் வழங்கப்பட்டது," என்றார் ஒரு மருத்துவர்.

மருத்துவர்களை இட மாற்றம் செய்வதில் உள்ள பிரச்சனைகள் குறித்து மாநில சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட ஒரு செய்தியாளர் சந்திப்பில் பிபிசி குஜராத்தி கேள்விகளை எழுப்பியது.

இந்த கேள்விக்குப் பதிலளித்த ஆமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி ."பொது வளாகதில் இருந்த இருப்பிடங்களுக்கு பலர் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் இடமாற்றம் சுமுகமாக நடைபெற்றதை அதிகாரிகள் உறுதி செய்தனர்" எனத் தெரிவித்தார்.

நிரந்தர வீட்டிற்காக காத்திருப்பு

மருத்துவர் பரிக்கின் கூற்றுப்படி அனைவருக்கும் குறைந்தது நான்கு முதல் ஐந்து மாதங்கள் மாற்று இடம் அளிக்கப்படும். அதன் பின்னர் அனைவருக்கும் நிரந்தர வசிப்பிடம் அளிக்கப்படும்.

"33 மருத்துவர்கள் முதுநிலை மருத்துவர்கள் விடுதிக்கும், 5 பேர் யு.என்.எம்.ஐ.சி.ஆர்.சி ஊழியர்கள் விடுதிக்கும், 52 பேர் குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன விடுதிக்கும், 48 பேர் லயன்ஸ் அறக்கட்டளை அறைகளுக்கும், 51 பேர் பல் மருத்துவ ஊழியர்கள் குடியிருப்புக்கும், 12 பேர் மிதிலா குடியிருப்புக்கும் மாற்றப்பட்டுள்ளனர்" என அவர் தெரிவித்தார்.

"நோயாளிகளுக்கு சிறப்பு வசதிகள் தருவதற்காக கட்டப்பட்ட அறைகள் தற்போது விடுதிகளாக மாற்றப்பட்டு, மாணவர்கள் அங்கு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நான்கு மாதங்களுக்குப் பிறகு, எங்களது முதுநிலை விடுதி தயாராகிவிடும், அதன் பின்னர் வளாகத்திற்கு வெளியே வசிப்பவர்கள் உட்பட அனைவரையும் புதிய கட்டடத்தில் குடியேற்றுவோம்" என அவர் மேலும் கூறினார்.

ஆனால், அதிகாரிகள் தங்களுக்கு அளித்த தங்குமிடம் குறித்து சிலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புற்றுநோய் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவருக்கு, குஜராத் புற்றுநோய் சொசைட்டி வளாகத்தில் இருப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது.

"இந்த ஏற்பாடு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது," என்றார் அவர்.

விமான விபத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மருத்துவர்கள் மீள்வதற்கு நீண்ட காலம் ஆகும்.

இந்த மன உளைச்சல் அவர்கள் அனுபவித்த உடல்ரீதியான சேதத்தை விடப் பெரியது.

சில மாணவர்கள் தங்கள் சக மாணவர்கள் காயமடைவதையோ உயிரிழப்பதையோ பார்த்திருக்கின்றனர்.

"நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன், எப்போது ஆமதாபாத் திரும்புவேன் என்று தெரியவில்லை. இந்த விபத்தின் காட்சிகள் இன்னும் என்னை துரத்துகின்றன" என ஒரு நுண்ணுயிரியல் பிரிவு மாணவர் நினைவுகூர்கிறார்.

மருத்துவர்களின் உணர்வுசார் பாதிப்பை ஒப்புக்கொண்ட மருத்துவர் பரிக், "கல்லூரி மாணவர்களுக்கு உதவுவதற்காக விரைவில் ஒரு மனஉளைச்சல் மேலாண்மை அமைப்பை உருவாக்குவோம்" என்று கூறினார்.

மருத்துவப் பணிகளில் ஈடுபடாத முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி வரை ஒரு தற்காலிக கல்வி விடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.

அதுல்யம் 3-ல் வசித்த மருத்துவர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மூன்றாம் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பினார் ஆனால் தனது காலை உடைத்துக் கொண்டார்.

"அது மன உளைச்சலை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையாக இருந்தது, அப்போது என் மனதில் என்ன நடந்தது என்பதை விவரிப்பது கடினம்," என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுக்கு, உடல் மற்றும் உணர்வு ரீதியாக தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைப்பது ஒரு கடினமான பயணமாக இருக்கும்.

பிடிஎஸ்டி மற்றும் தூக்கமின்மை போன்ற மனநல பிரச்சினைகள் பரவலாகி வருகின்றன.

பிழைத்தவர்கள் வெறும் தங்குமிடத்தை தாண்டி, புரிதல், பொறுப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு