'தமிழ்நாட்டை கட்டுப்பாடற்ற தீவு என்று கூறிய இந்திரா காந்தி' - எமர்ஜென்சி காலத்தில் என்ன நடந்தது?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்

வருடம் 1975, ஜூன் மாதம் 25-ஆம் தேதி

நேரம் அதிகாலை வேளை

இந்தியாவில் நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) அமல்படுத்தப்படுவதாக குடியரசுத் தலைவர் ஃபக்ருதின் அலி அகமது ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அன்றைய தினத்திலிருந்து 1977 ஆம் ஆண்டு மார்ச் 21 வரை 21 மாதங்கள் இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தது.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. பத்திரிகை தணிக்கை, தலைமறைவு வாழ்க்கை என அந்த காலகட்டத்தின் சுவடுகள் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் ஆழமாக பதிந்துள்ளன.

"கைது நடவடிக்கைகளுக்கு முன்பே பத்திரிகை தணிக்கை தொடங்கிவிட்டது" என்கிறார், வடசென்னையைச் சேர்ந்த கலியபெருமாள்.

தமிழ்நாட்டில் எமர்ஜென்சி என்கிற போர்வையைப் பயன்படுத்தி பொதுமக்களும் செயற்பாட்டாளர்களும் அதிக போலீஸ் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் எழுத்தாளர் கீதா.

இந்தியாவில் எமர்ஜென்சி அமலில் இருந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் என்ன நடந்தன, தமிழ்நாட்டை கட்டுப்பாடற்ற தீவு என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கூறியது ஏன்?

1970களின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டு பிரிவுகளாக இருந்தன. எமர்ஜென்சிக்கு முன்பு, 1971-ம் ஆண்டு ஒரே நேரத்தில் நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவும், இந்திரா காங்கிரசும் கூட்டணியாக போட்டியிட்டன. அதற்குப் பிறகு இரண்டு கட்சிகளும் அரசியல் ரீதியாக விலக ஆரம்பித்தன. 1972-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவைத் தொடங்கினார் எம்ஜிஆர்.

1975-ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி இந்திரா காந்தி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) அமல்படுத்தப்படுவதாக குடியரசுத் தலைவர் ஃபக்ருதின் அலி அகமது ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கிரஸுக்கு எதிர் நிலையில் இருந்த திமுக எமர்ஜென்சியை எதிர்த்தது. அதேநேரத்தில், நெருக்கடி நிலையை ஆதரித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றியதாக வரலாற்று ஆசிரியரும் திராவிட இயக்க வரலாறு நூலின் ஆசிரியருமான ஆர்.முத்துக்குமார் குறிப்பிடுகிறார். அந்தத் தீர்மான நகலை எம்ஜிஆரே நேரில் சென்று இந்திரா காந்தியிடம் வழங்கியதாகவும் அவர் எழுதியுள்ளார்.

பத்திரிகை தணிக்கை - காலி பக்கங்களை வெளியிட்ட செய்தித்தாள்கள்

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியான திமுக ஆட்சியில் இருந்ததால் இங்கே கைதுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் பத்திரிகை தணிக்கை தமிழ்நாட்டிலும் தொடர்ந்தது என ஆர். முத்துக்குமார் எழுதியுள்ளார்.

சர்வாதிகார இந்தியாவுக்குள் தமிழ்நாடு ஒரு ஜனநாயகத் தீவாக இருந்ததாக பத்திரிகையாளர் விஜயசங்கர் பதிவு செய்ததாக ஏ.எஸ் பன்னீர்செல்வம் மேற்கொள்காட்டியுள்ளார்.

வட இந்திய அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். "வட இந்தியாவில் நெருக்கடி காலத்தில் காவல்துறைக்கு பயந்து தப்பி வந்த தலைவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். முக்கியமாக சிபிஎம் கட்சியின் தலைவர்கள் தங்களுடைய அரசியல் பணிகளை சுதந்திரத்துடன் மேற்கொண்டு வந்தனர்" என அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்தனர்.

மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அமைப்பு அல்லது மாநில அரசின் தகவல் தொடர்பு ஆணையரின் முன் அனுமதியின்றி எமர்ஜென்சி பற்றிய செய்திகள் வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பத்திரிகையாளர் விஜயசங்கர் தனது "மறக்கக்கூடாத இருண்ட காலம்" என்கிற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குல்தீப் நய்யர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையும் பிரச்னைகளைச் சந்தித்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கட்டுரையில், "சில பொதுவான நெறிமுறைகள் பத்திரிகை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டன. பத்திரிகைகள் பின்பற்ற வேண்டிய இந்த நெறிமுறைகளை பத்திரிகையில் பிரசுரிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது"

"பத்திரிகைகள் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது எனக் கட்டுப்பாடு இருந்தது. பிடிஐ மற்றும் யூஎன்ஐ செய்தி நிறுவனங்களை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்து சமாச்சார் என்கிற பெயரில் நடத்தத் தொடங்கியது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி காலத்தில் பத்திரிகை தணிக்கை வரைமுறையே இல்லாமல் இருந்தது என்கிறார் விடுதலை ராஜேந்திரன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "1975-ல் நான் விடுதலையில் (திராவிடர் கழகத்தின் செய்தித்தாள்) வேலை செய்து வந்தேன். ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு தணிக்கை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். சாஸ்திரி பவனில் தான் தணிக்கை அலுவலகம் செயல்பட்டது. இரவு 10 மணிக்கு தணிக்கை அதிகாரி அடுத்த நாள் பிரசுரத்தின் நகலை தணிக்கை செய்வார். பாதிக்கும் மேற்பட்ட செய்திகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும். அந்த இடங்களை காலி பக்கங்களாகவே வெளியிட்டோம்."

"அதன் பிறகு காலி பக்கங்கள் வரக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார்கள். விடுதலை பத்திரிகையில் பெரியார் பெயருக்கு முன்பாக தந்தை எனக் குறிப்பிடக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார்கள். முரசொலியில் அண்ணா, கலைஞர் பெயர் தாங்கி எந்த செய்தியும் வர முடியாது. தீக்கதிர் போன்ற பத்திரிகைகளும் கடுமையான கட்டுப்பாடுகளைச் சந்தித்தன. அப்போது அரசுக்கு ஆதரவான பத்திரிகைகள் என்ன வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம் என்ற நிலை இருந்தது."

"விடுதலையில் தமிழ்நாடு தமிழருக்கே என்கிற வாசகம் இடம்பெற்றிருக்கும். அந்த வாசகத்தையும் நீக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள். இடஒதுக்கீடு பற்றிய ஒரு தலையங்கமும் தணிக்கை செய்யப்பட்டது." என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சிக் கலைப்பு

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில் தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தன. தணிக்கை தொடர்பாகவும், மிசா சட்டத்தின் கீழ் நடந்த கைதுகள் தொடர்பாகவும் உத்தரவுகளை மத்திய அரசு வழங்கினாலும் அதனை செயல்படுத்தும் இடங்களில் மாநில அரசுகளே இருந்தன. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் நெருக்கடியின் தாக்கம் குறைவாக இருந்ததாகத் தெரிவிக்கிறார் பத்திரிகையாளர் விஜயசங்கர்.

"அதன் எதிரொலியாகவே இந்தியாவில் கட்டுப்பாடற்ற 2 தீவுகள் (தமிழ்நாடு, குஜராத் இரண்டிலுமே காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருந்தன) இருப்பதாகச் சொன்னார் இந்திரா காந்தி" என தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் ஆர்.முத்துக்குமார்.

31 ஜனவரி 1976 அன்று மாலை தமிழ்நாட்டில் திமுக அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

அதன் பிறகு, திமுகவில் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் உள்ளிட்ட பலரும் மிசாவில் கைது செய்யப்பட்டனர். திமுகவில் மட்டுமல்லாது பிற இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அந்தப் பட்டியலை வெளியிட அனுமதி கிடைக்காததால் அண்ணா நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த வரமுடியாதவர்கள் பட்டியல் என்ற பெயரில், மிசா கைதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் ஆர்.முத்துக்குமார்.

டேவிட் செல்போர்ன் எழுதியுள்ள "An eye to India The Unmasking Of A Tyranny" நூலில் நெருக்கடி நிலை காலத்தில் தமிழ்நாட்டில் நடந்தவை பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

1976 ஜனவரி 31-ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசிய இந்திரா காந்தி, "எந்த ஓர் அரசையும் வீழ்த்த வேண்டியது என் நோக்கமல்ல. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி செய்ய வேண்டியதாயிற்று. அவர்கள் செய்த தவறில் இருந்து தப்பிக்க அவர்கள் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள்" எனத் தெரிவித்ததாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு விளக்கமான பதில் அளித்ததாக கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "மத்திய அரசு தந்த உதவி போதுமானதல்ல என்றும் சொந்த முயற்சியால் தான் தமிழக அரசு மோலோங்கி நிற்கிறது என்றும், 1965-66 ஆம் ஆண்டில் தனிநபர் வரி வருமானத்தில் ஏழாவது இடத்திலிருந்த தமிழகம் தற்போது நான்காவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டு நீண்ட விளக்கமான பதிலை அளித்தேன்" என எழுதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சர்காரியா ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு.

இந்த காலகட்டத்தில் மாநில கட்சிகள் தடை செய்யப்படலாம் என செய்தி பரவியதால் எம்ஜிஆர் அதிமுகவின் பெயரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றியதாக ஆர்.முத்துக்குமார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் பெயர் மாற்றம் பற்றி பல திமுக தலைவர்களும் தன்னிடம் பேசியதாக நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். "திமுகவும் பெயர் மாற்றிக் கொள்வதே பாதுகாப்பானது என்று மூத்த தலைவர்கள் அழுத்தமாகக் கருத்தறிவித்தனர். அமைச்சராக இருந்த சிலரும் ஆமாம் போட்டனர்." என அவர் எழுதியுள்ளார். பெயரை மாற்ற வேண்டாம் என்கிற தனது கருத்துக்கு பேராசிரியர் (க.அன்பழகன்) மட்டுமே துணை நின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தலைவர்கள்

கடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட கலியபெருமாளுக்கு தற்போது வயது 76. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர் பணி நிமித்தமாக வட சென்னையில் வசித்து வந்தார். நெருக்கடி அறிவிக்கப்பட்டபோது அவருக்கு வயது 26, இடதுசாரி இயக்க செல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

தனது அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். "அப்போது அரசியல் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது. ஆனால் அரங்க கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. வானொலியிலும் ரயில்கள் சரியான நேரத்துக்கு புறப்பட்டது, ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்தனர் என்பன போன்ற செய்திகளும் 20 அம்சம் திட்டம் பற்றிய விளம்பரங்களும் தான் இருக்கும்.

தமிழ்நாட்டில் வி.பி சிந்தன், பிஆர் பரமேஸ்வரன் போன்ற சிபிஎம் கட்சி தலைவர்கள் தலைமறைவாக இருந்தனர். அவ்வாறு தலைமறைவாக இருந்தவர்கள் ஒரு நாளுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கமாட்டார்கள். மீசை, தாடி, தலைப்பாகை வைத்துக் கொண்டு மாறு வேடத்தில் தான் வலம் வந்தார்கள். இருசக்கர வாகனத்தில் தான் அனைத்து இடங்களுக்கும் பயணிப்பார்கள். பி.ஆர் பரமேஸ்வரன் எனது வீட்டில் ஒருநாள் தங்கியுள்ளார். திமுக ஆட்சி கலைக்கப்பட்ட தகவல் பலருக்கும் தெரியவில்லை. அதற்கு அடுத்த நாள் எங்களுக்குத் தெரிந்தது. அதன் பின்னர் கைது நடவடிக்கைகள் அதிகமாகின" என்றார்.

போலீஸ் அடக்குமுறை விதை போட்ட எமர்ஜென்சி

நெருக்கடி நிலை பற்றிய முழுமையான பதிவுகள் இல்லை என்கிறார் எழுத்தாளர் வ.கீதா. "எமர்ஜென்சி பற்றிய பதிவுகளில் தென் மாநிலங்களின் அனுபவங்கள் மிக சொற்பமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா எமர்ஜென்சியின் அதீத நெருக்கடிகளைச் சந்தித்தன. தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டாலும் பல அமைப்புகள் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள் பதிவு செய்யப்படாமலே உள்ளன.

திராவிடர் கழகம், இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலரும் சிறைக் கொடுமைகளை சந்தித்தனர். அரசியல் தலைவர்கள், அரசியல் எதிரிகள் பழிவாங்கப்பட்டனர் என்பது ஒருபுறம் என்றால், உள்ளூர் அளவில் ஆதிக்க சமூகத்தினர் மற்றும் செல்வாக்கு படைத்தவர்கள் நெருக்கடி கால கட்டுப்பாடுகள் மற்றும் காவல்துறையைப் பயன்படுத்தி தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர்" என்கிறார்.

தமிழ்நாட்டில் என்கவுண்டர் உள்ளிட்ட காவல்துறை அடக்குமுறைகள் எமர்ஜென்சிக்குப் பிறகு தான் சகஜமாக்கப்பட்டது என்கிற பார்வையை முன்வைக்கிறார் வ.கீதா. "நெருக்கடி நிலை ரத்து செய்யப்பட்ட பிறகும் தமிழ்நாட்டில் காவல்துறையின் அடக்குமுறை மற்றும் அத்துமீறல்கள் தொடர்ந்து, தற்போது வரையும் கூட, அதற்கான வித்து அந்தக் காலகட்டத்தில் தான் இடப்பட்டது" என்றார்.

எமர்ஜென்சி சட்டங்களால் பொதுமக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார் வ.கீதா, "நாகம்மாள் என்கிற பெண்மணி தனது குடும்பத்தின், ஊரின் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர். நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி அவர் மீது காவல்துறை அடக்குமுறை நிகழ்ந்தது. அதற்கு நீதி பெற போராட்டங்கள் நடத்திய அவர், ஷா கமிஷன் முன்பும் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்" என்றார்.

நெருக்கடி நிலை ரத்து

1976ம் ஆண்டு டிசம்பர் மாதம் நெருக்கடியை தளர்த்தி தேர்தல் நடத்துவது பற்றி பேசியிருந்தார் இந்திரா காந்தி. எதிர்க்கட்சிகள் ஒன்றாக தேர்தலைச் சந்திப்பது தொடர்பாக டெல்லியில் திமுக எம்பி இரா செழியன் இல்லத்தில் ஆலோசனை நடந்தது. எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனதா என்கிற பெயரில் போட்டியிட்டன.

18 ஜனவரி 1977 அன்று நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார் இந்திரா காந்தி.

தமிழ்நாட்டில் அதிமுக உடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். திமுக- ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தது. சிபிஎம் திமுக கூட்டணியில், சிபிஐ அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது.

வட இந்தியா முழுவதும் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும் தமிழ்நாட்டில் முடிவுகள் வேறாக இருந்தன. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 35 இடங்களில் வென்ற நிலையில், திமுக கூட்டணி நான்கு இடங்களில் வென்றது. ஜனதா கட்சி 269 இடங்களிலும் காங்கிரஸ் 152 இடங்களிலுமே வென்றது.

1977-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் ஜனதா கட்சி தனியாகவும், அதிமுக-சிபிஎம் மற்றும் காங்கிரஸ் - சிபிஐ கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தன. அதிமுக 130 இடங்களிலும் திமுக 48 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இஸ்மாயில் ஆணையமும் ஷா கமிஷனும்

நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த கொடுமைகள் பற்றி விசாரிக்க மாநில அரசு நீதிபதி இஸ்மாயில் தலைமையில் ஆணையம் அமைத்தது. மத்தியில் ஜனதா அரசு நீதிபதி ஷா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது.

இஸ்மாயில் ஆணையத்தின் விசாரணை தற்போதைய சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தான் நடைபெற்றதாகக் கூறுகிறார் விடுதலை ராஜேந்திரன்.

ஷா கமிஷனின் அறிக்கை 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவு மற்றும் காங்கிரஸ் வெற்றியால் அந்த அறிக்கை வெளிச்சத்துக்கு வராமல் போனது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.செழியன் 2010-ம் ஆண்டு ஷா கமிஷன் அறிக்கையை Shah Commission report Lost, and Regained என்கிற தலைப்பில் தொகுத்து வெளியிட்டார்.

அதன் முகப்புரையில், "ஷா கமிஷன் அறிக்கையின் ஒரு நகல் கூட இந்தியாவில் இல்லை என்கிற தகவல் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆஸ்திரேலியாவின் தேசிய நூலகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தில் மட்டுமே ஒரு நகல் இருப்பதாக தெரியவந்தது. அப்போதைய அரசு அனைத்தையும் கைப்பற்றி அழித்ததாக கூறப்பட்டது. ஆனால், என் வசம் ஒரு நகல் இருந்தது. இவ்வளவு முக்கியமான வரலாற்று ஆவணம் வெளிவராமல் இருக்கக்கூடாது என்பதறாக அதனை தொகுத்து வெளியிட முடிவு செய்தேன்" என எழுதியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு