You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓலா, ஊபர் டிரைவர்கள் அத்துமீறினால் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
- எழுதியவர், சுசீலா சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஜூலை 21ஆம் தேதி மாலை சுமார் ஏழு மணி.
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைக்கு எதிராக பெங்களூருவின் டவுன் ஹாலில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்புவதற்காக அதிரா புருஷோத்தம் டாக்ஸிக்கு முன்பதிவு செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்.
ஆனால் டாக்ஸி கிடைக்காததால் அவர் ரேபிடோ பைக்கை பதிவு செய்தார்.
கேரளாவை சேர்ந்த அதிரா புருஷோத்தம், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பாலுறவு, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் குறித்து இளம் வயதினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை அவர் செய்து வருகிறார்.
ரேபிடோ டிரைவர் தன்னுடன் வேறொரு எண்ணைப் பகிர்ந்து கொண்டதாகவும், டிராஃபிக்கில் சிக்கிக்கொண்டிருப்பதால் வருவதற்குத் தாமதமாகும் என்று சொன்னதாகவும் அதிரா கூறுகிறார்.
தான் முன்பதிவு செய்த பைக்கின் நம்பரும் தன்னை அழைத்துச் செல்ல வந்த பைக்கின் நம்பரும் வேறாக இருந்தன என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
நம்பர் பிளேட் மாறியிருப்பது குறித்து டிரைவரிடம் கேட்டதற்கு, ’ரேபிடோ பைக்’ சர்வீஸுக்கு சென்றுள்ளது என்றும் அதனால் வேறு பைக்கை கொண்டு வந்ததாகவும் டிரைவர் பதிலளித்துள்ளார்.
அதிரா புருஷோத்தம் முன்பதிவு தொடர்பான எல்லா விவரங்களையும் உறுதி செய்துவிட்டு வீட்டிற்குச் செல்ல பைக்கில் அமர்ந்தார்.
அன்று என்ன நடந்தது?
தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் ஓர் இடம் இருப்பதாகவும், அது எப்போதுமே வெறிச்சோடிக் கிடக்கும் என்றும் அதிரா குறிப்பிட்டார்.
"அந்த இடம் வந்தபோது டிரைவர் பைக்கின் வேகத்தைக் குறைத்து வலது கையால் மட்டும் பைக்கை ஓட்ட ஆரம்பித்தார். அவரது இடது கை ஆடிக்கொண்டிருந்தது.
அவரது உயரம் குறைவாக இருந்ததால் என்னால் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க முடிந்தது. நான் கவனமாகப் பார்த்தபோது அவர் சுய இன்பத்தில் ஈடுபட்டிருப்பது எனக்குத் தெரிந்தது,’’ என்கிறார் அதிரா.
“சம்பவம் நடந்த இடத்தில் எந்த வீடும் இல்லை. நான் பயந்துபோனேன். ஆபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, அமைதியாக இருந்துவிடுவது நல்லது என்று நினைத்தேன். டிரைவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவாரோ என்று பயந்தேன்,” என்று அந்தத் தருணத்தில் ஏற்பட்ட அச்சம் குறித்து விவரித்தார் அதிரா.
"இந்த நபருக்கு என் வீட்டின் முகவரி தெரியக்கூடாது என்று நான் நினைத்தேன். வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இறக்கிவிடச் சொல்லிவிட்டு, அவர் சென்ற பிறகு வீட்டை நோக்கி நடந்தேன்," என்றார் அவர்.
அதன்பிறகு அந்த நபர் தனக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்ததால் அவரை பிளாக் செய்ததாக அதிரா கூறுகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரேபிடோவிடம் அதிரா புகார் அளித்தார். ரேபிடோ உடனே நடவடிக்கை எடுத்து டிரைவரை பிளாக் லிஸ்ட் செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிரா புருஷோத்தம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். அந்த நபர் மீது ஐபிசியின் 354 (ஏ), 354 (டி), 294 பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற வேறு சம்பவங்கள் என்ன?
பெங்களூரில் அதிரா புருஷோத்தமுக்கு நடந்தது தனிப்பட்ட ஒரு விவகாரம் அல்ல.
சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் ஒரு நபர் பொது இடத்தில் சுய இன்பம் செய்த வீடியோ வைரலானது.
இந்தச் சம்பவத்தை வெட்கக்கேடானது என்று வர்ணித்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை, எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் கர்நாடகாவில் ஓட்டுநர் ஒருவர் தன்னிடம் ஆபாச படத்தைக் காட்டியதாகவும், சுய இன்பம் செய்ததாகவும் பெண் பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
வக்ர மனதின் அடையாளம்
இது ஒரு நோய்வாய்ப்பட்ட மனநிலையின் அறிகுறி என்றாலும் இதை மனநலம் தொடர்பான நோயாகக் கருத முடியாது என்றும் மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது இடங்களில், பெண்கள் முன்னிலையில் இதுபோன்ற செயல்களைச் செய்வது, அந்த நபருக்கு பாலுறவு இன்பம்தான் முன்னுரிமையானது என்பதைக் காட்டுவதாக மனநல மருத்துவர் பூஜாசிவம் பிபிசியிடம் தெரிவித்தார்.
அவ்வாறு செய்வது சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை "அவர் புரிந்துகொள்ள இயலாமல் உள்ளார்" என்பதையும் காட்டுவதாக மருத்துவர் பூஜாசிவம் ஜேட்லி கூறுகிறார்.
"வலிமையின் அடையாளமாக ஆணுறுப்பை முன்வைக்கும் சிந்தனை பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. மறுபுறம் பொது இடங்களில் பெண்கள் அல்லது குழந்தைகள் முன்னிலையில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டும் வக்ரமான செயல், அவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் தன்னை அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற அந்த நபரின் மனநிலையைக் காட்டுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
'ஆணாதிக்க எண்ணம்'
பொதுவெளியில் இதுபோன்ற செயல்கள் அதீத ஆண்மை, ஆணாதிக்கம், வக்கிரமான பாலியல் மனநிலையின் அடையாளம் என்று பாலினப் பிரச்னைகள் தொடர்பாகப் பணியாற்றும் பத்திரிக்கையாளர் நசீருதீன் கூறுகிறார்.
"ஆணுறுப்பு, ஆண்மையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. எனவே அதன் மூலம் தனது ஆண்மையை நிரூபிக்க அவர்கள் விரும்புகின்றனர். அதேநேரத்தில் தனது வெற்றிகரமான வெளிப்பாடு குறித்தும் கவலைப்படுகின்றனர்."
"ஆண் ஒருவர் பனியன், உள்ளாடை மட்டுமே அணிந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிவதை நாம் பலமுறை பார்க்கிறோம். அவர் எங்கு வேண்டுமானாலும் நின்று சிறுநீர் கழிக்க முடியும். இதை யாரும் விசித்திரமாகக் கருதுவதில்லை.
அதேநேரத்தில் அவர் பெண்களை போகப் பொருளாகவே பார்க்கிறார். தனது பாலியல் ஆசையை நிறைவேற்றுவதற்கான வழிமுறையாகப் பார்க்கிறார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்படிப்பட்டவர்கள் எதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பார்கள் என்றும் இதுபோன்ற செயலால் பிறர் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை என்றும் டாக்டர் பூஜாசிவம் ஜேட்லி தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக செய்திகளில் அடிபடுவதை இப்போது நாம் பார்க்கிறோம். ஆனால், அதற்காகவே இந்தச் செயல்கள் அதிகரித்துள்ளன என்று அர்த்தமில்லை. இத்தகைய விவகாரங்களைச் செய்தியாக வெளியிடுவது அதிகரித்துள்ளது.
பாலியல் துன்புறுத்தலை எதிர்க்க சரியான வழி எது?
ஒவ்வொரு பெண்ணும் எப்போதாவது, எங்காவது, ஏதோவொரு வயதில் தன் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ இப்படிப்பட்ட மோசமான அனுபவங்களைச் சந்திக்க நேரிடுகிறது.
இந்தப் பெண்களில் பலர் தயக்கம் காரணமாக மௌனமாக இருந்து விடுகிறார்கள். ஆனால் சிலர் அதற்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள்.
அதிரா புருஷோத்தமும் ஒரு கணம் மனதளவில் பலவீனமடைந்தார். ஆனால் பிறகு அவர் தனது புகாரை ரேபிடோ, சமூக ஊடகங்கள் மற்றும் காவல்துறையிடம் பதிவு செய்தார்.
ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற சம்பவம் நடந்தால், இந்திய சட்டத்தின்படி அவர் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். அதாவது அந்தச் சம்பவம் எங்கு நடந்திருந்தாலும், எந்தவொரு காவல் நிலையத்திலும் அவர் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். அதே நேரத்தில் ஆன்லைனிலும் புகார் செய்யலாம்.
மகளிர் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சோனாலி கட்வாசரா, ”சமூக ஊடகங்களில் உங்கள் கருத்தைத் தெரிவிப்பது தவறு அல்ல. ஆனால் சட்டத்தின் வாயிலாகச் செல்வதே முறையான வழி என்பதால் அதுவே சரியானது,” என்று குறிப்பிட்டார்.
"இந்த விவகாரத்தில் ஒரு பெண் உண்மையில் நடவடிக்கை எடுக்க விரும்பினால், விரைவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, அமைதியான மனதுடன் நடந்த சம்பவம் பற்றிய முழுத் தகவலையும் கொடுக்க வேண்டும்."
சட்டம் என்ன சொல்கிறது ?
அதேநேரம் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக இன்னொரு முக்கியமான விஷயத்தை அவர் குறிப்பிட்டார்.
“எந்தவொரு பெண்ணும் டாக்ஸியின் சேவையை எடுத்துக் கொண்டால், சலூன் அல்லது க்ளீனிங் செய்ய நிறுவன ஊழியரை வீட்டிற்கு அழைத்து, வீட்டில் சேவை வழங்க வந்தவர் தகாத செயலைச் செய்தால், அந்தப் பெண் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் புகார் அளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த நிறுவனங்கள் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்காக அமல் செய்யப்பட்டுள்ள POSH சட்டம் 2013இன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
”புகார் அளிக்கும் பெண் அவர்கள் நிறுவனத்தில் வேலை செய்யாவிட்டாலும், அவரைத் துன்புறுத்தியவர் நிறுவனத்தின் ஊழியர் என்றால், கம்பெனி அவர் மீது உள்புகார் குழுவின் (ஐசிசி) கீழ் நடவடிக்கை எடுக்கிறது,” என்று சோனாலி கட்வாசரா விளக்கினார்.
அதிரா விவகாரத்திலும் ரேபிடோ நிறுவனம், குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்தது.
பெங்களூருவில் நடந்த இந்தச் சம்பவத்தில் ஐபிசி 354 (ஏ), 354 (டி), 294 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பிரிவுகளும் பாலியல் வன்கொடுமை தடுப்புக்காக உருவாக்கப்பட்டவை என்று சோனாலி கட்வாசரா சுட்டிக்காட்டுகிறார்.
பிரிவு 354, ஒரு பெண்ணிடம் செய்யப்படும் அநாகரீகமான நடத்தை அல்லது பாலியல் வன்கொடுமை தொடர்பானது. அதே நேரத்தில் 354(A) தண்டனை குறித்துச் சொல்கிறது. இதில் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. பிரிவு 354(டி), ஸ்டாக்கிங் அதாவது பின்தொடர்வது பற்றியது.
மறுபுறம், பிரிவு 294 பொது இடத்தில் ஆபாசமான செயலுடன் தொடர்புடையது. இதில் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
டெல்லியை சேர்ந்த ’பரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் யோகிதா பயானா, தனது சொந்த அனுபவத்தை விவரித்து, தனக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், தானும் பயந்துபோனதாகவும் கூறுகிறார்.
ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒருவர் பீதியடையக்கூடாது. உதவியை நாடவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
”மேலும் இதுபோன்ற விஷயங்களில் கண்டிப்பாக புகாரை பதிவு செய்யுங்கள். ஏனென்றால் நீங்கள் அதைப் புறக்கணித்து முன்னேறலாம். ஆனால் அத்தகைய நபரின் அடுத்த இலக்கு மற்றொரு பெண்ணாக இருப்பார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அத்தகைய நபர் தொடர்ந்து இதேபோலத் தகாத செயல்களைச் செய்துகொண்டே இருப்பார்,” என்றார் அவர்.
"மறுபுறம் நீங்கள் டாக்ஸி போன்ற சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் எல்லா முன்பதிவு தகவல்களையும் மீண்டும் சரிபார்த்த பிறகே பயணம் செய்யுங்கள்,” என்று யோகிதா பயானா குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்