You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் பாகிஸ்தானியர்களா? இந்திய புலனாய்வாளர்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், நியாஸ் ஃபாரூக்கி
- பதவி, பிபிசி செய்திகள்
காஷ்மீரின் பஹல்காம் நகருக்கு அருகில் சுற்றுலா பயணிகள் மீது ஏப்ரல் மாதம் நடந்த கொடூர தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பால் தடைசெய்யப்பட்ட ஆயுதக்குழுவான லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள் என்று இந்திய புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களின் உருவப் படங்களை காவல்துறை வெளியிட்டது. அதில் இருவர் பாகிஸ்தானியர்கள் என்றும் ஒருவர் உள்ளூர்வாசி என்றும் கூறினர்.
தாக்குதல் நடத்தியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி இரண்டு உள்ளூர்வாசிகளைக் கைது செய்த பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) இந்தக் கூற்றை முன்வைத்தது. பாகிஸ்தான் இதுகுறித்து இதுவரை எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
பிரபலமான சுற்றுலா தலமான பைசரானில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் முன்னர் மறுத்தது. இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதற்கு இந்தத் தாக்குதல் காரணமாக அமைந்தது.
காஷ்மீருக்காக மூன்று போர்களை நடத்திய அணு ஆயுதம் ஏந்திய தெற்காசிய அண்டை நாடுகள், இந்த பகுதியை முழுமையாக தங்களுடையது எனக் கூறுகின்றன. ஆனால் அதன் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே அவை நிர்வகித்து வருகின்றன.
ஏப்ரல் 22 அன்று நடந்த படுகொலைச் சம்பவங்கள் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் இந்த வழக்கு மத்திய புலனாய்வு முகமையான என்ஐஏவிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டது.
காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் விரிவான தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விசாரணைக்காக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், தாக்குதல் நடத்திய மூன்று பேர் இன்னும் பிடிபடவில்லை.
தற்போது கைது செய்யப்பட்ட நபர்கள் ஏப்ரல் 22 தாக்குதலுக்கு முன்னர், "தெரிந்தே மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை ஒரு தற்காலிக குடிசையில் தங்க வைத்திருந்தனர்" என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் என்ஐஏ (NIA) கூறியது.
அவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர் என்ற விவரங்கள் கூறப்படவில்லை. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் காவலில் இருப்பதால், அவர்கள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
அதிகம் அறியப்படாத அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' (TRF), லஷ்கர்-இ-தொய்பாவுடன் கூட்டணி வைத்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக தொடக்கத்தில் அறிவித்த 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்', பின்னர் அந்தக் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்தது.
தாக்குதல் நடந்த சில நாட்களுக்குள், பாகிஸ்தானுடன் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த 1960ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகளின் மூலம் பிரச்னைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட 1972 சிம்லா ஒப்பந்தத்திலிருந்து பாகிஸ்தான் விலகியது.
அதைத் தொடர்ந்து, மே 7 அன்று இந்தியா வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது.
இதில், "பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு" என்று அழைக்கப்பட்ட இடங்கள் குறிவைக்கப்பட்டன.
இவை பயங்கரவாத முகாம்கள் என்ற கூற்றை பாகிஸ்தான் மறுத்ததுடன், இந்திய எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி, ட்ரோன்களை பயன்படுத்தி பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே 10 அன்று போர் நிறுத்தத்தை அறிவிக்கும் வரை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு