You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வோலோசிட்டி: ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த 'மின்சார விமானம்' எவ்வளவு தூரம் பறக்கும்? எத்தனை பேர் பயணிக்கலாம்?
- எழுதியவர், பென் மோரிஸ்
- பதவி, வணிக ஆசிரியர்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்னும் ஒரு வருடத்தில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனைகள் படைக்க தடகள வீரர்கள் ஆவலுடன் இருப்பார்கள். இந்த கோடை திருவிழா ஒருபுறமிருக்க, அதற்கு முன்பே பாரிஸ் மாநகரம் மற்றொரு புதிய பயண அனுபவத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.
‘வோலோசிட்டி’ (Volocity) என்றழைக்கப்படும் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானம், பயணிகளை ஏற்றிக் கொண்டு பாரிஸ் மாநகரை சுற்றி வலம் வர தயாராகி வருகிறது.
எல்லாம் திட்டமிட்டபடி நடைபெற்றால், ஐரோப்பாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் முதல் விமான சேவை என்ற பெருமையை வோலோசிட்டி பெறும்.
விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலெழுவதில் இருந்து (டேக் ஆஃப்) அது வானில் பறந்து தனது இலக்கை அடைந்ததும் தரையிறங்குவது வரை, மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்பத்தை கொண்ட விமானங்களை (EVTOL -Electric Vertical take-off and landing) தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
பாரிஸ் நகர வான வீதியில் பறக்க தயாராகும் வோலோசிட்டி
இந்த வகை விமானங்கள் ஒலி மாசு ஏற்படுத்தாதவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதுடன், ஹெலிகாப்டர் போன்றவற்றை ஒப்பிடும்போது இதில் பயணக் கட்டணமும் குறைவாக இருக்கும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், மின்சார விமானங்கள் பாரிஸ் நகரில் விரைவில் தரையிறங்கும் என்று நம்பப்படுகிறது.
அதற்கு முன், வோலோசிட்டி விமானத்தை தயாரித்து வரும் ஜெர்மனியை சேர்ந்த ‘வோலோகாப்டர்’ எனும் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றிய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை முகமையின் (EASA) ஒப்புதலை எதிர்பார்த்துள்ளது.
இந்த ஒப்புதல் கிடைப்பதை பொறுத்து அடுத்த சில மாதங்களில் பாரிஸ் நகர வான் வீதியில் வோலாசிட்டியை பறக்க விட முடியும் என்பதுடன், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள இடங்களுக்கு பார்வையாளர்களை ஏற்றிச் செல்லவும் முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“அடுத்த ஆண்டின் மத்தியில் வோலோசிட்டி விமானப் போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன” என்று வோலாகாப்டர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கிறிஸ்டியன் பாயர் கூறுகிறார்.
உள் கட்டமைப்பு பணிகள்
மின்சார விமான போக்குவரத்தை வழங்குவதற்கு வசதியாக, பாரிஸ் போன்ற நெரிசலான நகரங்களில், விமானப் பாதைகள் மற்றும் அவற்றின் இறங்குதளங்களை (Vertiports) அமைப்பது தொடர்பான நிறைய பணிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு புதிய விமானத்தை உருவாக்கி, அதற்கான சான்றிதழைப் பெறுவதில் உள்ள தொழில்நுட்ப சவாலை சேர்த்து, வோலோ காப்டர் நிறுவனம், அதன் 12 ஆண்டுகால வரலாற்றில் நிறைய சாதித்துள்ளது என்பதே விமானப் போக்குவரத்து துறை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
வர்த்தக ரீதியான சவால்
ஆனால் வோலோகாப்டருக்கும், அதன் போட்டியாளர்களுக்கும் வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன என்ற வாதத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். அதாவது மின்சார விமான போக்குவரத்துக்கு உலக அளவிலான சந்தை இருக்கிறது என்பதை இந்தச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்கின்றனர் அவர்கள்.
தொழில்நுட்ப ரீதியான சவால்
வர்த்தக ரீதியான இந்த போட்டி ஒருபுறமிருக்க, மின்சாரத்தில் இயங்கும் விமானங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்கின்றனர் அவர்கள். அதாவது இதில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் கனமானவையாகவும், விலை அதிகமானதாகவும் உள்ளன. இது இவ்வகை விமான சேவைக்கான கட்டண வரம்பில் உள்ள நன்மைகளை குறைத்துவிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
அத்துடன், வோலோசிட்டி வகை விமானங்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 22 மைல்கள் வரை பறக்கும். இது ஒரு நகரத்தில் குறுகிய தொலைவில் விமானத்தை இயக்க போதுமானதாக இருக்கலாம். ஆனால் ஒரு ஹெலிகாப்டரின் இயக்க வரம்பை ஒப்பிடும்போது, இது குறைவான தொலைவாகவே கருதப்படுகிறது.
மின்சார விமான சேவைக்கு பேட்டரி தொழில்நுட்பம் ஓர் தடையாக இருக்கிறது என்பதை கிறிஸ்டியன் பாயர் ஒப்புக்கொள்கிறார்.
“பேட்டரி தொழில்நுட்பத்தில் தற்போதுள்ள தடைகளை தகர்த்தெறியும் பணிகளை, மின்சார விமான தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன” என்கிறார் அவர்.
பயணக் கட்டணம் எப்படி இருக்கும்?
அதிக சக்தி வாய்ந்த பேட்டரிகள், மலிவான விலையில் கிடைக்கும் நிலை உருவாகும்போது, குறைந்த கட்டணத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெரிய அளவிலான வோலோசிட்டி விமானங்களை இயக்க இயலும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர்.
“கிட்டத்தட்ட ஒரு ஹெலிகாப்டர் பயண கட்டணத்தை ஒத்த, கட்டணத்துடன் வோலோசிட்டி விமான சேவை தொடங்கப்படும். அதன்பின், ஒரு விமானத்தில் நான்கு அல்லது ஆறு பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் நிலை வரும்போது, பயணக் கட்டணம் படிப்படியாக குறைக்கப்படும்” என்று கூறுகிறார் பாயர்.
பெரிய அளவிலான மின்சார விமானம்
பயணக் கட்டணத்தை கருத்தில் கொண்டு, ஜெர்மனியை தளமாகக் கொண்ட லில்லியம் நிறுவனம், ஒரே நேரத்தில் ஆறு பேர் பயணிக்கும் அளவுக்கு பெரிய அளவிலான விமானத்தை வடிவமைத்துள்ளது.
வோலோசிட்டி விமானங்களை போல் இல்லாமல், தொழில்நுட்ப ரீதியில் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள லில்லியம் நிறுவனத்தின் மின்சார விமானங்களை வர்த்தக ரீதியில் இயக்குவதற்கு வசதியாக, 2025 இல், ஐரோப்பிய ஒன்றிய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை முகமையின் (EASA) சான்றிதழைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பெருநகரங்களை சுற்றிலும், ரயில் இணைப்பு சேவை குறைவாக இருக்கும் இடங்களை இலக்காக கொண்டும் தனது மின்சார விமான போக்குவரத்து சேவையை வழங்க லில்லியம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
“குறைந்த கட்டணத்தில் ரயில் போக்குவரத்து சேவை வழங்கப்படும் நகரங்களில், அதனுடன் போட்டியிட மாட்டோம். ரயில் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகள் இல்லாத இடங்களிலும், இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கடினமாக உள்ள பகுதிகளிலும் எங்களின் போக்குவரத்து வசதியை வழங்குவோம்” என்கிறார் லில்லியம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான கிளாஸ் ரோவ்.
100 விமானங்களை வாங்க திட்டம்
ஷென்சென் ஈஸ்டர்ன் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனம், (ஹெவி ஈஸ்டர்ன்) லில்லியம் நிறுவனத்தின் 100 விமானங்களை வாங்குவது தொடர்பாக, கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதை ரோவ் சுட்டிக்காட்டுகிறார்.
ஹெலி -ஈஸ்டர்ன் நிறுவனம், சீனாவின் கிரேட்டர் பே பகுதியில் விமான இணைப்பு சேவையை வழங்கி வருகிறது. ஹாங்காங், ஷென்சென், மக்காவ் ஆகிய பகுதிகள், சீனாவின் கிரேட்டர் பேயில் அடங்கும். இந்த பகுதியில் அமைந்துள்ள எழில் மிக்க மலைகள், தீவுகள் மற்றும் தீபகற்ப பகுதிகளை விமானத்தில் சுற்றிவருவது அலாதியான அனுபவம் என்கிறார் ரோவ்.
பேட்டரி தொழில்நுட்பத்தில் கவனம்
ஆனால் வோலோகாப்டர் நிறுவனத்தை போலவே, லில்லியம் நிறுவனமும் மின்சார விமான போக்குவரத்தில் எதிர்பார்க்கப்படும் போட்டியை சமாளிக்கும் விதத்தில், தங்களின் விமானங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
பேட்டரிகளின் விலையில் நிச்சயமற்ற தன்மை இருப்பதாக கூறும் ரோவ், இதன் விலை குறையும் என்பதுடன், அவற்றின் திறன் அதிகரிக்கும் என்று நம்புவதாக கூறுகிறார்.
கார்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மின்சார விமானங்களுக்கான பேட்டரிகள் உற்பத்திக்கு பயன்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
“பேட்டரிகள் உற்பத்திக்கான செயல்முறை ஒரே மாதிரியாக இருக்கும் போது, மின்சார விமானங்களுக்கான பேட்டரிகள், பிற எந்த வாகன பேட்டரிகளை விடவும் விலை அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை” என்கிறார் ரோவ்.
கார் பேட்டரிக்கும், மின்சார விமான பேட்டரிக்கும் எந்த வித்தியாசம்
ஆனால், “மின்சாரத்தில் இயங்கும் விமானங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த பேட்டரி தொகுப்பை கொண்டுள்ளன. அத்துடன் குறைந்த அளவில், அதிக விலை மதிப்பில் இந்த பேட்டரிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்தி விரைவில் அதிகரிக்க வாய்ப்பில்லை” என்கிறார் வானூர்தி பொறியியல் துறை நிபுணரான பிஜோர்ன் ஃபெர்ம்.
மின்சக்தியில் இயங்கும் விமானங்களில், அவற்றின் இயக்கத்திற்கு தேவைப்படும் ஆற்றல் பேட்டரியில் இருந்து அதி வேகமாக பெறப்படுகிறது. இது காருக்கு அதன் பேட்டரியில் இருந்து கடத்தப்படும் ஆற்றலை விட அதிகம் என்கிறார் அவர்,
மேலும், இந்த ஆற்றல் பயன்பாடு சிக்கனமாக இருக்க, விமானத்துக்கு பேட்டரியில் இருந்து மின்சாரம் (Charge) விரைவாக செலுத்தப்பட வேண்டியுள்ளது. மேலும் ஆற்றல் இழப்பும் (Discharge) விரைவாகவே செய்யப்பட வேண்டியுள்ளது, இதன் விளைவாக பேட்டரியில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் தான், மின்சார விமானங்களுக்கு காரை விட முற்றிலும் மாறுபட்ட, விலை உயர்ந்த பேட்டரி தேவைப்படுகிறது என்கிறார் பிஜோர்ன் ஃபெர்ம்.
விதை போட்டுள்ள வோலோகாப்டர் நிறுவனம்
பேட்டரி உற்பத்தி திறனில் தற்போது நிலவிவரும் பற்றாக்குறை, மின்சார விமானங்களின் போக்குவரத்து சேவையை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே, பேட்டரி தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இவ்வகை விமானங்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும் வகையில், புதிய நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்கிறார் ஃபெர்ம்.
தெற்கு ஜெர்மனி பகுதியில் உள்ள புரூச்சலில் தனது முதல் உற்பத்தி ஆலையை வோலோகாப்டர் நிறுவனம், கடந்த ஏப்ரலில் திறந்துள்ளது. ஆண்டுக்கு 50 மின்சார விமானங்களை தயாரிக்கும் திறன் கொண்ட இந்நிறுவனம், இந்த தசாப்தத்தின் முடிவில் ஆண்டுக்கு 5,000 முதல் 7,000 விமானங்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார விமானங்கள் உற்பத்தி துறையில் இன்னும் நிறைய முதலீடுகளும், பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறார் வோலாகாப்டர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கிறிஸ்டியன் பாயர்.
“எங்களின் மின்சார விமானத்துக்கு, ஐரோப்பிய ஒன்றிய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை முகமையின் சான்றிதழை பெறும் முயற்சியில் கடைசி கட்டத்தில் இருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், இந்த சேவையை லாபகரமானதாக ஆக்குவதற்கான அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்” என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்