ஆமதாபாத்: விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சின்கள் எப்படி இருந்தன? ஏர் இந்தியா கூறிய தகவல்

    • எழுதியவர், நிகிதா யாதவ்
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

கடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் ஒரு எஞ்சின் புதியது என்றும் மற்றொரு எஞ்சினை சர்வீஸ் செய்வதற்கு வரும் டிசம்பர் மாதம் வரை காலக்கெடு இருந்ததாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய செய்தி சேனல் ஒன்றுக்கு ஏர் இந்தியா தலைவர் என் சந்திரசேகரன் அளித்த பேட்டியில், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் கடந்த காலங்களில் "நல்ல நிலையில் இயங்கியதாக" தெரிவித்துள்ளார்.

"விமானத்தின் வலதுபுற எஞ்சின் கடந்த மார்ச் மாதம் புதிதாக மாற்றப்பட்டது. இடதுபுற எஞ்சின் கடந்த 2023ஆம் ஆண்டில்தான் சர்வீஸ் செய்யப்பட்டது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் அந்த எஞ்சினுக்கு அடுத்த பரமாரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது," என அவர் டைம்ஸ் நவ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று லண்டன் நோக்கிப் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகை AI171 எனும் விமானம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே விபத்துக்குள்ளானது. இதில், குறைந்தது 270 பேர் கொல்லப்பட்டனர், இவர்களில் பெரும்பாலானோர் பயணிகளே.

விமானத்தின் இடிபாடுகளை ஆராய்ந்து, அதன் கருப்புப் பெட்டியில் பதிவான தரவுகள், விமானி அறையின் ஆடியோ ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்மூலம், விமானத்தின் கடைசி தருணங்கள் மற்றும் விபத்துக்கான காரணத்தை அறிய அவர்கள் முயன்று வருகின்றனர்.

"இந்த நிலையில், நிறைய யூகங்களும் கோட்பாடுகளும் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுவரை நான் அறிந்த உண்மை என்னவென்றால், சம்பந்தப்பட்ட AI171 விமானம் கடந்த காலங்களில் சரிவர இயங்கிய பின்னணியைக் கொண்டுள்ளது," எனக் கூறும் சந்திரசேகரன், அதற்குள் முன்முடிவுகளை எடுப்பது மற்றும் நம்புவதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

"விமானத்தின் கருப்புப் பெட்டி, பதிவுச் சாதனங்கள் ஆகியவை உண்மையாக என்ன நடந்தது என்பதை நிச்சயமாகக் கூறும் என என்னிடம் நிபுணர்கள் பலர் கூறியுள்ளனர். எனவே, நாம் அதற்காக இப்போது காத்திருக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

எஞ்சின் குறித்த நிபுணர் கருத்து

இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தில் முன்பு விசாரணை அதிகாரியாக இருந்த கிஷோர் சின்டா பிபிசியிடம் பேசினார்.

அப்போது அவர், "ஒரு விமானத்தின் எஞ்சின் எப்படி இருக்கிறது என்பது அதன் வயதுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக போயிங் 787-8 வகை விமானங்களில் பயன்படுத்தப்படும் ஜென்எக்ஸ்-1பி (Genx-1B) எஞ்சின்களை பொறுத்தவரை அப்படி இருக்க வேண்டியதில்லை" என்றார்.

"ஒரு எஞ்சினின் வயது, அது எந்த நிலைமையில் இருக்கிறது என்பதுடன் தொடர்புடையது அல்ல. குறிப்பாக, ஜென்எக்ஸ்-1பி எஞ்சின்கள் அப்படியல்ல," என்கிறார் சின்டா.

அதாவது, ஒரு எஞ்சின் புதியது என்பதாலேயே அது நல்ல நிலையில் உள்ளது என்று அர்த்தம் அல்ல, அதேபோன்று பழையது என்பதாலேயே அது நல்ல நிலையில் இல்லை என்றும் அர்த்தம் கிடையாது.

ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஜென்எக்ஸ்-1பி எஞ்சின்களுக்கு, பழைய மாடல் எஞ்சின்களை போலன்றி, முற்றிலும் பழுது பார்க்கவோ அல்லது பழுது பார்ப்பதற்கு நிலையான கால அளவோ இல்லை.

அதற்கு மாறாக, FADEC எனப்படும் 'ஃபுல் அத்தாரிட்டி எஞ்சின் கன்ட்ரோல்' என்ற அமைப்பு இந்த வகை எஞ்சின்களில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இந்த அமைப்பு தொடர்ச்சியாக எஞ்சினின் நிலை மற்றும் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது. இது வழங்கும் தரவுகள் மற்றும் ஒருவர் மேற்கொள்ளும் சோதனைகளின் அடிப்படையிலேயே இந்த எஞ்சின்கள் பழுது பார்க்கப்படுகின்றன அல்லது மாற்றி அமைக்கப்படுகின்றன.

எனினும், அதன் சில பாகங்களுக்கு காலக்கெடு உள்ளதை (Life Limited Parts) சின்டா குறிப்பிடுகிறார். அவை வழக்கமாக 15,000 முதல் 20,000 சுற்றுகள் நிரந்தர காலக்கெடுவை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

"எஞ்சினின் செயல்பாட்டைத் தொடங்கி, அதை நிறுத்துவது (start and switch-off) ஒரு சுற்றாகக் கணக்கிடப்படுகிறது," எனவும் அவர் விளக்கினார்.

விமான சேவை குறைப்பு நடவடிக்கை

விசாரணை தொடர்ந்து வரும் சூழலில், இந்த விபத்தின் விளைவுகளில் இருந்து மீள்வதற்குப் போராடி வரும் நிலையில், வெளிநாட்டு பயணங்களில் அகலமான உடற்பகுதியைக் கொண்ட விமானங்களின் (wide-body aircraft) சேவையை ஜூலை நடுப்பகுதி வரை 15% குறைப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், விமானக் குழுவினர் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருத்தல் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் உள்படப் பல்வேறு சூழல்களுடன் கூட்டு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், தங்களுடைய 33 போயிங் 787-8 மற்றும் 787-9 ரக விமானங்களில் 26 விமானங்களில் பாதுகாப்பு சோதனைகள் நிறைவடைந்து விட்டதாகவும், அனைத்தும் "பழுதுபார்க்கப்பட்டு நல்ல நிலையில் இருப்பதாகவும்" அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 'பயணிகள் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு' அமைப்பான டிஜிசிஏ (DGCA), இந்த விபத்தைத் தொடர்ந்து "தடுப்பு நடவடிக்கையாக" ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளை நடத்துமாறு உத்தரவிட்டது.

வரும் நாட்களில் மற்ற விமானங்களிலும் சோதனை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ள ஏர் இந்தியா, போயிங் 777 ரக விமானத்திலும் "மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படும்" என்றும் தெரிவித்துள்ளது.

"இத்தகைய (விமான சேவை) குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வது வலி மிகுந்தது. ஆனால் பேரழிவுகரமான சம்பவம் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளின் அசாதாரண கலவையைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுப்பது அவசியமானது" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இக்கட்டான சூழலில் அரசு நிறுவனமாக இருந்து தனியார் நிறுவனமாக மாறிய ஏர் இந்தியாவின் செயல்பாட்டில் மாற்றத்தைப் புகுத்த முயன்று வரும் வேளையில், இந்த விபத்து ஏர் இந்தியா மீது பெரியளவில் தாக்கம் செலுத்தும் என நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

டெட்லி டீ மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற பல வணிக குழுமங்களை உள்ளடக்கிய டாடா சன்ஸ், இந்த விமான நிறுவனத்தை 2022ஆம் ஆண்டில் இந்திய அரசிடம் இருந்து வாங்கியது.

தலைமை செயல் அதிகாரி கூறியது என்ன?

இதற்கிடையே, விபத்துக்குள்ளான விமானம் குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் வியாழக்கிழமை அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்தார்.

அதில், அந்த விமானம் நன்றாகப் பராமரிக்கப்பட்டது என்றும், 2023 ஜூன் மாதம் பெரியளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்ததாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான காலக்கெடு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, விமானத்தின் வலதுபுற எஞ்சின் கடந்த மார்ச் மாதம் புதிதாக மாற்றப்பட்டது என்றும், இடதுபுற எஞ்சின் கடந்த ஏப்ரல் மாதம்தான் பரிசோதிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"எஞ்சின்களும் விமானமும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டன. புறப்படுவதற்கு முன்பு விமானம் எவ்வித பிரச்னையையும் வெளிப்படுத்தவில்லை. இதுகுறித்து இப்போதைக்கு இந்த அளவிலான தகவல்கள் மட்டுமே தெரிய வந்துள்ளன. அதிகாரபூர்வ விசாரணை அறிக்கைக்குப் பிறகே மேலதிக தகவல்கள் தெரிய வரும்," என்று கேம்பெல் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு