தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும்? - மக்களவையில் நிதியமைச்சர் கூறிய பதில் என்ன?

    • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
    • பதவி, பிபிசி தமிழ்

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மொத்த செலவையும் மத்திய அரசே பார்த்துக்கொள்ளும் என்பதால், அந்த கடன் சுமை குறித்து தமிழ்நாடு அரசு கவலைப்பட வேண்டாம் எனப் பேசினார்.

ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்வியைவிட்டு, அவரே ஒரு பதிலைச் சொல்லி நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்துவதாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலில் பொருளாதாரளம் குறித்துப் பேசினார்.

அப்போது, அவர் வளர்ந்த மற்றும் மிகப்பெரிய பொருளாதாளத்தைக் கொண்டுள்ள நாடுகளே கடும் நெருக்கடியை சந்திப்பதாகவும், அவர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“உலக நாடுகளின் பொருளாதாரம் விழ்ச்சி அடைந்தாலும் இந்திய நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோதியால் மட்டுமே இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

நாடாளுமன்றத்தில் எய்ம்ஸ் குறித்து என்ன பேசினார் நிர்மலா சீதாராமன்?

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அவர் பேசினார்.

அப்போது, “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. அது மத்திய அரசின் திட்டம், முழுக்க முழுக்க மத்திய அரசின் தலைமையில் கட்டப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு 1977 கோடி ரூபாய். அதில், சுமார் 1627 கோடி ரூபாய் ஜப்பானின் ஜெயக்கா நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்று கட்டப்படுகிறது.

இந்த கடன் முற்றிலுமாக மத்திய அரசு சார்பில் வாங்கப்படுகிறது, இதை மத்திய அரசே ஏற்கும். இதனால், தமிழ்நாடு அரசுக்கு எந்த கடன் சிக்கலும் இல்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் 750 படுக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 900 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் 150 படுக்கைகள் தொற்று நோய்த்தடுப்பு பிரிவுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்கெனவே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை துவங்கி, 2022 ஏப்ரல் மாதம் முதல் 99 மாணவர்களைக் கொண்டு, ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தற்காலிகளாக வகுப்புகள் நடக்கின்றன,” என்று நிதியமைச்சர் பேசினார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு, அந்த மருத்துமவனை எப்போது வரும் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “முதலில் கடன் சுமைக் குறித்துப் பேசினர். தற்போது, கடன் சுமை இல்லை என்று கூறிய பின்னர், எப்போது வரும் எனக் கேட்கின்றனர். நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்,” என்றார்.

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், மாநில அரசு நிலம் கையகப்படுத்தித் தர தாமதப்படுத்தியதால்தான் மருத்துவமனை அமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

நிதியமைச்சர் அவையை தவறாக வழிநடத்துகிறார்: சு.வெங்கடேசன்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையைத் தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டினார்.

“பிரதமர் நரேந்திர மோதி 2019 ஒரு செங்கல் வைத்து அடிக்கல் நாட்டிய பிறகு, இரண்டாவது செங்கல்லைக்கூட மத்திய அரசு அங்கு வைக்கவில்லை,” எனச் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் கடன் சுமை குறித்துக் கேள்வியே கேட்கவில்லை என்றார்.

“மதுரைக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டபோதே அதை கடன் வாங்கித்தான் நிறுவ உள்ளதாகக் கூறிவிட்டனர். இந்த படுக்கைகள் எண்ணிக்கை, திட்ட மதிப்பீடு உள்ளிட்ட அனைத்தும் அப்போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய கேள்வி ஒன்றே ஒன்றுதான். எப்போது அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்பது மட்டும்தான்.

மதுரையுடன் சேர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. அங்கெல்லாம் தற்போது மருத்துவமனை அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஆனால், மதுரையில் மட்டும் இன்னும் ஏன் அமைக்கப்படவில்லை, எப்போது அமைக்கப்படும்,” என வினாவினார் சு.வெங்கடேசன்.

மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுக்க தாமதமானதாக அவர் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து வெங்கடேசனிடம் கேட்டபோது, “2019இல் மாநிலத்தில் இருந்தது அதிமுக தலைமையிலான ஆட்சி. அப்போது, அதிமுக அரசு நிலம் கையகப்படுத்தித் தர சற்றுத் தாமதப்படுத்தியது.

ஆனால், 2019இல் மக்களவை உறுப்பினராக நான் பதவியேற்ற பிறகு, மாநில அரசுடன் பேசி அந்தப் பணியும் நிறைவடைந்துவிட்டது. அப்படி மாநில அரசு தாமதப்படுத்தியிருந்தால், இத்தனை நாட்கள் ஏன் அதைக் கூறாமல் இருந்தார்கள்,” எனக் கேள்வி எழுப்பினார் வெங்கடேசன்.

இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “எப்போது மருத்துவமனை வரும் என்ற கேள்விக்கு இப்போது வரை பாஜக.,வினரிடம் இருந்து பதில் வரவில்லை. ஜே.பி நட்டா 95% பணிகள் நிறைவடைந்ததாகக் கூறியிருந்தார். நாங்கள் நேரில் சென்று பார்த்தபோது. அங்கு ஒரு செங்கல்லைக்கூட காணவில்லை. தற்போது, நிர்மலா சீதாராமன் விரைவில் அமைக்க்படும் எனக் கூறுகிறார். இவற்றில் எது உண்மை,” எனக் கேட்டார்.

நிர்மலா சீதாராமன் பேசியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனக் கூறியுள்ளார் தமிழ் நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

"ஒன்றிய அமைச்சராக இருப்பவர் இப்படி மக்களைக் குழப்பும் வகையில் பேசக்கூடாது. இது மிகப்பெரிய பொய்," என்றார்.

திமுக.வை சாடிய நிர்மலா சீதாராமன்

நேற்று (ஆகஸ்ட் 9, 2023) திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, சிலப்பதிகாரம் படிக்க வேண்டும் எனக் கூறி பேசி இருந்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், “மகாபாரதத்தில் திரெளபதி அவமானப்படுத்தப்பட்டதாக கனிமொழி குறிப்பிட்டார்.

மணிப்பூர், டெல்லி, மத்திய பிரதேசம் என இந்தியாவில் எங்கு பெண்கள் அவமானப்படுத்தப்பட்டாலும் அதை நிச்சயம் ஏற்றக்கொள்ள முடியாதுதான். ஆனால், இந்த நேரத்தில் நான் 1989ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தை நினைவுகூற விரும்புகிறேன்.

தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா இருந்தபோது, அவரது ஆடைகளைக் கிழித்தெரிந்து, அவரை அவமானப்படுத்தினர்.

இதைச் செய்த திமுக.,வினர் ஜெயலலிதாவை கண்டு ஏளனம் செய்தனர். திரெளபதி பற்றிப் பேசும் திமுக.வினர் ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். அன்று ஜெயலலிதா எடுத்த சபதத்தை நிறைவேற்றும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவர் அதே சட்டசபையில் முதலமைச்சராக நுழைந்தார்" எனப் பேசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: