You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா சேலை கிழிப்பா? சட்டமன்ற நிகழ்வுகளை நேரில் கண்ட பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி செய்தியாளர்
கடந்த சில நாட்களாக 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதில் தொடங்கிய இந்தப் பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. 1989ஆம் ஆண்டின்போது, சட்டமன்றத்தில் உண்மையில் என்ன நடந்தது? ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டாரா?
பிரதமர் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'சட்டமன்றத்திலே ஜெயலலிதாவின் சேலையை திமுகவினர் பிடித்து இழுத்தனர்` எனப் பேசினார்.
நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சும் அதற்கு அரசியல் கட்சிகள் ஆற்றும் எதிர்வினைகளும் தமிழ்நாடு அரசியலில் தற்போது பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோதி தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, “மகாபாரதம் குறித்தும் திரௌபதி குறித்தும் கனிமொழி பேசியிருந்தார். 25 மார்ச், 1989இல் நடந்த ஒரு சம்பவம் குறித்து இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைத்தே எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது. அங்கிருந்த திமுக உறுப்பினர்கள் ஜெயலலிதாவை பார்த்து பண்பற்ற விமர்சனத்தை வைத்தனர், அவரைப் பார்த்து சிரித்தனர்,” என்று தெரிவித்திருந்தார்.
இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்மலா சீதாராமனின் விமர்சனத்துக்கு பதில் அளித்திருந்தார்.
ஜெயலலிதா அரங்கேற்றிய நாடகமா?
அந்தப் பேட்டியில், "நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ்ஆப் வரலாறுகளைப் படித்துவிட்டுதான் அப்படி பேசியிருப்பார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை.
அது ஜெயலலிதா அரங்கேற்றிய நாடகம் என்று அப்போது அவையில் இருந்த அனைவருக்கும் தெரியும். இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார்.
அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி.) சட்டமன்றத்திலேயே பேசியுள்ளார். அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது," என்று குறிப்பிட்டார்.
எனவே, "தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கதும் அவையைத் தவறாக வழிநடத்துவதும் ஆகும்,” என்று கூறியிருந்தார்.
எனினும் இதை மறுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “1989இல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையே. அவையில் அன்று நான் இருந்தேன். சம்பவத்தை நேரில் பார்த்ததன் அடிப்படையில் இதைக் கூறுகிறேன்.
ஒரு பெண் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் ஜெயலலிதாவை அவமானப்படுத்தினார்கள். அத்தனையும் கருணாநிதியின் முன்னிலையிலேயே நடந்தது," என்று கூறியுள்ளார்.
இதேபோல், தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனும் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை எனக் கூறினார்.
“அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்றும் வாட்ஸ்ஆப் மெசேஜை பார்த்துவிட்டு நிர்மலா சீதாராமன் கூறியிருப்பார் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டது உண்மை, அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கிழிந்த உடையோடு சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்தது உண்மை.
இந்தச் சம்பவத்துக்கு நானே சாட்சி. அப்போது என் தந்தை குமரி ஆனந்தன் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் மூப்பனார் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்கள்.
இந்தச் சம்பவம் நடைபெற்றபோது சட்டமன்றத்தில் புத்தகங்கள் பறந்தன. அவை மற்றவர்கள் மீது பட்டு விடக்கூடாது என்பதற்காக தடுத்தபோது எனது தந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த இந்த நிகழ்வு துர்திர்ஷ்டவசமானது. பெண் தலைவராக நாங்கள் வருத்தப்பட்ட நிகழ்வு அது,” என்றார்.
சட்டப்பேரவையில் உண்மையில் என்ன நடந்தது?
திமுக 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தருணம்
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்தது.
திமுக கூட்டணி 1989ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அதிமுக கூட்டணி(ஜெயலலிதா அணி) 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 26 இடங்களிலும் அதிமுக கூட்டணி (ஜானகி அணி) 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். நிதி அமைச்சகமும் அவர் வசமே இருந்தது. மார்ச் 25, 1989இல் அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தால் ஏற்பட்ட பரபரப்பு
இதற்கிடையே, அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் ராஜினாமா செய்வது என்ற முடிவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசும்போது, "1989 தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இதனால் ஜெயலலிதாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது," என்று கூறினார் மூத்த பத்திரிகையாளர் கல்யாண் அருண்.
ஆகையால், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால், "அந்த கடிதத்தை சட்டப்பேரவைக்கு அவர் அனுப்பவில்லை. இதற்கிடையே, தேர்தலில் சீட்டுக்குப் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார் என்ற புகாரில் நடராஜன் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் கிடைத்திருக்கிறது. இந்தக் கடிதம் சபாநாயகர் தமிழ்குடிமகன் கைகளுக்குச் சென்றது. இதையடுத்து, ஜெயலலிதாவின் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்துவிட்டார்.
இது ஜெயலலிதாவுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பின்னர்தான், தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தைக் கண்டித்து சேப்பாக்கத்தில் கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தினார். தனது ராஜினாமா கடிதம் சபாநாயகர் கைகளுக்குச் சென்றதன் பின்னணியில் கருணாநிதி இருப்பதாக அவர் கருதினார்,” எனவும் கல்யாண் அருண் கூறுகிறார்.
மார்ச் 25, 1989 சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
"மார்ச் 25ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அதிமுக தரப்பிலிருந்து சத்தம் எழுப்பினர்."
அன்று நடந்தது குறித்து மேலும் விளக்கினார் கல்யாண் அருண். “கிரிமினல் குற்றவாளி பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்று ஜெயலலிதா கூறினார். அப்போது கருணாநிதி ஒரு வார்த்தையைக் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுகவினர் அவரைத் தாக்க முயன்றனர். செங்கோட்டையன் கைபட்டு கருணாநிதியின் கண்ணாடி கீழே விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தினர். பட்ஜெட் பண்டல்களை எடுத்து வீசினர்."
அந்த பட்ஜெட் பண்டல்கள் ஜெயலலிதா மீது பட்டதாகவும் அவர்மீது மேற்கொண்டு தாக்குதல் நடைபெறாமல் இருக்கும் வகையில், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் அவரைச் சூழ்ந்துகொண்டதாகவும் கல்யாண் அருண் தெரிவித்தார்.
இதனால், "அவர்கள் இருவர் மீதும்தான் அனைத்து அடியும் விழுந்தது. திமுக தரப்பில் இருந்து கோ.சி.மணி மேஜை மேல் பட்ஜெட் உரையை வைத்துப் படிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சிறிய நாற்காலியை எடுத்து ஜெயலலிதா மீது போட முயன்றார்.
அப்போது, துரைமுருகன் கோ.சி.மணி மீது மோதியதில் அந்த நாற்காலி கீழே விழுந்தது. இந்தக் களேபரத்திற்கு நடுவே, துரைமுருகனின் கையில் ஜெயலலிதாவின் புடவை மாட்டிக்கொண்டபோது அவரது புடவை கிழிந்தது,” என்றார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவையில் இருந்து ஜெயலலிதாவை பத்திரமாக அழைத்து வந்த அதிமுகவினர், அவரை தேவகி மருத்துவமனையில் அனுமதித்தனர் என்றும் கூறினார் கல்யாண் அருண்.
இந்தச் சம்பவத்தின்போது சட்டப்பேரவையில் இருந்த மற்றொரு மூத்த பத்திரிக்கையாளரான திருநாவுக்கரசும் ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்தது உண்மை என்கிறார்.
பட்ஜெட் உரையை கருணாநிதி வாசிக்கத் தொடங்கியபோது, தனது ராஜினாமா கடிதத்தை உங்களிடம் கொண்டுவந்து கொடுத்தது யார் என்று அவரிடம் ஜெயலலிதா கேள்வி எழுப்பியதாகவும், தனது கேள்விக்குப் பதில் கூறிவிட்டு பட்ஜெட்டை படிக்கும்படியும் ஜெயலலிதா கூறியதாகவும் திருநாவுக்கரசு கூறுகிறார்.
இருப்பினும், "கருணாநிதி ஒரு வார்த்தையைக் கூறிவிட்டுத் தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார். அப்போது அதிமுகவினர் கருணாநிதியின் பட்ஜெட் உரையைப் பிடுங்கினர். அப்போது, தவறுதலாக கைப்பட்டு அவரது கண்ணாடி கீழே விழுந்துவிட்டது.
இதனால் கொதித்துப்போன திமுகவினர் இடையிலிருந்த டேபிள் மீது ஏறி கையில் கிடைத்ததை எல்லாம் கொண்டு தாக்கினர். அப்போது ஜெயலலிதா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது சேலையும் இழுக்கப்பட்டது,” என்கிறார் திருநாவுக்கரசு.
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2003ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசும்போது, "துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் அவையில் வைத்தே என் சேலையை இழுத்து, என் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது எனக்கு பாதுகாப்பு இல்லாததால் அதன் பின்னர் 1991 வரை நான் அவைக்கு வரவில்லை," என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், அப்போது ஜெயலலிதா பக்கத்தில் இருந்த திருநாவுக்கரசரே இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேபோல் கருணாநிதியும் ஜெயலலிதா சொல்லித்தான் அதிமுகவினர் தன்னைத் தாக்க முயன்றனர் என்று பின்னர் கூறினார்.
அப்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவரும் தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.
"ஜெயலலிதாவின் ராஜினாமா கடித விவகாரம் தொடர்பாக அப்போது பரபரப்பான சூழல் நிலவியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று காலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, கருணாநிதியை பட்ஜெட் உரையை வாசிக்க விடக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. முடிந்தால் அவரது கையில் இருக்கும் பட்ஜெட் புத்தகத்தைப் பறிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. ஆனால் யார் பறிப்பது என்று முடிவு செய்யப்படவில்லை," என்று கூறுகிறார்.
"ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டிய அறிந்த கருணாநிதி பட்ஜெட்டை மேஜை மேல் ஒரு சிறிய டேபிள் மேல் வைத்து வாசித்தார். இதன் பின்னர் பட்ஜெட்டை படிக்கக் கூடாது என்று ஜெயலலிதா சொல்ல, அவர் தொடர்ந்து பட்ஜெட்டை படிக்க வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் கருணாநிதி கையில் இருக்கும் பட்ஜெட் உரையை இழுக்க அவர் சத்தம்போட்டார். இதில், கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி கீழே விழுந்தது," என்றார் திருநாவுக்கரசர்.
இதையடுத்து, "கருணாநிதியை அடித்துவிட்டார்கள் என்று நினைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் பண்டல்களை வீசினர். இதில் ஜெயலலிதாவின் தலைமுடி கலைந்தது. அவருக்குப் பாதுகாப்பாக நானும், கே.கே.எஸ்.எஸ்.ஆரும் இருந்தோம். பின்னர் அவரை பத்திரமாக வெளியே அழைத்து வந்தோம்,” என்றார்.
அதோடு, இந்தச் சம்பவத்தின்போது கருணாநிதி மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை, ஜெயலலிதாவின் சேலையும் இழுக்கப்படவில்லை என்கிறார் தற்போதைய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்