You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆமதாபாத் விமான விபத்தால் அடியோடு மாறிய வாழ்க்கை - செல்போனில் வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் எப்படி இருக்கிறான்?
- எழுதியவர், ஜோயா மடீன்
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
ஒவ்வொரு முறையும் விமானத்தின் ஓசையைக் கேட்டவுடன், ஆர்யன் அசாரி விமானத்தைப் பார்க்க வீட்டை விட்டு வெளியே ஓடுவார். விமானங்களைப் பார்ப்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது என்று அவரது தந்தை மகன்பாய் அசாரி கூறினார். ஆர்யனுக்கு என்ஜின் ஓசை மிகவும் பிடித்தது.
அந்த விமானம் (விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்) வானில் பறந்த போது என்ஜினின் ஓசை அதிகரித்து, வானில் என்ஜினிலிருந்து புகை வெளியானது. ஆனால், இப்போது இந்த விஷயத்தை நினைத்தாலே அவர் பாதிக்கப்படுகிறார்.
அந்த வியாழக்கிழமை (ஜூன் 12), 17 வயதான ஆரியன் அசாரி ஆமதாபாத்தில் உள்ள தனது வீட்டின் மாடியில் இருந்தார். அவர் விமானங்கள் பறப்பதை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது, ஏர் இந்தியாவின் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அவரது கண் முன்னே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர்.
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய தருணம் ஆர்யனின் கைப்பேசியில் வீடியோவாக பதிவானது.
"நான் விமானத்தைப் பார்த்தேன். அது கீழே சென்று கொண்டிருந்தது. பிறகு, அது என் கண் முன்னே விழுந்து நொறுங்கியது," என்று ஆர்யன் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஆர்யன் வெறுமனே ஒரு பொழுதுபோக்காக பதிவு செய்த இந்த வீடியோ, இப்போது இந்த விபத்தை விசாரிப்பவர்களுக்கு ஒரு முக்கியமான ஆதாரமாக உள்ளது.
இந்த வீடியோ ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய, உயர்நிலைப் பள்ளி மாணவரான ஆர்யனை, நாட்டின் வரலாற்றில் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று பற்றிய விவாதத்தின் மையப் புள்ளியாக மாற்றி விட்டது.
"பேட்டி கேட்டு கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. ஆர்யனிடம் பேசுவதற்காக பத்திரிகையாளர்கள் பகலிரவாக எங்கள் வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்," என அவரது தந்தை மகன்பாய் அசாரி பிபிசிக்கு தெரிவித்தார்.
"விபத்தும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் ஆர்யனுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன. அவன் பார்த்த காட்சி அவனுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. தன் கைப்பேசியைப் பயன்படுத்துவதையே நிறுத்திவிடும் அளவு என் மகன் பயந்துபோயிருக்கிறான்," என்று மகன்பாய் கூறினார்.
விமானங்களின் மீது விருப்பம் கொண்ட ஆர்யன்
ஓய்வுபெற்ற ராணுவ வீரரான மகன்பாய் அசாரி, ஆமதாபாத்தில் உள்ள சப்வே சேவையில் தற்போது பணிபுரிகிறார். விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
நகரத்தில் தொலைதூர காட்சி தெரியும் வகையிலான ஒரு மூன்று மாடி கட்டடத்தின் மாடியில் உள்ள ஒரு சிறிய அறைக்கு அவர் குடியேறினார்.
அவரது மனைவியும், இரு குழந்தைகளான ஆர்யனும், அவரது மூத்த சகோதரியும் இன்றும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் உள்ள அவர்களது பூர்வீக கிராமத்திலேயே வசிக்கின்றனர்.
"ஆர்யன் முதல் முறையாக ஆமதாபாத்துக்கு வந்திருந்தான். உண்மையில், அவன் வாழ்க்கையில் முதல் முறையாக கிராமத்தை விட்டு வெளியே வந்திருந்தான்," என்று மகன்பாய் கூறினார்.
"ஒவ்வொரு முறை பேசும்போதும், ஆர்யன் என்னிடம், 'வீட்டு மாடியிலிருந்து விமானங்கள் தெரிகிறதா?' என்று கேட்பான். நான் அவனிடம், 'வானத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் பறப்பதைப் பார்க்கிறேன்,' என்று சொல்வேன்."
ஆர்யனுக்கு விமானங்களின் மீது காதல் இருந்தது என்று அவர் கூறினார். கிராமத்தின் மேல் விமானங்கள் பறப்பதை அவன் ரசிப்பான். நகரத்தில் தந்தையின் புதிய வீட்டின் மாடியிலிருந்து விமானங்களை அருகில் பார்க்கும் எண்ணம் அவனுக்கு மிகவும் கவர்ச்சியாகத் தோன்றியது.
கடந்த வாரம் அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யனின் மூத்த சகோதரி காவல்துறை அதிகாரியாக விரும்பினார். அவர் நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக ஆமதாபாத் வந்திருந்தார்.
ஆர்யன் அவருடன் வர முடிவு செய்தார். "அவன் என்னிடம், 'புதிய நோட்டுப் புத்தகங்களும் ஆடைகளும் வாங்க வேண்டும்,' என்று சொன்னான்," என்று அசாரி கூறினார்.
'விமானம் குலுங்கியது, ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு சென்றது'
வியாழக்கிழமை (ஜூன் 12) விபத்து நடப்பதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு, மதிய வேளையில், இந்த உடன்பிறப்புகள் தங்கள் தந்தை வசிக்கும் வீட்டை அடைந்தனர்.
அனைவரும் ஒன்றாக உணவு உண்டனர். பின்னர், அசாரி குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
ஆர்யன் மாடிக்குச் சென்று, தனது நண்பர்களுக்குக் காட்டுவதற்காக வீடியோ பதிவு செய்யத் தொடங்கினார். அப்போதுதான், அவர் ஏர் இந்தியா விமானத்தைப் பார்த்து, அதை வீடியோ பதிவு செய்யத் தொடங்கினார் என்று அவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
விமானத்தில் ஏதோ பிரச்னை என ஆர்யன் விரைவில் உணர்ந்தார். "விமானம் குலுங்கிக் கொண்டிருந்தது, ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கமாக ஆடிக் கொண்டிருந்தது," என்று அவர் கூறினார். விமானம் கீழே இறங்கிக் கொண்டிருந்த போது அவர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அவருக்கு சுத்தமாக தெரிந்திருக்கவில்லை.
ஆனால், வானில் பெரிய புகை மண்டலம் எழும்பிய போது, கட்டடங்களிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறிய போது, தான் பார்த்தது என்ன என அவர் இறுதியாக உணர்ந்தார்.
பிறகு, அவர் அந்த வீடியோவை தனது தந்தைக்கு அனுப்பி, அவரை கைப்பேசியில் அழைத்துள்ளார்.
'நானே மிகவும் பயந்து போயிருந்தேன்'
"அவன் மிகவும் பயந்து போயிருந்தான். 'நான் அதைப் பார்த்தேன், அப்பா, அது விழுந்து நொறுங்குவதைப் பார்த்தேன்,' என்று கூறினான். அந்த விமானத்துக்கு என்ன ஆனது என்று அவன் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தான். நான் அவனை அமைதியாக இருக்கும்படியும், கவலைப்பட வேண்டாம் என்றும் சொன்னேன். ஆனால், அவன் மிகவும் பயந்து போயிருந்தான்," என்று அசாரி கூறினார்.
அசாரி தனது மகனிடம் அந்த வீடியோவைப் பகிர வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், மிகவும் பயந்து, அதிர்ச்சியடைந்த நிலையில், ஆர்யன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்டான். "திடீரென அந்த வீடியோ வைரலாக பரவியது."
அதற்குப் பிறகு வந்த நாட்கள் இந்தக் குடும்பத்துக்கு ஒரு கொடுங்கனவு போல இருந்தது.
அண்டை வீட்டினர், பத்திரிகையாளர்கள், கேமராமேன்கள் அசாரியின் சிறிய வீட்டுக்கு பகலிரவு பார்க்காமல் வந்து சென்றனர். அவர்கள் ஆர்யனிடம் பேச விரும்பினர். "அவர்களைத் தடுக்க எதுவும் செய்ய முடியவில்லை," என்று அவர் கூறினார்.
காவல்துறையினரும் இந்த குடும்பத்தினரை காண வந்திருந்தனர். அவர்கள் ஆர்யனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
செய்திகளில் வெளியானதைப் போல் ஆர்யன் கைது செய்யப்படவில்லை என்றும், அவர் பார்த்தது குறித்து காவல்துறையினர் பலமணி நேரம் விசாரணை நடத்தினர் என்றும் அசாரி தெளிவுபடுத்தினார்.
"ஆனால் இதற்குள்ளாகவே எனது மகன் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், அவனை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தோம்."
கிராமத்துக்கு திரும்பிய பிறகு, ஆர்யன் பள்ளிக்குச் செல்கிறார். ஆனால், "அவன் இன்னமும் தொலைந்தவன் போலவே இருக்கிறான். 'ஒவ்வொரு முறை அவன் கைப்பேசி ஒலிக்கும்போதும் அவன் பயப்படுகிறான்,' என்று அவனது அம்மா என்னிடம், கூறுகிறார்," என்று அசாரி தெரிவித்தார்.
"அவன் படிப்படியாக மீண்டு விடுவான் என எனக்குத் தெரியும். ஆனால், வானில் விமானங்கள் பறப்பதை காண அவன் இனி எந்த காலத்திலும் முயற்சிப்பான் என தோன்றவில்லை, " என அவர் மேலும் கூறினார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு