இந்திரா காந்தி: 'எமர்ஜென்சி' வீழ்ச்சியில் இருந்து நான்கே மாதங்களில் மீண்டது எப்படி?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி நியூஸ்

எமர்ஜென்சிக்குப் பிறகு 1977 தேர்தலில் தோல்வியடைந்த இந்திரா காந்தி அடுத்த நான்கு மாதங்களுக்குள் தோல்வியிலிருந்து மீண்டு வந்தார். ஜனதா அரசுக்கு ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்தாலும், அதை அவர்கள் எல்லா வகையிலும் வீணடித்தனர்.

மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், சரண் சிங் மூவரும் அரசை பல திசைகளில் தாறுமாறாகப் பயணிக்க வைத்து, இந்திரா காந்திக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தட்டில் இட்டுக் கொடுத்தனர்.

மே 1977இல் பிகாரில் உள்ள பெல்ச்சி கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட தலித் மக்களை உயர் சாதி நிலப்பிரபுக்கள் படுகொலை செய்தது. இந்த கொடூர நிகழ்வு இந்திரா காந்திக்கு அரசியலில் மீண்டும் நுழைவதற்கான முதல் வாய்ப்பு கிடைத்தது.

இந்தச் சம்பவம் நடந்தபோது, ​​மிகச் சிலரே அதில் கவனம் செலுத்தினர். ஆனால் ஜூலை மாதம், இந்திரா காந்தி அங்குள்ள தலித்துகளுக்கு அனுதாபத்தைத் தெரிவிக்க அங்கு நேரடியாகச் செல்ல முடிவு செய்தார்.

சமீபத்தில் வெளியான 'ஹவ் பிரைம் மினிஸ்டர்ஸ் டிசைட்' (How Prime Ministers Decide) என்ற புத்தகத்தின் ஆசிரியர் நீரஜா சௌத்ரி, "அப்போது பிகார் முழுவதும் கனமழை பெய்து கொண்டிருந்தது. பெல்ச்சி கிராமத்திற்குச் செல்லும் பாதை முழுவதும் சேறும், சகதியும், மழை வெள்ளமும் நிறைந்திருந்தது," என்று கூறுகிறார்.

அதனால் இந்திரா காந்தி தனது வாகனத்தை நடுவழியில் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும், அவர் தனது பயணத்தை நிறுத்தவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெல்ச்சி கிராமத்தை அடைய அவர் யானையின் மீது ஏறி பயணம் செய்தார். இந்திரா காந்தி யானையின் மீது ஏறி சவாரி செய்த படங்கள் செய்தித்தாள்களில் வெளியாகி, அவர் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சென்றன.

யானையின் முதுகில் மூன்றரை மணிநேரப் பயணம்

பெல்ச்சி கிராமத்தைச் சேர்ந்த தலித்துகள் இந்திரா காந்தியின் வரவை ஒரு பெரிய விஷயமாகக் கருதினர். இந்திரா அங்கே அமர்ந்து அவர்களின் துயரங்களைக் கேட்டு, அவர்களுக்கு நிச்சயமாக உதவப் போவதாக உறுதியளித்தார்.

பிரபல பத்திரிக்கையாளரான ஜனார்தன் தாக்கூரும் இந்திரா காந்தியின் பெல்ச்சி பயணம் பற்றி தனது ‘இந்திரா காந்தி அண்ட் தி பவர் கேம்’ (Indira Gandhi and the Power Game) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"முதலமைச்சர் கேதார் பாண்டே, அவருடைய மனைவி பிரதிபா சிங், சரோஜ் கபர்டே மற்றும் ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோரும் இந்திரா காந்தியுடன் சென்றனர்," என்று தாக்கூர் எழுதுகிறார்.

பெல்ச்சிக்கு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலையில், இரவு முழுவதும் நடக்க வேண்டியிருந்தாலும் சரி, நடந்தே செல்வோம் என்று இந்திரா காந்தி கூறியதாக காங்கிரஸ் தலைவர் கேதார் பாண்டே கூறினார்.

அந்தப் பயணத்தின் போது, பயந்தது போலவே இந்திரா காந்தியின் ஜீப் சேற்றில் சிக்கியது. அதை சேற்றில் இருந்து வெளியே இழுக்க டிராக்டர் கொண்டு வரப்பட்டது. ஆனால் ட்ராக்டரும் சேற்றில் சிக்கியது.

இந்திரா காந்தி தனது புடவையை கையில் இலேசாக உயர்த்திப் பிடித்தவாறே தண்ணீர் நிறைந்த தெருக்களில் நடக்கத் தொடங்கினார். அதைப் பார்த்த பின்னர்தான் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யானையை அங்கு அனுப்பினார்.

அந்த யானை மீது இந்திரா காந்தி ஏறினார். பயத்துடன் காணப்பட்ட பிரதீபா சிங்கும் அவருக்குப் பின்னால் ஏறினார். இந்திராவின் முதுகை அவர் இறுக்கிப் பிடித்துக்கொண்டார்.

அங்கிருந்து பெல்ச்சி வரையிலான மூன்றரை மணிநேர பயணத்தை யானையின் முதுகில் அமர்ந்தவாறே இந்திரா கடந்தார். நள்ளிரவில் அங்கிருந்து திரும்பிய இந்திரா காந்தி, சாலையோரத்தில் இருந்த ஒரு பள்ளியில் உரை நிகழ்த்தினார்.

பாட்னாவில் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் சந்திப்பு

அடுத்த நாள், இந்திரா காந்தி ஜெயபிரகாஷ் நாராயணனை பாட்னா அருகே கடம்குவானில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்றார். அப்போது இந்திரா வெள்ளை நிறத்தில் புடவை அணிந்திருந்தார்.

சர்வோதயா அமைப்பின் தலைவர் நிர்மலா தேஷ்பாண்டே அப்போது இந்திரா காந்தியுடன் இருந்தார். ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களை தனது சிறிய அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கு ஒரு படுக்கையும் இரண்டு நாற்காலிகளும் இருந்தன. இந்த சந்திப்பில், இந்திரா ஜெயபிரகாஷ் நாராயணனுடன் அரசியல் பற்றிப் பேசவில்லை. அன்றைய நாட்களில் தான் எதிர்கொண்ட பிரச்னைகள் பற்றியும் பேசவில்லை.

இந்திரா காந்தி அவரை சந்திப்பதற்கு முன்பு சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா அவரைச் சந்தித்திருந்தார். தமது வீட்டு போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாகவும், வீட்டுக்கு வரும் கடிதங்கள் திறந்து படிக்கப்படுவதாகவும் அப்போது அவரிடம் புகார் தெரிவித்தார்.

இதைக் கேட்ட ஜெயபிராகஷ் நாராயணனுக்கு கடும் கோபம் வந்தது. மேனகா வெளியேறிய பிறகு, ஜெயபிராகஷ் நாராயணனின் உடனிருந்தவர் இந்திரா காந்தியும் தனது அரசியல் எதிரிகளின் போன்களை ஒட்டுக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

இந்திராவுடன் ஜெயபிராகஷ் நாராயணனின் சந்திப்பு 50 நிமிடங்கள் நீடித்தது. "இந்திரா காந்தியை வீட்டுப் படியில் இறக்கிவிடுவதற்காக ஜெயபிராகஷ் நாராயணன் படிக்கட்டுகளில் ஏறி வந்தார்" என்கிறார் நீரஜா சௌத்ரி.

வெளியே நின்றிருந்த பத்திரிக்கையாளர்கள், அவர்களுடைய சந்திப்பு குறித்துக் கேட்டதற்கு, இது தனிப்பட்ட சந்திப்பு என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார் இந்திரா.

ஜெயபிராகஷ் நாராயணனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்க அவரை அணுகியபோது, ​​"உங்கள் கடந்த காலம் எவ்வளவு பிரகாசமாக இருந்ததோ, அதேபோல் உங்கள் எதிர்காலமும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று நான் இந்திராவிடம் சொன்னேன்," என்றார்.

இந்த சந்திப்பு குறித்த செய்தி வெளியானவுடன் ஜனதா கட்சி தலைவர்கள் பலரும் கலக்கம் அடைந்தனர். கோபமடைந்த குல்தீப் நய்யார், ஜெயபிரகாஷ் நாராயணின் உதவியாளர் குமார் பிரசாந்திடம், "இந்திரா காந்தியை ஜெயபிரகாஷ் நாராயணன் எப்படி இப்படி வாழ்த்த முடியும்? அவரது கடந்த காலம் ஓர் இருண்ட அத்தியாயம், பிரகாசமானது அல்ல," என்று கேள்வி எழுப்பினார்.

குமார் பிரசாந்த் இந்தச் செய்தியை ஜெயபிரகாஷ் நாராயணனிடம் தெரிவித்தபோது, ​​"நமது வீட்டுக்கு வரும் விருந்தினர் ஒருவரை ஆசீர்வதித்து வாழ்த்த வேண்டுமா அல்லது சபிக்கவேண்டுமா?" எனக் கேட்டார்.

இதுகுறித்து நீரஜா சவுத்ரி கூறுகையில், "ஜெயபிரகாஷ் நாராயணின் இந்தக் கருத்தை அப்போது கேட்ட ஜனதா கட்சித் தலைவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்த நிலையில், இந்திரா காந்தியைவிட அவர்கள் மீது ஜெயபிராகஷ் நாராயணன் கோபமாக இருந்தார் என்ற பின்னணியிலும் பார்க்க வேண்டும்," என்கிறார்.

ராஜ்நாராயணன், சஞ்சய் காந்தி இடையிலான தொடர் சந்திப்புகள்

இந்திரா காந்தியை தேர்தலில் தோற்கடித்த ராஜ்நாராயணன், ஜனதா கட்சி ஆட்சியில் தனக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்று நினைக்கத் தொடங்கியபோது, ​​இந்திரா காந்தி மீண்டும் அரசியல் அதிகாரத்துக்குத் திரும்புவதற்கான மூன்றாவது இடைவெளி கிடைத்தது.

மொரார்ஜி தேசாய் தன்னைப் பதவி நீக்கம் செய்ததற்காக அவர் எப்போதும் மன்னிக்கவே இல்லை.

இந்நிலையில் அவர் இந்திரா காந்தியை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், இந்திரா காந்தி அவரை நேரடியாகச் சந்திப்பதற்குப் பதிலாக தனது மகன் சஞ்சய் காந்தியை அனுப்பினார்.

மோகன் மெய்கன்ஸின் உரிமையாளர் கபில் மோகனுக்கு பூசா சாலையில் சொந்தமாக இருந்த வீட்டில் அவர்கள் சந்தித்தனர்.

கமல்நாத் அல்லது அக்பர் அகமது, சஞ்சய் காந்தியை ராஜ்நாராயணனை சந்திக்க காரில் அழைத்துச் செல்வார்கள்.

இந்தக் கூட்டங்களில் மொரார்ஜி தேசாய் அரசை கவிழ்த்து சரண் சிங்கை பிரதமராக்கும் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

சரண் சிங்கை பிரதமராக்க ஜனதா கட்சியை உடைக்க வேண்டும் என்பது இருவருக்கும் தெரியும்.

இதுகுறித்து, "ஒரு நாள் ராஜ்நாராயணனை மகிழ்விக்க, சஞ்சய் காந்தி அவரிடம், நீங்களும் பிரதமராகலாம் என்று கூறினார். ராஜ்நாராயண் தலையசைத்தார்.

ஆனால் அவர் சஞ்சய் காந்தியின் ஆசைவார்த்தைக்குள் சிக்கவில்லை. சஞ்சய் காந்திக்கு அவர், 'இது சரிதான். ஆனால் தற்போதைக்கு சரண் சிங்கைப் பிரதமராக்குங்கள்' என்று பதில் அளித்தார்," என்று நீரஜா சௌத்ரி எழுதுகிறார்.

ஜெகஜீவன் ராம் மகன் மீதான பாலியல் குற்றச்சாட்டு

அதனால்தான் 1978ஆம் ஆணடின் இறுதிக்குள், அதிர்ஷ்டம் மீண்டும் இந்திரா காந்திக்கு ஆதரவாகத் திரும்பியது. ஆகஸ்ட் 21, 1978 அன்று, காஜியாபாத்தின் மோகன் நகரில் உள்ள கபில் மோகனுக்கு சொந்தமான மோகன் மீக்கன்ஸ் தொழிற்சாலைக்கு வெளியே ஒரு கார் விபத்து நடந்தது.

மெர்சிடிஸ் கார் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

காருக்குள் அமர்ந்திருந்த நபர், தன்னை மக்கள் அடிக்க ஆரம்பித்து விடுவார்களோ என்று பயந்து, காரை மோகன் மீக்கன்ஸ் தொழிற்சாலைக்குள்ளே உள்ளே ஓட்டிச் சென்றார். வாயிலில் இருந்த கான்ஸ்டபிள் அவரை உள்ளே அழைத்து விபத்து குறித்து விரிவாகத் தெரிவித்தார்.

அப்போது, கபில் மோகனின் மருமகன் அனில் பாலி வெளியே வந்து யாரென்று பார்த்தார். காரில் அமர்ந்திருந்தவர் யார் என்பதை அவர் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார்.

அவர் தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெகஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராம். சுரேஷ் ராம் தனது கார் பின்தொடரப்பட்டதாக அனில் பாலியிடம் தெரிவித்தார்.

மேலும் அவரது காரைத் தொடர்ந்து ராஜ்நாராயணின் இரண்டு பணியாளர்களும் ஜனதா கட்சியைச் சேர்ந்த கே.சி.தியாகி மற்றும் ஓம்பால் சிங் ஆகியோரும் வந்தனர்.

அனில் பாலி தனது நிறுவன காரில் சுரேஷ் ராமை அவரது வீட்டிற்கு அனுப்பினார்.

அடுத்த நாள், சுரேஷ் ராம் மீது காஷ்மீர் கேட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட போது, அவர் பாலியிடம் சொன்ன கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை ஒன்றைச் சொன்னார்.

ஆகஸ்ட் 20ஆம் தேதி, அவரை பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடத்திச் சென்றதாக அப்போது அவர் கூறினார்.

கடத்தல் காரர்கள் அவரை மோடிநகருக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர் என்றும், அங்கு சில ஆவணங்களில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அதற்கு அவர் மறுத்ததால், தாக்கப்பட்டு மயங்கி விழுந்தாகவும் தெரிவித்தார்.

அவர் சுயநினைவு திரும்பியதும், அவருடன் காரில் அமர்ந்திருந்த பெண்ணுடன் ஆட்சேபகரமான நிலையில் இருந்த காட்சியை புகைப்படம் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சுரேஷ் ராம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் ஓம்பால் சிங்கும், கே.சி. தியாகியும் பல நாட்களாகப் பின்தொடர்ந்தனர். சுரேஷ் ராமுக்கு டெல்லி கல்லூரி மாணவி ஒருவர் காதலியாக இருந்தது அவர்களுக்குத் தெரியும் என்கிறார் நீரஜா சௌத்ரி.

"அவர்கள் போலராய்டு கேமராக்கள் மூலம் அந்த காதலியை நிர்வாணமாகப் படம் பிடித்தனர். இதற்காக அந்த இருவரும் தங்களால் இயன்றவரை முயன்றனர்."

அந்தப் படங்கள் கிடைத்தவுடன் இருவரும் தங்கள் தலைவர் ராஜ்நாராயணனிடம் அவற்றை எடுத்துச் சென்றனர். அதே இரவில், ராஜ்நாராயணனை சந்திக்க கபில் மோகனின் வீட்டிற்கு ஜெகஜீவன் ராம் வந்தார். இருவருக்கும் இடையே சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

அந்தப் பேச்சுவார்த்தையின்போது, தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இரவு 11.45 மணியளவில் ஜெகஜீவன் ராம் தனது வீட்டிற்குத் திரும்பினார். அவர் சென்ற பிறகு, ராஜ்நாராயண் கபில் மோகனிடம், 'இப்போது அவர் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறார்' என்று கூறினார்.

மறுநாள் ராஜ்நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் முழு விவரங்களையும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களான ஃபர்சாந்த் அகமது மற்றும் அருள் லூயிஸ் ஆகியோர் செப்டம்பர் 15, 1978இல் வெளியான இந்தியா டுடே இதழில், "ஓம்பால் சிங்கிற்கு அந்தப் படங்கள் எப்படி கிடைத்தன?" என்று ராஜ்நாராயணனுக்கு ஒரு கேள்வியை எழுப்பினர்.

"சுரேஷ் ராமிடம் ஓம்பால் சிங் சிகரெட் கேட்டார். சிகரெட்டை கொடுக்க காரின் கையுறை பெட்டியை அவர் திறந்தபோது, ​​சிகரெட் பாக்கெட்டுடன் அந்தப் படங்களும் கீழே விழுந்தன," ராஜ்நாராயணன் கூறினார்.

"ஓம்பால் சிங் அந்தப் புகைப்படங்களை எடுத்து சுரேஷ் ராமிடம் திருப்பித் தரவில்லை, ஆனால் அவற்றைத் திரும்பப் பெற சுரேஷ் ராம் பணம் கொடுத்தார்."

புகைப்படங்கள் சஞ்சய் காந்திக்கு சென்றடைந்தது

சுரேஷ் ராம் மற்றும் அவரது காதலியின் சுமார் 40-50 புகைப்படங்கள் ராஜ்நாராயணனிடம் இருந்தன. அதில் 15 படங்களை கபில் மோகனிடம் கொடுத்துவிட்டு, மீதியை தன்னிடம் வைத்துக் கொண்டார்.

நீரஜா சௌத்ரி மேலும் கூறும்போது, ​​"ராஜ்நாராயணன் வீட்டிற்குச் சென்றவுடன், கபில் மோகன் தனது மருமகன் அனில் பாலியிடம் இந்தப் படங்களை சஞ்சய் காந்திக்கு எடுத்துச் சென்று கொடுக்குமாறு கூறினார். பாலி அதிகாலை 1 மணியளவில் 12 வில்லிங்டன் கிரசண்ட் சாலையை அடைந்தார். அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சஞ்சய் காந்தியை எழுப்பி அந்தப் படங்களை அவர் கொடுத்தார்," என்று தெரிவித்தார்.

"அந்தப் படங்களைப் பெற்றுக்கொண்டு, அப்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் நேராக வீட்டிற்குள் சென்று இந்திரா காந்தியை எழுப்பி அவரிடம் அந்தப் படங்களைக் கொடுத்தார்."

மறுநாள் அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 9 மணிக்கு ஜனதா கட்சி எம்.பி கிருஷ்ண காந்த்தின் 'டெலிகிராப் லேன்' இல்லத்தில் தொலைபேசி ஒலித்தது.

மறுமுனையில் ஜெகஜீவன் ராம் பேசினார். போனை வைத்தவுடன், 'இன்னொரு மகன் தன் தந்தையைக் கவிழ்த்து விட்டார்' என்று தன் குடும்பத்தாரிடம் கவலையுடன் தெரிவித்தார்.

அந்தப் படங்களை மேனகா காந்தி தனது பத்திரிகையில் வெளியிட்டார்

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரப்பூர்வமான கார் கிருஷ்ணகாந்த் வீட்டில் நின்றது.

காரில் அமர்ந்து, கிருஷ்ண மேனன் மார்க்கில் இருந்த ஜெகஜீவன் ராம் வீட்டிற்குச் சென்றார். ஜெகஜீவன் ராம் அனைவரையும் அறையை விட்டு வெளியேறச் சொன்னார்.

"அறையில் அவர் தனியாக இருந்தபோது, ​​​​ஜெகஜீவன் ராம் தனது இருக்கையில் இருந்து எழுந்து, கிருஷ்ணகாந்தின் காலில் தனது தொப்பியை வைத்து, 'இப்போது எனது மரியாதை உங்கள் கைகளில் உள்ளது' என்று கூறியதாக" நீரஜா சௌத்ரி எழுதுகிறார்.

கிருஷ்ணகாந்த் ஜெகஜீவன் ராமுக்கு ஊடகங்களில் உள்ள தொடர்புகள் மூலம் உதவ முயன்றார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதல் பக்கத்தில் சயீத் நக்வியின் கட்டுரை வெளியிடப்பட்டது, அதில் சுரேஷ் ராம் மீது அனுதாபம் காட்டப்பட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து செய்தித்தாள்களும் இந்த செய்தி குறித்து மௌனம் காத்தன. ஆனால் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி 46 வயதான சுரேஷ் ராம் மற்றும் அவரது காதலியின் புகைப்படங்களை தனது பத்திரிகையான சூர்யாவில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்தச் செய்தியின் தலைப்பு 'ரியல் ஸ்டோரி'. சூர்யாவின் அன்றைய தின விற்பனை எதிர்பார்த்ததை விடவே அதிகமாக இருந்தது. அந்தச் செய்தி, ஜெகஜீவன் ராமின் இந்தியப் பிரதமர் கனவுக்கு நிரந்தரமாக முடிவு கட்டியது.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் தனது சுயசரிதையான நூல் ஒன்றில் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு நாள் மதியம் எனது மேஜையில் ஒரு பாக்கெட் வந்தது. அதில் ஜெகஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராமும் ஒரு கல்லூரிப் பெண்ணும் நெருக்கமாக இருந்த படங்கள் இருந்தன."

குஷ்வந்த் சிங் எழுதுகிறார், "அதே மாலையில் ஜெகஜீவன் ராமின் தூதர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர் என்னிடம் வந்தார். அந்தப் படங்களை நேஷனல் ஹெரால்டு மற்றும் சூர்யாவில் பிரசுரிக்காமல் இருந்தால் பல சலுகைகளைச் செய்து தருவதாகத் தெரிவித்தார். நான் அந்தப் புகைப்படங்களுடன் இந்திரா காந்தியிடம் சென்றேன்."

"ஜெகஜீவன் ராமின் வாய்ப்பைப் பற்றி நான் குறிப்பிட்டபோது, ​​​​அந்த நபர் மீது எனக்கு ஒரு துளிகூட நம்பிக்கை இல்லை என்று இந்திரா காந்தி கூறினார்," என்று குஷ்வந்த் மேலும் எழுதுகிறார்.

"ஜெகஜீவன் ராம் எனக்கும், என் குடும்பத்துக்கும் எந்த ஒரு நபரையும் விட அதிக அளவில் கேடு விளைவித்துள்ளார். முதலில் அவர் முழுமையாக மாற வேண்டும் என்று அவரிடம் சொல்லுங்கள். அதன் பிறகு நான் அந்தப் படங்களை வெளியிட வேண்டாம் என்று மேனகாவிடம் சொல்கிறேன்."

சூர்யா மற்றும் நேஷனல் ஹெரால்டு ஆகிய இரு பத்திரிக்கைகளிலும் குறிப்பிட்ட சில இடங்களில் கருப்புப் பட்டைகள் மூலம் மறைத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டன.

மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்த பிறகு, ஜெகஜீவன் ராம் பிரதமர் பதவிக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருந்திருக்கலாம் என்பதை இந்திரா காந்தி மற்றும் சரண் சிங் ஆகிய இருவரும் அறிந்திருந்தனர். ஆனால் இந்த பாலியல் புகார் பெரிய அளவில் பேசப்பட்ட பிறகு, அவர் மீளமுடியாத நிலைக்குச் சென்றார். அது அவருடைய பிரதமர் கனவை முற்றிலும் தகர்த்தது.

சரண்சிங்கை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்ற இந்திரா காந்தி

இந்திரா காந்தியிடம் இருந்து மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அவர் சபையை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

திகார் சிறையில் இருந்தே, சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23 அன்று அவருக்கு மலர் கொத்து அனுப்பினார் இந்திரா. அவர் டிசம்பர் 27 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட அவருக்கு திகார் சிறை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மரியாதையுடன் வணக்கம் செலுத்தினர். அதே நாளில், சரண் சிங்கின் மகன் அஜித் சிங்குக்கு ஜெயந்த் என்ற மகன் அமெரிக்காவில் பிறந்தார்.

சரண் சிங் சத்யபால் மாலிக் மூலம் இந்திரா காந்திக்கு செய்தி அனுப்பினார், "இந்திரா காந்தி எங்கள் இடத்தில் தேநீர் அருந்தினால், மொரார்ஜி தேசாய் நன்றாக இருப்பார்," என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சரண் சிங்கின் வீட்டை இந்திரா காந்தி அடைந்ததும், வாயிலுக்கு வந்து அவரை வரவேற்றார்.

இந்தச் சந்திப்பின் மூலம், சரண் சிங் மொரார்ஜி தேசாய்க்கு ஒரு செய்தி அனுப்ப விரும்பினார். தேவைப்பட்டால், இந்திரா காந்தியுடன் நட்புடனும் செயல்பட முடியும் என்பதே அந்தச் செய்தி.

மறுபுறம், இந்திரா காந்தியும் ஜனதா கட்சியின் அதிருப்தி தலைவரை சந்திப்பதன் மூலம் தனக்கும் பிரச்னையை உருவாக்க முடியும் என்பதைக் காட்ட விரும்பினார்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து சரண் சிங் பிரதமரானார். சத்தியப்பிரமாணம் செய்த பிறகு, சரண் சிங் இந்திரா காந்தியை அவரது இல்லமான வில்லிங்டன் கிரசெண்டிற்கு வந்து நன்றி தெரிவிக்க அழைத்தார்.

நீரஜா சௌத்ரி கூறுகையில், "பிஜு பட்நாயக்கை பார்க்க சரண் சிங் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து திரும்பும்போது அவர் இந்திரா காந்தியின் இல்லத்திற்குச் சென்றிருக்கவேண்டும்.

ஆனால் இதற்கிடையில் அவரது உறவினர் ஒருவர் அவரிடம், 'நீங்கள் ஏன் அவரது இடத்திற்குச் செல்கிறீர்கள்? இப்போது நீங்கள் பிரதமர். அவர் உங்களைப் பார்க்க வர வேண்டும்' எனத் தெரிவித்தார். இதையடுத்து, சரண் சிங் இந்திரா காந்தியின் இடத்திற்குச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார்," என்றார்.

அது நடந்த விதம் ஒரு திரைப்படக் காட்சியைப் போன்றே இருந்தது.

நீரஜா கூறுகையில், "இந்திரா காந்தி தனது வீட்டின் போர்டிகோவில் சரண் சிங்குக்காக கையில் பூங்கொத்துடன் காத்திருந்தார். அப்போது சத்யபால் மாலிக்கும் இந்திரா காந்தியின் இல்லத்தில் இருந்தார். சுமார் 25 காங்கிரஸ் தலைவர்கள் சரண் சிங்குக்காக அங்கு காத்திருந்தனர்.

"இந்திராவின் கண்ணெதிரே, அவள் வீட்டிற்குள் நுழைவதற்குப் பதிலாக, சரண் சிங்கின் கார் கான்வாய் அவர் வீட்டைத் தாண்டிச் சென்றது. இதனால் இந்திரா காந்தியின் முகம் கோபத்தில் சிவந்தது," என்று மேலும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அந்தப் பூங்கொத்தை தரையில் வீசிவிட்டு, வீட்டிற்குள் இந்திரா காந்தி சென்றதை அங்கிருந்தவர்கள் பார்த்தனர்.

சத்யபால் மாலிக் கூறுகையில், "சரண் சிங்கின் அரசு இப்போது சில நாட்களுக்கு ஒரு விருந்தாளியைப் போல் மட்டுமே இருக்க முடியும் என்பதை நான் அந்த நேரத்தில் உணர்ந்தேன்," என்றார்.

பின்னர் சரண் சிங் தனது தவறைச் சரிசெய்ய முயன்றார். ஆனால் இந்திரா அதை ஏற்கவில்லை.

சரண் சிங் பிரதமராகப் பதவியேற்ற 22 நாட்களுக்குப் பிறகு, இந்திரா காந்தி அவரது அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: