You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிப்பூர்: மெய்தேய் - குக்கி மோதலுக்கு நடுவே நாகா பழங்குடிகளால் புதிய சிக்கல்
- எழுதியவர், திலீப் குமார் ஷர்மா
- பதவி, பிபிசி இந்திக்காக, குவஹாத்தியில் இருந்து
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த 3 மாதங்களாக நீடிக்கும் மெய்தேய் - குக்கி இன மோதலுக்கு மத்தியில், தற்போது நாகா பழங்குடியின மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு பழங்குடி இனங்களைச்சேர்ந்த மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தின் தமெங்லாங், சந்தேல், உக்ருல் மற்றும் சேனாபதி மாவட்டங்களில் நாகா பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தலைநகர் இம்பால் முதல் மற்ற மலை மாவட்டங்களிலும் சிறிய எண்ணிக்கையில் நாகா மக்கள் வசிக்கின்றனர்.
கடந்த புதன்கிழமை ஆயிரக்கணக்கான நாகா பழங்குடியினர் தங்களின் இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மே 3 முதல் குக்கி பழங்குடியினருக்கும் மெய்தேய் சமூகத்தினருக்கும் இடையே தொடங்கிய இன வன்முறை மாநிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளது.
மலைகளில் உள்ள குக்கி இனத்தவர்களும், இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மெய்தேய் இனத்தவர்களும் ஒருவர் அடுத்தவரின் பகுதிகளுக்குள் செல்ல முடியாத அளவுக்கு இரு சமூகங்களுக்கு இடையேயான பிளவு ஆழமடைந்துள்ளது.
வன்முறைக்குப் பிறகு குக்கி பகுதிகளில் தனி நிர்வாகம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் எந்த பழங்குடியினருக்கும் தனியான சலுகைகள் அளிக்கும்போது, தங்களின் நலன்களையும் நிலத்தையும் இந்திய அரசு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மணிப்பூரின் நாகர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்.
மணிப்பூர் அரசின் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல் நிர்வாகத்தில் கீழ்மட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வரை அனைவருமே சாதியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் பாஜக ஆட்சியின் கீழ் உள்ளது. ஆனால் குக்கி மக்கள் வசிக்கும் மலை மாவட்டங்களில் நிகழ்ந்துள்ள வன்முறை அரசின் பிடியை தளர்த்தியுள்ளது.
மாநிலத்தில் வன்முறை வெடித்து 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் முதல்வர் என். பிரேன் சிங்கால் இன்னும் குக்கி பகுதிகளை பார்வையிட முடியவில்லை.
குக்கி பழங்குடியினரின் தனி நிர்வாக அமைப்பு கோரிக்கையானது, நாகா பழங்குடியினரும் தங்கள் கோரிக்கையை முன்வைக்க வாய்ப்பளித்துள்ளது.
குக்கி பகுதிகளில் நிர்வாக ஏற்பாடுகள் என்ற பெயரில் மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் கடைசி கட்டத்தில் நடந்து வரும் நாகா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என நாகா மக்கள் அச்சம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதனால்தான் புதன்கிழமை "நாகா ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில்" பேரணிகள் நடத்தப்பட்டன, இது இந்திய அரசிற்கு ஒரு செய்தியை அனுப்பும் முயற்சி என்று கூறப்படுகிறது.
நாகா பழங்குடியினரின் கோரிக்கை என்ன?
மணிப்பூரில் குடியேறிய நாகா பழங்குடியினரின் உச்ச அமைப்பான ஐக்கிய நாகா கவுன்சிலின் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட பேரணிகளில் இரண்டு முக்கிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
இந்திய அரசு மற்றும் பிரிவினைவாத அமைப்பான என்எஸ்சிஎன்-ஐஎம் (நேஷனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து) க்கும் இடையே 2015 ஆகஸ்ட் 3 ஆம் தேதி கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனையை எழுப்பி யுஎன்ஸி, பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு குறிப்பாணை அனுப்பியுள்ளது.
கட்டமைப்பு உடன்படிக்கைக்குப் பிறகு நீண்ட காலமாக நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும் என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் "வேறு எந்த சமூகத்தினரின்" கோரிக்கைகளையும் நிறைவேற்றும் முயற்சியில் நாகா நலன் அல்லது நிலம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”மணிப்பூரில் 20 நாகா பழங்குடியின சமூகம் உள்ளது. எனவே, வேறு எந்த சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண முயலும் போது நாகா நலன்களை பாதிக்கும் வகையிலான எந்த நடவடிக்கைகளையும் நாகா மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என்று UNC தலைவர் என்ஜி. லோரோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவுடன் நாகா எம்எல்ஏக்கள் சந்திப்பு
இந்த ஆண்டு ஜூன் மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு மணிப்பூரைச் சேர்ந்த நாகா சட்டப்பேரவை உறுப்பினர்கள், குக்கி மக்களின் தனி நிர்வாக கோரிக்கை தொடர்பாக முதல் முறையாக தங்கள் நிலைப்பாட்டை முன்வைத்தனர்.
மணிப்பூரின் மலை மாவட்டங்களுக்கான தனி நிர்வாக ஏற்பாடுகள் நாகா அமைதி நடவடிக்கையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று நாகா சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
மெய்தேய் மற்றும் குக்கி பழங்குடியினருக்கு இடையே நடந்து வரும் வன்முறையில் நாகர்கள் இதுவரை நடுநிலை வகித்தனர். ஆனால் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் சண்டை என்று வரும்போது, நாகா மக்கள் குக்கி சமூகத்துடன் நிற்பதைக் காணலாம்.
"மணிப்பூரில் நாகா மற்றும் குக்கி ஆகிய இரு இனங்களின் கலப்பு மக்கள்தொகை கொண்ட சில மலைப்பகுதிகள் உள்ளன. சண்டேல் மற்றும் தெங்னௌபல் மாவட்டங்கள் முற்றிலும் நாகா ஆதிக்கத்தில் உள்ளன. அதே சமயம் சுராசாந்த்பூர் மாவட்டத்தில் 90 சதவிகித குக்கி மக்கள் உள்ளனர்." என்று நாகா சட்டப்பேரவை உறுப்பினர் எல். டிகோ பிபிசியிடம் தெரிவித்தார்.
"பழங்குடியினர் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்ய முடியாத பல சிக்கலான பகுதிகள் உள்ளன. சுராசாந்த்பூருக்கு தனி நிர்வாகத்தை அரசு அளிக்க நினைத்தால் ஒருவேளை எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது."
ஆனால் நாகா ஆதிக்கப் பகுதிகளை இதில் சேர்த்தால் இங்கு புதிய மோதல் உருவாகலாம்.
“புதிய அமைப்பின் பெயரில் எந்த நாகா பகுதியையும் தொடக்கூடாது, அது மேலும் பிரச்சனைகளை உருவாக்கும் என்று அமித்ஷாவிடம் தெரிவித்தோம்” என்கிறார் எம்.எல்.ஏ டிகோ.
நாகா அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்கி 26 ஆண்டுகள் ஆகிறது. இனியாவது அரசு தீர்வு காண வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
நாகா அமைதிப் பேச்சுவார்த்தையை இந்திய அரசு தீர்த்து வைத்தால், மாநிலத்தின் பல பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு காண முடியும்.
மணிப்பூர் வன்முறையில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர், 60,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நாகா அமைதிப் பேச்சுவார்த்தையில் சிக்கல் எங்கே?
தற்போது நாகா அமைதி நடவடிக்கை கடினமான கட்டத்தை கடந்து வருகிறது. பிரிவினைவாதக் குழுவான என்எஸ்சிஎன் (ஐ-எம்) மற்றும் மத்திய அரசுக்கும் 'பெரிய நாகாலிம்' மற்றும் நாகாக்களுக்கு தனிக் கொடி மற்றும் அரசியல் சாசனம் போன்ற கோரிக்கைகள் மீது சிக்கல்கள் உள்ளன.
பெரிய நாகாலிம் என்பது நாகா மக்கள் வசிக்கும் வடகிழக்கில் உள்ள அனைத்து பகுதிகளின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது.
இதனால்தான் மணிப்பூரில் குடியேறிய நாகா பழங்குடியின மக்கள் அமைதிப் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்கக் கோருகின்றனர்.
ஆனால், நாகாலாந்தின் அண்டை மாநிலங்களான மணிப்பூர், அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டை இது சீர்குலைக்கும் என்பதால், இந்த யோசனையை மத்திய அரசு நிராகரித்ததாகத் தெரிகிறது.
தனி நிர்வாகம் என்ற பெயரில் இந்திய அரசு குக்கி மக்களுக்கு ஏதாவது கொடுத்தால், அது நாகா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்?
"அவர்கள் (குக்கி) தனி நிர்வாகத்தை கோரட்டும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் எங்களுடன் கையெழுத்திட்ட கட்டமைப்பு ஒப்பந்தம் பாதிக்கப்படக்கூடாது, "என்று பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் என்.எஸ்.சி.என் (ஐ-எம்) இன் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
"சுராசாந்த்பூர் மாவட்டத்தைத் தவிர குக்கிகளின் மூதாதையர் நிலங்களைக் கொண்ட எந்த மாவட்டமும் இல்லை. மீதமுள்ள நிலம் முதலில் நாகர்களின் நிலம்," என்றார் அவர்.
மணிப்பூரில் குக்கிகளுக்கும் மெய்தேய்களுக்கும் இடையே நடந்து வரும் இனக்கலவரத்தை கட்டுப்படுத்தும் பெயரில் நாகா பகுதிகளை எந்த சூழ்நிலையிலும் தொட அனுமதிக்க மாட்டோம் என்பதை இந்திய அரசுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
தன்னாட்சி பகுதிகள் மற்றும் ஒருங்கிணைப்புக்கான கோரிக்கை
மணிப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற பேரணிகளில், "நாகா கொடி, அரசியலமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை நாகா மக்களின் பிரிக்க முடியாத உரிமைகள்", "கட்டமைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்து", "பிளவுபடுத்தும் அரசியலை இந்திய அரசு நிறுத்த வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை நாகர்கள் ஏந்திச் சென்றனர்.
நாகாலாந்தில் 1950களில் இருந்து ஆயுதப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த இயக்கத்தின் கோரிக்கை நாகா மக்களுக்கு அவர்களின் சொந்த சுயாட்சி பிரதேசம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான்.
இதில் நாகாலாந்து தவிர, அண்டை மாநிலங்களான அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மரின் எல்லா நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளும் சேர்க்கப்பட வேண்டும்.
”நாகா சமூகத்தின் பகுதிகள் "தன்னிச்சையாகவும் கண்மூடித்தனமாகவும்" ஆங்கிலேயர்களால் தனித்தனியாக வைக்கப்பட்டதாகவும், பின்னர் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நாகா மக்களுக்கு அறிவிக்காமலும், ஒப்புதல் இல்லாமலும், பர்மாவிற்கும் (இப்போது மியான்மர்) இந்தியாவிற்கும் இடையில் இது பிரிக்கப்பட்டது,” என்றும் நாகாக்களுக்கு தனி தாயகம் கோரி வரும் என்எஸ்சிஎன் (ஐ-எம்) அமைப்பு கூறுகிறது.
கடந்த காலத்தில் நாகா-குக்கி மோதல்
மணிப்பூரில் உள்ள நாகா-குக்கிகளுக்கு இடையேயான பழைய தகராறு மற்றும் தனி நிர்வாகக் கோரிக்கையால் புதிய மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மேகாலயாவில் உள்ள நார்த் ஈஸ்ட் ஹில்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சேவியர் பி.மாவோ கூறுகிறார். தங்கள் பகுதியில் தனி நிர்வாகம் அமைத்தால், நாகர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், குக்கி நிலம் என்ற பெயரில் பல நாகா பகுதிகள், அவர்களின் வரைபடங்களிலும் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளது. இது எதிர்காலத்தில் புதிய மோதல்களுக்கு வழிவகுக்கும்.
"மணிப்பூர் சட்டப்பேரவையில் உள்ள 60 இடங்களில் 10 இல் நாகர்கள் மற்றும் மீதமுள்ள 10 இடங்களில் குக்கி பழங்குடியினரின் ஆதிக்கம் உள்ளது. மெய்தேய்கள் மீதமுள்ள 40 இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். மாநிலத்தின் எல்லா 8 பல்கலைக்கழகங்கள் மற்றும் முக்கியமான கல்வி நிறுவனங்களான ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அனைத்தும் இம்ஃபால் பள்ளத்தாக்கில் உள்ளன.மலைப் பகுதிகளில் முக்கியமான கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லை.இவை அனைத்தும் நாகர்கள், குக்கிகள் மற்றும் மெய்தேய் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன." என்று அவர் குறிப்பிட்டார்.
மணிப்பூரில் நாகா பழங்குடியினருக்கும் குக்கிகளுக்கும் இடையிலான ரத்தக்களரி மோதல்களின் நீண்ட வரலாறு உள்ளது. அதன் கசப்பு இப்போதும் காணப்படுகிறது.
1993 செப்டம்பர் 13 ஆம் தேதி நாகா தீவிரவாதிகள் NSCN (I-M) உடன் இணைந்து மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் தற்போதைய சேனாபதி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் சுமார் 115 குக்கி பொதுமக்களைக் கொன்றதாக கூறப்படுகிறது.
குக்கி இன மக்கள் இந்தக் கொலைகளை ஜௌபி படுகொலை என்று குறிப்பிடுகின்றனர்.
நாகர்களுக்கும் குக்கிகளுக்கும் இடையிலான பகைமை காலனித்துவ காலத்திலிருந்தே ஆரம்பமானது. ஆனால் 1990 களின் மோதல்கள் முக்கியமாக நிலம் தொடர்பானவை.
மணிப்பூரின் மலைகளில் குக்கிகள் தங்களின் "தாயகம்" என்று கூறும் பகுதிகளை கிரேட்டர் நாகாலிமின் ஒரு பகுதி என்று NSCN (I-M) விவரிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்