உத்தம் சிங்: ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்க 'சினிமா நடிகர்' புரட்சியாளரானது எப்படி?

ஆண்டு - 1933.

இடம் - பிரிக்கப்படாத பஞ்சாபின் தலைநகரான லாகூர்.

உதய் சிங், ஷேர் சிங், ஃபிராங்க் பிரேசில் என்று பிரிட்டிஷ் காவல்துறை மற்றும் உளவுத்துறை அமைப்புகளால் அறியப்பட்ட அந்த நபரின் பாஸ்போர்ட்டில் அவரது பெயர் உத்தம் சிங் என்று இருந்தது.

இந்த போலி பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டில் உத்தம் சிங் என்று கையெழுத்திடப்பட்டிருந்தது. பாஸ்போர்ட் எண் 52753.

போலீஸ் பதிவேட்டில் உதய் சிங் என்று பதிவாகியிருந்த நபர் இப்போது உத்தம் சிங் ஆகிவிட்டார். இந்த பாஸ்போர்ட்டை பெறுவதற்குப் பின்னால் இருந்த உத்தம் சிங்கின் நோக்கம், காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இந்தியாவுக்கு வெளியே செல்வதுதான்.

இந்தத் தகவலை பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் நவ்தேஜ் சிங் தனது 'தி லைஃப் ஸ்டோரி ஆஃப் ஷஹீத் உதம் சிங்கிலும்' மற்றும் பட்டியாலா அரசு கீர்த்தி கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் சிக்கந்தர் சிங் தனது ' எ சாகா ஆஃப் ப்ரீடம் மூவ்மெண்ட் அண்ட் ஜாலியன்வாலா பாக்' என்ற புத்தகத்திலும் தெரிவித்துள்ளனர்.

இருவரும் தங்கள் புத்தகத்தில் பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.

1940 மார்ச் 13 அன்று லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில், முன்னாள் பஞ்சாப் லெப்டினன்ட் கவர்னர் மைக்கேல் ஓ' ட்வையரைக் கொன்றதும் இதே உத்தம் சிங் தான்.

1919 ஆம் ஆண்டு அமிர்தசரஸில் அரங்கேறிய ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பழிவாங்கவும், இந்தியாவில் அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் மைக்கேல் ஓ' ட்வையரை உத்தம் சிங் கொன்றதாக நம்பப்படுகிறது.

டாக்டர் நவ்தேஜ் பிரிட்டிஷ் பதிவுகளை மேற்கோள் காட்டி உத்தம் சிங்கின் அறிக்கையை பதிவு செய்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதே இதற்கான மிக முக்கியமான காரணம் என்று உத்தம் சிங் அதில் தெரிவித்திருந்தார்.

உத்தம் சிங் தனது வாழ்நாளில் பல பெயர்களை மாற்றிக்கொண்டார். பல நாடுகளுக்கு பயணம் செய்தார் மற்றும் பல தொழில்களை செய்தார்.

1934 ஆம் ஆண்டு உத்தம் சிங் பிரிட்டனை அடைந்தார் என்று டாக்டர் நவ்தேஜ் குறிப்பிடுகிறார்.

“உத்தம் சிங் முதலில் இத்தாலியை அடைந்தார், அங்கு அவர் 3-4 மாதங்கள் தங்கினார். பின்னர் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா வழியாக 1934 ஆம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தை அடைந்தார்,” என்று அவர் எழுதியுள்ளார்.

"1936 மற்றும் 1937 க்கு இடையில் உத்தம் சிங். ரஷ்யா, போலந்து, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்குச் சென்று 1937 இல் இங்கிலாந்துக்குத் திரும்பினார்."

"உத்தம் சிங் தனது வாழ்க்கையில் சுமார் 18 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். குறிப்பாக கதர்(Ghadar) கட்சியுடன் தொடர்புடையவர்கள் இருந்த நாடுகளுக்கு அவர் சென்றார்," என்று உத்தம் சிங்கைப் பற்றி 4 புத்தகங்கள் மற்றும் ஒரு நாடகத்தை எழுதியுள்ள ராகேஷ் குமார் குறிப்பிட்டார்.

கடந்த சில காலமாக ஒரு சில திரைப்படக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகின்றன. உத்தம் சிங் இந்த படங்களில் பணியாற்றியதாக இந்த வீடியோக்களில் கூறப்பட்டது.

இதை உறுதி செய்வதற்காக பிரிட்டன் மற்றும் இந்தியா தொடர்பான வரலாற்றில் குறிப்பாக உத்தம் சிங் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களிடம் பேசினோம். புத்தகங்களிலிருந்தும் குறிப்புகளை எடுத்தோம்.

உத்தம்சிங் பிரிட்டனில் சில படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது எல்லா ஆதாரங்களிலிருந்தும் தெளிவாகிறது.

திரைப்படங்களில் நடித்தார்

பிரிட்டனை சேர்ந்த பீட்டர் பெயின்ஸ், மகாராஜா தலீப் சிங் மற்றும் பஞ்சாபில் உள்ள சீக்கியர்களின் வரலாற்றை ஆராய்கி செய்கிறார்.

“2004 ஆம் ஆண்டு' Sikhs in Britain' என்ற தலைப்பில் நான் ஒரு புத்தகத்தை எழுதினேன். அப்போது பிரிட்டனில் வாழும் பல பஞ்சாபி குடும்பங்களை சந்தித்தேன். உத்தம் சிங்கை சந்தித்துள்ள சில பெரியவர்களும் அதில் அடங்குவார்கள்,” என்று பீட்டர் விளக்குகிறார்.

"1930 களில் பிரிட்டனில் வாழ்ந்த பல பஞ்சாபிகளுக்கு திரைப்படங்களில் சிறிய வேடங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்."

“கால்ஸா ஜத்தா என்பது பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான குருத்வாரா சாஹிப். இது பட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர் சிங்கின் உதவியுடன் கட்டப்பட்டது. அந்த நேரத்தில் இது 'மகாராஜா பூபிந்தர் சிங் தர்மஷாலா' என்று அழைக்கப்பட்டது.”

"திரைப்பட நிறுவனங்கள் கால்ஸா ஜத்தாவை நேரடியாக அணுகின. இந்தியர்களின் கும்பல் மற்றும் பிற கதாபாத்திரங்களில் நடிக்க ஜத்தா திரைப்பட நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பியது."

இவர்களில் ஆஸா சிங் கிரேவால் மற்றும் பப்பு சிங் பெயின்ஸ் ஆகியோர் பல படங்களில் காணப்பட்டனர். இதேபோல் உத்தம் சிங்கும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

ரோஜர் பெர்கின்ஸ் கடந்த 40 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ராணுவம் மற்றும் கடற்படையின் வரலாறு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் உத்தம் சிங், மைக்கேல் ஓ'ட்வையரை கொலை செய்தது குறித்தும் அவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தின் பெயர் 'The Amritsar Legacy'. 1989 இல் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில், உத்தம் சிங் திரைப்படங்களில் பணிபுரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஹங்கேரிய பத்திரிகையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அலெக்சாண்டர் கோர்டா தனது ஸ்டுடியோவை டென்ஹாமில் அமைத்தார்." என்று ரோஜர் எழுதுகிறார்.

"அவர் 1930களில் இரண்டு படங்களைத் தயாரித்தார், அதற்கு ஐரோப்பியர் அல்லாத துணை நடிகர்கள் தேவைப்பட்டனர்."

உத்தம் சிங் 'சாபு தி எலிஃபண்ட் பாய்' மற்றும் 'தி ஃபோர் ஃபெதர்ஸ்' ஆகிய படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். இந்த படங்களில் அவர் கூட்டத்தின் ஒரு பகுதியாக தோன்றினார்."

இதுபோன்ற படங்களில் பணிபுரிந்ததன் மூலம் அவர் அவ்வளவாக வருமானம் ஈட்டியிருப்பார் என்று சொல்லமுடியாது என்று ரோஜர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ஆஸா சிங் கிரேவாலின் மகனையும் தான் சந்தித்ததாக பீட்டர் பெயின்ஸ் கூறுகிறார். திரைப்படங்களில் தனது தந்தை மற்றும் உத்தம் சிங் பணியாற்றியிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

உத்தம் சிங் டென்ஹாம் ஸ்டுடியோவுக்காக படங்களில் நடித்திருப்பதாக டாக்டர் நவ்தேஜ் சிங்கும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் வசிக்கும் அஜய் கிஷோர், உத்தம் சிங்கைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். உத்தம் சிங் தொடர்பான பல பழைய செய்தித்தாள்களின் செய்திகளை அஜய் பாதுகாத்து வைத்துள்ளார்.

சில காலத்திற்கு முன்பு அவருக்கு ஒரு செய்தித்தாளின் கட்டிங் கிடைத்தது. 1938 இல் உத்தம் சிங் கைது செய்யப்பட்ட செய்தி அதில் இருந்தது.

இந்த சம்பவத்தை குறிப்பிட்ட டாக்டர் நவ்தேஜ், உத்தம் சிங் மற்றும் அவரது ஒரு கூட்டாளி மீது, ஒருவரை மிரட்டி பணம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்று தெரிவிக்கிறார்.

இந்த வழக்கில் நடுவர் குழுவின் (Jury) ஒருமித்த கருத்து இல்லாததால் உத்தம் சிங் விடுவிக்கப்பட்டார்.

இந்த செய்தி எழுதப்பட்டபோது உத்தம் சிங் யார் என்று கூறும் வர்ணனையில், 'தி டிரம்' படத்தில் அவர் பணியாற்றியதாக எழுதப்பட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் ‘தி எலிஃபண்ட் பாய்’ படத்தின் சில காட்சிகள் பகிரப்பட்டன. இந்த கிளிப்களில் உத்தம் சிங் இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தம் சிங் 'தி எலிஃபண்ட் பாய்' படத்தில் நடித்தார் என்பதை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இந்த கிளிப்புகள் தொடர்பான அவர்களது கருத்துகள் வேறுபடுகின்றன.

அஜய் கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சில கிளிப்களையும் பகிர்ந்துள்ளார். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் கவனமாக ஆராய்ந்து, அதில் உத்தம் சிங் காணப்படுவதாக நினைக்கும் கிளிப்களைத் தேர்ந்தெடுத்ததாக அஜய் கூறுகிறார்.

'தி டிரம்' படத்தின் அந்த கிளிப்பில் உத்தம் சிங் காணப்படுகிறார் என்பதை பர்மிங்காமின் ஷஹீத் உத்தம் சிங் நல அறக்கட்டளை உறுதிப்படுத்தியதாக வரலாற்றாசிரியர் பேராசிரியர் சமன் லால் கூறுகிறார்.

உத்தம் சிங் எந்த சீனில் உள்ளார் என்பது குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் ராகேஷ் குமார்.

பெயரை பல முறை மாற்றிக்கொண்ட உத்தம்சிங்

உத்தம் சிங் 1899 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சுனாமில் பிறந்தார். பிறந்த தேதி மற்றும் ஆண்டு பற்றி வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இந்த தேதி மற்றும் ஆண்டை ஒப்புக்கொள்கிறார்கள்.

உத்தம் சிங்கின் முதல் பெயர் ஷேர் சிங். உத்தம் சிங்கின் தாயின் பெயர் நரனி மற்றும் தந்தையின் பெயர் சுஹட் ராம்.

குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர் இறந்த காரணத்தால் உத்தம் சிங் அமிர்தசரஸில் உள்ள கால்ஸா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ நேர்ந்தபோது அவரது பெயர் ஷேர் சிங் என்று எழுதப்பட்டது. இதை டாக்டர் நவ்தேஜ் சிங் உறுதி செய்துள்ளார்.

அவரது சிறுவயது பெயர் ஷேர் சிங். ஆனால் 1927 இல் அமிர்தசரஸில் உத்தம் சிங் கைது செய்யப்பட்டபோது, அவரது இரண்டு பெயர்கள் உதய் சிங் மற்றும் ஃபிராங்க் பிரேசில் முன்னுக்கு வந்தன என்று ராகேஷ் குமார் தெரிவிக்கிறார்.

"விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர் புதிய பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன் உத்தம் சிங் ஆனார். மோகன் சிங், யுஎஸ் சித்து, யுஎஸ் ஆசாத், சித்து சிங் போன்ற பெயர்கள் பிரிட்டிஷ் அரசின் பதிவுகளில் காணப்படுகின்றன.”

1940 இல் காக்ஸ்டன் ஹாலில் ஓ'ட்வையர் கொலைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டபோது, அவர் தனது பெயரை முகமது சிங் ஆசாத் என்று கூறினார்.

அதற்குப் பிறகு சிறையில் இருந்து எழுதப்பட்ட கடிதங்கள் அனைத்தும் முகமது சிங் ஆசாத் என்ற பெயரில் அல்லது அந்தப்பெயரிலான கையொப்பத்துடன் இருந்தன. மேலும் தன்னை வேறு பெயர்களில் அழைக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளும் கடிதத்தையும் அவர் எழுதினார்.

"உத்தம் சிங் பல பரிமாண ஆளுமை கொண்டவர். பகத்சிங் மற்றும் அவருடன் தொடர்புடைய இயக்கம் உத்தம் சிங் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உத்தம் சிங் பகத்சிங்கைப்போல எழுத்தாளர் அல்ல,” என்று வரலாற்றாசிரியர் பேராசிரியர் சமன்லால் தெரிவித்தார்.

"அவரது கடிதங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட மட்டத்தில் எழுதப்பட்டவை. ஆனால் சில கடிதங்கள் அரசியல் விஷயங்களையும் குறிப்பிடுகின்றன."

“உத்தம் சிங் மன உறுதியுடன் பேசுவார். நீதிமன்றத்தில் அவர் பேசியது பகத்சிங் பாணியில் இருந்தது. அங்கு அவர் மிகவும் வலுவாக தனது வாதத்தை முன்வைத்தார்.”

1919-1921 க்கு இடையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பிரிட்டிஷ் அரசுக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்த போது பிரிட்டிஷ் வீரர்களுக்கு ரயில்கள் மூலம் வெடிமருந்துகள் மற்றும் தளவாடங்கள் வழங்கப்பட்டன என்று டாக்டர் நவ்தேஜ் குறிப்பிடுகிறார்.

இந்த நடவடிக்கையில் உதவ பல இந்தியர்கள் அனுப்பப்பட்டனர். உத்தம் சிங் 1919 முதல் 1921 வரை ரயில்வேயில் பணியாற்றினார். அதற்காக அவர் 'சேவா பதக்கம்' பெற்றார்.

இது தவிர உத்தம் சிங் நைரோபியில் மோட்டார் மெக்கானிக்காகவும், அமெரிக்காவில் உள்ள ஃபோர்ட் நிறுவனத்தில் மெக்கானிக்காகவும் பணிபுரிந்தார். தச்சராகவும் அவர் பணியாற்றி வந்தார் என்று டாக்டர் நவ்தேஜ் கூறினார்.

1934 இல் பிரிட்டனுக்கு வந்த உத்தம் சிங் பல்வேறு நிறுவனங்களில் தச்சராகப் பணியாற்றினார்.

உத்தம் சிங், மதன் லால் திங்க்ராவுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார்

மைக்கேல் ஓ' ட்வையர் கொலைக்குப் பிறகு உத்தம் சிங் மீது விசாரணை நடந்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1940 ஜூலை 31 ஆம் தேதி காலை ஒன்பது மணிக்கு பென்டன்விலே சிறையில் உத்தம் சிங்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

உத்தம் சிங்கின் இறுதி சடங்குகளை நடத்த அனுமதிக்கப்படவில்லை. அவரது கல்லறையில் 'யுஎஸ்' என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளதாகவும், 1909 இல் தூக்கிலிடப்பட்ட மதன் லால் திங்க்ராவின் கல்லறைக்கு அருகில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் அரசு பதிவுகளை மேற்கோள் காட்டி டாக்டர் நவ்தேஜ் எழுதியுள்ளார்.

பின்னர் உத்தம் சிங்கின் உடல் 1974 ஜூலை 19 ஆம் தேதி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

1974 ஆகஸ்ட் 2 ஆம் தேதி அவரது அஸ்தி சேகரிக்கப்பட்டு 7 கலசங்களில் வைக்கப்பட்டது.

அவற்றில் ஒன்று ஹரித்வாருக்கும், மற்றொன்று குருத்வாரா கிரத்பூர் சாஹிப்புக்கும், மூன்றாவது ரெளஃஜா ஷெரீப்புக்கும் அனுப்பப்பட்டது. மற்றொரு கலசம் ஜாலியன்வாலா பாகிற்கு கொண்டு செல்லப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: