அலெக்ஸாண்டரால் கங்கை நதியை தாண்ட முடியாதது ஏன்?

    • எழுதியவர், ரேஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கிரேக்க தத்துவஞானியும் வரலாற்றாசிரியருமான புளூடார்ச் அலெக்சாண்டரின் ஆளுமையை விவரிக்கும்போது அவர் அழகாக இருந்தாலும் முகம் சிவப்பாக இருந்தது என்றார்.

அன்றைய சராசரி மாசிடோனியர்களைவிட உயரம் குறைந்தவராகவே அலெக்சாண்டர் இருந்தார். ஆனால், இது போர்க்களத்தில் அவருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அலெக்சாண்டர் தாடி வைத்துக்கொண்டதில்லை. அவரது கண்ணங்கள் ஒட்டியும், தாடை சதுர வடிவிலும் இருந்தன. அவரது கண்கள் கடுமையான உறுதியைப் பிரதிபலித்தன.

மார்கஸ் கர்டியஸ் அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாறான 'அலெக்சாண்டரின் வரலாறு' என்ற நூலில் பின்வறுமாறு எழுதினார்.

"அலெக்சாண்டரின் தலைமுடி பொன்னிறமாகவும் சுருளாகவும் இருந்தது. அவருடைய கண்களின் நிறம் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருந்தது. இடது கண் சாம்பல் நிறத்திலும் வலது கண் கருப்பு நிறத்திலும் இருந்தன.

ஒருவர் அலெக்சாண்டரின் முன்னால் போய் நின்றால் அந்தக் கண்களைப் பார்த்தே பயந்துவிடுவார். அவரது கண்களில் அவ்வளவு சக்தி இருந்தது. அலெக்சாண்டர் எப்போதும் ஹோமர் எழுதிய 'தி இலியாட் ஆஃப் தி கேஸ்கெட்' என்ற புத்தகத்தை உடன் எடுத்துச் சென்றார். தூங்கும் போதும்கூட அதைத் தலையணைக்கு அடியில் வைத்திருப்பார்."

"அலெக்சாண்டர் ஒருபோதும் தேக இன்பங்களில் ஆர்வம் காட்டவில்லை, மற்ற விஷயங்களில் அவரைப் போன்ற தைரியமும் பயமற்ற தன்மையும் கொண்டவர்கள் குறைவாகவே இருந்திருக்க வேண்டும்.

குழந்தை பருவத்திலிருந்தே அவர் பெண்களிடம் மரியாதையாக நடந்துகொண்டார்," என்று அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாறான 'தி லைஃப் ஆஃப் அலெக்சாண்டர் தி கிரேட்' இல் புளூடார்ச் குறிப்பிடுகிறார். "அடிமை பெண்கள், காமக்கிழத்திகள், மனைவிகள் தனிப்பட்ட சொத்தாகக் கருதப்பட்ட காலம் அது."

மேலும், "அலெக்சாண்டருக்கு பெண்கள் மீது விருப்பத்தை ஏற்படுத்துவதற்காக அவருக்கு சேவைகளை செய்வதற்கு மிகவும் அழகான பெண்ணான காலிக்ஸேனாவை அவரது தாய் ஒலிம்பியா நியமித்தார்.

ஆனால், இது அலெக்சாண்டரிடம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. உடலுறவும் உறக்கமும் உடல் அழியும் என்பதையே அவருக்கு நினைவூட்டியதாக அவர் ஒப்புக்கொள்கிறார்," என்றும் புளூடார்ச் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

வையத் தலைமை கொள்வதற்கு 23 வயதில் தொடங்கிய பயணம்

இளவரசர் அலெக்சாண்டர் கிமு 334இல் தனது 23 வயதில் உலகை வெற்றி காண்பதற்கான தனது பயணத்தை கிரேக்கத்தின் மாசிடோனியாவில் இருந்து தொடங்கினார்.

ஈரான் வழியாக, 10,000 மைல்கள் பயணித்து சிந்து நதிக்கரையை அடைந்த அலெக்சாண்டரின் படையில் ஒரு லட்சம் வீரர்கள் இருந்தனர்.

கிமு 326இன் தொடக்கத்தில், அலெக்சாண்டர் ஈரானில் இருந்தபோது, இந்தியாவுக்கு அருகிலுள்ள நகரங்களின் மன்னர்களுக்கு தனது கட்டுப்பாட்டை ஏற்கும்படி தூதர்களை அனுப்பினார்.

அலெக்சாண்டர் காபூல் பள்ளத்தாக்கை அடைந்தவுடன், இந்த மன்னர்கள் அவரைச் சந்திக்கத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் இந்திய நகரமான தக்ஸிலாவின் இளவரசர் அபி.

தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காக, அலெக்சாண்டருக்கு அவரது பயணத்தில் உதவியாக இருப்பதற்காக 65 யானைகளை அபி பரிசளித்தார்.

தனது எதிரியான போரஸுக்கு எதிரான போரில் அலெக்சாண்டர் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காகவே தக்ஸிலா அலெக்ஸாண்டருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தது.

சிந்து நதியை நோக்கி முன்னேறிய அலெக்சாண்டர்

"தக்ஸிலாவின் இளவரசர் வேண்டுமென்றே இந்தியாவை அடையும் கதவை அலெக்சாண்டருக்கு திறந்துவிட்டார். அலெக்சாண்டரின் படைக்கு 5000 இந்திய வீரர்களையும் 65 யானைகளையும் அவர் வழங்கினார். மேலும், அவரது இளம் தளபதி சாண்ட்ரோகுப்டோஸும் அலெக்சாண்டருடன் இணைந்தார்," என்று மார்கஸ் கர்டியஸ் குறிப்பிடுகிறார்.

அலெக்சாண்டர் 2 மாதங்கள் தக்ஸிலாவில் தங்கியிருந்து அவர்களின் உபசரிப்புகளை ஏற்றுக்கொண்டார்.

"இந்த நேரத்தில் அலெக்சாண்டர் தனது ராணுவத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். கைபர் கணவாயை தங்கள் வசம் கொண்டு வருவதற்காக ஹெபஸ்டின் தலைமையில் ஒரு பெரிய ராணுவத்தை கைபர் கணவாய் வழியாக அனுப்பினார்" என்று அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாறான `அலெக்சாண்டர் தி கிரேட்` என்ற நூலை எழுதியவரான பிலிப் ஃபிரீமேன் குறிப்பிடுகிறார்.

பழங்குடியின கிளர்ச்சியாளர்களை நசுக்குவதற்கும், மிக முக்கியமாக, சிந்து நதியை விரைவில் அடைந்து, தனது ராணுவம் ஆற்றைக் கடக்க ஒரு பாலம் கட்டுவதற்கும் அலெக்சாண்டர் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

இந்தப் பயணத்தில் அலெக்சாண்டரின் படையுடன் ஏராளமான இந்திய மன்னர்கள், பொறியியலாளர்கள் ஆகியோரும் அணிவகுத்துச் சென்றனர். இந்துகுஷ் கிழக்குப் பகுதியில் உள்ள பழங்குடியினரை தன் கட்டுப்பாட்டிற்கின்கீழ் கொண்டு வருவதற்காக அலெக்சாண்டர் ஒரு சுற்றுவட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதன்வழியாகப் பயணித்தார்.

அலெக்சாண்டரின் கையைத் தாக்கிய அம்பு

அலெக்சாண்டர் வழியில் சந்தித்த மன்னர்கள் அனைவரும் அவர் முன் சரணடையவில்லை. அவர்களின் கோட்டைகளை அலெக்சாண்டர் கைப்பற்றினார்.

இந்தப் பயணத்தின்போது அலெக்சாண்டரின் கையை ஓர் அம்பு தாக்கிய சம்பவமும் நிகழ்ந்தது. ஒருமுறை, அலெக்சாண்டரும் அவரது படையினரும் ஓர் இடத்தில் முகாமிட்டு ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது பழங்குடியின கிளர்ச்சியாளர்கள் திடீரென அங்கு வந்து தாக்குதல் நடத்தினர்.

அருகிலிருந்த குன்றின்மீது ஏறி அலெக்சாண்டர் படையினர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர். அலெக்சாண்டர் தப்பியோடிவிட்டார் என்று கிளர்ச்சியாளர்கள் நினைத்தனர். ஆனால், குன்றின் மீதிருந்து இறங்கிவந்து அலெக்சாண்டரின் படையினர் திரும்பத் தாக்கினர். இதையடுத்து, கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தனர்.

தனது ராணுவத்தில் சேர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்களுக்கு அலெக்சாண்டர் உயிர் பிச்சை வழங்கினார். அவர்களும் முதலில் சம்பந்தம் தெரிவித்தனர், எனினும் சிலர் அங்கிருந்து ஓட முயன்றபோது, அலெக்சாண்டர் அவர்களைக் கொல்ல உத்தரவிட்டார்.

அலெக்சாண்டர் பாசிரா நகரத்தை அடைந்தபோது, அங்குள்ள வீரர்கள் மற்றும் குடிமக்கள் அனைவரும் நகரத்தை விட்டு வெளியேறி ஓர்னஸ் என்ற மலையில் ஏறியதைக் கண்டார்.

இந்த மலையைச் சுற்றிலும் ஆழமான அகழி இருந்தது, உச்சிக்குச் செல்ல ஒரேயொரு வழிதான் இருந்தது. தானியங்களை அதிக அளவில் விளைவிக்கக்கூடிய ஒரு சமவெளி இருந்தது. அங்கும் போதிய தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹெர்குலிஸால்கூட அந்த மலையில் ஏற முடியவில்லை என்று அலெக்சாண்டரிடம் உள்ளூர் வழிகாட்டி கூறினார். அலெக்சாண்டர் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார்.

அலெக்சாண்டரின் வீரர்கள் சண்டையிட்டு மலையின் உச்சியை அடைந்தனர். இந்தத் தாக்குதலால் வியப்படைந்த பஜிரா நகரின் வீரர்கள் மறுநாள் சரணடைய முன்வந்தனர். எனினும், இரவே அவர்கள் தப்பிக்க முயன்றனர்.

இதை முன்பே கணித்திருந்த அலெக்சாண்டர் தயாராக இருந்தார். அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். பலரும் பள்ளங்களில் விழுந்து உயிரிழந்தனர்.

சரணடைய மறுத்த போரஸ்

சிந்து நதியை அடைய அலெக்சாண்டரின் படையினருக்கு 20 நாட்கள் எடுத்துக்கொண்டது. அங்கு, நதியின்மீது படகுகளின் உதவியுடன் பாலம் கட்டுவதற்கு தக்ஸிலாவின் மன்னன் உதவினார்.

சிந்து நதிக்கரையில் வாழும் மக்கள் ஆற்றின் ஓட்டத்திற்கு இணையான மரப் படகுகளை இணைத்து ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பது எப்படி என்பதை அறிந்திருந்தனர்.

போரஸ் பெரிய யானைகளை உள்ளடக்கிய ஒரு பெரிய படையைக் கொண்டிருப்பதை அலெக்சாண்டரின் உளவாளிகள் அவருக்குத் தெரிவித்தனர்.

போரஸின் ராணுவத்தை தன்னால் தோற்கடிக்க முடியும் என்று அலெக்சாண்டர் நம்பினார், ஆனால் பருவமழை தொடங்கியதால் அதைச் செய்வது எளிதல்ல.

அலெக்சாண்டரின் ராணுவம் நிச்சயமாக மழையில் சண்டையிடும் அனுபவத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் மிகப்பெரிய வெப்பத்தையும் எதிர்கொண்டனர். எனவே, தன் எல்லைக்கு வந்து தன்னை சந்தித்து தன் உத்தரவை ஏற்கும்படி போரஸுக்கு அலெக்சாண்டர் செய்தி அனுப்பினார்.

எனினும், இதை ஏற்கமாட்டேன் என்று அலெக்சாண்டருக்கு போரஸ் பதிலளித்தார். தனது ராஜ்யத்தின் எல்லையில் அவரைச் சந்திக்கத் தயாராக இருந்தார்.

புயலின் மத்தியில் ஜீலம் நதியைக் கடந்த அலெக்சாண்டரின் படைகள்

அலெக்சாண்டரும் அவரது வீரர்களும் பல நாட்கள் அணிவகுத்து ஜீலம் நதியை அடைந்தனர். போரஸின் ராணுவம் ஜீலமின் மறுபுறத்தில் இருந்தது. அலெக்சாண்டர் ஆற்றின் வடக்கு கரையில் முகாமிட்டார். போரஸ் கண் பார்வையில் படாமல் ஆற்றைக் கடப்பதற்கான இடத்தை அவர் தேடிக்கொண்டிருந்தார்.

போரஸை குழப்புவதற்காக, அவர் தனது படையை ஆற்றின் கரைக்கு வெகு தொலைவில் அனுப்பினார்.

அலெக்சாண்டர் தனது வீரர்களை ஒரே இடத்தில் வைத்திருக்கவில்லை. சில நேரம் மேற்கு நோக்கியும் சில நேரம் கிழக்கு நோக்கியும் அவர்கள் சென்றனர். இதற்கிடையில் ஆற்றங்கரையில் நெருப்பு மூட்டி சத்தம் போட ஆரம்பித்தனர். ஆற்றின் மறுகரையில் இருந்த போரஸின் வீரர்கள் அலெக்சாண்டரின் வீரர்களின் நடமாட்டத்துடன் பழகி, அவர்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதை நிறுத்தினர்.

அலெக்சாண்டரை போலல்லாமல், போரஸின் ராணுவம் ஒரே இடத்தில் நின்றது. ஏனெனில் யானைகளை அவர்கள் முன்னணியில் நிறுத்தியிருந்தனர். மேலும் அவற்றை மீண்டும் மீண்டும் அங்கும் இங்கும் நகர்த்துவது மிகவும் கடினமாக இருந்தது.

அலெக்சாண்டர் அருகிலுள்ள வயல்களில் இருந்த தானியங்களைத் தனது முகாமுக்குக் கொண்டு வர உத்தரவிட்டார். போரஸின் உளவாளிகள் இந்தச் செய்தியைக் கொடுத்தபோது, அலெக்சாண்டர் மழைக்காலம் முடியும் வரை அங்கேயே இருக்க முடிவு செய்துள்ளார் என்று போரஸ் எடுத்துக் கொண்டார்.

இதற்கிடையில் பலத்த புயல் வீசத் தொடங்கியது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அலெக்சாண்டர் தனது வீரர்களை ஆற்றைக் கடக்கச் செய்தார். இருப்பினும், இந்த முயற்சியில் மின்னல் காரணமாக அலெக்சாண்டரின் பல வீரர்களும் இறந்தனர்.

போரஸ் இதை அறிந்ததும், அலெக்சாண்டரின் வீரர்களை ஆற்றைக் கடக்கவிடாமல் தடுக்க முயன்றார். போரஸ் ஒரு துணிச்சலான, திறமையான தளபதியாக இருந்தாலும், அலெக்சாண்டரின் நன்கு பயிற்சி பெற்ற வீரர்களை எப்படி எதிர்கொள்வது என்பது அவருக்கு பிரச்னையாக இருந்தது.

குறிவைக்கப்பட்ட யானைகளின் கண்கள்

போரஸின் படையில் நிறைய யானைகள் இருந்தது அவருக்குச் சாதகமாகப் பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக பிலீப் ஃபிரீமேன் எழுதும்போது, "எனினும், யானைகளுடன் எப்படிப் போரிடுவது என்பதை அலெக்சாண்டரின் படையினர் அப்போது அறிந்திருந்தனர்.

யானையைச் சுற்றி வளைத்து ஈட்டி மூலம் தாக்கினர். அதேநேரத்தில், யானையின் கண்ணைக் குறிவைத்து அம்பு எய்யப்பட்டது. கண்ணில் அம்பு தாக்கியது, கட்டுப்படுத்த முடியாமல் அங்கும் இங்கும் ஓடிய யானை தனது தரப்பைச் சேர்ந்தவர்களையே தாக்கியது," எனக் குறிப்பிடுகிறார்.

"அலெக்சாண்டர் தனது வீரர்களை போரஸின் வீரர்களுக்கு இடது மற்றும் வலதுபுறமாக அனுப்பி, அவர்களை முன்னால் சென்று போரஸின் வீரர்களைப் பின்னால் இருந்து தாக்கும்படி செய்தார். இந்தக் கடுமையான போரில், இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர்."

"இந்தப் போர் பஞ்சாபில் ஜீலம் நதிக்கரையில் உள்ள ஜலால்பூரில் நடந்தது. அலெக்சாண்டர் தனது பியூசிபேலஸ் குதிரையின் மீது சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது குதிரையின் மீது அம்பு பாய்ந்து அது இறந்தது.

அலெக்சாண்டருக்கு தனது குதிரை இறந்ததை நினைத்து வருத்தப்படக்கூட நேரம் கிடைக்கவில்லை. அவர் மற்றொரு குதிரையை எடுத்துக்கொண்டு போரைத் தொடர்ந்தார். போரஸின் வீரர்கள் அழுத்தத்துக்கு உள்ளானதும் அலெக்சாண்டரின் வீரர்கள் பின்னால் வந்து அவர்களைத் தாக்கி அவர்கள் தப்பிக்கும் வழியை அடைத்தனர்."

போரஸ் சிறை பிடிக்கப்பட்டார்

எனினும் மாபெரும் யானையின் மீதிருந்து போரஸ் தொடர்ந்து போரிட்டார். அவரது தைரியத்தைப் பாராட்டும்விதமாக, ஆயுதத்தை கிழே போட்டுவிட்டு சரணடைந்தால் உயிருடன் விடுவதாக ஓம்பியஸ் என்ற தூதுவர் மூலம் அலெக்சாண்டர் செய்தி அனுப்பினார்.

எனினும், தூது சென்றவரை போரஸ் தனது ஈட்டியால் கொல்ல முயன்றார். இதையடுத்து, வேறு ஒரு தூதுவர் மூலம் அலெக்சாண்டர் மீண்டும் செய்தி அனுப்பினார். அவர் போரஸை சமாதானது செய்து ஆயுதத்தைக் கீழே போடச் செய்தார்.

இதுகுறித்து பிலிப் ஃபிரீமேன் எழுதுகையில், "இரண்டு மன்னர்களும் சந்தித்தபோது, போரஸின் யானை, காயமடைந்த போதிலும், முழங்காலில் இறங்க அவருக்கு உதவியது. போரஸின் ஆறடி உயரத்தில் அலெக்சாண்டர் மிகவும் ஈர்க்கப்பட்டார். பிடிபட்ட பிறகு, போரஸை எப்படி நடத்த வேண்டும் என்று அலெக்சாண்டர் கேட்டார். போரஸ் உடனே பதிலளித்தார், 'ஒரு ராஜா மற்றொரு ராஜாவுக்கு என்ன செய்வாரோ அப்படி.'

"போரஸ் தனது காயத்துக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக போர்க்களத்தை விட்டு வெளியேற அலெக்சாண்டர் அனுமதித்தார். சில நாட்களுக்குப் பிறகு, போரஸுக்கு தான் கைப்பற்றிய நிலத்தை மட்டுமல்ல, அருகிலுள்ள சில கூடுதல் நிலங்களையும் திருப்பித் தந்தார். அலெக்சாண்டரின் உதவியாளர்கள், அவர் அப்படி செய்வதை விரும்பவில்லை."

அதே நேரத்தில், அலெக்சாண்டரின் ராணுவம் தங்களது கொல்லப்பட்ட வீரர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்தது. கொல்லப்பட்ட குதிரையின் நினைவாக, அலெக்சாண்டர் போர்க்களத்திற்கு அருகில் ஒரு புதிய நகரத்தை நிறுவி அதற்குத் தனது குதிரையின் பெயரான பியூசிபேலஸ் என்று பெயரிட்டார்.

"போரஸ் போராடும் நிலையில் இருக்கும் வரை, அவர் அலெக்சாண்டருடன் கடுமையாகப் போராடினார்," என்று அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் புளூடார்ச் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

மாசிடோனியா திரும்ப விரும்ப அலெக்சாண்டரின் படையினர்

அலெக்சாண்டர் இதைத் தாண்டி கங்கைக் கரைக்குச் செல்ல விரும்பினார், ஆனால் அவரது வீரர்கள் தயங்கினர்.

ஒட்டுமொத்த ராணுவத்தின் சார்பாகப் பேசிய ஒரு வயதான சிப்பாய், "எல்லா ஆபத்தையும் எதிர்கொண்டு உங்களோடு இவ்வளவு தூரம் வந்திருப்பது எங்களுக்கு மரியாதை அளித்துள்ளது. ஆனால் இப்போது நாங்கள் சோர்வாக இருக்கிறோம்," என்றார்.

"இந்த நேரத்தில் எங்கள் தோழர்கள் பலர் களத்தில் கிடக்கின்றனர். இன்னும் உயிருடன் இருப்பவர்களின் உடல்களில் இந்thap பயணத்தின் அடையாளங்கள் உள்ளன."

"நாங்கள் எங்கள் பெற்றோரைப் பார்க்கவும், எங்கள் குழந்தைகளை மீண்டும் கட்டிப்பிடிக்கவும் விரும்புகிறோம். நாங்கள் அனைவரும் மாசிடோனியாவுக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறோம்."

"அதற்குப் பிறகு நீங்கள் மீண்டும் புதிய தலைமுறை மக்களுடன் மற்றொரு பயணத்தை மேற்கொள்வீர்கள். எங்களைப் பொறுத்தவரை, இதற்கு மேல் செல்ல முடியாது."

மாசிடோனியா திரும்பிய அலெக்சாண்டர்

மூத்த சிப்பாய் பேசி முடித்ததும் சக வீரர்கள் கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். ஆனாலும், அவர் பேசியதை அலெக்சாண்டர் ரசிக்கவில்லை.

கோபமாக எழுந்த அவர் தனது குடிலுக்கு திரும்பினார். அடுத்த மூன்று நாட்களுக்குத் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் பேசவில்லை.

தாங்கள் செய்தது தவறு என்று தன்னிடம் வீரர்கள் மன்னிப்புக் கேட்க வருவார்கள் என்று அலெக்சாண்டர் நினைத்தார். ஆனால், அப்படி நடக்கவில்லை. கங்கையைச் சென்றடையும் தனது கனவு நிறைவேறாது என்பதை அவர் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டது.

பின்னர், வீரர்கள் அனைவரையும் ஒன்று கூட்டிய அலெக்சாண்டர், தாயகத்துக்குத் திரும்பிச் செல்லப் போவதாக அறிவித்தார்.

கிழக்கு திசையை கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்த அலெக்சாண்டர், தங்களின் நாடான மாசிடோனியாவுக்கு திரும்பிச் சென்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: