You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ட்விட்டரிலேயே சாட்டிங், டேட்டிங், பணப் பரிவர்த்தனை சேவைகள் - ஈலோன் மஸ்க் திட்டம் என்ன?
- எழுதியவர், பீட்டர் ஹோஸ்கின்ஸ் & ஃபேன் வாங்
- பதவி, பிபிசி நியூஸ்
இந்த வாரத் தொடக்கத்தில் ஈலோன் மஸ்க் டிவிட்டரின் லோகோவை 'எக்ஸ்' (X) என மாற்றினார். அந்த நகர்வு சீனாவின் மெகா செயலியான 'வீ சாட்(WeChat)'-இன் வடிவத்தைப் பின்பற்றுவதற்கான திட்டத்தின் முன்னெட்டுப்பாகக் கருதப்பட்டுகிறது.
கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கிய தனது சமூக ஊடக நிறுவனத்தை மிகப் பெரிய தளமாக மாற்ற விரும்புவதாக மஸ்க் நீண்டகாலமாகக் கூறி வருகிறார்.
சாட்டிங், டேட்டிங், பணப் பரிவர்த்தனை என்று 'அனைத்துப் பயன்பாடுகளும்' ஒரே செயலியில் அடங்கிய ஒன்றாக சீனாவின் 'வீ சாட்' இருப்பதாக அவர் ஏற்கெனவே ஒருமுறை பாராட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, "டிவிட்டர் தளத்திலும் அத்தகைய செயலிக்கு நெருக்கமான ஒன்றை உருவாக்குவது, மகத்தான வெற்றியாக அமையும்," என்றும் கூறியுள்ளார்.
டிவிட்டரில் அவர் பகிர்ந்த ஒரு பதிவில், வரவுள்ள மாதங்களில், "நாங்கள் விரிவான தகவல் தொடர்புகளையும் உங்கள் முழு நிதிப் பயன்பாடுகளையும் பூர்த்தி செய்யும் திறன்களை டிவிட்டரில் சேர்ப்போம்," என்று தெரிவித்துள்ளார்.
ஈலோன் மஸ்க் வளர்ந்து வரும் டிவிட்டரின் வருவாயில் இதன்மூலம் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்புகிறார்.
டிவிட்டரை வாங்கியதில் இருந்து அந்த நிறுவனம் கிட்டத்தட்ட பாதியளவிலான அதன் விளம்பர வருவாயை இழந்துவிட்டது. அதோடு அதிகமான கடன் சுமையாலும் போராடி வருகிறது.
வீ சாட் (WeChat) என்றால் என்ன? அதைப் பின்பற்ற மஸ்க் ஏன் விரும்புகிறார்?
டென்சென்ட் என்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம், 2011ஆம் ஆண்டில் வீசாட் என்ற சமூக ஊடக தளத்தைத் தொடங்கியது. அது இப்போது கிட்டத்தட்ட சீனாவின் 1.4 பில்லியன் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
இதை 'சூப்பர்-ஆப்' என்று அழைப்பதேகூட அதைக் குறைத்து மதிப்பிடுவதைப் போலத்தான்.
அதன் சேவைகளில் தகவல் அனுப்புதல், குரல் மற்றும் வீடியோ அழைப்பு, சமூக ஊடகங்கள், உணவு விநியோகம், மொபைல் கட்டணங்கள், விளையாட்டுகள், செய்திகள் டேட்டிங் சேவைகள் எனப் பலவும் அடக்கம்.
இது வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ஆப்பிள் பே, ஓலா, உபர், அமேசான், டிண்டர் மற்றும் பிற தளங்களில் கிடைக்கும் சேவைகளை அளிக்கிறது.
சீன சமூகத்துடன் அது மிகவும் நுட்பமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. அது இல்லாமல் அங்கு வாழ்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்ற அளவுக்கு அதன் வளர்ச்சி பிரமாண்டமானது.
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், GPay - அனைத்தையும் உள்ளடக்கிய ஒரே செயலி
இது வாட்ஸ்ஆப் போன்ற ஒரு தகவல் பரிமாற்ற தளமாகத் தொடங்கியது. மேலும், பயனர்களால் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட அந்தத் தளத்தின் இரண்டு அம்சங்கள்:
- வாட்ஸ்ஆப் போன்ற 'அரட்டைகள்'
- ஃபேஸ்புக்கில் இருப்பதுபோன்ற 'மொமென்ட்ஸ்'
பொதுமக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் அதன் 'வாலட்'-ஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் இணைக்க முடியும். சீனாவில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் இந்த வீசாட் மூலம் பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்கின்றனர்.
பயனர்கள் QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பணம் செலுத்துகின்றனர். வீடுகளுக்கு வரும் பல்வேறு பில்களை இதன்மூலம் செலுத்தலாம். இதுமட்டுமின்றி இதன்மூலம் முதலீடும் செய்யலாம், கடன் பெறவும் முடியும்.
அரசின் பல்வேறு சேவைகளும் வீ சாட்-இல் கிடைக்கின்றன. பயனர்கள் சமூகப் பாதுகாப்பு தகவலைச் சரிபார்க்கலாம், பயணங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகளைப் பெறலாம், மருத்துவமனைக்குச் செல்ல முன்பதிவு செய்யலாம்.
கொரோனா தொற்றுநோய் அதிவேகமாகப் பரவியபோது, இந்த வலைதளமும், செயலியும் மிக இன்றியமையாத தேவையாக மாறிப் போயின. முழு நாடும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளின் கீழ் இருந்தபோது, இந்த செயலியில் உருவாக்கப்பட்ட 'சுகாதாரக் குறியீடு' இல்லாமல் வீட்டைவிட்டு எங்கும் நகர முடியாது.
அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஒரே செயலி – இதன் சிக்கல்கள் என்ன?
ஆனால் ஒரே செயலி பல அம்சங்களைக் கொண்டிருப்பதில் பல குறைபாடுகளும் உள்ளன.
நடைமுறைக் கண்ணோட்டத்தில், வீ சாட் வலைதளம் மொபைல் ஃபோன் மெமரியின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்கிறது. பொதுவாக வீ சாட்-ஐ பயன்படுத்தப் பெருமளவு செல்ஃபோன் மெமரி தேவைப்படுகிறது.
இன்னும் ஆழமாகப் பார்த்தால், சீன பொதுமக்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் வீ-சாட் இடம்பெற்றிருப்பதால் தனிமனிதனின் தனியுரிமை பாதிக்கப்படுவதாகவும், ஒவ்வொருவரையும் தனித்தனியாக அரசு கண்காணிப்பதாகவும் பலர் கவலைகளை வெளிப்படுத்துகின்றனர்.
பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள், ஈலோன் மஸ்க்கின் டிவிட்டர் போன்ற பல வெளிநாட்டு சமூகஅ ஊடகங்களைப் பெற முடியாத அளவுக்கு சீன அரசு அந்நாட்டு மக்களைத் தடுத்து வைத்துள்ளது.
இணையத்தின் மீதான அரசின் கட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு இந்த சேவைகளை அளிக்கும் வீ சாட்-ஐ முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை பொதுமக்களுக்கு உள்ளது. அரசை விமர்சித்து அவர்கள் பேசினால்கூட அது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அரட்டையின் போதோ, வேறு தருணங்களிலோ அவர்கள் முரண்பாடான கருத்துகளை வெளிப்படுத்தும்போது, அவர்கள் அந்த செயலியைத் தற்காலிகமாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அது சாதாரண பாதிப்பாக இருப்பதில்லை.
வெளித்தோற்றத்தில் சர்ச்சையாகக் கருதப்படும் தகவல்களைப் பகிரும் நபர்கள்கூட அரசின் தணிக்கை நடவடிக்கைகளில் சிக்கி பல இன்னல்களை எதிர்கொள்ளும் நிலையும் காணப்படுகிறது. அவர்களுடைய கணக்குகள் முடக்கப்படுவதால் பல்வேறு அவதிகள் ஏற்படுகின்றன.
அமெரிக்காவில் இருக்கும் கொள்கைசார் ஆராய்ச்சி நிறுவனமான 'அட்லாண்டிக் கவுன்சிலில்' சீனா சார்ந்த ஆராய்ச்சிகளுக்கான இயக்குநராக இருக்கும் கிட்ச் லியாவோ, 'வீ-சாட்' போன்ற சூப்பர்-செயலிகள், நாட்டு மக்களின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்பாட்டில் வைக்க முயலும் அந்நாட்டு அரசுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்கிறார்.
"முக்கியமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு எதிராக இருக்கும் எதையும் தடுப்பதற்காக, இந்த செயலியை அரசு பயன்படுத்தும் ஆபத்தும் அதிகமாகவே காணப்படுகிறது," என்கிறார்.
மேற்குலகில் WeChat எடுபடுமா?
சீனாவில் வீ-சாட்டின் மாபெரும் வெற்றிக்கு, இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன என்று ஹாங்காங்கின் சீன பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான கெச்செங் ஃபாங் பிபிசியிடம் கூறுகிறார்.
ஒன்று, சீனாவில் ஒப்பீட்டளவில் இணையதளம் தாமதமாகவே வளர்ச்சியடைந்தது என்பதால், அங்குள்ள பெரும்பாலான மக்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களைவிட ஸ்மார்ட்ஃபோன்களில் வீ சாட்-ஐ பயன்படுத்துகின்றனர்.
"அதாவது அவர்கள் பரந்து விரிந்திருக்கும் இணையதளத்தைப் பயன்படுத்துவதைவிட சிறிய அளவிலான ஸ்மார்ட்ஃபோன் செயலிகளை பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்ஃபோன்களில் 'எல்லா வசதிகளையும்' கொண்ட செயலிகளை உருவாக்குவது மிகவும் எளிதானது," என்று அவர் கூறுகிறார்.
பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போல் சீனாவில் 'போட்டி ஒழுங்குமுறை சட்டங்கள்' இல்லை. இதனால் வீ-சாட் செயலி, ஷாப்பிங் தளமான டவோபவோ(Taobao), வீடியோ செயலியான டௌயின்(Douyin) போன்றவறை முடக்குகிறது என்கிறார் ஃபாங் கூறுகிறார்.
ஈலோன் மஸ்கால் சீனாவிற்கு வெளியே இதே போன்ற செயலியை உருவாக்க முடியுமா?
இதற்கான பதில் விரைவில் தெரிய வரும் எனக் கூறும் நிபுணர்கள், மேலும் இதுபோன்ற கேள்விகள் அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பொறுத்தது என நம்புகின்றனர்.
'ட்ரிவியம் சீனா' எனப்படும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கென்ட்ரா ஷேஃபர் கூறுகையில், சீனாவில் வீ-சாட் செயலியை 'அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமானதாக' மாற்றுவதற்கு உதவிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட சில முக்கியக் கூறுகளை மஸ்க் ஏற்கெனவே அங்கீகரித்துள்தாகக் கூறுகிறார்.
இதுதான் மஸ்க் அறிமுகப்படுத்தவுள்ள 'சூப்பர்-செயலியின்' ரகசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
முதலீட்டு நிறுவனமான ரேஸ் கேபிட்டலை சேர்ந்த எடித் யூங், சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பத்தைப் பரவலாக ஏற்றுக்கொள்வது மட்டுமே என்று சுட்டிக்காட்டுகிறார்.
வாடிக்கையாளர் பணம் கொடுத்தால் அதை வாங்க வேண்டும் என்ற சட்டம் இருந்தும் சீனாவில் கடைகள் பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே விரும்புகின்றன.
இந்த வேறுபாடு, மஸ்கின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு தடையாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
"உண்மையான பணமில்லா பணப்பரிவர்த்தனை அல்லது கிரெடிட் கார்டு இல்லாத சமூகத்தை உருவாக்க மேற்கத்திய உலகம் இன்னும் அதிக காலம் எடுத்துக்கொள்ளும்," என்று அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்